Wednesday, October 23, 2019

" #செய்யும்_தொழிலே_தெய்வம்"




பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் திரைப்படப் பாடல் தான் இது.

" செய்யும் தொழிலே தெய்வம். 
அந்தத் திறமை தான் நமது செல்வம்"
எவ்வளவு எளிமையான,அருமையான வரிகள்.
இது எந்தத் தொழில் அல்லது வேலை செய்கிறவர்களுக்கும் பொருந்தும்.
செய்நேர்த்தியோடு ஒரு செயலை ஈடுபாட்டுடன் செய்வதை தெய்வத்தோடு ஒப்பிட்டிருப்பது உயர்வுநவிற்சி அல்ல.
ஒரு சிலையைச் செதுக்கும்போதோ, எழுதும்போதோ, சாக்கடையைச் சுத்தம் செய்யும் போதோ, சமைக்கும் போதோ,எந்தச் செயலைச் செய்தாலும், அதன் நேர்த்திக்கேற்ப காலத்தை மீறி நிற்கிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டுமானத்திறனில் தமிழர்கள் காட்டிய ஈடுபாட்டை கல்லணையைப் பார்க்கும் போதும், அண்ணாந்து வியக்க வைக்கிற தஞ்சைக் கோபுரத்தைப் பார்க்கும்போது உணரமுடியும். முல்லைப் பெரியாறு அணையை, கிருஷ்ணாபுரம் சிற்பப் பொக்கிஷத்தைப் பார்க்கும் போது உணரமுடியும். எழுத்தில் உயரம் கண்ட கம்பனை, வள்ளுவனைக் காலம் கடந்தும் பின்தொடர முடியும். மக்களுக்கான உணர்வோடு இயங்கியவர்கள் அதே மக்களால் சமகாலத்திலோ, காலத்தின் மறு அடுக்கிலோ கவனிக்கப் படுகிறார்கள். தனியாரின் உயர்ந்த மனதிற்கு உதாரணமான நெல்லை சுலோச்சனா முதலியார் பாலம் இன்றும் உறுதியோடு நிற்கிறது. கமிஷன்மயமாகிக் கட்டப்படும் தற்போதைய பாலங்கள் மிக விரைவில் சிதைந்து பல்லிளிக்கின்றன.
பென்னிகுக்கின் ஈடுபாட்டிற்கு இணையாக உழைப்பில் தீவிரம் காட்டிய அதிகாரிகள் தற்போது அபூர்வமாகிக் கொண்டிருக்கிறார்கள். நேர்த்தியான உழைப்பிற்கும்,தமக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டு வருவதை எத்தனை பேர் மனப்பூர்வமாக உணர்ந்திருப்பார்கள்?

- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-10-2019.

#KSR_Posts
 #KSRadhakrishnan

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...