Thursday, October 20, 2022

#*காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல்கள்!*

*இன்றைய (20-10-2022) ஜீனியர் விகடன்  இணையத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தல்கள் வரலாறு குறித்த எனது கட்டுரை*

 #*காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல்கள்!*
வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
———————————————————
இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற தாதாபாய் நௌரோஜி, சிந்தனையாளர் கோபாலகிருஷ்ண கோகுலே, ‘சுயராஜ்யம் என்னுடைய பிறப்புரிமை’ என பிரகடனம் செய்த லோகமான்ய திலகர் போன்றோர் உத்தமர் காந்திக்கு முன்னால் இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுத்தனர். ஆனால் இந்திய தேசிய காங்கிரஸ் என்ற கட்டமைப்பை ஆலன் ஆக்டேவியன் ஹியூம் துவக்கினார். அவரோடு மற்றொரு ஆங்கிலேயர் அன்னிபெசன்ட் அம்மையாரும் காங்கிரஸ் கட்டமைப்புப் பணியில் இருந்தார். அரவிந்தர் குற்றவாளி என்று அலிப்பூர் சிறை என கடந்து புதுச்சேரி வரும் வரை தேசிய விடுதலைப் போராட்டத்தில் அவருடைய பணிகள் இருந்தன. பிபின் சந்திர பால் சந்தர், பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் Lal Bal Pal போன்றோர் எல்லாம் விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகள். இவர்கள் காங்கிரஸ் என்ற அமைப்பு காணாத நேரத்தில் விடுதலை வேள்வியை முன்னெடுத்தனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்திய நிர்வாகப் பணியில் அதிகாரியாக (ஐ.சி.எஸ்) பணியாற்றிய ஆலன் ஆக்டேவியன் ஹியூம், ஆங்கிலேய அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிரான பண்பு உடையவராக இருந்தார். அதனால் அவர் தனது அரசுப் பதவியை 1882 – இல் துறந்தார். அவருடைய முன்முயற்சியால், இந்திய தேசிய காங்கிரஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.  அதன் பிரதிநிதிகள் கூடிய முதல் மாநாடு 1885 டிசம்பர் 28 – இல் மும்பையில் நடந்தது. அதன் முதல் தலைவராக உமேஷ் சந்திர பானர்ஜி நியமிக்கப்பட்டார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மதன் மோகன் மாளவியா 1909 - இல் நடந்த லாகூர் காங்கிரஸ் மாநாட்டிலும், அதன் பிறகு 1918 மற்றும் 1932 –இல் நடைபெற்ற டெல்லி மாநாடுகளிலும், 1933 –இல் நடந்த கல்கத்தா மாநாட்டிலும் நான்கு முறை காங்கிரஸ் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். 
காங்கிரஸின் சின்னங்களாக நுகத்தடி பூட்டிய இரட்டைக்காளை சின்னம், இந்திரா காங்கிரஸ் பிளவுக்குப் பின் பசுவும் கன்றும், அதற்குப் பின் கைச்சின்னம் ஆகியவை இருந்து வருகின்றன.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேர்தல் ஐந்தாவது முறை நடந்து இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  
 கடந்த 136 ஆண்டு கால காங்கிரஸ் வரலாற்றில் நான்கு தேர்தல்கள்தாம் நடந்து உள்ளன. தற்போது நடந்துள்ளது ஐந்தாவது தேர்தல். இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் இருவரும் போட்டியிட்டனர். மொத்தம் பதிவான 9,500 வாக்குகளில் 4,500-க்கும் அதிகமான வாக்குகளை மல்லிகார்ஜுன கார்க்கே பெற்று, வெற்றி பெற்றிருக்கிறார்.
சற்றுப் பின்னோக்கி வரலாற்றுரீதியாகப் பார்த்தால், 1938 – இல் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நேதாஜியும், பி.பட்டாபி சீதாராமய்யாவும் போட்டியிட்டனர். அதில் நேதாஜி வெற்றி பெற்றார்.  
