————————————-
கிடை, கீதாரி தற்போது தொரட்டி திரைப்படம் வந்தவுடன் பயன்படுத்துகின்ற வார்த்தைகளாக உள்ளது. கிடை என்றால் நிலங்களை உழுதுபோட்டு பயிர் செய்வதற்கு முன்பு ஆட்டுக் கிடைகளை 3 நாட்கள் அங்கேயே அமர்த்தி உழுத நிலத்தின் மண்ணை சரிசெய்து பக்குவப்படுத்துவது உண்டு.
இந்த ஆட்டுக்கிடையை ஒழுங்குபடுத்துபவர் கீதாரி. பெரும்பாலும் ஏப்ரல் இறுதியிலிருந்து ஆகஸ்ட் வரை கிடைகள் வெயில் காலங்களில் போடுவது உண்டு. மலைக்காலங்களில் கூண்டுகள் பனை ஓலையால் கட்டி ஒரு கூண்டில் எட்டிலிருந்து 10 ஆடுகளை அடைத்து வைப்பதுண்டு. கி.ரா. கிடை என்று சிறுகதையை இதுகுறித்து எழுதியுள்ளார். அதுபோல, தமிழ்செல்வி கீதாரி என்று படைத்துள்ளார்.
கீதாரியின் வாழ்நிலையே வித்தியாசமாக இருக்கும். கையில் ஒரு தொரட்டிக் கம்போடு எப்போதும் தென்படுவார். ஆட்டுப் புளுக்கைகள் நிலத்தின் வெள்ளாமையை செழிப்படையச் செய்யும். இந்த கிடைகள் 1980வரை இருந்தது. 1990களில் படிப்படியாக குறைந்துகொண்டே வந்துவிட்டது.
————-
#கொடிஆடு
இவை தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் மற்றும் கருங்குளம் போன்ற பகுதிகளில் பரவலாக காணப்படுகின்றன. (படம் இரண்டில்) இவ்வாட்டின் உடல் அமைப்பு மெலிந்து காணப்படும். நீண்ட கால்களைக் கொண்டு உயரமாகவும் இவற்றின் கொம்புகள் நல்ல நீளமாகவும், பார்க்க கம்பீரமாகவும் இருக்கும். காதுகள் நடுத்தரஅளவில் வெளிப்புறமாக வளைந்திருக்கும். இக்கிடா ஆட்டின் எடை 37 கிலோ மற்றும் பெண் ஆட்டின் எடை 31 கிலோ கொண்டதாக இருக்கும்.
இந்த ஆடுகளில் கரும்போறை, செம்போறை என்று இரண்டு வகைகள் உள்ளன. கரிய நிற உடலில் வெள்ளைப் புள்ளிகளும், வெள்ளை உடம்பில் கருப்புப் புள்ளிகளும் இருந்தால் அவை கரும்போறை. சிவப்பு நிற உடம்பில் வெள்ளைப் புள்ளிகளும், வெள்ளை உடம்பில், சிவப்புப் புள்ளிகளும் இருந்தால் செம்போறை எனப்படுகின்றன.இவை ஒன்று அல்லது இரண்டு குட்டிகளை ஈனக்கூடியன.கொடி ஆட்டின் காலும் கொம்பும் மிக நீளமாக இருக்கும். பிறந்து 15 மாதங்களில் மூன்று அடி உயரத்துக்கு வளர்ந்துவிடும். பெண் ஆடு பிறந்து ஏழு மாதங்களிலேயே 15 கிலோ எடைவரை வளர்ந்துவிடும். அதேகாலத்தில் கிடா ஆடு 20 கிலோ எடைக்கு வந்துவிடும்.
#கீதாரி
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
09-08-2019.
No comments:
Post a Comment