திருகோணமலையையும் அம்பாறையையும் இழந்தோம்! இப்போது மட்டக்களப்பா?
மட்டக்களப்பு தமிழ் சமூகத்தை பாதித்த கடந்த கால சம்பவங்களை தவிர்ப்பதற்கு அரசாங்கம் அனுசரிக்க வேண்டிய அணுகுமுறைகள் எனும் தலைப்பில் நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைகளுக்கான மட்டக்களப்பு மாவட்ட செயலணி முன் ஓய்வு பெற்ற அதிபர் ஒருவர் எடுத்துரைத்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பெரும்பான்மையானோரை சிறுபான்மையோராக மாற்றும் அணுகுமுறை:
இந்த விடயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் இதற்கு 1ஆம் இலக்கம் இடப்படுகின்றது. ஏன் முக்கியத்துவம் என்பதைச் சொல்வது எனது கடமையாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மைச் சமூகமாகவுள்ள தமிழ் சமூகத்தினரை சிறுபான்மையினராக்கும் குடியேற்ற நடவடிக்கைகள் இன ஒடுக்குமுறையின் ஒரு வடிவம் என்பதைக் குறிப்பிட வேண்டியுள்ளது.
இது 1951ஆம் ஆண்டு E.L.சேனநாயக்காவினால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டது. வடக்கே வெருகல் ஆறு தெற்கே கும்புகன் ஆறு, மேற்கே பதியத்தலவை, கிழக்கே கடல்.
இந்தப் பிரதேசமே வரலாற்றுக் காலம் முதல் மட்டக்களப்பு என அழைக்கப்பட்டு வந்தது. இவ் வேளையில் தான் அப்போது கல்முனை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கேட் முதலியார், M.S.காரியப்பர் என்பவரின் பூரண ஒத்தாசையுடன் மட்டக்களப்பின் மேற்குப் பகுதில் இருந்த அடர்ந்த காடுகளை அழித்து கேகாலை முதலிய சிங்களப் பிரதேசங்களில் இருந்து சிங்கள மக்களைக் கொண்டு வந்து குடியேற்றினார்கள்.
இக்குடியேற்றங்களுக்குள்ளே மட்டக்களப்புத் தமிழர் மக்களின் புராதன நிலங்களும் அகப்பட்டுக் கொண்டன. அதன் பரப்பளவு பற்றி சரியாகச் சொல்ல முடியவில்லை.
மேலெழுந்த வாரியாக சொல்லப்போனால் சுமார் 25000 ஏக்கர் அளவிலான வயற்காணிகள். இக்காணிகள் அனைத்தும் அரசாங்கத்தின் ஆதரவுடன் குடியேற்றவாசிகளால் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டன.
(உ ம்: பறங்கியர் வட்டை) அன்று முதல் மட்டக்களப்பு தமிழர்கள் வறியவர்களாக மாற்றப்பட்டார்கள்.
இலங்கைப் பிரஜைகள் எவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி வாங்கி குடியேறுவதில் மட்டக்களப்பு தமிழர்கள் எவருக்கும் எவ்வித ஆட்சேபனையும் இல்லை.
ஆனால் மாவட்டத்திலுள்ள அரச காணிகளில் அரசாங்கம் திட்டமிட்டு குடியேற்றுவதையும், சிங்கள மக்கள் குடியேற்றுவதற்கு பக்கபலன்களை அளித்துவிட்டு பராமுகமாக இருக்கும் இம் அணுகுமுறை கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும்.
இதற்கான அதிகாரம் மாவட்ட நிர்வாகத்திடம் உள்ள போதும் அது பொம்மையாக செயற்படுவது நிறுத்தப்பட வேண்டும்.
சாதாரண பொதுமகன் ஒருவர் இதற்கு எதிராக நீதி கேட்கின்ற நடைமுறைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இது போன்ற ஓரவஞ்சனை நடவடிக்கைகளினால் நாம் முன்னர் திருகோணமலையை இழந்தோம். பின்னர் அம்பாறையையும் இழந்தோம்.
இப்போது எஞ்சியுள்ளது மட்டக்களப்பு மட்டுமே. எங்கள் எதிர்கால சந்ததியினருக்காகவேனும் நாங்கள் மட்டக்களப்பையும் இழந்து அடிமைகளாக அழிந்து போக முடியாது என சூளுரைக்கின்றோம். இக்கூற்றினை தங்கள் செயலணி அறிக்கையில் கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும்.
