மாமனிதர் #ஜோசேப்_பரராஜசிங்கம் #படுகொலை_வழக்கின் சந்தேக நபரான பிள்ளையான் உட்பட நான்கு சந்தேக நபர்கள் நீதி மன்றால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்தனர். பிள்ளையான் மீதான குற்றப் பத்திரத்தினை இன்று சட்ட மா அதிபர் விலக்கிக் கொண்டுள்ளார். (அதாவது ஒரு நீதி விசாரணை மூலம் நியாயமாக எழக் கூடிய சந்தேகங்களுக்கு அப்பால் நிரபராதியென நிரூபிக்கப்படாமல்)
இது தற்போதைய சர்வாதிகார ஆட்சியாளரும் சர்வதேசச் சட்ட வரையறையைகளின் கீழ் ஒரு விசாரணை நடத்தப்பட்டால் குற்றவாளியாகத் தண்டனைக்குட்படுத்தப்படக் கூடியவருமான கொட்டாப்பாயவின் பணிப்பின் பேரிலேயே சட்ட மா அதிபரினால் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கும் என்பது பிள்ளையான் வீட்டில் இருக்கும் கொசுவுக்கும் தெரியும்.
ஜோசேப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைதான பிள்ளையான் வழங்கிய வாக்கு மூலத்தில் தாம் ராஜன் சத்தியமூர்த்தியையே பாராளுமன்றத்திற்கு அனுப்ப முயற்சிகள் மேற்கொண்ட போதும் புலிகள் முந்திக் கொண்டு ராஜன் சத்தியமூர்த்தியைக் கொன்று விட்டதாகவும் அதன் பின் பாராளுமன்ற உறுப்பினராகிய ஜோசேப் பரராஜசிங்கம் விடுதலைப் புலிகளின் கைப்பாவையாக செயற்பட்டார் என்றும் அதனாலேயே அவர் கொல்லப்பட்டார் என்றும்.
ஜோசேப் பரராஜசிங்கத்தினைச் சுடுவதற்கு இரு T -56 துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாகவும். கொலையைச் செய்தவர்கள் இருவர் என்றும் அவர்களுள் ஒருவர் பின்னர் நடந்த ஒரு வாகன விபத்தில் கொல்லப்பட்டு விட்டதாகவும் மற்றையவர் வெளிநாடொன்றில் வசிப்பதாகவும் குற்ற ஒப்புதல் போன்ற ஒரு வாக்கு மூலத்தினை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கியிருந்தமையே இதில் உண்மையில் சுவையான விடயம்.
கிணறு வெட்டப் பூதம் வெளிக்கிட்டது போன்று இன்னுமொரு சுவையான கவனத்தை ஈர்க்கும் வாக்கு மூலம் ஒன்றையும் பிள்ளையான் வழங்கியிருந்தார். அதாவது மகிந்த இராஜபக்கசவினால் மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியே அது. மகிந்த இராஜபக்ச ஜனாதிபதியாகவிருந்த போது அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்வதற்கு தம்முடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் மைத்திரிபால சிறிசேனவைப் பொலநறுவையில் வைத்துக் கொலை செய்யுமாறு மகிந்த இராஜபக்கசவே தனிப்பட்ட ரீதியில் கோரியதாகவும் அப்படிச் செய்யப்பட்டால் இயல்பாகத் தன்மீது கொலைக் குற்றம் சாட்டப்படும் எனவும் வேண்டுமெனில் கொழும்பில் வைத்துக் கொலை செய்வதாக பிள்ளையான் கூற மைத்திரிபால சிறிசேனவை கொழும்பில் வைத்துக் கொலை செய்ய மகிந்த இராஜபக்கச விரும்பவில்லை எனவும் அதன் பின்னரே பொரலஸ்கமுவவில் வைத்து மைத்திரிபால சிறிசேன மீது தம்மால் கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அதைப் புலிகள் செய்ததாக அனைவரையும் நம்ப வைக்கவே தற்கொலைக் குண்டுதாரி பயன்படுத்தப்பட்டதாகவும் வாக்கு மூலம் வழங்கியமை மேலும் சுவையானது.
இந்தத் திட்டம் பற்றி ஒரு முஸ்லீம் வர்த்தகரூடாக மைத்திரிபால சிறிசேன தரப்புக்கு தாம் தெரியப்படுத்த முயன்ற போதும் அவர்கள் அதை அவருக்குத் தெரியப்படுத்தவில்லை எனவும் மேலும் வாக்கு மூலம் வழங்கிருந்தார்.
தம்மால் மேற்கொள்ளப்பட்ட அனைத்துக் கொலை மற்றும் குற்றச் செயல்களுக்கு ஆயுதங்கள் வெடி பொருட்கள் வழங்கியது சிறி லங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவே என்றும் கருணாவின் விட்டோடல் கிளர்ச்சியின் பின்னர் தனித்து விடப்பட்ட தமது பெரும் பாலான உறுப்பினர்கள் சிறி லங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பராமரிப்பிலேயே செயற்பட்டதாகவும் வாக்கு மூலம் வழங்கிருந்தார். பிள்ளையான் வழங்கிய இந்த வாக்கு மூலத்திலிருந்து முழுமையான ஒரு நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய பல விடயங்கள் பிள்ளையான் கைதுக்குப் பின்னர் இருந்தது.
இவையனைத்தும் புறந்தள்ளப்பட்டு பிள்ளையானின் குற்றப் பத்திரத்தினை இன்று சட்ட மா அதிபர் விலக்கிக் கொண்டுள்ளமை சிறி லங்காவின் நீதித்துறையிலோ கொட்டாப்பாயவின் ஆட்சியிலோ நடக்கவில்லையெனில்தான் தமிழர்கள் ஆச்சரியப்பட வேண்டும். ஒருவேளை இதனை சட்ட மா அதிபர் செய்யாவிடின் முன்னர் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயகேவுக்கு நடந்தது அவருக்கும் நடக்கலாம்.
எனவே இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்த நீதித்துறைதான் தமிழர்களுக்கு நீதி வழங்கும் என்று கூறி கலப்பு நீதி மன்றம் நிலை மாறும் நீதி எண்டெல்லாம் பூச்சாண்டி காட்டி தமிழர்களின் நீதிக் கோரிக்கைக்குச் சாவுமணி அடித்த தமிழ்த் தலைவர்களை இன்னும் தமிழர்கள் ஏன் கல்லால் எறிந்து கொல்லவில்லை என்பதே ஆச்சரியமானது.


No comments:
Post a Comment