இரண்டாவது முறையாக 1950 – இல் புருஷோத்தம் தாஸ் தாண்டன், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெ.பி.கிருபளானியும் போட்டியிட்டனர். 
மூன்றாவது முறையாக 1997 – இல் சீதாராம் கேசரி, சரத் பவார், ராஜேஷ் பைலட் என்று மூவரும் போட்டியிட்டபோது, சீதாராம் கேசரி வெற்றி பெற்றார். சீதாராம் கேசரியும் தொடர்ந்து தலைவர் பதவியில் இருக்க முடியாமல், சோனியாவின் ஆதரவாளர்கள் நடந்து கொண்டவிதங்களை எல்லாம் அன்றைக்குப் பத்திரிகைகள் வெளியிட்டன. சீதாராம் கேசரியை செயல்படவிடாமல் தடுத்து, அவரைத் தரம் தாழ்த்தி நடத்திய நடவடிக்கைகள் எல்லாம் செய்திகளாக வந்தவண்ணம் இருந்தன.
நான்காவது முறையாக, 2000 – இல் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சோனியாவும், ஜிஜேந்திர பிரசாதாவும் போட்டியிட்டனர். சோனியா வெற்றி பெற்றார்.  
நாட்டின் விடுதலைக்குப் பின், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்களாக, ஜே.பி.கிருபளானி (1946 -47), பி.பட்டாபி சீத்தாராமய்யா (1948 -49), புருசோத்தம டாண்டன் (1950), பண்டித நேரு (1951 - 1954), யு.என்.தேபர் (1955 -1959), இந்திரா காந்தி (1959), (இவருடைய பரிந்துரையின் கீழ்தான் கேரளாவில் அமைந்த இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி அரசு அப்போது கலைக்கப்பட்டது), நீலம் சஞ்சீவ ரெட்டி (1960 -1963), காமராஜர் (1964 -1967), எஸ்.நிஜலிங்கப்பா (1968 -1969) இருந்தனர்.  
 அதற்குப் பிறகு காங்கிரஸ் இரண்டாகப் பிளவு ஏற்படுகின்றது. இந்திரா காங்கிரஸின் தலைவராக ஜெகஜீவன்ராம் நியமிக்கப்படுகிறார். பின் சங்கர் தயாள் சர்மா, டி.கே.பரூவா, பிரமானந்தரெட்டி, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, பி. நரசிம்ம ராவ்,      சீத்தராம கேசரியிலிருந்து சோனியா காந்தி வரை காங்கிரஸ் தலைவர்களாக இருந்த பட்டியல் ஒரு நீண்ட பட்டியல் உண்டு.
காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற நேதாஜியை, தலைவராகச் செயல்பட விடாமல் ஆக்கியதெல்லாம் வரலாற்றின் கறுப்புப் பக்கங்களாக உள்ளன.  
உத்தமர் காந்தியின் வேட்பாளரான பட்டாபி சீத்தாராமையாவை தோற்கடித்ததால், நேதாஜி காங்கிரஸ் தலைவர் பதவியில் நீடிக்க முடியாமல் போனது. 1939 – இல் காங்கிரசிலிருந்து விலகி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் (ஐஎன்ஏ) என்று அமைப்புகளை அமைத்து இயங்கினார். பின்பு ஆங்கில அரசு பல வழக்குகளை அவர் மீது பதிவு செய்தது. பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் அவர் மீது கடுமையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் நடத்திய ஏட்டை தடை செய்கின்றது. இந்த காலத்தில் நேதாஜி மாகாண சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்றார். அன்றைக்கு வங்கத்தில் பிரதமராக இருந்தவர் ஏ.கே.பசுலுல் ஹக் (அப்போது முதல் அமைச்சர் பதவி கிடையாது). சட்டமன்றத்தில் பங்கேற்க நேதாஜிக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது.
