(பாண்டிபஜார் சம்பவமும், இராஜா அண்ணாமலை மன்ற ஈழத்தில் நடப்பது என்ன என்ற நிகழ்வும்)

இந்த நிகழ்ச்சிக்கு முன்பு இலங்கையில் 2007-2008ல் நடந்த துயரக் காட்சிகளும் திரையிடப்பட்டது. அதற்குப் பின் நிகழ்ச்சி துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வைகோவும், மு. கண்ணப்பனும் பேசிய பேச்சுகள் சட்டவிரோதமானவை என்று கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கும் பிரிவுகள் 124 இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் தேசவிரோத நடவடிக்கைகள் சட்டம் 1967ன் படியும் இவர்களை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் இந்த வழக்கு குறித்து திடீரென என்னை சாட்சி சொல்ல வேண்டும் என்று மூன்றாவது அடிஷ்னல் சிட்டி சிவில் கோர்ட்டில் இருந்து சம்மன்-ஐ க்யூ பிரான்ச் குற்றப் புலனாய்வுத் துறை எனக்கு நேற்றைக்கு நேரடியாக வந்து கொடுத்துவிட்டு சென்றுள்ளனர்.
சம்பவம் 2008, வழக்கு பதியப்பட்டது 2010 (வழக்கு எண் SC1/2010) இவ்வளவு கால தாமதமாக இந்த வழக்கில் ஆர்வம் காட்டவேண்டிய சூழல் எப்படி வந்தது என்று தெரியவில்லை. இந்த வழக்கு முடிந்திருக்கும் என்று நினைத்திருந்தேன். இதுவரை இந்த வழக்கு கிடப்பில் இருந்ததற்கான காரணமும் தெரியவில்லை. எப்படியும் சட்டத்தை மதிக்க வேண்டும். இன்றைக்கு ஆஜராகவேண்டியதை வரும் 9.6.2016 அன்று ஆஜராகி சாட்சியம் அளிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். இது பொறுப்பான மனிதனுடைய கடமை. இதை செய்வதில் எந்த தயக்கமும் இல்லை. போராளிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். கொள்கை ரீதியாக மக்கள் நலம் பேணுபவர்கள், மக்கள் மன்றத்தில்தான் உள்ளனர். கொள்கையும், லட்சியங்களும், மக்கள் நலன் நாடாதவர்கள் எல்லாம் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் உள்ளனர்.
இப்போது, பொதுவாழ்வில் தகுதியே தடை....
தன்னலம், சுயநலம் என்போரே பொதுவாழ்வில் அடியெடுத்து வைக்கலாம் என்பதை நியாயப்படுத்திவிட்டார்கள். தமிழகத்தின் நலன் நாடி நதிநீர் பிரச்சினைகள், விவசாயிகள் பிரச்சினை, மனித உரிமை பிரச்சினைகள், ஈழத் தமிழர் பிரச்சினை என உளப்பூர்வமாக போர்களம் கண்டு சிறைவாசம் கண்டவர்களை ஏதோ ஏகடியமாக பார்ப்பதெல்லாம் சாதாரணமாகிவிட்டது. வாழ்க ஜனநாயகம்!
என்றைக்கு பொறுப்பானவர்களை ஆதரிக்க மக்கள் தவறிவிட்டார்களோ, என்ன நியாயங்கள் சொன்னாலும் எடுபடாது. தேர்தலில் திருவிழா என்று நினைத்துக்கொண்டு காசுக்கு விலை போகும் மாந்தரிடம் எதை எதிர்பார்க்க?

என்னுடைய இந்த வசிப்பிடத்தை காவல்துறையினர் ஒரு நாள் முழுவதும் மே மாதம் 1983ல் சோதனையிட்டனர். தமிழ்நாட்டில் விடுதலைக்குப் பிறகு முதல்முதலாக சோதனை நடத்திய அரசியல்வாதியின் வீடு என்னுடைய வீடும், திரு. பழ நெடுமாறன் அவர்களுடைய வீடும் ஆகும். இன்றைக்கு சொத்து சேர்ப்பதில் பல அரசியல்வாதிகளின் வீடு காவல்துறையினரால் ரெய்டு செய்யப்படுகிறது. எங்களுடைய இருப்பிடங்கள் ரெய்டு செய்ததில் எங்களுக்கு எந்தவிதமான தயக்கமோ, அச்சமோ அப்போது இல்லை. மடியில் கனமில்லை. இந்த சம்பவத்தை குறித்து பாண்டி பஜார் வழக்கும், இதே நீதிமன்றத்தில் பிரபாகரனின் வழக்கறிஞராக அவருடைய பொருட்களை காவல்துறையினர் அள்ளிசென்றுவிட்டனர். அவருடைய பொருள்களோடு என்னுடைய பொருட்களையும் எடுத்து சென்றுவிட்டனர். காமராஜர், ஜெயபிரகாஷ் நாராயணன், இந்திரா காந்தி, கண்ணதாசன் போன்ற பல தலைவர்களோடு நான் எடுத்துக்கொண்ட கருப்பு வெள்ளை புகைப்படங்களை திரும்பப் பெறவே முடியவில்லை என்பதை இன்றைக்கும் ஒரு கவலையான செய்தியாக உள்ளது. பிரபாகரனுடைய டைப்ரைட்டர், வேறு சில முக்கிய பொருள்களை திரும்பிப் பெற்றேன். அவரிடம் ஒப்படைத்தேன்.
பிரபாகரன் தப்பிய பின்பும் வழக்கு நடந்தவண்ணம் இருந்தது. 2012ல் தான் இந்த வழக்கும் நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment