Friday, August 16, 2024

நேர்மையின் முகவரி ஓமந்தூரர்முதல் முதலமைச்சராக பதவி ஏற்ற தினம்




 ஓமந்தூர் ராமசாமி ஆட்சிக் காலத்தில்தான் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் அரசு சின்னமாக்கப்பட்டது.

 பூரண மதுவிலக்கை கொண்டு வந்தார்.

 1948இல் தமிழை ஆட்சி மொழியாக்க ஆணையிட்டார்.

 சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) என்ற அரசு இலட்சினையை கொண்டு வந்தார்.

 இவர் நேர்மையான, எளிமையான முறையில் ஆட்சி செய்தார்.

ஆந்திர கேசரி என்று அழைக்கப்பட்ட பிரகாசம் சென்னை மாகாண முதலமைச்சராகப் பதவியேற்ற காலகட்டம் அது. தமிழர் நலன்களுக்கு எதிரான அவருடைய நடவடிக்கைகளால், சில மாதங்களிலேயே அவருடைய ஆட்சி ஆட்டம் காணத் தொடங்கியது. வேறு ஒரு முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது, காங்கிரஸ் கட்சியின் டெல்லி மேல்மட்டத் தலைவர்களால் முதலில் பரிந்துரைக்கப்பட்டவர் மூதறிஞர் ராஜாஜி. ஆனால், தமிழ்நாட்டில் இருந்த பெரும்பாலான காங்கிரஸ்காரர்களுக்கு ராஜாஜியை முதலமைச்சர் ஆக்குவதில் உடன்பாடில்லை.

அந்தச் சூழலில் தான் காங்கிரஸ் கட்சியின் எல்லா மட்டத்திலும் மாகாண முதலமைச்சர் பதவிக்குப் பொருத்தமானவர் என ஓமந்தூராரின் பெயர் முன்னிலைப்
படுத்தப்பட்டது. டெல்லியின் மேல்மட்டத் தலைவர்களிடம் இந்த விஷயத்தை எடுத்துச் சொன்ன காமராஜர், ராஜாஜியிடமும் கட்சிக்காரர்களின் மனநிலையை நாசூக்காக உணர்த்தினார். பிறகு, ராஜாஜியை
அழைத்துக்கொண்டு போய், ஓமந்தூராரைச் சந்தித்தார்.
முதலமைச்சராகப் பொறுப்பேற்கும்படி அவரைக் கேட்டுக்
கொண்டார். ஆனால், உடனே அவர் ஒப்புக் கொள்ளவில்லை.
அவர்களைத் தொடர்ந்து, பிரகாசம் அமைச்சரவையில் இருந்த அனைத்து அமைச்சர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் இணைந்து, வற்புறுத்திக் கேட்டுக்கொண்டும் கூட சம்மதிப்பதற்கு மூன்று மாதங்கள் அவகாசத்தை ஓமந்தூரார் எடுத்துக்கொண்டார்.

திண்டிவனத்துக்கு அருகில் இருக்கும் ஓமந்தூர் என்ற ஊரில் 1-2-1895ஆம் ஆண்டு பிறந்தவர் ஓமந்தூரார் என்று அழைக்கப்பட்ட ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார். இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்ட அவர், காந்தியச் சிந்தனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். நேர்மையும் தூய்மையுமே அவரை முதல்வர் நாற்காலியில் வலிய அழைத்து, அமர வைத்தன. அவையே, அவரை இரண்டு ஆண்டுகளுக்குள் பதவியிலிருந்து இறங்கவும் வைத்தன. தனது கட்சிக்காரர்களுக்கோ தன் குடும்பத்தினருக்கோ எந்த விதச் சிறு சலுகைகளோ வேலைவாய்ப்புகளோ அவர் வழங்கவே இல்லை. சாதாரண மனிதர்கள், காங்கிரஸ் கட்சிக்காரர்கள், பணக்காரர்கள், ஆன்மிகத் தலைவர்கள் என எந்தப் பாகுபாடுமின்றி இரண்டாண்டுகளும் மிகவும் நேர்மையான ஆட்சியை அவர் வழங்கினார்.