தண்ணீர் பங்கீடு:
மட்டக்களப்பு மாவட்டம் 2750 சதுரமைல் பரப்பை உடையதாக இருந்தது. பின்பு அதில் பரந்த நிலப்பரப்பை பிரித்து 1960களில் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
அதிலும் சுமார் 750 சதுரமைல் பரப்பு தனிச்சிங்களத் தொகுதியாக மாற்றப்பட்டது. மட்டக்களப்பில் ஓடிய பட்டிப்பளை ஆற்றுக்கு கல்லோயா என்று பெயர் வைத்துவிட்டு குடியேற்றத் திட்டத்திற்கும் கல்லோயா திட்டம் என பெயர் வைத்து விட்டனர்.
அந்த ஆற்றினை மறித்துக்கட்டி இங்கினியாகல என்ற குளத்தில் தேக்கப்படும் நீரில் 95% அம்பாறை மாவட்டத்திற்கும் 10%மான நீர் தற்போதைய மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் வழங்கப்படுகிறது.
தற்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான் கரையின் பெரும்பாலான கிராமங்களின் மக்கள் குடிநீரின்றி தவிக்கின்றார்கள்.
ஆனால் கேகாலையில் இருந்து குடியேறிய மக்களுக்கு தாராளமான நீர் வழங்கப்படுகின்றது. அதுமட்டுமன்றி அம்பாறை மாவட்ட விவசாயக் காணிகளுக்கு இரண்டு போக நெற்செய்கை மேற்கொள்வதற்கு போதியளவு நீர் வழங்கப்படும் வேளை மட்டக்களப்பு மாவட்ட வயற்காணிகளுக்கு ஒரு போகம் செய்வதற்கும் ஒழுங்காக நீர் வழங்கப்படுவதில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூரின் மேற்கேயிருக்கும் 14ஆம் குடியேற்ற கிராமத்தில் கல்லோயா நீர்ப்பாசன திட்டத்தின் கீழான வாய்க்கால் ஒன்று உள்ளது. ஆனால் 50 வருட காலமாக அந்த வாய்க்காலில் நீர் வழங்கப்பட்டதை நான் கண்டதே இல்லை.
எனவே மட்டக்களப்பு மாவட்டத்தையும் அம்பாறை மாவட்டத்தையும் சேர்ந்த பிரதிநிதிகளைக் கொண்டு நீர்விநியோக கட்டமைப்பு ஒன்றை உடன் நிறுவவேண்டும்.
குளத்தில் தேக்கிவைக்கப்பட்டுள்ள நீரைக்கணக்கெடுத்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இத்தனை ஏக்கர் பாசனம் என்று அம்பாறைக்கு இத்தனை ஏக்கர் பாசனம் என்றும் சமமாக நீரை பங்கீடு செய்ய வேண்டும்.
அதே போன்று இவ்விரு மாவட்டங்களுக்கும் குடிநீர் விநியோகத்தின் அளவு தீர்மானிக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் இத்தனை EMC தண்ணீர் விநியோகிக்கப்பட்டுள்ளது என்பதனை கணக்கெடுத்து அதனை மக்களுக்குத் தெரியப்படுத்தப்படவும் வேண்டும்.
எனவே இன நல்லிணக்கத்தைப் பாதித்த கடந்தகால சம்பவங்களை தவிர்ப்பதற்காக அரசாங்கம் இவ்விடயம் தொடர்பாக பாரபட்சமற்ற அணுகுமுறை ஒன்றினை கையாள உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிழக்கின் அரசியல் அதிகாரம்:
இன நல்லிணக்கத்தைப் பாதிக்கும் மிக முக்கிய காரணியாக இவ்விடயம் அமைகிறது. 15ஆம் நூற்றாண்டு வரை மட்டக்களப்புத் தேசத்தில் தமிழ் சமுகத்தினரை விட வேறு எந்த சமுகத்தினரும் பெருமளவில் வாழ்ந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை.
மட்டக்களப்பிற்கு தெற்கே தமிழ் வன்னிமைகளே ஆட்சி செலுத்தி வந்துள்ளன. ஆனால் ஒரு முஸ்லிம் வன்னிமையும் ஆட்சி புரிந்தமைக்கான வரலாறு எதுவும் இல்லை.
சிற்றரசுகளான இவ்வன்னிமைகள் மீது மேலாண்மை செலுத்திய கண்டிய மன்னரால் 1627ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் மட்டக்களப்பில் குடியேற்றப்பட்டனர்.
