———————————
‘உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ என்ற 4 தொகுதிகள் - ஏறத்தாழ 1500 பக்கங்களுக்கு மேல் - குறிப்பாக தினமணியில் எழுதிய எனது கட்டுரைகள் வெளிவர இருக்கின்றன.
கடந்த 45 ஆண்டுகளாக தினமணி, ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள், அமுதசுரபி, ஆங்கில ஏடுகளான தி இந்து, எக்ஸ்பிரஸ், இல்லஸ்ட்ரேட்டர் வீக்லி, சன்டே, அப்செர்வர் மற்றும் தற்போதைய காலகட்டத்தில் தமிழ் இந்து, தினத்தந்தி, தினகரன், மாலைமுரசு போன்ற பல ஏடுகளில் சமீபகாலமாக நான் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து இந்த நான்கு தொகுப்புகளும் வெளிவர இருக்கின்றன.
இதில் உள்ளடங்கிய கட்டுரைகள் தமிழக உரிமைகள், தமிழகத்தில் நிலுவையில் உள்ள திட்டங்கள், தமிழக நதிநீர்ச் சிக்கல்கள், தமிழகச் சுற்றுச்சூழல் பிரச்னைகள், தமிழக விவசாயிகள் போராட்டம் மற்றும் விவசாயிகள் பிரச்னைகள், தமிழக அரசியல் நிகழ்வுகள், திராவிடம் – தமிழ்தேசியம், ஈழத்தமிழர் சிக்கல், மத்திய மாநில உறவுகள், தேசிய நதிகள் இணைப்பு, அகில இந்திய அரசியல் நிகழ்வுகள், அகில இந்திய அரசியல் கட்சிகள், இந்தியப் பிரச்னைகள், தேர்தல் சீர்திருத்தம், தேர்தலின் வரலாறு, இந்திய எல்லைச் சிக்கல்கள், வங்கதேசம் உதயம், இந்திய – சீன- பாகிஸ்தான் பிரச்னைகள், புவியரசியல், உலக அரசியல், பொதுவான உலகப் பிரச்னைகள், முக்கியமான ஆளுமைகள் என பலதரப்பான விடயங்களைக் கொண்டதாகும்.
கடந்த 1995- ஆம் ஆண்டு வரை தினமணி மற்ற ஏடுகளில் வெளிவந்த எனது கட்டுரைகளைத் தொகுத்து 1995 மார்ச் மாதம் ‘உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ என்ற இந்த தலைப்பிலேயே முதல் தொகுப்பு வெளியீட்டு விழா சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யாபவனில் சிறப்பாக நடந்தது. இந்த விழாவில் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன், நீதிபதி என். கிருஷ்ணசாமி ரெட்டி,இரா.செழியன், வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றையச் செயலாளர் ஏ.நல்லசிவன், வழக்கறிஞர் என்.டி.வானமாமலை, ஆர்.காந்தி, நடிகர்கள் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், சிவகுமார், மூத்த பத்திரிகையாளர்கள் கல்கி ராஜேந்திரன், தி ஹிந்து என்.ராம், கிரா என பல ஆளுமைகள் வெளியீட்டு விழாவில் பங்கேற்றனர். அதனுடைய தொடர்ச்சியே இந்த ‘உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ கட்டுரைத் தொகுப்புகள்.
ஆசிரியர் ஏ.என்.சிவராமன் காலத்திலிருந்தே தினமணி ஏட்டில் எனது கட்டுரைகள் வெளிவந்தன. தினமணியில் எனது முதல் கட்டுரை வெளிவந்த உடனேயே ஏஎன்எஸ் என்னை அழைத்துப் பாராட்டினார் என்பது நினைவில் இருக்கிறது. மாலை நேரத்தில் சென்னை கிளப் ஹவுஸ் ரோட்டில் எக்ஸ்பிரஸ் கார்டனில் இருந்த தினமணி அலுவலத்தில் அவரைச் சந்தித்தேன். ஏறத்தாழ நாற்பத்தைந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. அவரை நான் சந்தித்தபோது, “தம்பிக்கு எந்த ஊர்?” என்று கேட்டார். கோவில்பட்டி பக்கம் என்று கிராமத்துப் பெயரையும் சொன்னேன். “அப்படியா? எனது மனைவியின் சொந்த ஊராச்சே” என்று கூறி, என்னுடைய கட்டுரையைப் பற்றி நுண்மாண் நுழைபுலம் உடையது என்று சொல்லியது, இப்போதும் என் காதருகினில் கேட்பதைப் போல இருக்கின்றது. இதைவிட வேறு சான்றிதழ் எனக்கு வேண்டுமா?