அவரின் நேர்மையான ஆட்சியால் பாதிப்படைந்த ஜமீன்தார்களும் வகுப்புவாதிகளும் தென் கன்னட மாவட்டத்தைச் சேர்ந்த மடாதிபதிகளும், பதவியை வைத்துக்கொண்டும் பணம் சம்பாதிக்க முடியாத காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் இணைந்து அவரைப் பதவியிலிருந்து இறக்கத் திட்டமிட்டனர். முதலமைச்சர் இருக்கையில் அமர்வதற்காக நீண்ட காலம் யோசித்தவர், கட்சியின் நிர்ப்பந்தத்தால் பதவி விலக நேரிட்டபோது சிறிதும் கவலை கொள்ளவில்லை.

பதவி விலகிய அன்று பிற்பகல் மூன்று மணிக்கே அரசுக் குடியிருப்பான கூவம் மாளிகையிலிருந்து வெளியேறி, ஓமந்தூர் சென்றுவிட்டார். பதவி பறிபோகும் கடைசித் தருணங்களில் அரங்கேறும் ரகசியக் கையெழுத்து நாடகங்கள் எதுவும் இல்லாத எளிய நிகழ்வாக அமைந்தது அது.

முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின், ஓமந்தூராரின் மனம் முழுமையாக ஆன்மிகத்தில் லயித்தது. அரசியல் வாழ்வை முற்றிலுமாகத் துறந்து, வள்ளலாரின் பூமியிலேயே வசிக்கத் தொடங்கினார். மீண்டும் விவசாயியாக அவதாரமெடுத்தார். அவரின் உழைப்பால் வடலூர் பகுதியின் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாறத் தொடங்கின.

வடலூரில் சுத்த சன்மார்க்க நிலையத்தை நிறுவினார். தொடர்ந்து வள்ளலார் குருகுலப் பள்ளி, அப்பர் அநாதைகள் மற்றும் ஏழை மாணவர் இல்லம், அப்பர் சான்றோர் இல்லம், ராமலிங்கத் தொண்டர் இல்லம் ஆகிய நிறுவனங்களை வடலூரில் ஏற்படுத்தினார். இன்று வடலூர், ஓமந்தூராரின் கல்வி நிறுவனங்களால் செழித்து வளர்ந்திருக்கிறது.

ஓமந்தூராருக்கு முன்பு சென்னை மாகாணத்தை ஆட்சி செய்த ஒன்பது முதலமைச்சர்களும் அரச, ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலர் உயர்கல்வி பயின்றவர்கள். ஓமந்தூரார் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். எட்டாம் வகுப்பு வரையே படித்தவர். கட்சித் தேர்தலில் முறைப்படி அவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்
பட்டாலும், கட்சித் தலைமைப் பதவியை மட்டுமே அவர் வகிப்பார் எனவும் முதலமைச்சர் பதவியை ஆங்கிலப் பட்டம் பெற்ற வேறு ஒருவருக்குக் கொடுப்பார் எனவும் பேசப்பட்டது. ஆங்கிலப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே முதலமைச்சராகப் பணியாற்ற முடியும் என ஆங்கில மோகம் நிலவிய காலம் அது. பதவி ஏற்பதுவரை மிகவும் யோசித்தவர், தயங்கியவர் பதவி ஏற்கும்போது துணிச்சலாகக் கட்சித் தலைவராகவும் முதலமைச்சராகவும் பதவி ஏற்றார். கட்சிக் கட்டுப்பாடு காக்கவும், சுதந்திரமாக ஆட்சி நடத்தவும் என கட்சித் தலைவர் - முதலமைச்சர் ஆகிய இரு பெரும் பொறுப்புகளை ஏற்றுத் திறம்பட அவர் பயணித்த அரசியல் பாதையில்தான், பின்னாட்களில் குமாரசாமி ராஜாவும் காமராஜரும் நடைபோட்டனர்.