#இலங்கையில் முதல் முதல் உத்தியோக பூர்வமான சனத்தொகை கணக்கெடுப்பு 1881இல் நடைபெற்றது.
இதில் கிழக்கில் 59% மான தமிழர்கள் இருந்தனர். 1956 ஆண்டு இனக்கலவரத்தின் பின்னர் இதில் வீழ்ச்சி காணப்பட்டுக் கொண்டே வருகிறது. 1956ஆம் ஆண்டு 48% மாக இருந்த தமிழரின் சனத்தொகை தற்போது 40வீதமாக குறைந்து வீழ்ச்சி கண்டமைக்கு அரசின் செயற்பாடுகளே காரணமாயின. இன நல்லிணக்கத்திற்கு ஒரு பாரிய சவாலாக இந்த சனத்தொகை வீழ்ச்சி காணப்படுகின்றது.
இதன் காரணமாக கிழக்கின் பெரும்பான்மையானோராக இருந்த தமிழ் சமூகத்தினரை சிறுபான்மையினராக இருந்த முஸ்லிம் சமூகத்தினர் ஆளும் நிலை ஏற்பட்டது.
அவர்கள் ஆள்வதில் பிரச்சினையேதும் இல்லை. ஆனால் அவர்களின் கடந்த நாலுவருட செயற்பாடுகள் சிங்கள அரசுகளின் செயற்பாடுகள் போன்றே உள்ளன. வேலை வாய்ப்பு மற்றும் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதி என்பவற்றில் பாரதூரமான பாதிப்புக்களையும் புறக்கணிப்புகளையும் செய்கின்றனர்.
இதற்குத்தானா தமிழ் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் தமது உயிர்களை ஆகுதி ஆக்கி மாகாண சபையைப் பெற்றெடுத்தனர்?
நாங்கள் ஆயிரக்காணக்கான ஆண்டுகளாக பிறந்து வளர்ந்த மண்ணின் மீது கொண்ட பற்றுதலின் காரணமாக தமிழ் இளைஞர்கள் நெருப்பாற்றில் நீந்தினார்கள்.
அதன்மூலம் ஏற்பட்ட தமிழ் நாட்டினுடைய அழுத்தம் காரணமாக இந்தியா தலையிட்டு வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை ஆட்சியை தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்தது.
பின்பு அரசியல் சூழ்ச்சி காரணமாக கிழக்கு மாகாணத்தைப் பிரித்துவிட்டனர். இதன் பின் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியையும் தமிழரிடம் இருந்து பறித்து விட்டனர்.
உரிமை வேண்டிப் போராடிய தமிழ் மக்களில் 8% மானோரே அழித்து விட்டதன் காரணமாகவே கிழக்கு மாகாணத்தில் இன நல்லிணக்கம் என்பது எட்டாக்கனியாக உள்ளது.
எனவே கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களே பெரும்பான்மையினர் என்பதும், அவர்களே கிழக்க மாகாணசபைக்கா போராடினார்கள் என்பதும் இனத்தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டதன் காரணமாக இன்று அரசியல் அதிகாரத்தை இழந்து நிற்கின்றார்கள் என்பதுமான உண்மை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
எனவே கிழக்கு மாகாணசபையில் உள்ள 37 உறுப்பினர்களில் 48% மானது தமிழ் மக்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
இல்லையெனில் அழிக்கப்பட்டவர்களை மீள் எழுப்பிக் கொடுக்க முடியுமா? ஏனெனில் இந்த வீழ்ச்சி திட்டமிடப்பட்டு ஏற்படுத்தப்பட்டது.
அதற்கு ஏதாவது ஒரு வகையில் பரிகாரம் காணப்பட வேண்டும். அப்போதுதான் உண்மையான நல்லிணக்கத்தை கிழக்கில் காணமுடியும்.
பரிகாரம் காண்பதற்கான வழிமுறைகள் பல உள்ளன. எனவே சமுகங்களைப் பாதித்த கடந்தகால சம்பவங்களை தவிர்ப்பதற்காக கிழக்கு மாகாண சபையில் 48% இட ஒதுக்கீடு செய்வதற்கான அணுகு முறைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
இல்லையேல் வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும். கறையான் புற்றெடுக்க பாம்பு குடியேறிய கதையாக எந்தவொரு தமிழனும் ஒத்துப்போக மாட்டான்.
இந்நிலை தொடர்ந்தால் இன நல்லிணக்கம் என்பது எட்டாக்கனியாகவே மாறிவிடும்.