1977 முதல் இதுவரை நான் தினமணியில் எழுதிய கட்டுரைகள் 800க்கும் மேல் இருக்கும். அதில் தற்போதையை சூழலுக்குத் தேவையில்லாத சில கட்டுரைகளை நீக்கி, இன்றைக்குத் தேவையான கட்டுரைகள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன,
கணக்கெடுத்துப் பார்த்தால், தினமணிக்கு அதிகமான கட்டுரைகளை எழுதி அவற்றை வெளியிட்டவர்களில் முதன்மையானவனாக நான் இருப்பேன் என்று நினைக்கிறேன்.
தினமணி ஆசிரியர்களாக இருந்த ஐராவதம் மகாதேவன், கி.கஸ்தூரிரங்கன், மாலன், இராம.திரு,சம்பந்தம், எம்.சந்திரசேகர் இன்றைக்கு ஆசிரியராக உள்ள வைத்தியநாதன் ஆகிய அனைவரின் காலங்களிலும் எனது கட்டுரைகள் தினமணியில் வெளியிடப்பட்டன. அவற்றை வெளியிட்ட ஆசிரியர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைவில் கொள்கிறேன்.
இந்தப் பதிவைத் தட்டச்சு செய்யும்போது, பிரபல வார ஏட்டின் அரைகுறையான செய்தியாளர் ஒருவர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். நான் ஓர் எம்பி, எம்எல்ஏ ஆக முடியவில்லையே என்று நாகரிகமற்றமுறையில் ஒருவிதமான அப்பாவித்தனத்துடன் கேட்டார். எனக்கு வந்ததே கோபம்.
“என்ன மிஸ்டர் தமிழ்நாட்டை - புதுவையைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், 59 எம்பிக்கள், அமைச்சர்கள் என்னைப் போல கட்டுரைகளை எழுத முடியுமா? என்னைத் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் கட்டுரையை தொடர்பான விவரங்களை என்னால் சொல்ல முடியும். புரிந்து கொள்ளுங்கள். ‘தகுதியே தடை’ என்ற நிலை இருக்கும்போது, கையை காலைப் பிடித்து பதவியி்ல் அமரச் சொல்கிறீர்களா? போய்விட்டு வாருங்கள்” என்று சிறிது கோபத்துடன் பேசி அவரை அனுப்பி வைத்தேன்.
இப்படிப்பட்ட அரைவேக்காட்டுக்காரர்களின் மத்தியில் அநீதிகள் நியாயங்களாக எப்படி போலித்தனமாகப் பார்க்கப்படுகின்றன. ‘போங்கடா போங்க’ என்று நமது கடமைகளைச் செய்து கொண்டிருக்க வேண்டியதுதான்.
என்னைப் போல இந்தப் பணியை வேறு யாரும் செய்ய முடியுமா?
‘உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ தொகுப்புகள் மட்டுமல்ல, சமீபத்தில் ‘கரிசல்காட்டின் கவிதைச் சோலை’ என்ற நூல் பாரதி நினைவு நூற்றாண்டையொட்டி ராஜாஜி, அண்ணா, கலைஞர் காமராஜர், ஓமந்தூரார் என அக்கால அரசியல் தலைவர்களில் இருந்து, அக்கால இலக்கியகர்த்தாக்கள் பத்திரிகையாளர்கள் புதுமைப்பித்தன், நா.பார்த்தசாரதி, அகிலன் என்று துவங்கி ராமானுஜ நாயுடு டி.எஸ்.சொக்கலிங்கம் வரை மட்டுமல்லாமல், இன்றைய நவீன படைப்பாளிகள் மாலன், யவனிகா ஸ்ரீராம் வரை எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ஏறத்தாழ 700 பக்கங்கள் வரை உள்ள ஒரு நூலை வெளியிட்டுள்ளேன். அது அனைவராலும் பேசப்பட்டது. அனைத்து ஏடுகளிலும் இதனுடைய விமர்சனங்கள் வெளிவந்தன.
