Tuesday, August 13, 2019

தஞ்சாவூர்

———————————-
முதல் புகைப்படத்தை பார்க்கும் பொழுது நமக்கு பரிச்சயமான இடமாக தெரியவில்லை. ஆனால் இது தஞ்சை பெருவுடையார் கோவில். தஞ்சையின் பழைய பூகோள, வணிகஅடையாளங்கள் சில...
தற்போது முள்ளிவாய்க்கால் முற்றமும் அமைந்துள்ளது.

1950, 60 களில் தஞ்சாவூர் நகரம் பற்றிய பழைய நினைவுகள்.
இங்கு நீங்கள் காண்கின்ற புகைப்படம் பழைய தஞ்சை நகரத்தில் இருந்த பழம்பெரும் திரைப்படக் கொட்டகை, பெயர் “டவர் டாக்கீஸ்” (இப்போதைய ஞானம் ஓட்டல் இருக்குமிடத்தில் இருந்தது). இந்தப் படம் 1952இல் எடுக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் ஒரு பெரும் புயல் தஞ்சையைத் தாக்கியது. நமது இந்த டவர் டாக்கீஸ் பலத்த சேதத்துக்குள்ளாயிற்று. புயல் சேதங்களைச் சரிசெய்து, புதுப்பித்துக் கட்டிய அந்த திரையரங்கத்துக்கு “ஞானம் டாக்கீஸ்” என்று பெயரிடப்பட்டது.
அந்த நாள் நினைவுகளில் மூழ்கியிருக்கும் வேளையில் . . . . . அப்போதெல்லாம் சுமார் பத்து பன்னிரெண்டு கார்கள் மட்டுமே தஞ்சாவூரில் இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தஞ்சை நகரம் சுத்தத்துக்குப் பெயர் போன சிறிய நகரம். இந்த ஊரில் புகழ்வாய்ந்த நிறுவனங்கள் ஒருசில மட்டுமே இருந்தன என்பதை பழைய தஞ்சை வாசிகள் அறிவார்கள். உங்கள் இல்லத்தில் வயதில் மூத்தவர்கள் இருப்பார்களானால் அவர்களிடம் இந்த கட்டுரையின் விவரங்களைப் படித்துக் காட்டுங்கள்; அவர்கள் இந்த செய்திகளை மகிழ்ச்சியோடு கேட்டு ரசிப்பார்கள். அவர்கள் இதில் காணப்படும் விவரங்களைத் தவிர தஞ்சாவூரில் இருந்த வேறு ஏதேனும் புதிய செய்திகளை நினைவுபடுத்திச் சொல்வார்களானால் அவற்றை பதிவு செய்து இதன் பின்னூட்டத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
1950, 60ஆம் ஆண்டுகளுக்கு இப்போது பிந்நோக்கிச் செல்வோம்: தஞ்சை, மிக அழகான அமைதியான சிறிய நகரம். . . . . . .
திரையரங்குகள்: (திரைப்படக் கொட்டகைகள்)
1. ஞானம் டாக்கீஸ். (முதலில் டவர் டாக்கீஸ் என்று வழங்கப்பட்ட பிரபலமான திரையரங்கம். 1952க்குப் பிறகு ஞானம் டாக்கீஸ் என்று நாமகரணம் சூட்டப்பட்டது.
2. கிருஷ்ணா டாக்கீஸ் (இளைய வாண்டையார் பங்களாவுக்கு தென்புறம்– வடக்கு வாசல் பகுதியில் AYA நாடார் சாலையில் அமைந்தது).
3. நியு டவர் டாக்கீஸ் (இப்போது இது ஜூபிடர் டாக்கீஸ்)
4. யாகப்பா டாக்கீஸ் (புதாற்றுக் கரையருகில் அமைந்தது)
5. மேற்கண்ட நிரந்தர அரங்குகள் தவிர டூரிங் டாக்கீஸ் சில இருந்தன. அவை.
1. ராஜாராம் டூரிங் டாக்கீஸ் (இது ஜபமாலைபுரத்தில் சோழன் டிரான்ஸ்பொர்ட், குப்பைகள் சேகரிக்கும் பகுதிக்கருகில் இருந்தது)
2. சேம்பியன் டூரிங் டாக்கீஸ். இது பர்மா காலனி, பூக்கார விளார் சாலையில் இப்போதைய காசி மகால் கல்யாண மண்டபம் )

