Wednesday, December 5, 2018

உலக மண் தினம் டிச 5



———————————-
*ஒவ்வொரு ஆண்டும் டிச 5ம் தேதி சர்வதேச அளவில், உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது*.
உலகில் மண் வளத்தை காக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது.

உலகின் மண்ணினை, அதன் தன்மைகளைக் கொண்டு 12 வகைகளாகப் பிரிக்கின்றனர்.இவ்வாறு அமைவதற்க்குக் காரணிகளாக மழை, வெப்பம், மற்றும் காற்றோட்டம் போன்றவைகள் இருக்கின்றன.இக்காரணிகளால் மண்ணின் தன்மை மற்றும் இயல்புகளில் வேறுபாடுகள் ஏற்படுகின்றன.

சங்க இலக்கியங்கள் தமிழக நிலத்தை, ஐவகையாக வகைப்படுத்தினர். அவை குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல் மற்றும் பாலை என்பனவாகும். மருத நிலத்தை, வேளாண்மைக்கு ஏற்ற நிலமாக்கினர். மண்ணின் இயல்புகளைக் கொண்டு, நிலங்களை மென்புலம், பின்புலம், வன்புலம், உவர்நிலம் என்று வகைப்படுத்திருந்தனர்.

மண் என்பது, உலகத்திலுள்ள அனைத்து உயிர்களும் வாழ்வதற்கான முக்கிய அங்கமாக விளங்குகிறது. முக்கியத்துவம் வாய்ந்த மண்ணின் வளத்தை சமீப காலமாக அழித்துக்கொண்டு வருகிறோம்.

*மண்ணின் அழிவுகள்;-*
விவசாயத்தில், பயன்படுத்தும் ரசாயன உரங்கள் மண்ணிலுள்ள வளங்களை முழுமையாக பாதிக்கிறது. மண்ணிலுள்ள சத்துக்கள் குறைந்து, நுண்ணுயிர்கள் அழிவது மட்டுமின்றி, மண் மலட்டுத் தன்மையை பெறுகிறது. 

ரசாயன உரங்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பயன்படுத்தும் *பாலித்தீன் கவர்கள், மண்ணுக்கு பெரும்பாதிப்பு ஏற்படுகிறது.*
மண்ணின் களர்த்தன்மை மற்றும் உவர்த்தன்மை, மண்ணின் குறைகளாகும். அவற்றின் இயல்புகளை இயற்கை உரமிட்டு, அம்மண்ணின் வளத்தை மாற்றலாம். இரசாயன உரங்களை இடுவதினால், நல்லத் தரமான மண்ணின் இயல்பும் சீர் கெடுகிறது.

மண்ணில் மக்கிப்போகாமல் இருக்கும் பாலித்தீன் கழிவு, மழைநீரை மண்ணுக்குள் இறங்க விடாமல் தடுத்து, மண் வளத்தையும், சுற்றுச்சூழலையும் மாசடையச் செய்கிறது.இந்நிலையில், சொற்பமான அளவிலான விவசாயிகள், ரசாயன உரத்தை முற்றிலும் புறந்தள்ளி, மண்ணுக்கும் மனிதனுக்கும் நன்மை பயக்கும், இயற்கை மற்றும் அங்கக உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்கின்றனர்.

விவசாயிகளின் இந்த முயற்சி மண் வளத்தை காப்பதற்கான அச்சாரமாக இருந்தாலும், பெரும்பாலான விவசாயிகள் இன்னமும் ரசாயன உரங்களையே பயன்படுத்துகின்றனர். விவசாயிகள் ரசாயன உரத்தின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்; பொதுமக்கள் பாலித்தீன் பயன்பாட்டை கைவிட வேண்டும்.

பாறைகளிலிருந்து தோன்றிய மண்ணானது, பாறைகளின் தன்மைகளிலிருந்து மிகவும் வேறுபட்டிருக்கிறது. மண்பரிசோதனை மூலம் மண் வளத்தினைக் கண்டறியலாம். தாவரத்திற்க்கு மண்ணிலிருந்து, நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், சுண்ணாம்பு, மக்னீசியம், கந்தகம்,இரும்பு, மாங்கனீசு, போரான், தாமிரம், துத்தநாகம், குளோரின், மாலிப்டினம் போன்றவைகள் சத்துக்களாகக் கிடைக்கிறது.

எனவே, உலகளாவிய அளவில் மண்ணின் மகத்துவத்தை அனைவரும் அறியும் வகையில் அதன் வளத்தை காக்க வேண்டுமென அனைவரும் உறுதியேற்று, மண் மாசடைவதை தடுக்க வேண்டியது அனைவரின் தலையான கடமையாகும்.

முடிந்தளவு நெகிழிகளை பயன்படுத்துவதை குறைப்போம், துணிப்பைகளை கையில் எடுப்போம்...

No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...