நேதாஜியின் கோரிக்கைகள் ஏற்கப்படாத இந்த நிலையில், வங்க மாகாண அரசுக்கு விரிவான கடிதம் ஒன்றை நேதாஜி எழுதுகிறார். இந்த கடிதம் தேசிய ஆவண காப்பகத்தில் பாதுகாப்பாக இப்போதும் இருக்கிறது. அந்த கடிதத்தில் சில பகுதிகள் வருமாறு: 
“நியாயமாக நடந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்ட நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.  
எனது இரண்டு வேண்டுகோள்களை மட்டும் நிறைவேற்றித் தர வேண்டுகிறேன் இரண்டாவது கோரிக்கையை இக்கடிதத்தின் முடிவில் சொல்கிறேன். முதல் வேண்டுகோள் என்னவென்றால், என்னுடைய நியாயமான கோரிக்கைகள் எவற்றையும் நீங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இந்த கடிதத்தை மட்டும் பத்திரமாக வைத்திருங்கள். இதை அரசின் ஆவணக் காப்பகத்தில் சேர்த்து விடுங்கள். நீங்கள் தோற்கடிக்கப்பட்டு என் மக்கள் ஆட்சியைக் கைப்பற்றும்போது, அவர்கள் கையில் இந்த கடிதம் கிடைக்கட்டும். இக்கடிதம் என் நாட்டு மக்களுக்கான என்னுடைய செய்தியும் என் அரசியல் நிலைப்பாடின் சாசனமும் ஆகும்”  
இப்படி துவங்கும் கடிதத்தில் தேசிய, சர்வதேசிய அரசியல் உதாரணங்களை ஒப்பிட்டு, தான் கைது செய்யப்பட்ட சூழலையும் தன் கோரிக்கைகளின் நியாயத்தையும் பற்றி கூறுகிறார். 
“மனிதனுக்கான. மிகப்பெரிய சாபம் என்பது அவன் அடிமையாக நீடித்திருப்பதே என்பதை மறந்துவிடாதீர்கள்.
அநீதியுடனும் தவறுகளுடனும் சமரசம் செய்து கொள்வதே மிகப்பெரிய குற்றம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
என்றும் மாறாத விதி எது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்களுக்கான வாழ்வைப் பெற வேண்டும் என்றால், உங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்துதான் ஆக வேண்டும்.  
ஒப்பற்ற நற்குணம் என்பது, எது வந்தாலும் சமத்துவமின்மைக்கு எதிராக போராடுவதே!”
மக்களுக்கான இந்தச் செய்தியைச் சொன்ன பிறகு தனது இரண்டாவது வேண்டுகோளை சொல்லுகிறார்:  
“எல்லா கதவுகளும் அடைக்கப்பட்ட நிலையில் சிறை கைதிக்கு உள்ள ஒரே ஆயுதம் உண்ணாவிரதம் தான். 1940 நவம்பர் 29 முதல் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கப் போகிறேன். தடுக்கவோ எனக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டவோ கூடாது. அதனை நான் எப்பாடுபட்டேனும் தடுப்பேன்.  
பின் குறிப்பு எப்பொழுதும் போலவே நான் உப்பு கலந்த நீரை மட்டுமே எடுத்துக் கொள்வேன் அதையும் நிறுத்திக் கொள்ள எனக்குத் தோன்றும்பொழுது நான் நிறுத்தி விடுவேன்.” ஆங்கில அரசின் உள்துறை அதிகாரி சர் ரிச்சர்ட் டாட்டென்ஹாம் (Sir Richard Tottenham) இந்தக் கடிதத்தைப் படித்து, இறுமாப்போடு கீழ்க்கண்ட குறிப்பை எழுதியுள்ளார்.  