இழப்பீடுகள்:
யுத்தத்தின் கோரவிளைவுகளில் ஒன்று பெண்களை விதவைகளாக்கி விட்டமை. இலங்கையின் வடக்கு கிழக்கில் சுமார் 122,000 விதவைகளை யுத்தம் பிரசவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான திட்டவட்டமான புள்ளி விபரங்களை அரசாங்கம் வெளிப்படுத்தியதாக தகவல்கள் இல்லை.
அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, யப்பான் போன்ற நாடுகள் பெருமளவு நிதியினை வழங்கியதாகவும் வழங்கவுள்ளதாகவும் ஊடகங்கள் வாயிலாக அறியக்கூடியதாக உள்ளது. இவை முழுவதும் உட்கட்டமைப்பிற்கே செலவிடப்படுகிறது.
பசியோடு தவிப்பவனுக்கு பாதைகள் கட்டிடங்கள் முக்கியமா? அல்லது வாழ்வாதாரம் முக்கியமா என்பதைக்கூட அரசாங்கத்தால் அறியமுடியாமல் உள்ளது. எனவே பெறப்படும் நிதிமுழுவதும் வாழ்வாதாரத்திற்கே செலவிடப்பட வேண்டும்.
முதற்கட்டமாக விதவைப் பெண்களுக்கு ஒருவருக்கு ரூபா 150,000 வீதம் தற்போது தயாரிக்கப் பட்டுக்கொண்டிருக்கும் பட்ஜெட்டிலும் நதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
அந்நிதியினை பயானாளிகளிடம் நேரடியாக கையளிக்காது பிரதேச செயலகத்தின் கண்காணிப்பில் இருவரும் ஒத்த கருத்தின்படி சுயதொழில் முயற்சிக்கு செலவிடப்பட வேண்டும்.
யுத்தம் முடிந்து ஆறு வருடங்களாகியும் வெற்றியை விளம்பரப்படுத்த எடுக்கப்படும் அக்கறை யுத்தம் பிரசவித்த விதவைகளின் வாழ்வில் காட்டப்படவில்லை.
அதனால் அவர்களில் சிறுதொகையினர் கலாச்சார சீரழிவுகளில் ஈடுபடுவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச் செய்திகள் உண்மையானவை என நான் ஏற்றுக் கொள்கின்றேன்.
இந்த அவலநிலை தொடர்பாக மாண்புமிகு ஜனாதிபதியுடன் தங்கள் செயலணி உடனடியாக ஒரு சந்திப்பை மேற்கொண்டு தற்போது தயாரிக்கப்படும் 2017 ஆண்டிற்கான வரவுசெலவு திட்ட முன்மொழிவுகளில்,
விதவைகளின் நிரந்தர வாழ்வாதாரத்திற்கு தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்யவேண்டுமென ஒரு கோரிக்கையினை விடுக்குமாறு ஒரு வேண்டுகோளை உங்கள் முன் வைக்கின்றேன்.
உங்கள் அறிக்கை தயாராகி வெளிவந்து நிவாரணம் கிடைக்க நீண்டகாலம் எடுக்கும் என்பதினால் உடனடியாக ஜனாதிபதியைத் தொடர்பு கொள்ளுமாறும் தங்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.
#மட்டக்களப்பு மாவட்டத்தின் விதவைகள்:
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் 22.12.2008ம் திகதியில் உள்ளவாறு 25727 விதவைகள் உள்ளனர். இந்த விபரங்கள் பின்வருமாறு.
பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் - 2008.12.22
பிரதேச செயலாளர் பிரிவுகளின் சாராம்சம்.
மட்டக்களப்பு மாவட்டம்.
பிரதேச செயலாளர் பிரிவுகள் கிராம சேவையாளர் பிரிவுகள் கிராமங்களின் எண்ணிக்கை குடும்பங்களின் எண்ணிக்கை மொத்த சனத்தொகை பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை
மண்முனை வடக்கு 48 85 22357 82037 2561
மண்முனை மேற்கு 24 116 8297 28998 1347
மண்முனை பற்று 27 41 8378 30458 1438
மண்முனை தென்மேற்கு 24 65 6532 23535 1365
மண்முனை தென் எருவில்பற்று 45 64 16429 60836 3213
காத்தான்குடி 18 18 12695 48357 2072
போரதீவுபற்று 43 54 12744 482292 2673
ஏறாவூர்பற்று 39 162 18954 75449 3321
ஏறாவூர் நகரம் 17 40 9021 36240 1550
கோறளைப்பற்று 12 24 8467 32938 1450
கோறளைப்பற்று தெற்கு 18 67 8367 37037 1325
கோறளைப்பற்று வடக்கு 16 51 4998 18648 1134
கோறளைப்பற்று மத்தி 9 15 7908 30679 1651
கோறளைப்பற்று மேற்கு 8 11 7927 31716 627
348 813 153074 25727
இது 100வீதம் சரியான தரவுகளாகும். கிழக்கில் 2007ஆம் ஆண்டில் யுத்தம் முடிந்த பின்பு பெறப்பட்ட தரவுகளே இவை. மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான் கரைப் பிரதேசமே யுத்த களமாக காட்சியளித்தது.
