Monday, August 5, 2019

காஷ்மீர் பிரச்சனை – அரசியல் சாசனப் பிரிவு 370 – 35ஏ மாய மானா? காலம் தான் பதில் சொல்லும்…

காஷ்மீர் பிரச்சனை – அரசியல் சாசனப் பிரிவு 370 – 35ஏ மாய மானா? காலம் தான் பதில் சொல்லும்…
--------------------------------------------------------
காஷ்மீர் பிரச்சனையில் என்ன நடக்கப்போகின்றதோ என்று தெரியவில்லை. மாநிலத்தை மூன்றாக ஜம்மு, காஷ்மீர், லடாக் என்று பிரிக்கப்படலாம். ஜம்முவை மாநிலமாகவும், காஷ்மீர் மற்றும் லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்படலாம் என்று யூகங்கள் உள்ளன. அரசியல் சாசனப்பிரிவு 370, விதி 35ஏ நீக்கப்படலாம் என்றும் தகவல்கள் கசிகின்றன. இன்று காலை அன்புக்குரிய நண்பர் பனாரஸ் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த விஸ்வநாத் பாண்டே, காஷ்மீர் பிரச்சனையில் 370, 35ஏ மாய மானா? என்று கூறினார். 
ஒரு நாட்டுக்குள்ளே தனி அரசியலமைப்புச் சட்டம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டுமே உண்டு. ஸ்விட்சர்லாந்தில் இருப்பதை போன்று மாநிலங்களுக்கு தனி சிறப்பு அந்தஸ்து போன்று இங்கே உள்ளது. இதே போல, வடகிழக்கு மாநிலங்களுக்கும் சிறப்புச் சலுகை அந்தஸ்துகள், அங்கீகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் அவர்களுக்கு தனி அரசிலமைப்புச் சட்டம் கிடையாது. உலகத்தில் பிரிட்டன், இஸ்ரேல், நியூசிலாந்தில் எழுதப்பட்ட அரசியல் சட்டங்கள் (Constitution) நடைமுறையில் கிடையாது. மரபுகள், வழக்கங்களின்படி (Convention and Practices) அங்கு அரசியலமைப்பு முறைகள் நடைமுறை படுத்தப்படுகின்றது. 
ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு சலுகைகளும், இப்படியான தனி அங்கீகாரம் குறித்தான விவாதங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. 
  • இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 - 1ன் கீழ், விதி 35ஏ வருகிறது. இது காஷ்மீர் மாநிலத்தின் நிரந்தரமாக குடிமக்கள் யார் என்பதையும், அவர்களுக்கான பிரத்யேக சலுகைகளையும் வரையறுக்கிறது.
  • இந்த பிரிவு முன்னாள் பிரதமர் நேரு ஆட்சியில், 1954 ஆம் ஆண்டு மே 15இல், அப்போதைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அவர்களின் ஆணைப்படி, 370ன் கீழ் சேர்க்கப்பட்டது. 35ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள்.
  • காஷ்மீர் பகுதியை 1947இல் இந்தியாவுடன் இணைப்தற்காக, அப்போதைய மன்னர் ராஜா ஹரி சிங் வேண்டுகோளின்படி, அரசியல் சாசன சிறப்பு பிரிவு, 370 ஏற்படுத்தப்பட்டது. 
  • காஷ்மீரில் வசிக்கும் நிரந்தர குடியுரிமையினர் தவிர நாட்டின் பிற மாநிலத்தவர் அங்கு நிலம் மற்றும் சொத்துகள் வாங்க முடியாது. 
  • காஷ்மீர் பெண், மற்ற மாநிலத்தவரை திருமணம் செய்தால், அந்த பெண்ணின் காஷ்மீர் குடியுரிமை ரத்தாகிவிடும். கடந்த 2002இல் காஷ்மீர்  உயர்நீதிமன்றம், பெண்களுக்கு குடியுரிமை சலுகை உண்டு என தீர்ப்பளித்தது. ஆனால், அவர்களது குழந்தைகளுக்கு, குடியுரிமை சலுகை கிடையாது.
  • காஷ்மீர் மாநிலத்தை சாராதவர்கள், அம்மாநில அரசு வேலையில் இடம்பெற முடியாது.
  • காஷ்மீர் மாநில அரசு கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களில் மற்ற மாநிலத்தை சார்ந்தவர்கள் சேர முடியாது. 
  • காஷ்மீர் அரசு வழங்கும் உதவித் தொகை, சமூக நலத்திட்டங்கள் என எந்த நிதியுதவியும், நிரந்த குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே பெறமுடியும்.
  • மாநில சட்டசபை இயற்றும் எந்த சட்டமும், அரசியல் சாசனத்துக்கோ, பிற சட்டத்துக்கோ முரணாக இருக்கிறது என, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது.
  • ஒட்டுமொத்த இந்திய அரசியல் சாசனமும், இங்கு செல்லுபடியாகாது. ராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு போன்ற சட்டங்கள் மட்டுமே செல்லுபடியாகும். 
  • புதிதாக சட்டம் ஏதும் நிறைவேற்ற வேண்டுமென்றால், மாநில அரசின் ஒப்புதல் அவசியம்.
  • இந்த பிரிவை திருத்த வேண்டுமானால், அரசியல் நிர்ணய சபையைக் கூட்ட வேண்டும்.
  • மாநில சட்டமன்றத்தின் ஒப்புதல்படியே, எந்த சட்டமும் இந்த மாநிலத்தில் செல்லுபடியாகும்.
  • ஜம்மு – காஷ்மீருக்கு தனியாக அரசியல் சாசனமும்  உண்டு.
  • சீனா, திபெத்தில் ஊடுருவியதும், இஸ்ரேல் சிக்கலும், ரஷ்யா உக்ரைனில் புகுந்ததும், ஆசாத் காஷ்மீரை பாகிஸ்தான் அபகரித்ததும், இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்படுவதும், அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளின் புவியரசியல் சிக்கல்களும் போன்ற பல அகில விடயங்களை நாம் அன்றாடம் கலந்து போகிறோம். அதுபோல, காஷ்மீர் என்று உலக சமுதாயம் நினைக்கின்றது. அங்கு நடந்த சமஸ்தான ஒப்பந்தம் மட்டுமல்லாமல் வேறு அகப்புறச் சிக்கல்களும் காஷ்மீர் பிரச்சனையில் உள்ளன.
காவிரி பிரச்சனையில் மைசூரு சமஸ்தானம் ஒத்துக்கொண்டதையே இன்றைக்கு கர்நாடக அரசு புறந்தள்ளுகிறது.

(இந்த படத்திலுள்ள அரசியல் சாசன நூல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றிய ஏ.எஸ். ஆனந்த் எழுதிய ஜம்மு – காஷ்மீர் அரசியல் சாசனமும், அதனுடைய விளக்கமும்.)
#ஜம்மு_காஷ்மீர்
#Jammu_Kashmir
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
05-08-2019.

No comments:

Post a Comment

2023-2024