தஞ்சாவூரில் இருந்த சிறந்த மரக்கறி (சைவ) உணவகங்கள்:
1. மங்களாம்பிகா லாட்ஜ் (இப்போது வெங்கடா லாட்ஜ் இருக்குமிடம்)
2. ஆனந்தா லாட்ஜ் (ரயில்வே நிலையம் அருகில் இப்போதைய ஆனந்த பவன் இருக்குமிடத்தில் இருந்தது – தில்லானா மோகனாம்பாளில் சவடால் வைத்தி சிவாஜி கணேசனை இந்த ஓட்டலுக்குப் போகலாம் என்பார்)
3. சரவண பவன் (இப்போதைய காஃபி பேலஸ், எல்லையம்மான் கோயில் தெருவில் உள்ளது. இதன் உரிமையாளர் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இருந்த உணவகத்தையும் நடத்தி வந்தார். தஞ்சை IRR எனப்படும் அந்த உணவகமும் பிரபலமானது.)

தஞ்சாவூரில் இருந்த அசைவ உணவகங்கள்.
1. ராணி ஓட்டல் (இந்த உணவகம் தஞ்சாவூர் முன்னாள் நகர்மன்றத் தலைவராக இருந்த திரு ஜெயபால் அவர்களின் தந்தையார் திரு திக ராமமூர்த்தி அவர்களுடையது. இப்போது அந்த இடத்தில் ஒரு மளிகைக் கடையும், ஏ.என்.எம். மருந்துக் கடையும் இருக்கின்றன)
2. முனியாண்டவர் விலாஸ் (பழைய பேருந்து நிலையம் அருகில்) இப்போது பாம்பே ஸ்வீட் ஸ்டால் இருக்குமிடத்துக்கும் பின்புறம்.
3. இந்தோ சிலோன் ஓட்டல் (பழைய பேருந்து நிலையம் அருகில்) இப்போது லக்கி சில்க்ஸ் இருக்குமிடம்.

இனிப்பு விற்பனையகங்கள்.
1. சூர்யா ஸ்வீட் ஸ்டால் (இப்போதைய அண்ணா சிலயருகில் வாசன் மெடிக்கல் ஸ்டோர் இருக்கிமிடத்தில்)
2. பாம்பே ஸ்வீட் ஸ்டால் (ரயில் நிலையம் அருகில் இப்போதும் இருக்கிறது)

ஜெனரல் ஸ்டோர்ஸ்.
1. சத்தார்ஸ் ஜெனரல் ஸ்டோர்ஸ் (இப்போது சத்தார் ரெஸ்டாரெண்ட் இருக்குமிடமும் அதற்கு அடுத்த கடையும்)
2. A.Y.A.நாடார் ஜெனரல் ஸ்டோர்ஸ். (ரயில் நிலையம் அருகில், வேணுகோபால் நாயுடு மலர்மாலைக் கடைக்கருகில்)
3. இக்பால் ஸ்டோர்ஸ் (அண்ணா சிலையருகில் வாசான் மெடிகல் அருகில்)
4. இஸ்மாயில் ஸ்டோர்ஸ் (ரயில் நிலையம் அருகில் ஸ்டேட் மெடிகல் அருகில், பின்னர் ஜேபீ ஸ்டோர் வந்தது)
5. சாந்தி ஸ்டோர் (இப்போது இருக்குமிடம் தான், இது முன்னாள் அமைச்சர் திரு சீ.நா.மீ.உபயதுல்லா அவர்களுடையது)

