t ji.
இன்று தேசிய விவசாயிகள் தினம் என்று முகநூல்பதிவு காட்டுகிறது.
மனசு ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் செல்கிறது.சம்சாரிகளின் வீடுகளில் நிறைந்து கிடக்கும் நெல் மற்றும் தானிய மூட்டைகள்.பருத்தி வத்தல் அம்பாரம் அம்பாரமாக.குலுக்கைகள் இல்லாத வீடு கிடையாது.அந்த குலுக்கைக்குள் இறங்கி தானியம் அள்ளிக் கொடுக்கவும் பருத்தி அம்பாரத்தில் ஏறி மிதிக்கவும் எனக்கு ஒரு கூறு பருத்தி லஞ்சம் கொடுக்க வேண்டும்.
சம்சாரிகளின் தோட்டத்தில் கத்தரி,வெண்டை,பீர்க்கை,சுரை,பூசனிக்காய்கள் தாராளமாக கிடைக்கும்.சிவளை,ரோஸ்,சிந்தாமணி,வெள்ளை நான்கு வகையான சீனிக்கிழங்குகள் எல்லா ஊர்களிலும் விளையும்.
கம்பு,சோளம்,தினை,குருதவாலி,காடைக்கன்னி,போன்ற சிறுதானியங்கள் அனைவர் வீட்டிலும் விளையும்.
பாசிப்பயறு,தட்டப்பயறு,மொச்சைப்பயறு,துவரை,பூனைக்கண்பயறு,கொண்டைக்கடலை,மல்லி,உளுந்து இவைகள் இல்லாத வீடே கிடையாது.எங்கள் கண்மாய்களில் அயிரை,பல்க்கெண்டை,வட்டக்கெண்டை,பாம்புக்கெண்டை,ஆரா,உளுவை,கெழுரு,விரால்,விலாங்கு,குரவை,போன்ற நாட்டு மீன்கள் தாராளமாகக் கிடைக்கும்.இவையெல்லாம் இந்த தலைமுறைக்கு என்னவென்றே தெரியாது.எல்லா சம்சாரிகளும் தன்னிறைவோடு யாரையும் சார்ந்திருக்காமல் வாழ்ந்தோம். சம்சாரிகளின் எல்லா வீடுகளிலும் ஒரு பழக்கம் உண்டு.சம்சாரித் தொழிலுக்கு யார் யாரெல்லாம் அவசியமோ அவர்களுக்கும் விளைச்சலில் பங்குண்டு.தச்சாசாரி,தங்காசாரி,கொல்லாசாரி,கல்லாசாரி,பனையேறிநாடார்கள்,குயவர்கள்,கோவில் பூசாரிகள் இவர்கள் போக அனுதினமும் வரும் நாடோடிகள் அவ்வளவு பேருக்கும் விளைச்சலில் அள்ளிக் கொடுத்து வாழ்ந்த காலம் மலையேறிப்போச்சு.
இன்று கடையில் போய் சாமான் வாங்கினால் இது தான்சானியா நாட்டு பருப்பு என்கிறான்.தக்காளி பெங்களூர் .வெங்காயம் பெல்லாரி.இன்றைய சம்சாரிகளின் நிலை வெந்ததை தின்னுட்டு விதிவந்தால் சாவோம் என்ற நிலை.எப்படி விவசாயிகள் தினத்துக்கு வாழ்த்துச் சொல்ல.
No comments:
Post a Comment