தேவைதானா? மேகதாட்டு!
———————————————
இன்று (03/12/2018) மின்னம்பலம் மின்னிதழில் மேகதாட்டு அணை பற்றிய எனது கட்டுரை வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை காவிரி மேலாண்மை வாரியக் கூட்டம் அதன் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளம் புதுவை ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்திற்கு மத்திய நீர்வள அமைச்சகம் அனுமதி வழங்கியது தவறான போக்கு. இது ஏற்புடையதல்ல. இதை திரும்பபெற வேண்டுமென்று தமிழகம் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
இது குறித்தான எனது கட்டுரை பின்வருமாறு.
https://www.minnambalam.com/k/2018/12/03/3
தேவைதானா? மேகதாட்டு!
மைசூரு, மாண்டியா மாவட்டங்களுக்கு நீர் பாசனத்துக்காகவும், பெங்களூரு மாநகரின் குடிநீருக்காகவும் காவிரி நதியில் மேகதாட்டு பள்ளத்தாக்கில் ஏறத்தாழ 66 டிஎம்சி தண்ணீர் தேங்கும் வகையில் ரூ. 5,912 கோடியில் பெரிய இரண்டு அணைகள் கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதற்கு மத்திய அரசின் நீர்வள ஆணையமும் ஒப்புதலை வழங்கிவிட்டது. இந்த அணையின் மூலம் 400 மெகாவாட் மின்சாரமும் தயாரிக்க கர்நாடகா தீர்மானித்துள்ளது. காவிரி தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கிய நதியாகும். இந்த நிலையில் அங்கு கர்நாடகம் அணை கட்டுவது காவிரி நதிநீர் நடுவர்மன்றம் அளித்த இறுதித் தீர்ப்புக்கும், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கும் எதிரானது. இதையெல்லாம் சற்றும் சிந்திக்காமல் மத்திய அரசு மேகதாட்டு அணையைக் கர்நாடகத்தில் கட்ட ஒப்புதல் அளித்துள்ளது கண்டனத்துக்குரியதாகும்.
மேகதாட்டு (ஆடுதாண்டி) என்பது காவிரி நதி தமிழகத்துக்கு நுழையும் முன்னர் சற்று மேலேயுள்ள பள்ளத்தாக்கு ஆகும். தமிழகத்தின் ஒகேனக்கலில் இருந்து மேகதாட்டு 15 கிமீ முன்பாக இரண்டு பக்கமும் பெரிய மலைகளும், காட்டுப் பகுதியும் கொண்ட ஒட்டிகுண்டா (ஒற்றைக் கல்) பகுதியில் அமையவிருக்கிறது. லட்சுமண தீர்த்தத்தோடு, அரக்காவதி, காவிரியும் சேருமிடம் சங்கமம் என அழைக்கும் இடத்தில்தான் இந்த மேகதாட்டு திட்டத்தை செயல்படுத்த கர்நாடகம் முனைந்துள்ளது. பிலிகுண்டுலு அருகேதான் மேகதாட்டு அணை அமைகிறது. இந்த பிலிகுண்டுலுவில்தான் தமிழகத்துக்குக் காவிரியில் எவ்வளவு தண்ணீர் செல்கிறது என்று அளவீடு செய்யும் இடமாகும்.
இந்த அணையைக் கடந்துதான் தமிழகத்துக்குள் காவிரி வருகிறது. இந்த மேகதாட்டு திட்டத்தை 1980களில் அன்றைய கர்நாடக முதல்வர் குண்டுராவ் நடைமுறைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டார். சித்தராமையா முதல்வராக இருந்தபோது, 2012இல் பெரும் மழை வெள்ளம் வந்து மேட்டூர் அணை நிரம்பிவிட்டது. இந்த பெருவெள்ளத் தண்ணீர் தமிழ்நாட்டுக்குச் சென்றுவிட்டதே, அதை தடுத்திருக்கலாமே என்ற பேராசையில் மேகதாட்டு அணை திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர மும்முரம் காட்டினார். 2015இல் மேகதாட்டு, ராசிமணல், சிவசமுத்திரம் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த கர்நாடகம் 25 கோடி ரூபாயை ஆரம்பக் கட்டமாக ஒதுக்கியது. இதை எதிர்த்து தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த அணைகள் கட்டும்போதெல்லாம் கர்நாடகம் மின்சார தேவைகளுக்காக தான் கட்டுகிறோம் என்ற சால்ஜாப்பைச் சொல்லிக்கொண்டு தன்னுடைய நீர்ப்பாசனம், குடிநீர்த் தேவைக்கு மட்டுமே கர்நாடகம் முன்னெடுத்தது.