ஆதிதிராவிடர்கள், ஹரிஜனர்கள் என அழைக்கப்பட்ட அந்தக் காலத்தில், அவர்களுக்கென்று தனித் துறை இல்லை. தொழிலாளர் நலத் துறையின் ஒரு பகுதியாகவே ஹரிஜன நலத் துறை இருந்தது. ஓமந்தூரார் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், அந்தத் துறையை ஆதிதிராவிடர் நலத் துறை எனப் பெயர் மாற்றம் செய்து, தனித் துறையாகப் பிரித்து, அந்தத் துறைக்கென தனியே ஒரு ஆணையரை நியமித்தார். அரசாங்க நிலங்களைப் பொதுமக்களுக்கு வழங்கும்போது, ஆதி திராவிடர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற நடைமுறையை அரசாணையாகப் பிறப்பித்தவர் ஓமந்தூரார்தான். இவை தவிர, ஆதிதிராவிடர்கள் ஆலயத்தில் நுழைவதற்கான தடையை முழுவதுமாக நீக்கி, தமிழ்நாட்டின் பல முக்கியக் கோயில்களில் ஆதிதிராவிடர்களைப் பிரவேசிக்க வைத்த பெருமைக்குரியவர் அவரே. ஆலயப் பிரவேசத்தை எல்லாக் கோயில்களிலும் முறைப்படுத்த ஒரு தனிச் சட்டத்தையும் இயற்றினார். அது மட்டுமல்ல, சென்னை மாகாணத்தில் இருந்த, திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க 1947ஆம் ஆண்டுவரை ஆதிதிராவிடர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆலயப் பிரவேசச் சட்டத்தின் மூலம் அவர்கள் ஏழுமலையானைத் தரிசிக்க வைத்ததோடு நிற்கவில்லை. திண்டிவனம் ஆதிதிராவிடர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான குலசேகரதாஸ் என்பவரை, திருமலை-திருப்பதி கோயிலின் அறங்காவலராக நியமித்தார். ஆலயப் பிரவேச வரலாற்றில், இது தனித்துவமிக்க ஒரு சாதனையே.

ஓமந்தூரார் முதலமைச்சராகப் பதவியேற்றதும் பிறப்பித்த ஆணைகள் யாவுமே கொண்டாடப்பட வேண்டியவை. அவர் பதவி ஏற்றதும் செய்த முதல் முக்கிய வேலை, அதுவரை எந்த இந்திய மாகாண முதல்வர்களும் செய்யாதது. ஆம்! பாராட்டுக் கூட்டங்கள், வெற்றி விழாக்கள் ஆகிய அரசியல் ஆரவாரங்களுக்குத் தடை போட்ட முதல் முதலமைச்சர் அவர்தான். மிக அவசியமான தருணங்களில் மட்டுமே அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். தனிப்பட்ட பேட்டிகள், புகைப்படம் எடுப்பது போன்ற எதற்கும் அவரிடம் எளிதில் அனுமதி வாங்கவே முடியாது. அதனாலேயே அவரின் புகைப்படங்கள் ஒன்றிரண்டு மட்டுமே இன்று நமக்குக் கிடைக்கின்றன. முதலமைச்சரைச் சந்திப்பதற்கென வழங்கப்படும் அனுமதிச்சீட்டில், என்ன காரணத்துக்காகச் சந்திக்க வேண்டும் என ஒரு கேள்வியை இணைக்கும்படி ஓமந்தூரார் உத்தரவிட்டார். நியாயமான காரணத்துக்காக வருவோரை மட்டுமே சந்திப்பது என்பதை முதலமைச்சராகப் பதவி ஏற்ற நாள் முதலே வழக்கமாக்கிக்
கொண்டார். தனிப்பட்ட சலுகைகள், பரிந்துரைகளுக்காக வருவோரை அவர் அனுமதித்ததே இல்லை.

ஓமந்தூரார் முதலமைச்சராகப் பதவி ஏற்ற பிரிட்டிஷ் இந்தியாவின் காலகட்டத்தில், அரசாங்கத்தின் எல்லாத் துறைகளிலும் ஆங்கிலேயர்களே கோலோச்சினார்கள். அரசுத் துறையின் முக்கியமான செயலாளர்கள் அனைவரும் ஆங்கிலேயர்களாகவே இருந்தனர். இந்தியர்களையும் சேர்த்து மொத்தம் 102 ஐ.சி.எஸ். அதிகாரிகள் அன்றைய சென்னை மாகாணத்தில் பணியில் இருந்தனர். ஐ.சி.எஸ். பதவி இன்றைய ஐ.ஏ.எஸ். போன்றதுதான். இந்திய மக்களை மிரட்டி ஆள, இங்கிலாந்தில் இருந்து வந்த தேவலோக பிரஜைகள் தாங்கள் என்ற மிதப்புடன் அந்த அதிகாரிகள் வலம் வந்தனர். மாகாண முதலமைச்சர்களின் அந்தரங்கச் செயலாளர்கள் அனைவரும் அப்போது ஐ.சி.எஸ். அதிகாரிகளாகவே இருந்தனர். அதிகாரத்தில் திளைத்த ஐ.சி.எஸ். வர்க்கத்தினருக்கு எச்சரிக்கை மணி அடிப்பதுபோல் பதவி ஏற்றவுடனேயே ஓமந்தூரார் ஓர் உத்தரவில் கையெழுத்திட்டார். ஆம்! ஐ.சி.எஸ். அந்தஸ்து இல்லாத ஏ.அழகிரிசாமி என்பவரைத் தனது அந்தரங்கச் செயலாளராக நியமித்துக் கொண்டார். சென்னை மாகாண முதலமைச் சர்களின் அந்தரங்கச் செயலாளர்களில் முதல் தமிழர் என்ற பெருமைக்குரியவர் அவர்தான். பின்னாட்களில் அவர், சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பிறகு, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

