Thursday, August 22, 2024

“யாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்”

 “யாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” 

—————————————

இரண்டு நாட்களுக்கு  (16-8-2024 )முன்பாக கிராமத்தில் இருந்து மதுரை வழியாக சென்னைக்குச் திரும்பி  வழியில்  உயர் நீதிமன்ற  ஒரு நீதிபதி நண்பர்  என்னுடன் விமானத்தில் பயணித்தார் .


நான் வழக்கறிஞராக 1990 களில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் சட்டக் கல்லூரி முடித்து புதிதாகப் வழிக்கறிஞர் தொழிலுக்கு வந்தவர் அவர் .


பரஸ்பர விசாரிப்புகளுக்கு பிறகு அவர் என்னிடம் தனிப்பட்ட வகையில் கேட்டார். நீங்கள் நுட்பமான அறிவுத்திறனுடன் அரசியல் பார்வையும் கொண்டு விளங்கி வருகிறீர்கள்!   நீங்கள் தினசரிகளில் எழுதிய கட்டுரைகளை வாசித்து 

மற்றும் யூடியூப் போன்றவற்றில் நீங்கள் பேசுகிற கருத்துக்களையும்

அரசியல் மற்றும் உலகளாவிய பல்வேறு சிந்தனைகளையும் அத்துடன் மனிதனுடைய உள்ளப் பாங்குகள் சார்ந்த உங்களுடைய நுட்பமான அவதானிப்பையும் பலமுறை கணக்கில் எடுத்து நானும் பல சக நீதிபதிகளும் ,வழக்கறிஞர்களும்  பேசிக்கொண்டு இருந்திருக்கிறோம். 


உங்களுடைய வாழ்நாளில் அல்லது இந்த அரசியல் பணியில் அல்லது சட்டத் தொழிலில் ஒரு தார்மீகமான மனநிலையில் ஈடுபட்டு அந்த வகையில் பலருக்கும் ஆபத்தான நேரங்களில் உதவியையும் செய்து வந்துள்ளீர்கள் என்பதை நான் நன்கு அறிந்து கொண்டேன். 


உங்கள் அரசியல் களப்பணியில்உதவி பெற்றவர்கள் யாரும் உங்களுக்கு எந்த விதத்திலும் நன்றி செய்யவில்லை என்பதும் நான் புரிந்து கொண்டவற்றில் முக்கியமானது.



அந்த வகையில் அது அவர்களின் தராதரத்தைதான் காட்டுகிறதே ஒழிய உங்கள் மீது உள்ள நல்மதிப்பை அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது. இப்படியானவர்களைக் கடந்து தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள்! தனிப்பட்ட முறையில் உங்களை புகழ்வதற்காகவோ அல்லது உங்களுடன் இப்படிப் பயணிக்க நேர்ந்து விட்ட சந்தர்ப்பத்திற்காகவும் நான் சொல்லவில்லை! மிகவும் மோசமான சூழலில் போய்விட்ட இன்றைய அரசியலை சீர் கெட்ட நிலை களை உரசி பார்க்க உங்களைப் போன்ற நல்லவர்கள் ஒரு காரணமாக இருக்கிறார்கள் என்பதை தான் நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொள்வோம்.


இந்த மேற்சொன்ன அமைப்புகள் எவ்வளவுதான் மோசமாக நடந்தாலும் இந்த நிலை தொடர்ந்து நீடிக்காது என்பதை நான் ஞாபகத்தில் வைத்து தான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்.


ஏன் சொல்கிறேன் எனில் நான் உங்களைப் பற்றி பலரிடம் பேசிக் கொண்டிருக்கும் போதும் சரி பலர் உங்களைப் பற்றி என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் போது சரி சமூக அரசியலின் சரித் தன்மையை அவர்தான் மிக சிறப்பாக முன்வைக்கிறார் என்பதாக அதாவது  நீங்கள் சார்ந்திருந்த  அரசியல் கட்சிகளில் இருந்தும் கூட பலர் என்னிடம் சொல்லி இருக்கிறார்கள்.


ஒருவர் நன்மையாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறார் என்றால் சமூகம் அவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று தான் அர்த்தம். எல்லா காலங்களிலும் உலக நீதிகள் மோசமான காலங்களில் பாதிக்கப்படும் போது தார்மீகமான ஒரு குரலை முன்னெடுத்து  அதன்அறம் சார்ந்த கேள்விகளுக்கு முன்பு இந்த உலகத்தை நிறுத்தும் 

என்பதுதான் வரலாறு. இல்லை என்றால் இந்த உலகம் இன்றளவும் இவ்வாறு நீடித்திருக்காது.


அந்த வகையில் நீங்கள் தினசரிகளிலும் இணைய தளங்களிலும் பேசி வரும் நீதி சார்ந்த கருத்துக்கள் மிகத் துல்லியமானவை! மனச் சான்று உள்ளவர்களின் குரலாக உங்கள் கருத்துக்கள் எதிரொலிக்கின்றன.  அக்குரல் சமூகமும் அதைச் சார்ந்த மக்களுக்கும் உரியவை.. அதை இந்த உலகம் எப்போதும் ஞாபகத்தில் கொள்ளும்.


நான் சொல்கிறேன் என்பதற்காக நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.மகாகவி பாரதி இறந்தபோது அவரது இறுதிச் சடங்கிற்கு 10 பேர் கூட உடன் செல்லவில்லை. ஆனால் அவரது கருத்துக்கள் இன்றளவும் மக்கள் புழக்கத்தில் நீதிக்கும் நன்மைக்கும் உரிய பாடலாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.


அதே போல் தான் உங்களது கருத்துக்களும் எங்களைப் பொறுத்தவரையில் சமூக சார்ந்ததாக தொடர்ந்து ஒலிக்கிறது. 


நெடுநல் ஒருவன் இருந்தான் என்பதுதான் மக்கள் வழக்காறு.


எதைச் செய்தால் எது நமக்கு கிடைக்கும் என்று வாழ்கிற காலத்தில் அனைத்தும் குழப்பமாகி அதைப் பற்றி பேச விரும்பும் அறிவுஜீவிகளின் எண்ணிக்கை இன்று குறைந்து கொண்டே போகும் நிலையில் நீங்கள் தொடர்ந்து அந்தப் பணியை செய்து கொண்டிருப்பது எங்களுக்கெல்லாம் மிக நம்பிக்கையாக இருக்கிறது என்றும் சொன்னார்.


அவரவர்  எச்சத்தாலே அவரவர் அறியப்படுவார் என்பது போலமனதில் பல சலனங்கள் குறைந்து நிச்சலனமாக மாறியதும் இப்படி ஒரு பார்வை நம் மீது இருக்கிறதே அதுவே போதும் என்கிற நிம்மதியும் அவர் உடனான பயணத்தில்  கிடைத்தது.


“யாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்”


#கேஎஸ்ஆர்போஸ்ட்

#ksrpost

18-8-2024.

No comments:

Post a Comment

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo.  A single storied living quarter for the prosperous commoner. Typically  a 'garden house'; ...