Wednesday, June 14, 2017

தமிழகத்தின் ஊடகங்கள்...

தமிழகத்தின் ஊடகங்கள் நமக்கு கிடைத்த  சாபங்கள் / அபாயங்கள். 
------------------------------------
தமிழக மக்கள் அறியப்பட வேண்டிய தமிழகத்தின் தலையாய பிரச்சனைகள் ஏராளம். அறிவிக்கப்பட்ட திட்டங்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாமல் இருப்பவை எத்தனையோ? மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டிய செய்திகளை நிகழ்வுகளை எல்லாம் காட்டப்படமால் அரசியல் கழிவுகளில் கேமராவை வைத்து அருவருத்தக்க விதமாக ஒளிபரப்பி வருகின்றனர். வெளிமாநிலங்களில் வாழும் அறிவார்ந்த நண்பர்கள் இது தான் இன்றைய தமிழக அரசியலா என கேலியாக கேட்பது வேதனையளித்து வெட்கப்பட வைக்கின்றது. 

ஒவ்வொரு ஊடகமும் ஒரு சாதிப்பிரிவை, ஒரு சாதிக் கட்சியை தூக்கி சுமக்கின்றன.  அயோக்கியத்தனம் செய்பவர்களையும் ஹரிச்சந்தர்கள் போல புனிதர்களாக காட்டுகின்றன. 
மறைக்க வேண்டிய, மறுக்கப்பட வேண்டிய செய்திகளை எல்லாம் பேசப்படாமல் சில சில்லுவண்டுகளுக்கு சிகை அலங்காரம் செய்து காட்டுகின்றன. அத்துடன் முடிந்தால் கூட பரவாயில்லை. அதனை தலைப்பாக கொண்டு ஒரு மணிநேர விவாதம். விவாதம் நடத்துகின்றோம் என்ற பெயரில் இவர்கள் இலாபத்தை ஈட்டிவிடுகின்றனர். ஆனால் காண்பவர்களின் நேரம் விரயமாகின்றது. மக்களும் இதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல்  அந்த விவாதம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். தொலைக்காட்சி விவாதங்களே கூடாது என சொல்லவில்லை. எதைப் பற்றி பேசுகின்றோம், யாரை வைத்து பேசுகின்றோம் என்பது தான் இங்கு பிரச்சனையே.  இந்தியாவின் பொருளாதார பிரச்சனைகள், இந்தியாவின் வாழ்வாரார பிரச்சனைகள், இந்தியாவின் வெளியுறவு கொள்கைகள் சரியா? வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கம். GDP வீழ்ச்சி. அமெரிக்க-லத்தீன் நாடுகளைப் போல இந்தியாவும் பின்தங்குமோ என்ற பீதி. இவற்றை எல்லாம் குறித்து நடுநிலையுடன் பேசும் ஊடகங்கள் எத்தனை? இவர்கள் பேசாவிட்டாலும் பிரச்சனை இல்லை, அடுத்தவர்கள் பேசிவிடக் கூடாது என்பதற்காக பயனுள்ள பேச்சுக்களை இருட்டடிப்பு செய்ய வேண்டுமென தீபா வீட்டு வாயிலில் அல்லவா தீபம் ஏந்தி காத்துக் கிடக்கின்றார்கள். இவர்கள் ஊடகங்களா? உள்ளதை உள்ளபடி செய்தியாக காட்டும் இதழியல் இலக்கணம் இவர்களில்  எத்தனைப் பேரிடம் இருக்கின்றது. ஊடக தர்மம் என்றால்  ஊடகத்தினர் அரசியல்வாதிகளிடம் கேயேந்துவதா என்று  சிந்திக்க வேண்டியதாகின்றது. 