ரொட்டிக் கடைகள்.
1. அய்யன்கடை பேக்கரி
ஜவுளிக் கடைகள்.
1. கமலா ஸ்டோர்ஸ், தெற்கு வீதி, தஞ்சாவூர் (இப்போதும் இருக்கிறது)
2. நடராஜா ஸ்டோர்ஸ், கீழவாசல் (இப்போதும் பல கிளைகளுடன் இருக்கிறது)
3. மகாராஜா சில்க் ஹவுஸ் 1969ஆம் ஆண்டில் நடிகர் ஜெமினி கணேசன் அவர்களால் , பரிசுத்த நாடார் தலைமையில் திறப்பு விழா நடந்தது.

தையல் கடைகள்..
1. உத்திராபதி டைலர்ஸ் (கீழ வீதியில் கணேஷ் லாட்ஜ் எதிர்ப்புறம்)
2. பிரகாஷ் டைலர்ஸ் (ரயில் நிலையம் எதிரில் கணேஷ் ஓட்டல் அருகில்)
3. ப்ரான்கோ டைலர்ஸ் (ரயில் நிலையம் அருகில்)

வெற்றிலை பாக்குக் கடைகள்.
1. வண்ணாத்தி புருஷன் கடை (ரயில் நிலையம் எதிரில்)
2. ஒத்தைக் கடை (கணபதி கடை) மேரீஸ் கார்னர், இப்போது தீபம் காம்ப்ளெக்ஸ்.

மருந்துக் கடைகள்.
1. தஞ்சாவூர் ஃபார்மசி (காந்திஜி சாலையில் மகாராஜா, விஜய் சிலக் இருக்குமிடத்தில் – கண் ஆஸ்பத்திரி எதிரில்)
2. குமரன் & கம்பெனி. (இப்போதைய குமரன் & கம்பெனி அருகில்)

பழக்கடைகள்.
1. நாராயணசாமி பிள்ளை பழக்கடை (ரயில் நிலையம் எதிரில் சாந்தி ஸ்டோர் அருகில். திரு நாராயணசாமி பிள்ளை இப்போதைய பிரபல மருத்துவர் டாக்டர் மோகன்தாஸ் அவர்களின் தந்தையார்).

பேருந்து சர்வீஸ்.
1. எஸ்.எம்.டி. (ஸ்வாமி மோட்டார் டிரேட்ஸ். வடக்கு வாசலில் AYS நாடார் சாலையில் பெட்ரோல் பங்க் எதிரில் இவர்கள் பணிமனை இருந்தது)
2. டி.எம்.டி. (தஞ்சாவூர் மோட்டார் டிரேட்ஸ், ஆரோக்கியசாமி வாண்டயார் உரிமையாளர். இவர் சில்வர் ஆரோ திரு ஜோசப்ராஜின் தந்தையார். இப்போது இந்த இடத்தில் அட்லஸ் சைக்கிள் ஷோ ரூம், கீழ்ப்பாலம் அருகில் உள்ளது.)
3. ராமன் & ராமன் (இதன் தலைமையகம் கும்பகோணம். இப்போது காந்திஜி சாலையில் இருக்கும் எல்.ஐ.சி. கட்டடம் இருக்குமிடத்தில் இவர்கள் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருக்கும். (ராமன் & ராமன் நிறுவனத்தின் இந்துஸ்தான் மோட்டார்ஸ் சர்வீஸ், பெட்ரோல் பங்க்கும் இருந்தது, இப்போதுள்ள ராணி பேரடைஸ் குருப்புக்குச் சொந்தமான இடத்தில் இருந்தது )
4. எஸ்.ஆர்.வி.எஸ். (இதன் தலைமையகமும் கும்பகோணம்)
5. டி.வி.எஸ். (இதன் சர்வீஸ் நிலையம் இப்போது சேக்ரட் ஹார்ட் கான்வெண்ட் அருகில் நாஞ்சிக்கோட்டை சாலை திருப்பத்தில் இருந்தது)
6. துவாரகா டிரான்ஸ்போர்ட்ஸ். (இப்போதைய ஃபிலோமினா மால் அருகில் இருந்தது. இப்போதும் சிதம்பர விலாஸ், லக்ஷ்மி டிரான்ஸ்போர்ட்ஸ், மகாலக்ஷ்மி டிரான்ஸ்போர்ட்ஸ் எனும் பெயர்களில் இவர்கள் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சங்கம் ஓட்டல் வகையாறாக்களால் நடத்தப்படுபவை.)
7. சக்தி விலாஸ். (இவர்களது அலுவலகம், வீடு ஆகியவைகள் இப்போதைய கிருஷ்ண பவன் இருக்குமிடத்தில் இருந்தது)

