Thursday, June 16, 2016

செண்பகவல்லி அணை இடிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்ட நிகழ்வு பேச்சு


திருநெல்வேலி மாவட்டத்தில் செண்பகவல்லி அணையை கேரள அரசு இடித்துவிட்டது. அதை சரி செய்து உடைப்பை உரிய முறையில் கட்டி தடுப்பணையை முறைப்படுத்த வேண்டும் என்று சங்கரன்கோவிலில் நேற்று (15.06.2016) விவசாயிகள் சங்கம் சார்பாக தேரடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் சுப. உதயகுமார், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ச. தங்கவேலு, பொங்கலூர் மணிகண்டன், ஏனைய விவசாய சங்கத் தலைவர்களோடு நானும் கலந்துகொண்டேன். இது குறித்து செய்திகள் இன்றைய செய்திதாள்களில் விரிவாக வந்திருந்தாலும் என்னுடைய முழுமையான ஆர்ப்பாட்ட நிகழ்வு பேச்சை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்:

செண்பகவல்லி அணை நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டத்திற்கு பயன்படுகின்ற திட்டம். 11 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி அளிக்கின்ற அணையாகும். பல பகுதிகளுக்கு குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அணையை சீர் செய்து தருகிறேன் என்று தமிழக அரசிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு கேரள அரசு பல ஆண்டுகளுக்குப் பின் அணையை சீர் செய்ய மாட்டேன் என்று பணத்தை திருப்பி அளித்துள்ளது மோசடியான காரியமாகும். சமீபத்தில் கேரள அரசின் வனத்துறை இந்தத் தடுப்பணையை இடித்துள்ளது கடுமையான கண்டனத்துக்குரியதாகும். இது குறித்து இவ்வட்டார மக்களுக்கே இச்செய்தி தெரியவில்லை. செண்பகத்தோப்பு அல்லது செண்பகவல்லி என்ற அணைத் திட்டம் சிவகிரி ஜமீனுக்கும் திருவாங்கூர் சமஸ்தானத்துக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டு, வாசுதேவ நல்லூரிலிருந்து 13 கிலோ மீட்டர் தூரத்தில் அணையை கட்டி நீரை சேகரித்து விவசாயத்துக்குப் பயன்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டது. இந்த அணையை கஸ்தூரி ரங்கன் 1733ல் சுண்ணாம்புக் காரையும், கருங்கல்லையும் வைத்து கட்டினார்.

மேற்கே கன்னிமர் ஆற்றில் ஓடி 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடுக்கி மாவட்டம் வழியாக முல்லைப் பெரியாறுக்கு சென்று கலந்த நீர் கிழக்கு முகமாக திருப்பப்பட்டது.

இதனால்தான் முல்லைப்பெரியாறின் நதிமூலம் சிவகிரி மலைகள் என்று குறிப்பிடுவதுண்டு. 267 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த அணை, காட்டுப்பகுதியில் கிடைத்த கல், மண்ணைக் கொண்டே நிர்மாணிக்கப்பட்டது.  1603 அடி உயரத்திலும் 928 அடி தூரத்திற்கும் சிமெண்ட் இல்லாமல் சுண்ணாம்பு கற்கலால் அணையின் சுவர் கட்டப்பட்டது. இதன் நீளம் 2531 அடி. அகலம் 10 அடி. உயரம் 15 அடியாகும். இந்த அணையிலிருந்து அக்காலத்தில் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம், வெம்பக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம் பகுதியிலுள்ள நிலங்கள் பாசன வசதி பெற்றன.

செண்பகவல்லி அணையிலிருந்து நீர்வரத்துகள் தீர்த்தப்பாறை என்ற இடத்திற்கு வந்து அங்கிருந்து தலையணை என்ற இடத்தை அடைந்து இரண்டு பிரிவாக பிரிகின்றது. ஒரு பிரிவு குலசேகரப்பேரி கண்மாய், ராமநாதபுரம் கண்மாய், வாசுதேவநல்லூர் கிழக்கு கண்மாய், நெல்கட்டும்செவல் கண்மாய் வழியாக கரிவலம்வந்தநல்லூர்  கண்மாயை அடைந்து, அங்கிருந்து பருவக்கொடி, காரிசாத்தான், மரத்தோணி பெரியகுளம், திருவேங்கடம் கண்வாய்க்கு வந்து அங்கிருந்து வெம்பக்கோட்டை அணைக்கு தண்ணீர் சேரும்.

