-----------------------------
#ரம்மியமான_அமைதியின்_சுவடுகள்
நெஞ்சில் எழுந்தன......
சென்னை அடையாறு ஐஐடி அருகே சர்தார் படேல் ரோடில் வால்டார்ஃப் எனும் சீன உணவகம் அமைந்துள்ளது. லூயிஸ் வால்டார்ஃப் சைனீஸ் உணவகத்திற்கு 1975 காலகட்டங்களில் செல்வது வாடிக்கை. சென்னையில் உள்ள சைனீஸ் உணவகங்களில் முக்கிய உணவகமாக இருந்தது. வேலுப்பிள்ளை பிரபாகரன், பேபி சுப்பிரமணியம், ரவீந்திரன், நேசன் ஆகியோரை அழைத்து சென்றபோது அவர்களுக்கு பிடித்திருந்தது. அமிர்தலிங்கம் குடும்பத்தாரையும் அழைத்துச் சென்றிருந்தேன். என்னுடைய திருமணத்திற்கு பின் அமிர்தலிங்கமும் - மங்கையர்க்கரசி அமிர்தலிங்கமும் அங்கே எனக்கு விருந்தளித்தனர். அதேபோல, யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன், அவருடைய மனைவி யாழ்ப்பாணம் மேயர் சரோஜினி யோகேஸ்வரன் ஆகியோர் வந்தபோது அங்கே உணவருந்தியிருக்கிறோம். யோகேஷ்வரன், கரிகாலன் ஆகியோருக்கு இது மிகவும் பிடிக்கும். மத்திய அமைச்சராக இருந்த ராமவிலாஸ் பஸ்வான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் அங்கே அழைத்து சென்றது உண்டு. ஒரு முறை மத்திய அமைச்சராக இருந்த
தாராகேஷ்வரி சின்கா சென்னை வந்தபோதும் இங்கே உணவருந்தியதுண்டு.
இந்த படத்தில் உள்ள இந்த இருக்கையில் தான் வேலுப்பிள்ளை பிரபாகரன் சாப்பிடுவது அவருக்கு பிடித்தமாக இருக்கும். கடந்த 1970 கட்டங்களில் பிடித்த உணவகமாக விளங்கியது. பெருந்தலைவர் காமராஜர் மறைவின்போது கடுமையான பெரும் மழை; அவரை நல்லடக்கம் செய்யப்பட்ட அடையார்-கிண்டி சாலையில் எல்லாம் கூட்டமாக இருந்தவேளையில் இந்த உணவகத்தின் ஆரம்ப பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பார்த்த நினைவுகள். என்னுடைய வழக்கறிஞர் சகாக்களாக இருந்த பலர் தற்போது உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாகவும் உள்ள பல நண்பர்களுடன் இங்கு அடிக்கடி செல்வதுண்டு.
பல முறை தனியாக வந்து சாப்பிட வேண்டுமென்ற அவா என்னுள் இருந்தது. நீண்டநாட்களுக்கு பிறகு தனியாக சென்று பழைய நினைவுகள் அசைபோட்டுக் கொண்டு அந்த வாய்ப்பு இன்று மதியம் எனக்கு கிடைத்தது. ரம்மியமான அமைதியின் சுவடுகள்
நெஞ்சில் எழுந்தன......
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
24-10-2019
#KSRPostings
#KSRadhakrishnanPostings
No comments:
Post a Comment