பெட்ரோல் பங்க் 
பெட்ரோல் பங்க் 
1.வேணுகோபால் நாயுடு 'பர்மா ஷெல்' பங்க் (தற்போது டீ. பி. ஸ். பங்க்)
2, நாடிமுத்து பிள்ளை 'கால்டெக்ஸ் பங்க்' (தற்போது பி. எல். எ. பங்க்).

*****
Selvaraj Nayakkavadiyar added: "நாடகக் கொட்டகை... ராமனாதன் செட்டியார் ஹால் என்ற சுதர்சன சபா....தெற்கு வீதி மேலவீதி சந்திப்பில் குமரகான சபா...கிருஷ்ணா டாக்கீஸ் பழைய பெயர் கிருஷ்ண கான சபா....கிந்தனார் ஸ்டுடியோ..CPS ...நவகோடி ஸ்டுடியோ... குபேரா ஸ்டுடியோ... நேஷனல் ஸ்டுடியோ.... இன்றுCPS National மட்டுமே இருக்கு...பள்ளிகளில்.... பீட்டர்ஸ்...பிளேக்... அந்தோணியார்... கல்யாண சுந்தரம்... வீர ராகவா..உமா மகேஸ்வரம்....கான்வென்ட்...Girls christian...பழைய பஸ் ஸ்டான்ட்...பழைய இடம் ரயில்வே ஸ்டேஷன் ஒட்டி வடபுறம்... Coal gas ல் ஓடிய அஞ்சா று பஸ்கள்...தங்கள் தாத்தா டைரக்டராக இருந்த merchants bank... Thanjavur permanente bank..நிக்கல்ஸன் பேங்க்..

கோட்டை அகழி பஸ் ஸ்டாண்டாக மாறிய கதை:
கோட்டை . . அகழி..... பஸ் ஸ்டாண்ட் ..... 
ஓடிய பஸ்கள்

இப்போது இருக்கும் பழைய பேருந்து நிலையத்தின்1959 இல் திறக்கப்பட்டது.
தஞ்சாவூர் நகராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் அய்யாசாமி வாண்டையார் அவர்களின் பெயர் சூட்டப்பட்டது.
பஸ் ஸ்டாண்டில் உள்ள அய்யாசாமி வாண்டையார் சிலை பெருந்தலைவர் காமராஜ் அவர்களால் பிறகு திறக்கப்பட்டது.
திறப்பு விழா நடந்த சமயம் பரிசுத்த நாடார் அவர்கள்தான் 
தஞ்சை நகராட்சித் தலைவராகவும், தஞ்சாவூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

இதற்கு முன்பு பேருந்து நிலையம் 
ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள DBS பெட்ரோல் பங்க் அருகில், 
(ரயில்வே கீழ்ப்பாலம் அருகில்) இப்போது சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தில் ரயில்வே லயனுக்கு அருகில் இருந்து வந்தது.

அதை "ரயிலடி பஸ் ஸ்டாண்ட்" என்று குறிப்பிடுவார்கள்.
அதன் அருகாமையில் "பர்மா ஷெல்" பெட்ரோல் பங்க் இருந்தது.