காவிரியில் 1972இல் கர்நாடகம் பாசனம் செய்த பரப்பு 6,80,000 ஏக்கர்கள் ஆகும். சட்டத்துக்குப் புறம்பாக தமிழகம், கேரளம், புதுவை ஆகிய மாநிலங்களின் ஒப்புதலைப் பெறாமலேயே கர்நாடகம் மேலும் தன்னுடைய பாசன பகுதிகளை 25,00,000 ஏக்கர்களுக்கு விரிவுபடுத்தியது. இதனால் தமிழகத்துக்குத் தண்ணீர் பற்றாக்குறையாகி தமிழகத்தின் பாசனப் பரப்பு 28,20,000 ஏக்கர்களில் இருந்து 15,00,000 ஏக்கர்களாகச் சுருங்கிவிட்டது. கர்நாடகத்தின் வடிகாலாக மட்டுமே தமிழகம் மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்கெனவே வருகிற குறைந்த அளவு தண்ணீரையும் தடுக்கக்கூடிய வகையில் மேகதாட்டு திட்டம் செயல்படுத்தப்பட மத்திய அரசின் துணையோடு கர்நாடக அரசு முனைகிறது.
கர்நாடகம், கண்ணாம்பாடியில் கிருஷ்ணராஜசாகர் அணையை 1927இல் கட்டியது. அதன்பின், காவிரியின் குறுக்கே கட்ட வேண்டிய அணைகளைக் கடைமடை மாநிலங்களான தமிழ்நாட்டிடமும் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற ஒப்பந்தத்தையும் கர்நாடகா தொடர்ந்து மீறியது. கபினி (19.520 டிஎம்சி) அணையை 1959இல் தமிழகத்திடம் ஒப்புதல் பெறாமலேயே கட்டியது. அதேபோல, 1964இல் ஹேரங்கி அணை (8.50 டிஎம்சி), 1965இல் சுவர்ணவதி அணை (1.26 டிஎம்சி), 1968இல் ஹேமாவதி அணை (37.130 டிஎம்சி) மற்றும் யாகாச்சி (3.60 டிஎம்சி) என தன் விருப்பம்போல அடாவடியாக ஒப்பந்தங்களை மீறி இந்த அணைகளை கர்நாடக அரசு கட்டியது. இந்த அணைகளில் மொத்தமாக 70 டிஎம்சி நீரைப் பிடித்துக்கொள்கிறது. தமிழகத்துக்கு எந்த விதத்திலும் தண்ணீரை விடாமல் அனைத்து நீர்வரத்து வழிகளையும் அடைக்க கர்நாடகத்தின் சதி வெட்டவெளிச்சமாகத் தெரிந்தும் மத்திய அரசு வாய்மூடி மௌனியாக இருக்கிறது.
கிருஷ்ணராஜசாகர் அணைக்கு கீழேயுள்ள கபினியில் 19.5 டிஎம்சி தண்ணீரைச் சேமிக்கலாம். இந்த அணையில் நிரம்பிய உபரிநீர் அனைத்தும் காவிரியில் சேரும்போது மழைக்காலங்களில் நீர்ப்பெருக்கு அதிகம் இருக்கும். அந்தத் தண்ணீரெல்லாம் தமிழகத்துக்கு வரவேண்டிய தண்ணீர். அந்த நீர், மேட்டூர் அணைக்குத்தான் வரும். தற்போது அந்த அணை கட்டப்பட்டுவிட்டால் மேட்டூருக்கு வரும் நீர் தடுக்கப்பட்டுவிடும். மேகதாட்டு அணையை இருப்புத் தண்ணீர் இருக்கும் அணை (Balance Reservoir) என்று கர்நாடகம் சொல்கிறது. இந்த அணையை கபினி, அர்க்காவதி நிறைந்தது போக உபரி நீரைத் தேக்கி வைக்கும் அணை என்பதுதான் கருத்து. அப்படியெனில் அந்தத் தண்ணீர் மேட்டூர் அணைக்குத் தானே வர வேண்டும். அந்தத் தண்ணீரை தடுத்து மின்சாரம் தயாரிக்கவும், பாசனத்துக்காகவும், கரும்பு விவசாயத்துக்கும் பயன்படுத்த உள்ளது. இதிலிருந்து பெங்களூரு குடிநீருக்கு 14.75 டிஎம்சியில் தண்ணீர் எடுக்கப்படும். கர்நாடகா காவிரியில் எங்களுக்கு உரிமையான 270 டிஎம்சி தான் நாங்கள் பயன்படுத்துவோம் என்று உண்மைக்குப் புறம்பாக உரத்த பொய்யைச் சொல்லிப் பித்தலாட்டம் செய்கிறது.
