தியாகச் செம்மல் செங்கோட்டை எல். சட்டநாதக் கரையாளர்.
-------------------------------
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் 108 ஆண்டுகளுக்கு முன் 1910இல் பிறந்த விடுதலை போராட்ட தியாகச் செம்மல் சட்டநாதக் கரையாளர் அறியப்பட வேண்டிய ஒரு ஆளுமையாகும். 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் 6 மாதம் சிறை தண்டனை பெற்று திருநெல்வேலியிலிருந்து வேலூர் சிறைக்கு முதல் வகுப்பு இரயில் பயணத்தை மறுத்து மூன்றாவது வகுப்பில் தான் பயணிப்பேன் என்று காவல் துறையில் அடம்பிடித்து பயணித்தார். வேலூரிலிருந்து திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டு ராஜாஜியுடன் சிறையிலிருந்தார். அங்கிருந்தே திருச்சி ஜெயில் என்ற பெயரில் ஆங்கிலத்தில் நூல் எழுதி அதை தமிழில் மொழியாக்கம் செய்து அதிகமாக இரண்டு மொழிகளிலும் விற்பனையாகின. திருச்சி சிறையில் இராஜாஜி, அவினாசிலிங்க செட்டியார், எம். பக்தவச்சலத்தோது 241 பேர் சிறையிலிருக்கும் போது சிறைக் கைதிகளுக்கு வகுப்புகள் எடுத்தார். இவருடைய ஆங்கிலப் புலமையை இராஜாஜியே பாராட்டியதுண்டு. 1937, 1942 ஆண்டுகளில் இரண்டு முறை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆங்கிலேயர் ஆட்சியில் டொமீனியன் தகுதி வழங்கியபோது நாடாளுமன்ற செயலாளராகவும் பணியிலிருந்தார். 1946 அவினாசிலிங்கம் செட்டியார் கல்வி அமைச்சராக இருந்தபோது, அவரின் நாடாளுமன்ற செயலாளராகவும் பணியிலிருந்தார். 1951இல் ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும், 1953இல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும், 1954இல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் இருந்தார். அப்போது தான் ஆவடியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மாநாடு நடைபெற்றது. அதில்தான் சோஷலிசம் கொள்கை என்ற அணுகுமுறையை காங்கிரஸ் கடைபிடித்தது. அதன் ஆங்கிலத் தீர்மானங்களை எல்லாம் ஒழுங்குபடுத்துபவர்களில் கரையாளரும் ஒருவராக இருந்தார். இறுதியாக தமிழ்நாடு உறுப்பினராக 1980களின் துவக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேருவோடு நல்ல அறிமுகம். நேருவின் சகோதரி திருமதி. விஜயலட்சுமி பண்டிட்டோடு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஒன்றாக பயின்று நட்பு பாராட்டினார். அமெரிக்க அரசு இவரை 1955இல் அழைத்து 3 மாத காலம் சிறப்பு விருந்தினராக உபசரித்து மாநில சட்டமன்றங்களிலும், கல்லூரிகளிலும் இவர் அமெரிக்காவில் உரையாற்றியதை பாராட்டியதுண்டு. இவர் செங்கோட்டையை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டுமென்று போராட்டம் நடத்தி திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரால் தான் இன்று செங்கோட்டை தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. அதிலும் இவர் போராடிய மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள தென்மலை நமக்கு கிடைக்கவில்லை. அது கிடைத்திருந்தால் அட்டிங்கல் போன்ற நீர்ப்படுகைகள் நம் வசம் வந்திருக்கும். அந்த நீர்ப்படுகைகள் கிடைத்திருந்தால் தென்மாவட்டங்கள் வளம் பெற்றிருக்கும். இவரைப் பற்றி செங்கோட்டை வட்டாரப் பகுதியை சார்ந்த ஒரு இளைஞன் நேற்று என்னிடம் ஒரு உதவிக்காக பார்க்க வந்தபோது, இவரைப் பற்றி கேட்டேன். அந்த இளைஞனுக்கு இவர் யாரென்றே தெரியவில்லை. சர்க்கார் படம் தெரியுமா என்றால் அதற்கு பதிலளித்தார் அந்த இளைஞன். வாழ்க நமது பண்பாடும், போக்கும்...
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
03/12/2018
No comments:
Post a Comment