1940 களில் இரண்டாம் உலக யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்திலும், 
பிறகு 1950களின் தொடக்கபல வரையிலும் நிலக்கரிதான்.

பேருந்து நிற்குமிடத்துக்கு மிக அருகில் நிலக்கரி சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். 
கரி எஞ்ஜின் 
பேருந்தின் பின்பக்கம் அமைக்கப்பட்டிருக்கும்.

கரியை எரிப்பதற்காக காற்றை உள்ளே அனுப்பும் கருவியை 
எரிவாயு தயாராகும் வரை சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

பேருந்துகள் மிக நிதானமான வேகத்தில்தான் செல்லும்.
Image may contain: cloud, sky and outdoor
அப்போது
SRVS, TMT Raman & Raman ஆகிய கம்பெனி பஸ்கள் (Coal Bus) கரிவாயுவால்(Coal Gas) தான் இயக்கப்பட்டு வந்தன.

அந்த காலகட்டத்தில் பேருந்து சேவை அரசு உடமை ஆக்கப்பட வில்லை.
எம்.பக்தவத்சலம் முதல் அமைச்சராக இருந்த காலத்தில், 
1964-65இல் ஆர்.வெங்கட்டராமன் அமைச்சராக இருந்த போது அரசு பேருந்து சேவைகளை உருவாக்கினார் .

ராஜா மிராசுதார் மருத்துவ மனைக்கு எதிரில் “அரசாங்க பேருந்துகள் நிலையம்” 
"State Express Bus Stand" 1965இல் உருவாக்கப்பட்டது.

புதிய பேருந்து நிலையமாக உருவாக்கப்பட்ட இடமும், 
அரசாங்க பேருந்துகளுக்கான பேருந்து நிலையமும் 
அந்த இடத்தில் இருந்த கோட்டை மேடு மட்டமாக்கி மற்றும் அகழியைத் தூர்த்து அதன் மீது கட்டப்பட்டவை.

இவை தவிர ஸ்டேட் வங்கி, 
மத்திய நூலகம் ஆகியவை இருக்குமிடங்களும் அகழியைத் தூர்த்த இடத்தில்தான் கட்டப்பட்டன.

அப்போதெல்லாம் நகரத்தின் மையத்தில் தூர்க்கப்பட்ட அகழி இருந்த இடம் பள்ளமாக புதர்கள் மண்டி, 
மோசமான நடவடிக்கைகள் நடந்தேறும் இடமாக இருந்தது.

அந்த இடத்தைக் குறிப்பிட மக்கள் “சீத்தாக்காடு” என்று சொல்வார்கள்.
இந்த பள்ளமான இடம் 
மக்களின் பொதுக் கழிப்பிடமாகவும் மாறி சுகாதாரக் கேடுகளை விளைவித்து வந்தது.

இங்கிருந்த அகழி மூடப்படும் வரை அதாவது 1950 வரை, இப்போது பழைய பேருந்து நிலையத்தின் வாயிலில் அமைந்திருக்கும் காவல்துறையின் “May I Help You” அலுவல் அறை இருக்குமிடத்தருகில் ஒரு பாலம் அகழியின் மீதிருந்தது.
கீழவீதியையும், இப்போது இருக்கும் காந்திஜி சாலையையும் இந்தப் பாலம் இணைக்கும் விதமாக இருந்து வந்தது.
இப்போது பெரிய கோயிலுக்கு நுழைகின்ற இடத்தில் அகழியின் மேல் இருக்கிறதல்லவா ஒரு பாலம் 
அதைப் போல இருந்தது.

Image may contain: sky, cloud, outdoor and nature
1970 காலகட்டத்தில் தனியாருக்குச் சொந்தமான பேருந்து சேவைகள் அனைத்தும் அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டு ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் கார்ப்பொரேஷன் என்ற ஒரு பிரிவு உருவாக்கப்பட்டது.