இதில் 4 பிரதேச செயலகப் பரிவுகளும், வாகரையையும் சேர்த்து ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 9840 விதவைகள் காணப்படுகின்றனர்.
இவர்களின் வாழ்வாதாரத்திற்கேற்ற சுயதொழில்களை தேடவேண்டியுள்ளது. பண்ணைப் பசுக்கள் வளர்ப்பதற்கான சூழல் படுவான்கரை பிரதேசத்தில் காணப்படுவதால் 9840 பேரில் பசுவளர்ப்பிற்கு விருப்பமுடையவர்களை தெரிவு செய்து அதிகபால் கறக்ககூடிய பசுவினை அதற்கான கொட்டில் தீன் என்பவற்றுடன் வழங்க வேண்டும்.
உற்பத்தி செய்யப்படும் பாலைக் கொள்வனவு செய்வதுடன் பாற்பொருட்கள் தொழிற்சாலை ஒன்றினையும் படுவான்கரையில் அமைக்க வேண்டும்.
10,000 பாற்பசுக்கள் திட்டம் விதவைகளின் வயிற்றில் பாலை வார்க்கும் திட்டமாக இருக்கும். ஏனைய விதவைகளுக்கான தொழில்களை அவர்களை சந்திப்பதன் மூலம் அதிகாரிகள் அறிந்துகொள்ள முடியும்.
எனவே தற்போது தயாரிக்கப்படும் பட்ஜெட் முன்மொழிவுகளில் இதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்வதற்கு தங்கள் செயலணி அதிமேதகு ஜனாதிபதி அவர்களை சந்தித்து ஒழுங்கு செய்தல் வேண்டும்.
அதைவிடுத்து நல்லிணக்கம் வந்துவிட்டது என வெளிநாட்டு இராஜ தந்திரிகளிடம் எடுத்துக்கூறவதினால் மேடைகளில் பேசுவதினாலும் உண்மையான நல்லிணக்கம் வந்துவிடாது.
மாறாக விதவைகளின் விபச்சாரம் அதிகரித்துச் செல்லவே இந்தப் பேச்சளவு நல்லிணக்கம் வழிவகுக்கும்.
விதவைகள் புனர்வாழ்வுத் திணைக்களம்:
விதவைகள் தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக புதிதாக விதவைகள் புனர்வாழ்வுத் திணைக்களம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.
தற்போதைய ஓய்வூதியத் திணைக்களத்தின் பாணியில் இது செயல்படுத்தப்பட வேண்டும். விதவைகள் தொடர்பான விபரக் கையேட்டினை வெளியிடுவது உட்பட விதவைகளுக்கான சேமநலன்கள் முழுவதும் இதனூடாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
இதன் அலுவலகம் வடக்கு கிழக்கிற்கு பொதுவான திருகோணமலையில் அமைக்கப்பட வேண்டும். அங்கு நியமிக்கப்படும் முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் சிற்றூழியர்கள் அனைவரும் பெண்களாகவே இருக்க வேண்டும்.
குறிப்பாக விதவைகளுக்கு இதில் முன்னுரிமை வழங்க வேண்டும். வடக்கு கிழக்கு மக்கள் தொகையின் இன விகிதாசாரப்படி இதில் நியமனம் இடம் பெறல் வேண்டும்.
இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பிய அகதிகள்:
1983ம் ஆண்டு ஜூலைக் கலவரத்தை அடுத்து 1990 கலவரத்தை அடுத்தும் இந்தியாவிற்கு அதிகளவில் அகதிகளாக எம்மக்கள் சென்றனர்.