ஆண்டுதோறும், காவிரியில் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்கு நீர்திறப்பது வாடிக்கை. மீண்டும் அடுத்த ஆண்டு ஜனவரி 28இல் மூடப்படும். இப்படி ஆறு மாதங்களுக்கு மேலாக டெல்டா பகுதிகளுக்கு நீர்வரத்து இருக்கும். ஆனால், அணையில் போதுமான நீர் இல்லாத காரணத்தால் கடந்த 7, 8 ஆண்டுகளாக ஜூன் 12இல் திறப்பது இல்லை. அதனால் சம்பா பயிரும் இல்லாமல் ஆகிவிட்டது.
ஆண்டு வாரியாக - மேட்டூர் அணைக்கு நீர்வரத்து (டி.எம்.சி)
2001 - 02 162.74
2002 - 03 94.92
2003 - 04 65.14
2004 - 05 164.00
2005 - 06 402.18
2006 - 07 235.93
2007 - 08 344.72
2008 - 09 203.75
2009 - 10 219.72
2010 - 11 202.17
2011 - 12 206.78
2012 - 13 69.71
2013 - 14 235.61
2014 - 15 208.10
2015 - 16 96.67
2016 - 17 62.21
2017 - 18 113.20
மேகதாட்டு அணை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியவர் அன்றைய பிரதமர் தேவகவுடா. மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலோடு, சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய மின்சக்தி ஆணையத்தின் ஒப்புதல் பெற்ற திட்டக் குறிப்புகளை கர்நாடக அரசு அனுப்பி அதற்கு ஒப்புதல் கிடைத்துவிடும் என்று கர்நாடகா நம்புகிறது. உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படியும், காவிரி நடுவர் மன்றத்தின் ஆணையின்படியும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலின்றி மேகதாட்டு அணை திட்டத்தை செயல்படுத்த முடியாது. மத்திய அரசு இதையெல்லாம் புறந்தள்ளி மேகதாட்டுக்கு ஒப்புதல் தந்தது முறையற்றது.
ஏற்கனவே காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன், மேகதாட்டு அணை திட்டத்தைத் தமிழகத்தின் ஒப்புதலின்றி நிறைவேற்ற முடியாது என்று கூறியுள்ளார். வருகிற டிசம்பர் 3ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் இதைப் பற்றி விவாதிக்கப்படும் என்று கூறியுள்ளார். தமிழகத்துக்கு வர வேண்டிய காவிரி நீர் 177.25 டிஎம்சி நீரை வழங்கவே மேகதாட்டில் அணை கட்டுவதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளது அபத்தமாக உள்ளது. விகிதாச்சார முறைப்படி நீர்பங்கீடு வேண்டுமென்ற நடுவர்மன்ற உத்தரவுவையும் இதுவரை கர்நாடகா மதிக்கவில்லை. காவிரியில் பெய்யும் மழையின் 50 விழுக்காடு என்ற அடிப்படையில் தமிழகத்துக்குத் தரவேண்டிய தண்ணீர் 177.25 டிஎம்சி என்று கணக்கிட்டு உறுதி செய்யப்பட்டது. மழை அதிகம் பெய்தாலும் கூடுதல் தண்ணீர் பெறவும், கடைமடை மாநில விவசாயிகளுக்கு உரிமை உள்ளது என்ற நிலையில் தமிழ்நாடு மேகதாட்டு பிரச்சினையில் கேள்வி எழுப்ப முடியாது என்று கர்நாடக அமைச்சர் சிவகுமாரின் கருத்து தவறானது.