கும்பகோணத்தைத் தலைமையிடமாக வைத்திருந்த 
SRVS, ராமன் & ராமன் ஆகிய கம்பெனிகளின் பேருந்துகள் அடங்கும்.

அந்த நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் 
அதுமுதல் சோழன் போக்குவரத்துக் கழக ஊழியர்களாக மாறினர்.

பஸ் ஸ்டாண்ட் அருகில் மார்க்கெட் ரோடு அண்ணா சாலை சந்திப்பில் 
சிலைகள் நிறுவப்பட்டது பற்றிய ஒரு சுவையான செய்தியும் இருக்கிறது. . . .

பேருந்து நிலையத்துக்கு அருகில் 
காந்தி சாலையும், 
மார்க்கெட் சாலையும், ஆஸ்பத்திரி சாலையும் இணையும் இடத்தில் 
இப்போது அண்ணா சிலை இருக்கிறதல்லவா, அந்த இடத்திலிருந்து சற்று நகர்ந்து 
ஆஸ்பத்திரி சாலையில் காந்திஜி சாலையைப் பார்த்த வண்ணம் மகாத்மா காந்திஜியின் சிலையொன்று நிறுவப்பட்டிருந்தது.
Image may contain: outdoor

1960 வாக்கில் அந்தச் சிலை போக்கு வரத்துக்கு இடையூறாக இருப்பதாகச் சொல்லி, காந்திஜியின் சிலையை அப்போது நகராட்சியை நிர்வகித்து வந்த காங்கிரஸ் நிர்வாகம் அங்கிருந்து அகற்றி 
சிவகங்கை பூங்காவுக்கு எதிரிலுள்ள முக்கோண வடிவத்தில் உள்ள பூங்காவில் கொண்டு போய் வைத்தனர்.

1971இல் . . . . முன்பு காந்திஜி சிலை இருந்த இடத்துக்குச் சற்று தள்ளி அண்ணா சிலை நிறுவப்பட்டது.. . . .
(wrt Anna statue Amudha Kasinathan writes: "அண்ணா சிலை 1969 என்று நினைக்கின்றேன் அண்ணா அமெரிக்காவில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த போது 
என்தந்தை மறைந்த நடராசன் அவரகளால் அண்ணா உயிரோடு இருந்த போதே 
அவருக்கு நிறுவப்பட்ட முதல் சிலை.

அவர்கள் காலத்தில்தான் சோழன் சிலையும் நிறுவப்பட்டது".)
(Article by A.Y.S.P.Anthonisamy. Translation help from English article: Gopalan Venkataraman )
Image may contain: outdoor
*******
கோபாலன் அய்யா அவர்களும் பாவலர் தஞ்சை தர்மராசன் அய்யா அவர்களும் மேலும் கூறுகையில் ....

Gopalan Venkataraman: 
"இப்போதுள்ள பழைய பேருந்து நிலையம், 
அரசு டிரான்ஸ்போர்ட், ஸ்டேட் வங்கி, மத்திய நூலகம் இவை யாவும் கோட்டையின் அகழியாக இருந்திருக்கிறது.

அதன் தொடர்ச்சிதான் திருவையாறு பேருந்து நிலையமும், 
நகராட்சி உயர்நிலைப் பள்ளியின் பின்புறமுள்ள நீண்ட நெடும் அகழி.

முன்பெல்லாம் ரயில் நிலையத்திலிருந்து நகரத்தினுள் நுழைய 
காலையில் வெளிச்சம் வரும்வரை காத்திருப்பார்கள்.

நான்கு மணிக்கு வரும் போட் மெயிலில் இறங்கி ஆனந்தா லாட்ஜின் பின்புறம் பெரிய தொட்டியில் நிரப்பப்பட்டிருக்கும் தண்ணீரில் பல்தேய்த்து முகம் கழுவிக்கொண்டு, 
அங்கு காஃபி அருந்திய பின் 
மாட்டு வண்டியில் ஊருக்குள் வருவர்.