பின்பு இடைக்கிடை பதற்றங்கள் தணிந்ததை அடுத்து மீண்டும் தாயகம் திரும்பினர். இவ்வாறான புலம்பெயர்ந்த அகதிகளுக்கு புனர்வாழ்வு அதிகார சபையால் எந்தவிதமான நிவாரண உதவிகளும் அறிவிக்கப்படவும் இல்லை, வழங்கப்படவும் இல்லை.
பிறந்த மண்ணில் சொத்துக்கள் அனைத்தையும் இழந்து விட்டு அந்நிய மண்ணில் அகதிகளாக வாழ்ந்தவர்கள் மீண்டும் திரும்ப இயல்பு வாழ்க்கையைத் தொடர்வதற்கு எவ்வித உதவிகளும் வழங்கப்படாமை கொடுமையிலும் கொடுமையாகும். புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்தியாவிற்கு விஜயம் செய்த காலப்பகுதியில் இந்திய மத்திய அரசாங்கம் அகதி ஒருவர் இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்பும் பட்சத்தில் மூன்று இலட்சம் ரூபாவினை நிவராண உதவித்தொகையாக அறிவித்தது. இதனை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிந்தது.
இதனை முன்னுதாரணமாக் கொண்டு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தியாவில் இருந்து ஏற்கனவே திரும்பிய, திரும்ப விரும்பும் அகதிகள் ஒவ்வொருவருக்கும் நிவாரண நிதியாக ஆறு இலட்சம் வரை வழங்க ஆவன செய்யப்பட வேண்டும்.
மேலும் 1990 கலவரத்தைத் தொடர்ந்து அகதிகளாகச் சென்றவர்கள் திரும்பி வந்து கடன்பெற்றே தமது இயல்பு வாழ்க்கையைத் தொடங்கி உள்ளனர்.
அந்தக்கடன்கள் இருபது வருடமாக வளர்ச்சியடைந்து கொண்டே வருகின்றன. இதனால் பலர் தற்கொலையும் செய்துள்ளனர்.
எனவே இப்படியான கடன்கள் இலங்கை மத்திய வங்கியால் அங்கிகரிக்கப்பட்ட அரச தனியார் வங்கிகளில் கடன் பெற்றிருந்தால் அக்கடன்கள் முழுமையாக அரசு தள்ளுபடி செய்து அறிவிக்க வேண்டும். அல்லது தனியார் வங்கிகளுக்கு அக்கடனை அரசுமீளச் செலுத்த வேண்டும்.
இழப்பீடுகள் தொடர்பான அலுவலகத்தை நிறுவினால் மட்டுமே போதாது. அதிகரிக்கப்பட்ட இழப்பீடுகளை உள்ளடக்கியதாக புதிய சுற்றறிக்கை ஒன்றினையும் அரசாங்கம் விசேடமாக வெளியிடவேண்டும்.
அதில் செயற்பாடுகளையும் நிறைவேற்றி முடிப்பதற்கான கால அட்டவணையும் வகுக்கப்பட வேண்டும்.
இல்லையேல் தற்போதுள்ளது போல் பாதிக்கப்பட்ட ஒருவர் இருபத்தைந்து வருடங்கள் நிவாரணம் பெற காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம்.
பின்வரும் கையேடுகள் அல்லது டிரக்டரிகள் இவ்வருட இறுதிக்கு முன்பதாக மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும்.
வாரவெளியீட்டு பத்திரிகைகளில் இதன் விலை பெற்றுக் கொள்ளும் இடம் போன்றன விளம்பரப்படுத்தப்பட வேண்டும்.
சாதாரண பொதுமக்களும் வாங்கி தகவல்களை அறியக்கூடியதாக குறைந்த விலைகளில் இவை கிடைக்க ஆவன செய்யவேண்டும்.
1. இலங்கையில் காணாமல் போனோர் கையேடு – 1972 – 2010
2. இலங்கையின் வடக்கு கிழக்க விதவைகளின் கையேடு – 1972 – 2010
3. இலங்கையில் இருந்து இந்தியா சென்று மீள திரும்பிய அகதிகள் கையேடு – 1983 -2010
4. வடகிழக்கில் யுத்தத்தினால் பெற்றோரை இழந்த சிறார்கள் விபர கையேடு
5. வடகிழக்கு யுத்தத்தால் கடந்தகாலத்தில் அங்கவீனமானோர் ஆனோர் விபர கையேடு
6. இலங்கையின் உள்நாட்டு யுத்தம் காரணமாக வடகிழக்கில் உயிரிழந்தோர் விபரக் கையேடு – 1972 – 2010
மேற்படி கையேடுகள் மூலம் குறிப்பிட்டவாறான உண்மைகள் வெளிக் கொண்டுவரப்பட வேண்டும்.