தமிழ் செய்தி தொலைக்காட்சிகளின் விவாதங்களில் ஒரு குறிப்பிட்ட சமூக ஆர்வலர்களும், ஒருசில பத்திரிகையாளர்கள் மட்டுமே பங்கெடுப்பது ஏன்? தமிழகத்தில் மூத்த பத்திரிகையாளர்களே இல்லையா? இதிலும், பலர் பகுதிநேரமாக ஒரு குறிப்பிட்ட பத்திரிகைக்கு மட்டும் எழுதி விட்டு அரசியல் ஆழம் அறிந்தவர் போல் பேச வைப்பது ஏன்? இது போன்றவர்களால் தங்களின் சில சுயவிருப்பங்கள் தீர்க்கப்படுவதால் அதுபோல் குறிபிட்டவர்களுக்கு தொலைக்காட்ட்சியின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர் குழுவினர் வாய்ப்பு அளிப்பதாகக் கூறப்படு்கிறது. இந்தநிலை, ஆங்கிலம் மற்றும் இந்தி செய்தி தொலைக்காட்சிகளில் பார்க்க முடியவில்லை. இவர்கள் அந்த பிரச்சனை சம்மந்தப்பட்டவர்களை தேடிப்பிடித்து வெளியூர்களில் இருப்பினும் தொலைபேசி வாயிலாக விவாதத்தில் சேர்க்கிறார்கள். ஆனால், தமிழில் இதுபோல் அன்றி, சில குறிப்பிட்ட ஆர்வலர்களே அனைத்து அறிவு சார்ந்த பிரச்சனைகளிலும் விவாதம் செய்ய வருகின்றனர். அதேபோல், தேசிய அளவில் நடக்கும் முக்கிய சம்பவங்கள் தமிழில் இடம் பெறுவது அதிசயமே! ஆங்கிலம் மற்றும் இந்தி தொலைக்காட்சிகள் தேசியப் பிரச்சனிகளை விவாதிக்க, தமிழில் சசிகலா, ஒ.பி.எஸ் போன்ற எல்லையை விட்டு தமிழகப் பார்வையாளர்களை தாண்ட விடுவதில்லை. இந்த நிலை  மாற வேண்டியது மிக, மிக அவசியம்.

இலங்கையில் நடந்த இன அழிப்பின் யுத்தக் காட்சிகளை மூடிமறைத்து முத்தக் காட்சிகளை தலையங்கமாக எழுதிய ஊடகங்கள் தானே இவை? இவர்களிடம் ஊடக தர்மம் எதிர்பார்ப்பது கொட்டும் தேள் கொடுக்கில் தேன் வடியுமா என எதிர்ப்பார்ப்பது போலாகும்.

கரப்ஷன் என்றால் வெறும் ஊழல் என்று மட்டும் பொருள் கொள்ளக் கூடாது.  அதில்  எல்லா வகையான அயோக்கியத்தனமும் உள்ளடங்கும். இதழியியல் இலக்கணத்தை , ஊடக தர்மத்தை கடைப் பிடிக்காதவர்களும் குற்றவாளிகள் தான்! நடுநிலை என்று கூறிக் கொண்டு நாட்டு மக்களை ஏமாற்றுவதும் குற்றம் தான். நாட்டைப் பிடித்த நோய்களில் பத்திரிகையும் ஒன்று என்றார் பெரியார் எனும் தீர்க்கதரிசி. இந்த கிழவனை இந்த உலகம் சும்மாவா கொண்டாடுகின்றது என்ற கேள்விக்கும் மேற்கூறிய கருத்தே பதிலாக கிடைக்கின்றது.  ஆனால் அவரையும் அவர் கூறியவற்றையும் மறந்துவிட்டு இவர்களிடம் இன்னமும்  எதிர்பார்த்து ஏமார்ந்துக் கொண்டு இருக்கின்றோம் என்பதே நிதர்சனம். 

#Television #ஊடகங்கள்  #நாளேடுகள் #வாராந்தரஇதழ்கள் 
#தமிழகஊடகசாபம் 
#இருட்டடிப்பு 
#தொலைக்காட்சிவிவாதங்கள் 

#KSRadhakrishnanpostings
#KSrpostinga
கே.எஸ் இராதாகிருஷ்ணன்
14-06-2017
 

No comments:

Post a Comment

அதிகாரம் நிரந்தரமில்லை. ‘’ Quality is not an act, it is a habit.”

‘’ Quality is not an act, it is a habit.”   ஞானபீடம் எழுத்தாளர் ஜெயகாந்தன் சொல்லுவார். “வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம் தான்” மிகச் ...