இதற்கு அடுத்து, ‘தமிழக விவசாயிகள் போராட்டம்’ 160 ஆளுமைகள் எழுதிய கட்டுரைகள் தொகுப்பாக ஏறத்தாழ 800 பக்கங்கள் இரண்டு தொகுதிகளாக கி.ரா.நூற்றாண்டு சிறப்பு வெளியீடாக வெளிவர உள்ளது, என்னுடைய ‘நிமிர வைக்கும் நெல்லை’ 5 - ஆவது செம்பதிப்பாக, 1200 பக்கம் 2 தொகுதிகளாக வெளி வர இருக்கின்றது. இவை இந்த ஆண்டு இறுதி அல்லது 2023 துவக்கத்தில் வெளி வர இருக்கின்றன.
இது மட்டுமல்லாமல், மறுபதிப்புகளாக ‘கச்சத்தீவு பிரச்னை’, ‘தூக்குக்கு தூக்கு’, ‘தமிழக மேலவை’, ‘சேதுகால்வாய் திட்டம்’ ஆகிய நூல்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. ‘தமிழக நதிநீர்ப் பிரச்னைகள்’ 2 தொகுதிகளாக 1000 பக்க அளவிலும், ‘தமிழ்நாடு உரிமைகள் கிடப்பில் கிடக்கும் திட்டங்கள்’ என தமிழக வாழ்வாதார, நீண்டகாலப் பிரச்னைகளை ஒட்டிய 400 பக்க நூல் அடுத்த ஆண்டு இறுதியிலும் கொண்டு வர பணிகள் நடக்கின்றன.
இறுதியாக, திராவிடமாடல் திராவிட ஸ்டாக் என்று பலர் பேசுகின்றனர் இரண்டையும் குரித்து மைக்ரோ, மேக்ரோ மற்றும் இன்ஆர்கானிக், ஆர்கானிக் என்ற வகையில் திராவிட சித்தாந்தத்தைப் பற்றி இதுவரை வெளிவராத தகவல்களோடு தயாரித்து உள்ளேன். இறுதியாக ‘மாநில சுயாட்சி’ என்ற நூல் நீண்டகாலமாக பாதி எழுதப்பட்டு இறுதியை எட்டும் நூலாக அமைந்துள்ளது.
இப்படி பல நூலாக்கங்களை செய்து என்னுடைய கடமைகளை இதயசுத்தியோடு செய்வது மட்டுமல்ல - பலருக்கு நினைவில் இருக்கும் சொல்லமாட்டார்கள், என் பெயரைச் சொல்ல தவிர்ப்பார்கள் - அவர்களுக்கு எல்லாம் நான் ஏணியாக இருந்ததால், அரசியல் களத்தில் ஜீவித்தார்கள் என்பதை மிடுக்கோடு நெஞ்சை நிமிர்த்திச் சொல்கிறேன். இதைக் குற்றச்சாட்டாக சொல்லவில்லை; உண்மையைச் சொல்கிறேன்.
நன்றியற்ற சில மனிதர்கள் மத்தியில் இப்படிப்பட்ட நூலாக்கங்கள் எனக்கு ஆறுதலையும், கடந்த 52 ஆண்டுகால எனது பொதுவாழ்க்கையில் புண்பட்ட மனதிற்கு இந்தப் பணிகள் சற்று ஆசுவாசத்தையும் ஏற்படுத்துகின்றன. வேறென்ன வேண்டும்? குறையொன்றுமில்லை.
#உரிமைக்குக்குரல்_கொடுப்போம்
#KSRPost
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
15-10-2022.
No comments:
Post a Comment