இதைப்போலவே தலையணையில் பிரியும் இன்னொரு பிரிவு ராஜசிங்காப்பேரி  கண்மாய், பெரிய உடைப்பேரி  கண்மாய், விஜயரங்கப்பேரி கண்மாய், சிவகிரி கண்மாய், தென்கால் கண்மாய், இரட்டைக்குள கண்மாய் வழியாக செல்கிறது. ராஜசிங்கப்பேரி  கண்மாயிலிருந்து இன்னொரு கால்வாய் பிரிந்து, உள்ளாறுக்கு செல்கின்றது. சிவகிரி கண்மாயிலிருந்து வடகாலில் பிரிந்து கால்வாய், கோணார்குளம், பெரியகுளம், விஸ்வநாதபுரம் பெரிய கண்மாய் வழியாக வெம்பக்கோட்டை அணைக்கு செல்லும். இந்த வெம்பக்கோட்டை அணை தண்ணீர் வைப்பாற்றில் திருப்பப்படுகிறது. திருப்பப்பட்ட தண்ணீர் சாத்தூர், இருக்கன்குடி, எட்டயபுரத்து வடபகுதி, விளாத்திகுளம் வழியாக வேம்பாறு அருகே தெற்கு வைப்பாறு என்ற இடத்தில் வங்கக் கடலில் கலக்கின்றது.

மேற்குத் தொடர்ச்சிமலை, கன்னிமலை ஆறு, அடர்ந்த காட்டுப்பகுதியிலிருந்து 14 கிலோ மீட்டர் சுற்றளவில் உற்பத்தி ஆகிறது. ஆண்டு முழுவதும் நீர் வரத்து ஓடிக்கொண்டே இருக்கும். எனவே இந்த நதியை திருப்பினால் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் வளம் பெறும். அது மட்டுமல்லாமல் அச்சன்கோவில்-பம்பை-வைப்பாறோடு இணைக்கும்பொழுது செண்பகவல்லி அணையிலிருந்து வரும் தண்ணீரும் அதில் இணைந்து தண்ணீருடைய அளவும் அதிகரிக்கும். இதனால் விவசாயிகள் இரண்டு போகம், மூன்று போகம் என்று சாகுபடி செய்யலாம்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த பெரும் மழையில் 1950ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கத்தால் செண்பகவல்லி அணையின் தடுப்புச்சுவர் உடைப்பெடுத்து கிழக்கு நோக்கி பாயவேண்டிய நீர் மேற்கு நோக்கி முல்லைப்பெரியாறில் கலந்துவிட்டது. இந்த உடைப்பை 1956-57 ஆம் ஆண்டுகளில் தமிழக அரசு சீரமைத்தும் 1969ம் ஆண்டில் பெய்த கனமழையில் திரும்பவும் தடுப்புச்சுவர் இடிந்துவிட்டதால் தண்ணீர் வரத்து மறுபடியும் முல்லைப்பெரியாறுக்கே சென்றது. இந்த அணை உடைப்பால் நெல்லை மாவட்டம் அணைப் பாசனப் பகுதிகள் பாதிக்கப்பட்டன. இந்த உடைப்பு செண்பகவல்லி தடுப்பணையை 45 அடிதான் சற்று வலுவாக கட்டவேண்டும். அப்படி அதை கட்டிவிட்டு சீர் செய்தால் திரும்பவும் நீர் நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டத்துக்கு பயன்படும். அத்தோடு திட்டமிடப்பட்டுள்ள அச்சன்கோவில்-பம்பை-வைப்பாறோடு எதிர்காலத்தில் இணையக்கூடிய சூழலும் ஏற்படும்.


இதை சீர்படுத்த 1984 ல் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் கேரள அரசோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையின் இறுதியில் அரசு அதிகாரிகள் 28.2.1985 அன்று பார்வையிட்டு இந்த அணையின் உடைப்பை சரி செய்ய சுமார் 11 லட்சம் ரூபாய் செலவாகும் என்று மதிப்பிட்டனர். தமிழக அரசின் பங்குத் தொகையும் உரிய நேரத்தில் கேரள அரசிடம் வழங்கப்பட்டது.  செண்பகவல்லி அணையின் தடுப்புச்சுவர் உடைப்பை இதுவரை சரிசெய்யவில்லை. இதற்கான காரண காரியங்களும் தெரியவில்லை.  1989ம் ஆண்டு திமுக ஆட்சியில் வைகோ, அன்றையப் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன், அன்றைய அமைச்சர் தங்கவேலு, அடியேன், புளியங்குடி பழனிச்சாமி போன்றோர் எல்லாம் மலைக்கு மேலே சென்று ஆய்வு செய்து திட்டத்தை தயாரித்தபோது 1991 ஜனவரியில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. இந்த பிரச்சினைக் குறித்து நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பல தடவை குரல் எழுப்பப்பட்டும் எந்தவிதமான மேல் நடவடிக்கைகள் இல்லை. என்னுடைய நதிநீர் இணைப்பு உச்சநீதிமன்ற வழக்கிலும் இது குறித்து எனது மனுவிலும் குறிப்பிட்டிருந்தேன்.