மாவட்டச் செயலகங்களில் உள்ள திட்டமிடல் பிரிவு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் என்பவற்றில் தற்போதுள்ள தகவல்களை இந்நோக்கத்திற்காக உடடினடியாகப் பெறமுடியும். மேற்கொண்டு பெறப்படும் தகவல்களை இரண்டாம் பதிப்பில் வெளியிடலாம்.
கிராமம், கிராமசேவகர் பிரிவு, பிரதேச செயலக பிரிவு, மாவட்டம் என்ற வகையில் புள்ளி விபரங்கள் எடுத்துக் கூறப்பட வேண்டும்.
இலங்கையின் இறுதி யுத்தத்தில் உயிரிழந்தோர் 10,000, 40,000, 146,679 என மாறுபட்ட புள்ளிவிபரங்கள் வெளிவருகின்றன.
உண்மைகள் மறைக்கப்படக் கூடாது. அவை மக்கள் முன் வைக்கப்பட வேண்டும்.
மேலும் மேலே கூறப்பட்ட கையேடுகளில் உள்ள விபரங்கள் இணையத் தளங்களிலும் பார்க்ககூடியதாக தரவேற்றம் செய்யப்படலும் வேண்டும்.
எத்தகைய இழப்புக்களுக்கு நிவாரணம் தேவை.
கடந்த 30 வருடகால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
யுத்தத்தினாலும் அதன் பக்கவிளைவுகளாலும் உயிரிழந்தவர்களின் வாரிசுகளை முறையாக இனங்கண்டு ஒவ்வொருவருக்கும் ரூபா.10 இலட்சம் நஸ்டஈடாக வழங்கப்பட வேண்டும்.
காணாமல் போனவர்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் திரு.மக்ஸ்வெல் பரணமக ஒவ்வொருவருக்கும் ஒரே தடவையில் ஐந்து இலட்சம் ரூபாவினை வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார். இத்தொகை போதாது.
யுத்தத்தின் காரணமாக உடலூனமுற்றவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் போதாது. அவை அதிகரித்து வழங்கப்பட வேண்டும்.
தன் பிறந்த மண்ணைவிட்டு இடம்பெயர்ந்து இந்தியாவில் அகதியாக வாழ்ந்து தாய்நாடு திரும்பிய ஒவ்வொரு அகதிக்கும் ரூபா ஆறு இலட்சம் நிவாரண உதவியாக வழங்கப்பட வேண்டும்.
மேலும் இவர்கள் தாயகம் திரும்பி பின்பு இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்காக கடன் ஏதும் பெற்று அக்கடன் வளர்ச்சி பெற்றிருந்தால் அக்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.
இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட அரச தனியார் வங்கிகளில் பெற்ற கடன்கள் இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.
உள்நாட்டில் இடம்பெயர்ந்த ஒவ்வொரு அகதிக்கும் வாழ்வாதார நிதி வழங்கப்பட வேண்டும்.
மேற்படி இந்திய அகதிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு வீடு வழங்கப்பட வேண்டும். சொந்தக் காணி இல்லை என்று தட்டிக்கழிக்கக் கூடாது.
காணி இல்லாதவர்களுக்கு காணி ஒன்றை கொள்வனவு செய்வதற்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட வேண்டும். இதே போன்று உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்களுக்கும் வீடு ஒன்றினை வழங்க வழிவகை செய்யப்பட வேண்டும்.
யுத்தத்தில், தாயை, தந்தையை, இருவரையும் இழந்த 25 வயதிற்குட்பட்டவர்கள் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட வேண்டும்.
அவர்களில் உறவினர்களுடன் இருப்பவர்களுக்கு மாதமொன்றுக்கு ஒருவருக்கு பத்தாயிரம் ரூபாவீதம் வழங்கப்பட வேண்டும். ஏனையவர்களுக்கு இருக்கும் சிறார்களின் எண்ணிக்கைக்கேற்ப காப்பகங்கள் நிறுவப்பட வேண்டும்.
இந்தியாவில் இருந்து மீண்டும் நாடு திரும்பிய உத்தியோகஸ்தர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டதே தவிர அவர்களுடைய கடந்தகால அகதி வாழ்கையில் இருந்து வெளிவருவதற்கு எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை.