இப்போது பழைய பேருந்து நிலையம் வாயிலில் உள்ள காவல்துறை பூத் வாசலில் 
ஒரு பாலம் உண்டு,.

அதைத் தாண்டித்தான் அலங்கத்தினுள் 
நுழைய வேண்டும். 
அப்போதெல்லாம் பேருந்து நிலையம் ஜங்ஷன் அருகிலுள்ள கீழ்ப்பாலத்தின் அருகிலுள்ள பெட்ரோல் பங்க் இருக்கிறதல்லவா அந்த இடத்தில் இருந்தது.

ஐயனார்,எஸ்.டி.லிங்கம், போன்ற பஸ்கள் பட்டுக்கோட்டைக்குச் செல்லும். . . . .
*****
பாவலர் தஞ்சை தர்மராசன்:

"தஞ்சை ரயிலடி கீழ்பாலத்தை ஒட்டியுள்ள பெட்ரோல் பங்க் தான் தஞ்சையின் முதல் பஸ்ஸ்டான்டு ,
பக்கிரி லாரி செட் என்றும் கூறுவர்
மத்திய நூலகம், பாரத ஸ்டேட் பாங்க், TTC பஸ் நிலையம் ஆகியகோட்டைஅகழிப்பகுதிகள் சீதாபழ மரக்காடுகளாக இருந்தன.
அக்காலத்தில் பாலியல் தொழில் புரியும் பெண்கள் 
மலக்கழிவு உள்ள அங்குதான் இருப்பார்கள் ,

ஆஸ்பத்திரி சாலையில் மாலை மயங்கும் நேரத்தில் வரும் ஆண்கள் திடீரென அங்கு செல்வர்,
Image may contain: sky, outdoor and nature
காரணம் எனக்குப் புரியாது . . . .
திலகர் திடலை சுற்றிலும் 
ஆடுதொடா இலை மரங்கள் இருக்கும்,

திடலின் நடுவிலிருந்த மண்டபத்தில் திலகர் சிலை இருக்கும் , 
ஏதேனும் கூட்டங்கள் நடந்தால் ,
மைக் வசதி உண்டு ,
பெண்களுக்கு தனி இட வசதி உண்டு என நோட்டீஸ் அடிப்பார்கள். . .

தற்போது உள்ள அண்ணா நூற்றாண்டு விழா கட்டிடத்திற்கு முன்பு இருந்த புளிய மர நிழலில் மோடி மஸ்தான் பேர் வழிகள் 
நாடா குத்துதல் , பாம்பு ,கீரி சண்டை ,மூனுசீட்டு போன்ற ஏமாற்றுத்தொழில் செய்துவந்தனர்

அதில் காலு பாய் என்பவர் கில்லாடி ,
எங்கள் வீட்டருகில் வசித்து வந்தவர் ,

ஆஸ்பத்திரிக்கு நான் செல்லும்போது 
அங்கு நின்று வேடிக்கை பார்த்தால் ஒருவர்வந்து நைஸாக ஓரங்கட்டி அழைத்துச்சென்று தம்பி வீட்டுக்கு போய்விடு என்று அனுப்பிவிடுவார்,

அவர்களின் ரகசியம் எனக்குத்தெரியும் ,
கவரிங் செயினை கீழே போட்டு பணம் பறித்த கலையை பின்னர் குறிப்பிடுகிறேன் .

சிவகங்கைப் பூங்காவிற்கு முன்பு பிரிந்து செல்லும் 5 சாலை சந்திப்பில் மிகப்பெரிய அரசமரம் ஒன்று இருந்தது
1950 வாக்கில் அதைச்சுற்றி சுமார் 20 அடி விட்டம் இருக்கலாம் ..
ஒரு ஆள் உயரத்தில் நகராட்சி ஒரு வட்டவடிவ மேடை அமைத்தது . . .