"I should say that the best place for this was the waste paper basket'
"இது போய் சேர்ந்திருக்க  வேண்டிய சிறந்த இடம் குப்பைத் தொட்டி தான் என்று சொல்வேன்"
நேதாஜிக்கு என்ன ஆயிற்று என்று கேள்விக்குறிகள் துவங்குகின்றன. உண்ணாவிரதம் தொடங்கினார்; வீட்டுக் காவலுக்கு மாற்றப்படுகிறார்; அங்கிருந்து தப்பித்து நான்கே மாதங்களில் ஜெர்மனியில் இருக்கிறார் என்று பல்வேறு தகவல்கள் இன்று வரை நேதாஜியின் இறுதிக் காலம் பற்றிய விடைகள் கிடைக்காமல் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. 
 தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், காமராஜருடைய வழிகாட்டியாக இருந்த எஸ்.சத்தியமூர்த்தி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டபோது, இருமுறை 1936, 1939 - இல் தோல்வியைக் கண்டார். இவரை எதிர்த்து பக்தவத்சலத்தின் தாய் மாமனார் சி.என்.முத்துரங்க முதலியார் போட்டியிட்டார். இரண்டாம்முறை ஓமந்தூரார் இராமசாமி ரெட்டியாரிடம் 1939 - இல் சத்தியமூர்த்தி தோல்வியைக் கண்டார். பின் 1940 - இல் தி.நகர் இந்தி பிரச்சார சபாவில் நடந்த தேர்தலில் காமராஜரும், கோவையைச் சேர்ந்த சி.பி.சுப்பையாவும் போட்டியிட்டனர். காமராஜர் வெற்றி பெற்றார்.
 தமிழகத்தைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் 1969 –இல் இரண்டாகப் பிளவுபட்டு, நிஜலிங்கப்பா, காமராஜர், நீலம் சஞ்சீவரெட்டி, அதுல்யா கோஷ் போன்ற தலைவர்களின் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸும், இந்திரா காந்தி தலைமையில் ஆளும் காங்கிரஸ் என இரண்டு பிரிவுகளாக இந்தியாவில் செயல்பட்டன. ஆனால் தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் தலைமையில் இயங்கிய ஸ்தாபன காங்கிரஸ் வலுவாக இருந்தது. தமிழக இந்திரா காங்கிரஸில் எம்.பக்தவத்சலம், சி.சுப்பிரமணியம், முன்னாள் அமைச்சர் ராமையா போன்ற சிலர் மட்டுமே தலைவர்களாக இருந்தனர். காமராஜர் மறைவுக்குப் பின் ஸ்தாபன காங்கிரஸைச் சார்ந்த பெரும்பாலோர் இந்திரா காங்கிரஸில் இணைந்தனர். பா.இராமச்சந்திரன் அன்றைக்கு ஸ்தாபன காங்கிரஸ் தலைவர். அவரோடு இருந்த குமரி அனந்தன், தண்டாயுதபாணி போன்றோர் இந்திரா காங்கிரஸில் இணையவில்லை. பின் ஜனதா கட்சியில் அவர்கள் இணைந்தனர் என்பது வேறு விடயம்.
 கடந்த 1979 - 80 கால கட்டம் என்று நினைக்கிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேர்தல் மயிலாப்பூர் சாய்பாபா திருமண மண்டத்தில் நடந்தது.  அந்த தேர்தலில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பழ.நெடுமாறன், கருப்பையா மூப்பனார், தஞ்சை இராமமூர்த்தி மூவரும் போட்டியிட்டனர். எட்டு ஓட்டு வித்தியாசத்தில் நெடுமாறன், மூப்பனாரிடம் தோல்வியைக் கண்டார். நெடுமாறனின் நண்பர் தஞ்சை இராமமூர்த்தி ஏறத்தாழ ஏழு ஓட்டுகள் வாங்கியிருந்தார். தஞ்சை ராமமூர்த்தி தேர்தலில் போட்டியிடாமல் இருந்திருந்தால், நெடுமாறனிடம் உறுதியளித்தபடி, முன்னாள் சென்னை மாகாண சட்டப் பேரவைத் தலைவராக இருந்த செல்லப்பாண்டியன் வாக்களித்திருந்தால், இன்றைய காங்கிரஸின் நிலையே வேறு மாதிரி இருந்திருக்கும்.
