இன்று ஆடி 18 - காவிரியும், நீர் பெருகாத ஆடிப் பெருக்கும். நாட்டுப் புற நம்பிக்கைகள்.
———————————————
1.காவேரி கரையில்
...............................
ஆடிப்பதினெட்டில்,ஆடிப்பெருக்கினை பதினெட்டாம் பெருக்கு என்று அழைக்கின்றனர். பொதுவாக இந்து மத விழாக்கள் நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை. நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டும், கிழமைகளையும் கொண்டே நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் 18வது நாள் என்று நாளினை கணக்கில் கொண்டு நடத்தப்படும் விழாஆகும். தென்மேற்கு பருவத்தில் பிறந்த கார்முகிலால், மகிழ்ச்சி அடையும் அளவுக்கு மழைத் தந்து, ஆற்றில் பெருக்கெடுத்து ஓடச் செய்து, காவேரியில் வழி நெடுக வணங்கி,மகிழ்ந்து ஆடிப்பதினெட்டை கொண்டாட வைத்த, கார்முகிலுக்கு, செலுத்தும் கோடான கோடி காணிக்கைகள் .
தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்(ஆடிப் )பெருக்கு எனக்கூறுவர்.
உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அருவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் வந்தது
இனி உழவருக்கும்,மக்களுக்கும், வாழ்வில் எல்லா செல்வங்களையும் பெற வேண்டும்.மண்மகளும், புதுப்புனலையும்
கொண்டவோம்.
2.அழகர் மலையில்:
................................
அழகர் மலையில் கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள 18 படிகளின் காவலனாய், சத்திய தெய்வமாய் அழைத்த குரலுக்கு ஓடி வந்து உதவி செய்யும் மக்களின் மனதில் குடிகொண்ட அழகரின் தளபதியான "பதினெட்டாம்படி கருப்பணசாமி " யின் சன்னதி ஆண்டுதோறும் பூட்டியே இருக்கும், அந்த கதவுக்கு தான் சந்தனம் சாத்தி நேர்த்தி கடன் செலுத்துவர்.
ஆனால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் அதாவது ஆடி மாதம் பெளர்ணமி அன்று மட்டும் (இன்று) பதினெட்டாம் படியின் கதவுகள் திறந்து ஒரிரு நிமிடங்கள் மட்டும் , பதினெட்டாம் படியின் தரிசனமும், அக்னி ஜூவாலையாக கருப்பனையும் தரிசிக்க முடியும்
இப்படி மண்மகள், தண்ணீர், விவசாயத்தையும் வணங்கி இயற்கையை
பூஜிக்கின்ற விழாவாக ஆடி 18 ல்
தமிழகத்தின் முழுதும் கொண்ட படுகிறது.
ஆடிப் பெருக்கு, காவிரி நதி தீரத்தில் ஆன்மிக இயற்கை சார்ந்த திருவிழா. தென்மேற்கு பருவமழை தொடங்கி ஆடியில் காவிரியில் நீர் வெள்ளமெடுத்து வருவதை ஒரு காலத்தில் கொண்டாடினார்கள். தை மாதத்தில் அறுவடை செய்யும் பயிர் தொழிலுக்கு இதே அச்சாரம். இந்த வெள்ளத்தை காவிரியில் வணங்குவது வாடிக்கை. பருவமழை பொய்த்து வெள்ளம் வருவதும் காவிரியில் பொய்த்துவிட்டது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறப்பதும் இல்லை. ஆனால் ஆடிப் பெருக்கோ இன்றைக்கு தஞ்சை டெல்டாவில் சோதனை பெருக்காக அமைந்துவிட்டது.
‘ஆடிப் பட்டம் தேடி விதை’, என்பது முதுமொழி. ஆடிப் பெருக்கை குறித்து சீர்காழி பிள்ளை பாடிய முதல் திருமுறை – திருநெய்த்தானம்.
“நுகராரமொ டேலம்மணி செம்பொன்னுரை யுந்திப்
பகராவரு புனல்காவிரி பரவிப்பணிந் தேத்தும்
நிகரான்மண லிடுதண்கரை நிகழ்வாயநெய்த் தான
நகரானடி யேத்தந்நமை நடலையடை யாவே.”
விளக்கவுரை:
நுகரத்தக்க பொருளாகிய சந்தனம், ஏலம், மணி, செம்பொன் ஆகியவற்றை நுரையோடு உந்தி விலை பகர்வதுபோல ஆரவாரித்து வரும் நீரை உடைய காவிரி பரவிப் பணிந்தேத்துவதும், ஒருவகையான மணல் சேர்க்கப்பெற்ற அவ்வாற்றின் தண்கரையில் விளங்குவதுமாகிய நெய்த்தானத்துக் கோயிலில் விளங்கும் சிவபிரான் திருவடிகளை ஏத்தத் துன்பங்கள் நம்மை அடையா.
சீர்காழி கோவிந்தராஜன் அகத்தியர் திரைப்படத்தில் பாடி மக்களை கவர்ந்த சிலப்பதிகார வரிகளோடு பாடும் “நடந்தாய் வாழி காவேரி...” பாடல் தான் நினைவுக்கு வருகிறது. இந்த பாடல் திருச்சி ரேடியோ நிலையத்தில் காவிரி டெல்டா மாவட்டங்கள் கேட்கக் கூடிய அளவில் வைகறைப் பொழுதில் ஒலிபரப்பப்படும்.
“திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அதுஒச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி.
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
மங்கை மாதர் பெருங்கற்புஎன்று
அறிந்தேன் வாழி காவேரி.
மன்னும் மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோல் அதுஓச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி.
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
மன்னும் மாதர் பெருங்கற்புஎன்று
அறிந்தேன் வாழி காவேரி.
உழவர் ஓதை மதகுஓதை
உடைநீர் ஓதை தண்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப
நடந்தாய் வாழி காவேரி.
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன்தன்
வளனே வாழி காவேரி.”
சுழித்து நுரைத்து ஓடும் காவிரி, கல்லணையில் காட்டாற்று வெள்ளமாக பாய்ந்த காவிரி, எப்ப நம்ம ஊர் வாய்க்காலுக்கு வரும் என்ற மகிழ்ச்சியான தஞ்சை வட்டார பேச்சு வழக்கில் சம்பாஷனைகள் நடக்கும்.
மனம் கமழும் காவிரியில், இன்று மணல் கூட இல்லை...!
#ஆடி_பெருக்கு
#aadi_perukku
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
03-08-2019.
(அன்று... இன்று... காவிரியின் படங்களுடன்.)
No comments:
Post a Comment