சிவகங்கைப்பூங்காவின் பின்புறம் உள்ள சிவகங்கை குளத்தில் இருந்து 
சீனிவாசபுரம் முதல் பாலம் வரை வரும் அகழி *நல்லதண்ணி அகழி*

தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டாவது பாலம் வரை 
முன்பிருந்த குளம் * பொது மக்கள் குளிப்பதற்கான குளம் *

அதை அடுத்து தற்போது கட்டப்பட்டுள்ள மூன்றாவது பாலம்வரை முன்பிருந்த குளம் * மாட்டு அகழ் * எனப்படும் 
கால்நடைகளை குளிப்பாட்டும் குளமாகும் .

அதை அடுத்து செபமாலைபுரம் வரை செல்லும் வாய்க்கால் போன்ற நீரோடை 
*வண்ணான் அகழி * எனப்படும் ,

இவை அனைத்தும் சிவகங்கை குளத்தில் இருந்து தொடர்ந்து செல்லும் நீரவழிப்பாதைகள் ,
இது சீனிவாசபுரம், மேலவீதி போன்ற இடங்களில் இருக்கும் கிணறுகளுக்கான நீராதாரமாகும் . . . .
மழை பெய்த மறுநாள் மேல அகழங்க பகுதிதியில் இருக்கும்/ இருந்த கோட்டை மீது ஏறி மண்ணைக் கிளறினால் சிறிய மண்கலயங்கள் அகப்படும் ,
அதன் உள்ளே அம்மன் செப்புக்காசுகள் நிறைய இருக்கும் ,
அதை போட்டு எடைக்கு எடை பேரீச்சம்பழம்
வாங்கி தின்போம் .

இது 1950 வாக்கில் நடைபெற்றது.
அது சரி அந்த அம்மன்காசுகள் ஏது ?
மராட்டிய மன்னர்கள் எதிரிகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள 
யாகம் செய்த அம்மன்காசுகளால் நிரப்பிய மண் கலயங்களை கோட்டை முழுவதும் புதைத்து வைத்தனராம்.

துளசிச்செடியை கோட்டையை சுற்றி வளர்த்தனராம் 
அதை தாண்டுவது பாவம் என்பது நம்பிக்கை,

எதிரிகளுக்கு இதெல்லாம் தெரியாது, 
குளத்தில் முதலைகளையும் பாதுகாப்பிற்காக விட்டுவைத்திருந்ததாக கூறுவர். . . . .

தஞ்சை இராசவீதிகளை அடு்த்தடுத்துள்ள சந்துகளின் பெயர்கள் அனைத்தும் 
அரண்மனை ஊழியர்களின் நினைவாக மராட்டிய மன்னர் காலத்தில் வைக்கப்பட்டன

எடுத்துக்காட்டாக
தெற்குவீதி --முதுபோக்கி (சமையல்காரர்) சுப்பராயபிள்ளை சந்து ---
கண்டிதாவுத்சா சாகேப் சந்து - மேலவீதி , தாவுத்சா சாயபு ,
கண்டி அதாவது கொழும்புவிலிருந்து வெண்ணை கொண்டுவந்து கொடுப்பவர்

காகா வட்டாரம் --மேலவீதி ---அரண்மனையின் உண்மையான ஊழியராக இருந்த மராட்டியர் ஒருவரை மன்னரின் குழந்தைகளும் உறவினர்களும் காகா(சித்தப்பா ) என்றே அழைத்தனர் , 
அவரது பெயரே மறைந்துவிட்டது ,

அந்தபகுதியே காகா வட்டாரம் ,
அரண்மனைப் புரோகிதர்களான ,
அப்ஜன்னா (வட்டாரம்),பச்சன்னா (சந்து) மேலவீதிப்பகுதி
இன்னும் பலவற்றைக் கூறலாம்....."

தகவல்: நனபர்கள்
#தஞ்சாவூர்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
12-08-2019.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...