நெடுமாறனுக்காக கவிஞர் கண்ணதாசன், வாழப்பாடி இராமமூர்த்தி, மத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.வி.சுவாமிநாதன், ஏ.பி.சி.வீரபாகு, துளசி அய்யா வாண்டையார், தஞ்சை சுந்தரேச தேவர், முத்துக்கருப்பண அம்பலம், நாகர்கோவில் கோ.முத்துக்கருப்பன், திருச்சி சாமிக்கண்ணு, கடலூர் பூவை இராமானுஜம், மணலி இராமகிருஷ்ண முதலியார். தி.சு.கிள்ளிவளவன், எம்.கே.டி.சுப்பிரமணியம் (இவர் யாரென்றால் அண்ணா ராபின்சன் பூங்காவில் தி.மு.க. துவங்கியபோது சுவரொட்டியில் இவருடைய பெயர் ஆறாவது இடத்தில் இருந்தது என்பது என் நினைவு. இவர் அண்ணாவை, ‘என்ன அண்ணா’ என்றுதான் சொல்வார்  கலைஞரை முதன்முதலாகச் சென்னைக்கு அழைத்து வந்து வடசென்னையில் தி.க. கூட்டத்தை நடத்தியவர்), இவர்களோடு நானும், மயிலாப்பூர் சாய்பாபா திருமண மண்டபத்தில் நடந்த தேர்தலில் 44 ஆண்டுகளுக்கு முன்னால் பணியாற்றியது பசுமையாக நினைவில் உள்ளது.  
அதேபோன்று, திண்டிவனம் இராமமூர்த்தி, என்.எஸ்.வி.சித்தன். ப.சிதம்பரம் போன்ற பலர் மூப்பனாருக்காகப் பணியாற்றினர்.
தற்போது காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்கே எவ்வளவு வலுவான தலைவராக காங்கிரஸில் இருப்பார் என்று தெரியவில்லை. தேர்தல் காலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும். அதற்கான வலுவான யுக்திகளை இந்தியா முழுவதும் அடர்த்தியாகக் கொண்டு செல்ல வேண்டும். இந்தப் பணிகளை கார்கேவால் தொய்வில்லாமல் செய்ய முடியுமா என்பதே அரசியல் வட்டாரங்களில் இப்போது நிலவும் கேள்வி.
 தேர்தலில் வெற்றி பெற்ற சிலர், தொடர்ந்து தலைமைப் பதவியை வகிக்க முடியாமல் போயிருக்கிறது. தகுதியுள்ள சிலர், சில காரணங்களால் தேர்தலில் தோல்வியைத் தழுவ வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுவிடுகிறது.  அரசியலில் வெற்றி பெறுவதற்கு உழைப்பு மட்டுமல்ல, நேர்மை மட்டுமல்ல, அதைத் தாண்டி சில அக, புற காரணிகள் இருக்கின்றன என்பதையே எனது 52 ஆண்டு கால அரசியல் அனுபவம் சொல்கிறது.
கட்டுரையாளர்:  
வழக்கறிஞர்,
அரசியலாளர்.
 “கடந்த 136 ஆண்டு கால காங்கிரஸ் வரலாற்றில் நான்கு தேர்தல்கள்தாம் நடந்து உள்ளன. தற்போது நடந்துள்ளது ஐந்தாவது தேர்தல்” 

https://www.vikatan.com/government-and-politics/politics/the-history-of-congress-party-presidential-elections 

முக்கியச் செய்திகள், சிறப்புப் பேட்டிகள், அலசல் கட்டுரைகளுக்கு Vikatan App-ஐ டவுன்லோடு செய்ய http://onelink.to/vikatan-app

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...