ஓமந்தூரார், முதலமைச்சராகப் பதவி வகித்த இரண்டாண்டு காலமும் நாட்டு நலன், மக்கள் நலன் என்ற இரட்டைக் கொள்கைகளிலிருந்து எள்ளளவும் பிறழாமல் பணியாற்றினார். இத்தகைய மாமனிதருக்குச் சென்னையிலோ தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலோ ஒரு சிலைகூடக் கிடையாது. போனால் போகிறது என்பதுபோல, மத்திய அரசின் கௌரவமாக 2010இல் ஒரு தபால்தலை வெளியிடப்பட்டது.  அவர் பிறந்த ஓமந்தூரில், தமிழக அரசின் சார்பில் கட்டப்பட்ட மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டது. பெரியார், காமராஜர், ஆகியோரின் வரிசையில் புகழ்பெற்றிருக்க வேண்டிய ஓமந்தூரார் யார் என்பது இன்றைய தலைமுறையில் எத்தனை பேருக்குத் தெரியும்?

ஓமந்தூராருக்கு முந்தைய பிரகாசம் ஆட்சியில் சென்னை மாகாணத்தில் எட்டு மாவட்டங்களில் மட்டுமே மதுவிலக்கு அமலில் இருந்தது. பக்கத்து மாவட்டங்களில் கள்ளுக்கடைகள் இருந்ததால், அந்தச் சட்டத்தால் எந்தப் பயனும் இல்லை. ஓமந்தூரார் முதலமைச்சரானதும் எஞ்சிய 17 மாவட்டங்களிலும் மதுவிலக்குச் சட்டத்தை அமல்படுத்தினார். இதனால் 25 மாவட்டங்களைக் கொண்ட சென்னை மாகாணம் முழுவதும், ஒரே நாளில் கள்ளுக்கடைகள் இழுத்து மூடப்பட்டன.

முறையாக விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, அரசிதழில் வெளியாகி, முக்கியமான பல சட்டங்கள் ஓமந்தூராரின் ஆட்சியில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. அவற்றில் முக்கியமானவை ஆலயப் பிரவேசச் சட்டம், ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டம், இந்து சமய அறநிலையச் சட்டம் மற்றும் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம்.

ஒரு விவசாயியாக
சட்டமன்றத்துக்குள் சென்று, முதலமைச்சராகத் திறம்பட ஆட்சி செய்து, மீண்டும் ஒரு விவசாயியாகவே, முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியவர் ஓமந்தூரார். வேளாண் தொழில்நுட்பத்தைத் துல்லியமாக அறிந்த, வேளாண் தொழிலின் மேல் அக்கறை கொண்ட ஒரு முதல்வர், அவருக்கு முன்பும் பின்பும் யாரும் இல்லை என்றே சொல்ல வேண்டும். வேளாண்மைப் புள்ளிவிவரங்கள் அவருக்கு மனப்பாடமாக இருந்தன. பயிர் நிலை, அடக்கவிலை ஆகியவற்றை எடைபோடுவதில் நிபுணராக இருந்தார். அதனால், முந்தைய ஆட்சி வரை, மேலோட்டமான வேளாண் துறை புள்ளிவிவரங்களைச் சேகரித்து ஏமாற்றிவந்த அதிகாரிகள் ஓமந்தூராரிடம் மூச்சுத் திணறினார்கள். கால்நடை மருத்துவத் துறை, வேளாண் துறை, ஊராட்சித் துறை ஆகிய மூன்றையும் கிராம மட்டத்தில் ஒருங்கிணைத்து அவர் செய்த சாதனைகளும் முக்கியமானவை. கிணறு வெட்ட மானியம், ஊற்றுநீர்ப் பாசனம், நெல்லுக்குத் தரவாரியாக விலை நிர்ணயம், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் அமைத்தது, நெல்-கரும்பு விலையை உயர்த்தியது, பயிர்க் காப்பீட்டுத் திட்டம் கொண்டுவந்தது, சாலை ஓரங்களில் புளியமரம், இலுப்பை மரம், அரசமரம், ஆலமரம் நடச் செய்தது என அவர் தீட்டிய விவசாய நலத்திட்டங்கள் ஏராளம்.