இதே சங்கரன்கோவில் நகரில் இடைத்தேர்தல் பணியில் இருந்தபோது உச்சநீதிமன்றத்தில் நதிநீர் இணைப்புக் குறித்து எனக்கு 27.2.2012 அன்று தீர்ப்பு கிடைத்தது. 30 ஆண்டுகாலமாக சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று வானம்பார்த்த இவ்வட்டாரம் பயன்பெறவேண்டும் என்ற நிலையில் வழக்குத் தொடுத்தேன். உங்களுக்கெல்லாம் தெரியும் 1975ல் வறட்சி, பஞ்சம். இவ்வட்டார மக்கள் மக்காச்சோளத்தை உண்ணவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதற்கு காரணம் நீர் ஆதாரங்களும், மழையும் இல்லாதததால் வேதனைப்பட்டதன் விளைவாக கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் நதிகளின் உபரி நீரையும், கேரளாவில் பாயும் அச்சன்கோவில்-பம்பையை சாத்தூர் அருகே உள்ள வைப்பாறோடு இணைக்கவும், அடவிநயினார் திட்டம், உள்ளாறு திட்டம், இந்த செண்பகவல்லி அணை சீரமைப்புத் திட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அழகர் அணைத் திட்டம் போன்றவற்றை உள்ளடக்கித்தான் வழக்குத் தொடுத்தேன். இப்பிரச்சினைக் குறித்து 1990ல் பிரதமர் வி.பி. சிங், 1992ல் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ், 1997ல் பிரதமர் தேவ கவுடாவை சந்தித்ததோடு மட்டுமல்லாமல், சகோதரர் தங்கவேலு அவர்களோடு மன்மோகன்சிங் அரசில் நீர்வளத்துறை அமைச்சர் இன்றைய உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத்தையும், இன்றைய மோடி அரசில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியையும் சந்தித்துள்ளேன். அரசியல் இருக்கலாம். ஆனால் நீர் ஆதாரத்திற்கு கடமை ஆற்றவேண்டியது அனைவரின் பொறுப்பாகும். ஐ.நா. என்ன சொல்லுகின்றது. இந்தியா, குறிப்பாக தமிழகம் வறட்சியால் பாலைவனம் ஆகிவிடும் என்று குறிப்பிட்டுள்ளது. நீருக்காக உலகப் போரே வரலாம் என்றும் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் இந்த கந்தக கரிசல் பூமிக்கு நீர் ஆதாரங்கள் வேண்டும் என்றால் மேற்கு நோக்கி கேரளாவில் கடலுக்கு செல்லும் உபரி நீரை இங்கே திருப்ப வேண்டும். ஐரோப்பாவில் பல்கேரியாவிலிருந்து ருமேனியாவுக்கு நதி நீர் திருப்பப்படுகின்றது. நைல் நதி ஆப்பிரிக்காவில் பல நாடுகளுக்கு கொடையாக உள்ளது. தென் அமெரிக்காவில் அமேசான் ஆற்று நீரை பல நாடுகளுக்கு திருப்ப இன்றைக்கு வரை திட்டங்கள் உள்ளன. இந்தியா ஒரு சமஷ்டி அமைப்பு. ஒரு மாநிலத்திலிருந்து ஒரு மாநிலத்திற்கு உபரி நீரை கொடுப்பதற்குக் கூட மனதில்லை. கேரளாவுக்கு அரிசி, காய்கறி, சிமெண்ட், மணல், வைக்கோல் என அனைத்து அத்தியாவசியப் பொருட்களை தமிழ்நாடு சகோதர வாஞ்சையோடு தரும்போது கேரளா மட்டும் நதிநீர் ஆதாரங்களில் வம்பு செய்வது அர்த்தமற்றதாகும். ஒன்றைச் சொல்கின்றேன். குமரி மாவட்டத்தில் நெய்யாறு அணை, கேரளாவின் அடாவடிப் போக்கால் மூடப்பட்டு கிட்டத்தட்ட 8, 9 ஆண்டுகள் ஆகிவிட்டன. 2002ல் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தம் நமது நெல்லை மாவட்டத்தில் உள்ள அடவி நயினார் அணையை இடிக்க கடப்பாறை, மம்பட்டியோடு வந்தார். இதோ 10 மைல் தொலைவில் உள்ள உள்ளாறு திட்டத்தையும் 30 ஆண்டுகளாக செயல்படுத்தவிடாமல் கேரளா வம்பு செய்கிறது. அடுத்து செண்பகவல்லி அணையையே இடித்துவிட்டார்கள். இதற்கு வடக்கு முகமாக உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்டவேண்டிய அழகர் அணையும் 50 ஆண்டுகளாக கேரளாவின் ஒத்துழைப்பு இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது- முல்லைப் பெரியாறுப் பிரச்சினை உங்களுக்கே நன்றாகத் தெரியும். அடுத்து கொங்கு மண்டலத்தில் பாண்டியாறு-புன்னம்புழா, ஆழியாறு-பரம்பிக்குளம், சிறுவாணி, பம்பாறு போன்ற பல நதிநீர் ஆதாரங்களில் கேரளா தமிழகத்துக்கு உரிமைகள் இருந்தும் வம்படியாக தடுத்து வருகின்றது. அடுத்து கர்நாடகா என்ன செய்கின்றது? காவிரி, ஒகேனக்கல், தென்பெண்ணை ஆறு என்பதில் பிடிவாதம். மேகதாட்டில் அணையைக் கட்டப்போகிறேன் என்று வீம்பு செய்கின்றது. ஆந்திரா மட்டும் சும்மாவா இருக்கின்றது? ஆந்திரா பாலாறு, பொன்னியாறு, என்ற நீர் ஆதாரங்களிலும் தமிழர்களுக்கு விரோதமாக தொடர்ந்து இருந்து வருகின்றது.  சென்னைக்கு அருகே உள்ள பழவேற்காடு ஏரியிலும் தமிழகத்தின் உரிமைகளை ஆந்திரம் எடுத்துக்கொண்டுவிட்டது. இப்படியான நிலையில் நமக்கு நீர் ஆதாரங்கள் உரிமைகள் இருந்தும், அண்டை மாநிலங்களால் பாதிக்கப்படுகின்றோம்.  இதை மத்திய அரசு தொடர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது. மத்திய அரசின் மாற்றாந்தாய் போக்கு நீர் ஆதாரங்களில் மட்டுமல்லாமல் அனைத்து தமிழக உரிமைகளிலும் கடைப்பிடித்து வருகின்றது. நமக்கு இருக்கின்ற ஒரே நீர் ஆதாரம் நமது மாநிலத்திலே உற்பத்தியாகின்ற தாமிரபரணி என்ற ஜீவநதி மட்டும்தான். தென்றல் தழுவும், தென்பொதிகையில் உற்பத்தியாகி நெய்தல் அழகான புன்னைகாயலில் வங்கக்கடலில் கலக்கின்ற ஒரே நதிதான்  நமது பொருநை ஆறு. அந்த வகையில் நமது நெல்லை மாவட்டத்துக்காரர்களுக்கு ஒரு பெருமையும் உண்டு. இப்படியான போக்கில், செண்பகவல்லி இடிக்கப்பட்டதை மத்திய அரசு கூட கண்டிக்கவில்லை. தமிழக அரசும் பாராமுகமாக இல்லாமல் இது குறித்து உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