இது தொடர்பான சுற்றறிக்கையில் பின்வரும் திருத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை ஒன்றை முன்வைக்கின்றேன்.
இவ் உத்தியோகத்தர்கள் வேலையிழந்த காலப்பகுதி முழுவதும் விசேட லீவாக கணிக்கப்பட்டு சம்பளமுள்ள லீவாக கணக்கிடப்பட வேண்டும்.
இவ் உத்தியோகத்தர்களில் 95மூ மானோர் ஓய்வு பெற்றுவிட்டனர். எனவே 1991ம் ஆண்டு பெற்ற விசேட லீவுக்கு, அப்போது பெற்ற மாதச் சம்பளம் அப்போது வழங்கப்படலாம்.
அப்போது வழங்காமல் விட்டு அதே மாதச் சம்பளத்தை இப்போது வழங்குவது எந்த வகையிலும் பொருத்தமில்லை. எனவே அவர்கள் பெற்ற விசேட லீவுக்களுக்கு அவர்கள் சேவையில் இருந்து ஓய்வு பெறும்போது மாதச்சம்பளமாக எவ்வளவு பெற்றார்களோ அதே சம்பளம் அவ் லீவுகாலப்பகுதிக்கும் வழங்கப்ட வேண்டும்.
ஏனெனில் ¼ நூற்றாண்டு கடந்த பின்பு வழங்கப்படும் நிவாரணம் ¼ நூற்றாண்டுக்கு முந்தைய நிவாரணமாக இருக்கமாட்டாது.
மேலும் சுற்றறிக்கையில் அநாவசியமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை மீளப்பெறப்பட்டு புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட வேண்டும்.
இவ்வாறு நாடு திரும்பிய உத்தியோகத்தர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்காக தனிப்பட்டவர்களிடமும் வங்கிகளிடமும் மாறிமாறி கடன்பெற்று 20வருடங்களாக கடன் வளர்ச்ச்p பெற்று உள்ளது.
எனவே இவ்வாறான அரசாங்க உத்தியோகத்தர்கள் இலங்கை மத்திய வங்கியில் அங்கிகரிக்கப்பட்ட அரசதனியார் வங்கிகளில் கடன் பெற்றிருந்தால் அவ் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
அத்தொகை அரசினால் உரிய வங்கிக்கு மீளச் செலுத்தப்பட வேண்டும். இவ்வாறான நிலையிலுள்ளோர் வடக்குகிழக்கில் சுமார் 100 பேருக்கும் குறைவாகவே காணப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களின் காயங்களுக்கு இவ்வாறான மருந்துகளை தடவுவதன் மூலமே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.
இழப்பீட்டு தொகையில் மாற்றம் வேண்டும்:
உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1983ம் ஆண்டில் தற்போதுள்ள நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டன.
யுத்தத்தால் உயிரிழந்தவர்களுக்கு ஒருஇலட்சம் ரூபா நஸ்ரஈடாக வழங்கப்பட்டது. அது அப்போதைய கால கட்ட வாழ்க்கைச் செலவுகளுக்கு போதுமானதாக இருந்திருக்கலாம்.
ஆனால் 30 வருடங்களுக்குப் பிறகும் ஒரு இலட்சம் ரூபா வழங்குவது எப்படிப் பொருத்தமானதாக இருக்கும் என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.
அதிகரித்த வழங்க நிதி பற்றாக்குறையை அரசு காரணமாக கூறக்கூடும். ஆனால் வெளிநாடுகளினால் வழங்கப்படும் பெருந்தொகை நிதியினைக் கொண்டு இதனை குறைந்தது பத்து இலட்சம் ரூபாவாக ஆவது அதிகரிக்க வேண்டும்.
பாரிய கட்டுமானங்கள் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளுக்கு வழங்கப்படும் பெரும் நிதியினை குறைத்து இவற்றை செயற்படுத்த வேண்டும்.
மேற்படி வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் உதவிகள் அனைத்தையும் உட்கட்டுமான பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது. வாழ்வாதாரத்திகே பெருமளவில் பயன்படுத்த வேண்டும்.
குறைந்தது நான்கு வருடங்களாவது இவ்வாறு வாழ்வாதாரத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படல் வேண்டும்.இந் நிதியின் வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கு வழங்குவதன் மூலம் சிறந்த பெறுபேற்றினை அடைய முடியும்.
1977ம் ஆண்டு இனக்கலவர காலப்பகுதி முதல் 2009 மே மாதம் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படல் வேண்டும்.
-
No comments:
Post a Comment