இந்தியாவின் 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களில் விசாலமானது ஹைதராபாத் சமஸ்தானம். இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிந்தைய காலகட்டத்தில், கடும் தலைவலியாக உரு வெடுத்தது இந்த சமஸ்தானம்தான். ராணுவ நடவடிக்கையால் மீட்கப்பட்டு, ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது நீண்ட, தனிக் கதை. பலகட்டப் போராட்டங்களாகத் தொடர்ந்த, இந்திய-ஹைதராபாத் சமஸ்தான இணைப்பு விவகாரம், இறுதி வெற்றியை எட்டியதில் ஓமந்தூராருக்கும் முக்கியப் பங்கு உண்டு என்பது வரலாற்றில் பதிவு செய்யப்படாத உண்மை.

ஹைதராபாத் சமஸ்தானத்தால் பெரும் பிரச்சினை ஏற்படும் என்று தெரிந்த உடனேயே, ஹைதராபாத் மாகாணத்தின் எல்லைப் பகுதிகளை ஒட்டியிருக்கும் சென்னை மாகாணத்தின் மாவட்டங்களில் பணிபுரிந்த சந்தேகத்துக்குரிய அதிகாரிகளை, உடனேயே வேறு வேறு மாவட்டங்களுக்கு ஓமந்தூரார் பணிமாற்றம் செய்தார். ஹைதராபாத் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணிக்கென சிறப்பு ஆயுதக்காவல் குழுவை ஏற்படுத்தினார். அதற்காக ஆண்டுக்கு மூன்று கோடி ரூபாய் வரை நிதி அனுமதி அளித்தார். ஹைதராபாத் சமஸ்தானத்துக்கு இந்திய அரசால் வழங்கப்பட்டுவந்த பெட்ரோல் விநியோகத்தை உடனே நிறுத்த வேண்டும் என டெல்லிக்கு அவசரத் தகவல் கொடுத்தார்.

சமஸ்தானப் பிரச்சினை முற்றிக்கொண்டே போவதில் கவலை கொண்ட ஓமந்தூரார், அதிரடியான ராணுவ நடவடிக்கையால் மட்டுமே அவர்களை ஒடுக்கி, சமஸ்தானத்தை இந்திய அரசுடன் இணைக்க முடியும் என உறுதியாக நம்பினார். இக்கருத்தை படேலிடம் வெளிப்படையாவே வற்புறுத்தினார். ஆனால், உள்துறை அமைச்சகம், பிரச்சினை அவ்வளவு பெரிதாகப் போகாது என அவரின் எச்சரிக்கையை அலட்சியம் செய்தது.

படேலின் நம்பிக்கைக்குரிய கே.எம். முன்ஷி என்பவர் இந்திய அரசின் ஏஜெண்ட் ஜெனரலாக நியமிக்கப்பட்டு, 1947ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி ஹைதராபாதுக்குச் சென்றார். அங்குள்ள நிலவரங்களைக் கண்காணித்தார். ஓமந்தூரார் அனுப்பிய தகவல்களும் தொடர்ந்து செய்த எச்சரிக்கைகளும் மிகவும் சரியானவையே என உள்துறை அமைச்சகத்துக்குத் தகவல் அனுப்பினார். ஓமந்தூராரின் முன்னெச்சரிக்கை
-களை அலட்சியம் செய்தது தவறு என்பது அப்போதுதான் உள்துறை அமைச்சகத்துக்கு உறைத்தது.

1948ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹாஸ்பட் ரயில்வே பாலத்தை ரஜாக்கர்கள் தகர்க்கத் திட்டமிட்டிருப்பதாக ஓமந்தூராருக்கு ஒரு தகவல் கிடைத்தது. மைசூர் சமஸ்தான அரசை உடனடியாகத் தொடர்புகொண்டு அவர் ஆலோசித்தார்; எச்சரித்தார். உடனே, பாலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஹைதராபாத் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சென்னை மாகாண போலீஸாரிடம், ஆயுதங்களைக் கொண்டு மிரட்டும் ரஜாக்கர்களை நீங்களும் திருப்பித் தாக்குங்கள் என ஓமந்தூரார் உத்தரவிட்டார். ரஜாக்கர்களிடம் உள்ளது போன்ற துப்பாக்கி முதலான நவீன ஆயுதங்கள் தங்களிடம் இல்லாத நிலையில் தாங்கள் எப்படித் திருப்பித் தாக்குவது என அவர்கள் தங்கள் இயலாமையை வெளிப்படுத்தினர்.

