Tuesday, June 21, 2016

பாராளுமன்ற செயலாளர் பதவி

டெல்லியில் கெஜ்ரிவால் அரசு பாராளுமன்ற செயலாளர் பதவி என்பதை உருவாக்கியுள்ளது. இந்தப் பதவிக்கு முதலமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கின்றார். இந்த பாராளுமன்ற செயலாளர் பதவியைக் குறித்து அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே குறிப்பிடப்படவில்லை. இவர்கள் அரசுக் கோப்புகளை கையாளும்போது, சில ரகசியங்களைக் காப்பாற்றப்படவேண்டும். அதற்கான ரகசியக் காப்புப் பிரமாணத்தை இவர்கள் முறையாக எடுத்துக்கொள்வதுமில்லை. நீதிமன்றங்களும் இதை ரத்து செய்துள்ளன. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தமிழகத்திலும் இம்மாதிரி பதவிகளை உருவாக்கப்பட்டது. இது முதன்முதலாக 1960ல் குஜராத்தில் நடைமுறைக்கு வந்தது. தனி அமைச்சர்களைப் போன்று தனித் துறைகளும் ஒதுக்கப்பட்டன. அமைச்சர்களுக்கு வழங்கப்படுகின்ற வசதிகளும், அதிகாரங்களும் இவர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஏற்கெனவே சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற ஆதாயத்தோடு மற்றொரு ஆதாயம் தரும் பதவி எப்படி சாத்தியப்படும் என்பதுதான் இன்றைய கேள்வி.  2005ல் இமாச்சலப் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட பாராளுமன்ற செயலாளர்கள் பதவிகளை அம்மாநில உயர்நீதிமன்றம் தடை செய்தது. அதேபோல 2009ல் கோவாவிலும், 2015ல் தெலுங்கானாவிலும் அதே ஆண்டில் மேற்கு வங்கத்திலும், ஹரியானாவிலும் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற செயலாளர்கள் என்ற பதவியை அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்கள் விசாரித்து ரத்து செய்தன. ஆனால் 2015 ஹரியானாவில் மட்டும் வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது.

டெல்லியைப் போன்று குஜராத்தில் 5 பேர், ராஜஸ்தானில் 5 பேர் பாராளுமன்ற செயலாளர் பொறுப்பில் உள்ளனர். நாகலாந்தில் 60 எம்.எல்.ஏ.க்களில் 24 பேர் பாராளுமன்ற செயலாளர்கள் என்று நியமிக்கப்பட்டுள்ளனர். அருணாச்சலப் பிரதேசத்தில் 60 எம்.எல்.ஏ.க்களில் 19 பேர், மேகாலயாவில் 18 பேர், மணிப்பூரில் 5 பேர் பாராளுமன்ற செயலாளர்களாக உள்ளனர். இவை யாவும் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவும், தனிப்பட்டவர்களின் சுயநலங்களுக்காக இந்த பதவிகள் வாரி வழங்கப்படுகின்றன. டெல்லியில் முன் தேதியிட்டு 21 பேரை இப்பதவிக்கு அமர்த்தியுள்ளது சட்டப்படி சாத்தியமில்லை என்ற குடியரசுத் தலைவர் இந்த சட்ட முன் வடிவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளார். இதே போல நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு காதி போர்டு தலைவர், மகளிர் ஆணையத் தலைவர் என்று மத்திய சர்க்காரும் கடந்த காலத்தில் தனி மனிதரை திருப்திப் படுத்த வழங்கியதும் உண்டு. 1959ல் நேரு ஆட்சிக்காலத்தில் அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்தி ஆதாயம் தரும் பதவிகள் எவை என்று பட்டியலிட்டது. அதன் பின்புதான் இது குறித்தான கட்டுப்பாடுகளும், நடைமுறைகளும் நடைமுறைக்கு வந்தன. இப்போது டெல்லி மாநில நாடாளுமன்ற செயலாளர்கள் பதவிகள் குறித்து சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஏனெனில் கெஜ்ரிவாலுக்கும், பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவுக்கும் ஏற்பட்ட பிளவின் காரணமாக ஒரு சில எம்.எல்.ஏ.க்களை திருப்திப்படுத்த கெஜ்ரிவால் பாராளுமன்ற செயலாளர்கள் என்று நியமித்தார். இந்தப் பதவி திருப்திப்படுத்துவதற்காக வழங்கப்படுகிறது. எனவே இது குறித்தான நாடு தழுவிய விவாதங்கள் நடத்தி இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். ஏற்கனவே உயர்நீதிமன்றங்கள் இது குறித்து தங்கள் கருத்துக்களை சொல்லியுள்ளன. இன்றைய ஆங்கில இந்து ஏட்டில் நடுப்பக்க பத்தியாக பி.டி.டி. ஆச்சாரி எழுதிய கட்டுரை இதோ:

http://www.thehindu.com/opinion/lead/its-about-propriety-not-constitutionality/article8752584.ece?homepage=true

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...