Monday, September 18, 2017

நினைவின் பதிவு- மணா

மூத்த பத்திரிகையாளர் மணாவின் பதிவு:
-----------------------------------




கி.ரா- 95 -புதுவை விழா
எழுத்தாளர்களை வாழும் காலத்தில் உரிய விதத்தில் கௌரவப்படுத்துவதில்லை என்பதை மறுக்கும் விதத்தில் புதுவையில் நடந்திருக்கிறது கிரா-95 விழா.
ஆந்திர,தெலுங்கானா முதல்வர்கள்.துணை ஜனாதிபதியான வெங்கய்ய நாயுடு என்று பலர் கி.ரா.வை வாழ்த்தியிருந்தாலும்,விசேஷமாக வாழ்த்துத் தெரிவித்தவர் கமல்.
மாலை நேரத்தில் நிறைவு விழா. வரவேற்புரை ஆற்றிய வழக்கறிஞர் கே.எஸ்.ராதா கிருஷ்ணன் " கி.ரா.வுக்கு ஞானபீட விருது போன்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை.தமிழகம் பல விஷயங்களில் ஒதுக்கப்படுகிறது"என்றவர் சிறு பட்டியலையும் வரிசையாகச் சொன்னார்.
கி.ரா.வின் மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன.
விழாவை மிகச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார் புதியதலைமுறையின் மூலம் பரிச்சயமான வேங்கடப் பிரகாஷ்.
கி.ரா.வின் படைப்புலகம்,அவர் தொகுத்த அகராதி உள்ளிட்ட நாட்டுப்புறவியல் குறித்த விரிந்த ஆய்வை முன்வைத்துப் பேசினார் தமிழச்சி தங்கபாண்டியன்.
அடுத்து செம்மலர் எஸ்.ஏ. பெருமாள் பேசிய பிறகு பேசவந்த நாஞ்சில் நாடனின் பேச்சில் அவ்வளவு சீற்றம். கி.ரா.வைப் போன்று எழுத்துலகில் உழைத்தவர்களுக்கு தமிழ் சமூகமும்,அரசியல் பிரதிநிதிகளும் தந்திருக்கிற எதிர்வினை பற்றிப் பக்கத்திலுள்ள கேரளாவை ஒப்பிட்டு விளாசினார். அவருடைய காட்டமும்,சங்க இலக்கியம் சார்ந்த வரிகளைத் தெளித்த நீரோட்டமுமான பேச்சுக்கு நல்ல வரவேற்பு.
திரைக்கலைஞரான சிவகுமார் புராண இலக்கியத்தையும்,கி.ரா.வின் கோபல்ல கிராமம் போன்ற படைப்புகள் உணர்த்திய பண்பாட்டையும் பரவசத்துடன் பேச்சில் அடுக்கினார்.
மூத்த தோழரான நல்லகண்ணு வயதில் பின்னோக்கி நகர்ந்த கம்யூனிஸ்ட் வகுப்புகளில் பங்கெடுத்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்." கம்யூனிஸ்ட் வகுப்பை எங்களுக்கு எடுத்தவர் சீனிவாசராவ்.பெரும் போராட்டங்களை காவிரிப் படுகையில் நிகழ்த்திய அந்தத் தலைவரின் வகுப்பில் எனக்கு முன்னால் பங்கேற்றவர் கி.ரா"என்ற நல்லகண்ணு கி.ரா.வின் பிரபலமான 'கதவு'கதைக்கான பின்புலத்தை நினைவுகூர்ந்தார்.
பழ.நெடுமாறன் சுருக்கமாக கி.ரா.வின் நாட்டுப்புறவியல் சார்ந்த தரவுகளைச் சேகரிப்பதில் இருக்கிற முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டார்.
நிறைவாக கிராமத்துத் திண்ணையில் உட்கார்ந்து பேசுகிற இயல்போடு சில பின்னோக்கிய அனுபவங்களைப் புன்சிரிப்போடு பகிர்ந்து கொண்டார். தனக்கு அருகில் இருந்த நல்லகண்ணு,நெடுமாறனைப் போன்ற தலைவர்களை இனிப் பார்க்க முடியாது.அரசியலில் நல்லவர்கள் நீடிக்க முடியாதபடி பண்ணிவிட்டார்கள்.."என்றவர் கால் சட்டை உடையுடன் சீனிவாசராவ் கம்யூனிச வகுப்பெடுத்த தருணத்தை விவரித்தார்.அவருக்கே உரித்தான கிண்டல் குறைந்துவிடாததை வெளிப்படுத்திய ஒருமணி நேரம் வரை நீடித்த கி.ரா.வின் பேச்சு. 
பா.செயப்பிரகாசம்,பஞ்சாங்கம்,புதுவை இளவேனில் போன்ற நிறைய நண்பர்களுடன் இணைந்து இந்த விழாவைச் சிறப்பாக நடத்தியவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
தனிப்பட்ட முறையில் அவருடைய தாயாரை முந்தைய தினம் இழந்த நிலையிலும் அதிலிருந்து மீண்டு விழாவை நடத்தியதற்கு கி.ரா.மீது கொண்டிருந்த பேரன்பு தான் காரணம்.
கி.ரா95- அந்த விதத்தில் நட்புணர்வின் அடையாளமான ஒரு விழா.
மனதில் கிராமத்தைச் சுமந்தவர்கள் இந்த விழாவையும் லேசில் மறக்க முடியாது.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...