இப்படித்தான் கிருஷ்ணராஜசாகர் அணை கட்டியபோதும், மின்சாரத் தேவைக்கு மட்டுமே அணை என்றும், தமிழகத்துக்கு வரவேண்டிய தண்ணீரை ஒருகாலும் தடுக்க மாட்டோம் என்று அப்போதும் இதே கருத்தைச் சொல்லிவிட்டு தங்களது பாசனத்துக்கு மட்டும் அணைகளைக் கட்டினர். தமிழகத்துக்கு 2000 ஆண்டில் காவிரியில் இருந்த உரிமை கடந்த 60 ஆண்டுகளில் சிறிது, சிறிதாகப் பறிபோகிறது. காவிரி தமிழகத்தின் பண்பாட்டு அடையாளம் மட்டுமல்லாமல் தவித்த வாய்க்கு 15 மாவட்டங்களுக்குத் தமிழகத்தில் குடிநீரைத் தருகிறது, தமிழகத்தில் 11 மாவட்டங்களில் 25 லட்சம் ஏக்கர் காவிரியால் பாசன வசதி பெறுகிறது. உணவுத் தேவையில் காவிரியால் 60 சதவிகிதத்துக்கு மேல் நெல் உற்பத்தியும் செய்யப்படுகிறது. இப்போது காவிரியில் நீர் வராமல் நெல் உற்பத்தி குறைந்து பஞ்சாப் போன்ற வடமாநிலங்களில் அரிசியை, தமிழகம் மாதத்துக்கு 1 லட்சம் டன் அரிசியை வாங்குகிறது. தமிழகத்தில் 5 கோடி மக்கள் குடிநீரையோ, பாசனத்துக்கோ காவிரியை நம்பியுள்ளனர். தமிழகத்தின் மொத்தம் உள்ள 32 மாவட்டங்களில் 26 மாவட்டங்களில் காவிரி நீர் அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது. இப்போது மேகதாட்டு அணையையும் கிட்டத்தட்ட 66 டிஎம்சி கொள்ளளவில் கட்ட கர்நாடகம் கட்ட தீர்மானித்துள்ளது.
கிருஷ்ணராஜசாகரே பெரிய அணை என்பார்கள். அதன் கொள்ளளவு 49 டிஎம்சி தான். அப்படியென்றால், மேகதாட்டு அணை அதைவிடப் பெரிதாக எதிர்காலத்தில் அமையும். இதனால் தமிழகம் வஞ்சிக்கப்படும்.
மேகதாட்டு அணையை 4,500 ஏக்கர் பரப்பில் பெரிய அணையாகக் கட்டுவதற்கு உலக அளவில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. அமெரிக்கா உள்பட 16 உலக நாடுகள் தங்களுடைய ஒப்பந்தங்களைக் கோரும் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இதன் இறுதி முடிவு இந்த மாத இறுதியில் எடுக்கப்படும் என்று கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் கூறியுள்ளார். மேகதாட்டு தவிர கே.ஆர்.சாகர், கபினி, ஹேமாவதி ஆகியவற்றின் குறுக்கே நான்கு தடுப்பணைகள் கட்டவும் கர்நாடக திட்டமிட்டுள்ளது. மேகதாட்டின் மூலம் ஆண்டுக்கு 120 மெகாவாட் மின்சாரமும், மைசூர், மாண்டியா, ராம்நகர் மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர்களில் விவசாயத்துக்கும் நீர் திறந்து விடப்படுகிறது. ராம்நகர் கனகபுரா வட்டத்தில் இந்த மேகதாட்டு அணை அமைய பெரிய அலுவலகமும், வனப்பகுதியில் முகாம் அலுவலகமும் திறக்கப்பட்டு செய்திகள் வருகின்றன. ஆனால், தமிழக அரசோ இதையெல்லாம் தடுக்கக்கூடிய வகையில் தொலைநோக்கு திட்டங்கள் எதையும் சிந்திக்காததுதான் வேதனையைத் தருகிறது. ஏற்கெனவே மேட்டூர் அணையில் தற்போது நீர் தேக்கி வைக்கும் அளவுக்கு (93 டிஎம்சியில் அணை 100 ஆண்டுகளாகத் தூர் வாரப்படாததால் சுமார் 65 டிஎம்சி நீர் மட்டுமே தேக்க முடிகிறது). இதைக்கூடத் தமிழக அரசு கவனிக்காமல் பாராமுகமாக இருக்கிறது. இந்த 65 டிஎம்சி மேகதாட்டுவில் மையம் கொண்டுவிட்டால் மேட்டூருக்கு எப்படித் தண்ணீர் வரும்?