ஓமந்தூரார் உடனடியாகச் செயலில் இறங்கினார். துப்பாக்கி போன்ற நவீனப் பாதுகாப்புக் கருவிகளை சென்னையிலேயே தயாரிக்க வேண்டும் என முடிவெடுத்தார். முதற்கட்டமாக நாட்டுத் துப்பாக்கிகள் செய்வதில் பயிற்சி பெற்றவர்களை அழைத்து ஆலோசித்தார். கோயம்புத்தூரில் உள்ள தொழிற்சாலை ஒன்று அடுத்த சில வாரங்களில் ஆயுதத் தொழிற்சாலையாக மாறியது.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட பிரதமர் ஜவாஹர்லால் நேரு இப்படித் தன்னிச்சையாக ஆயுதம் தயாரிப்பது சரிதானா என ஓமந்தூராரிடம் கேள்வி எழுப்பினார். ரஜாக்கர்களை அடக்க மத்திய அரசிடம் ஆயுத உதவி கேட்டும் கிடைக்காததால் தாமே அவற்றைத் தயாரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதை ஓமந்தூரார் சுட்டிக்காட்டினார். அவருடைய தூய மனம் அறிந்த நேரு நாசூக்காக அவரிடம் மாகாண அரசு தன்னிச்சையாக ஆயுதம் தயாரிப்பதில் உள்ள அபாயங்களை எடுத்துக் கூறி, ஆயுத உற்பத்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஓமந்தூராரின் வற்புறுத்தலால் சென்னை, பம்பாய், மத்திய மாகாணம் ஆகிய மூன்று மாகாண முதலமைச்சர்களும், படேல் தலைமையில், கே.எம். முன்ஷியுடன் 1948, பிப்ரவரி 21இல் ஒரு விரிவான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். அதில் பாகிஸ்தானிலிருந்து ஹைதராபாதுக்கு விமானங்கள் வழியாக ஆயுதங்கள் கொண்டுவரப்
படுகின்றன என ஓமந்தூரார் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தது உண்மைதான் என ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதிரடி ராணுவத் தாக்குதல் நடத்தி, ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்திய அரசுடன் இணைப்பதற்கான இறுதி வடிவம் முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் ராணுவத் தாக்குதலும் நடத்தப்பட்டது. முடிவில், 1948ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் அன்று தாக்குதல் தாங்க முடியாமல், ஹைதராபாத் படைகள் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தன. நிஜாமும் சரணடைந்தார்.

ஓமந்தூரார் வெற்றிக்களிப்புடன் சர்தார் படேலுக்குப் பாராட்டு தெரிவித்தார். “இந்தப் பாராட்டு நியாயமாக உங்களுக்கு உரியதுதான்” என படேல், ஓமந்தூராரை மனம்திறந்து பாராட்டினார்.

ஹைதராபாத் பிரச்சினையைத் தீர்ப்பதில் தேசபக்தியும் நெஞ்சுரமும் மிக்க ஓமந்தூராரின் பங்களிப்பு மகத்தானது என்பது, சுதேச சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைப்பதில் அரும்பணியாற்றிய படேலின் அமைச்சரவைச் செயலாளர் வி.பி. மேனன் எழுதிய நூலிலும், பிற்காலத்தில் ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்த கோபால ரெட்டியின் ஒரு கடிதத்திலும் விரிவாகப் பதிவு
செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இந்திய சுதந்திரத்துக்குப் பின் வட இந்தியப் பார்வையில் எழுதப்பட்ட பல வரலாற்று நூல்களிலும் ஓமந்தூராரின் இந்தப் பங்களிப்பு முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பது வருத்தத்துக்குரியதே!

எஸ்.ராஜகுமாரன், எழுத்தாளர்-ஆவணப்பட இயக்குநர், தொடர்புக்கு: s.raajakumaran@gmail.com

No comments:

Post a Comment

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo.  A single storied living quarter for the prosperous commoner. Typically  a 'garden house'; ...