பண்டைய தமிழர்கள் நீர் மேலாண்மை குறித்து ஆதியிலிருந்தே கவனமாக கடமைகளை செய்துவந்தனர். அதனால்தான் இன்றைக்கும் பிரம்மாண்டமாக கல்லணை இருக்கின்றது. வீராணம் ஏரி, மதுரையில் அமைந்த வண்டியூர் தெப்பக்குளம், மீனாட்சியம்மன் கோவிலுள்ள பொற்தாமரைக் குளம் போன்ற பல நீர் நிலைகளை திட்டமிட்டு நம்மை ஆண்ட அரசர்கள் மக்களுக்காக கட்டி அர்ப்பணித்தார்கள். அப்போதெல்லாம் இன்றைக்குள்ள வசதி வாய்ப்புகள் இல்லை. அன்றைக்கும் அவர்களுடைய தொழில்நுட்ப விஞ்ஞான அறிவை பாராட்டவேண்டும். அதைப்போன்றுதான் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் சிவகிரி அரசர் தொலைநோக்கு எண்ணத்தோடு செண்பகவல்லித் தோப்பை திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் பேசி அமைத்தார்.

இன்றைய ஜனநாயக நாட்டில் 45 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கையாக இருக்கும் செண்பகத்தோப்பு அணையை சீர் செய்ய ஆட்சியாளர்களுக்கு மனம் வரவில்லையே?  இந்த அணையை புதிதாக கட்டவேண்டிய அவசியமும் இல்லை. உடைப்பெடுத்த சுவரை கட்டவேண்டும். மதிப்பீடும் குறைவுதான். பணியும் குறைவுதான். இதை கவனிக்க மனம் வரவில்லையே?

எனவே இந்த ஆர்ப்பாட்டம். விவசாயிகள் தொடர்ந்து இதற்கு போராடுவார்கள். அதற்கான ஒத்துழைப்பை எங்களைப் போன்றவர்கள் நிச்சயமாக வழங்குவோம்.  தமிழ்நாட்டின் நீர் நிலைகள் குறித்தான விழிப்புணர்வை உருவாக்கி, இதில் மக்களை திரட்டி இயக்கமாக எதிர்காலத்தில் போராடுவோம். நன்றி. வணக்கம்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...