இந்த நிலையில் மத்திய அரசும், கர்நாடக அரசும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும், நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பையும், காவிரி மேலாண்மை வாரியத்தையும் பொருட்படுத்தாமல் மேகதாட்டுவில் மேட்டூர் அணையை விட அதிக கொள்ளளவை கொண்ட பெரிய அணையைக் கட்டத் திட்டமிட்டுள்ளது தமிழகத்தை வஞ்சிக்கும் நிலைப்பாடே. இதேபோல ராசிமணல், சிவசமுத்திரம் ஆகிய இடங்களிலும் காவிரியின் குறுக்கே அணைகள் கட்ட கமுக்கமான நடவடிக்கைகளை கர்நாடக அரசு எடுத்து வருகிறது என்பதும் கவனத்தில்கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாகவே இந்த மேகதாட்டு பிரச்சினையில் கர்நாடக அரசு காட்டும் முனைப்பை எதிர்த்துத் தமிழக அரசு காட்டிவந்த எதிர்ப்பினை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவில்லை.
தமிழகத்தின் உரிமையான நீராதாரங்கள் அனைத்தையும் அண்டை மாநிலங்களால் தடுக்கப்படுகின்றன. முல்லை பெரியாற்றில் 152 அடி தண்ணீர் தேக்க அணையைப் பலப்படுத்த வனத் துறை அனுமதி கொடுக்காமல் உள்ளதோடு, கேரளம் முல்லை பெரியாற்றில் புதிய அணையை அமைக்க மத்திய அரசு மறைமுகமாக உதவி வருகிறது. பாலாற்றில் ஆந்திர அரசு சித்தூர் மாவட்டத்தில் 22 தடுப்பணைகள் அமைத்ததை மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை. பவானியின் குறுக்கே கேரளா தடுப்பணை அமைப்பதை மத்திய அரசு தடுக்காமல் வேடிக்கை மட்டும் பார்த்துவருகிறது.
இப்படியாகத் தமிழகத்தின் நீராதார உரிமை நாளுக்கு நாள் பறி போகின்றன. பன்மையில் ஒருமை என்று சொல்லிக்கொண்டு சமஷ்டி அமைப்பு முறையின் தத்துவத்தை சேதாரப்படுத்தி, கூட்டுறவு சமஷ்டி அமைப்பு என்று தம்பட்டம் அடிப்பதில் அர்த்தமில்லை. தமிழகத்தின் நியாயங்கள் அனைத்தும் புறந்தள்ளப்படுகின்றன. காவிரி தமிழகத்தின் கலாச்சாரத்தையும், பொருளாதாரத்தையும் உயர்த்தும் முத்திரையை மத்திய அரசும், கர்நாடக அரசும் முடக்க நினைக்கிறது. என்ன செய்ய?
காவிரி நதியின் மொத்த நீளம் 802 கிலோமீட்டராகும். இதில், காவிரி நதி கர்நாடக மாநிலத்தில் 381 கிலோமீட்டர் தூரமும், தமிழகத்தில் அதிகப்படியான 421 கிலோமீட்டர் தூரமும் ஓடுகிறது. சென்னை ராஜதானிக்கும், மைசூர் சமஸ்தானத்துக்கும் 1924இல் கையொப்பமான ஒப்பந்தம் உயிரோட்டமான ஆவணமாகும்.
அது மட்டுமல்ல, 1892 ஒப்பந்தமும், 1974இல் மேற்கொள்ளப்பட்ட தமிழக - கர்நாடக உடன்பாடுகளும் இந்தப் பிரச்சினையில் முக்கியமான ஆவணங்களாகும். அதில் கூறப்பட்ட ஒப்பந்தப் பிரிவுகளை திட்டமிட்டு கர்நாடக அரசு மீறுவதுதான் கர்நாடகத்தின் வாடிக்கையாகிவிட்டது. ஒப்பந்தங்கள், நீதிமன்ற ஆணைகள் என எதையும் பொருட்படுத்தாமல் கர்நாடகம் மாநில அரசு தொடர்ந்து சண்டித்தனம் செய்வதையும் டெல்லி பாதுஷாக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நடந்தாய் வாழி காவிரி என்பது வறண்டாய் காவிரி என்று தமிழகம் வேதனைப்படும் அளவில் மத்திய அரசும், கர்நாடக அரசும் செய்துவிடுமோ என்ற வினா தான் நமக்கு ஏற்படுகிறது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
03/12/2018
#KSRPostings
#KSRadhakrishnanPostings
#Cauvery
#Mekedatu_Dam
#மேகதாட்டு_அணை
#காவிரி_டெல்டா
No comments:
Post a Comment