Thursday, August 22, 2024

நான் தூசியாகிக் காணமாலாவதைவிட விரைந்து எரிந்து சாம்பல் ஆவேன்.

 நான் தூசியாகிக் காணமாலாவதைவிட விரைந்து எரிந்து சாம்பல் ஆவேன். மட்கிச் சாவதைக் காட்டிலும் என்னுள் துடிக்கும் தீப்பொறியானது பிரம்மாண்டமான நெருப்புப் பந்தாகக் கொழுந்துவிட்டு ஒளிர்வதையே நான் விரும்புவேன். அமைதியானதும் நிரந்தரமானதுமான கிரகமாகப் பாதுகாப்புடன் நெடுங்காலம் நீடித்திருப்பதைவிட, ஒவ்வொரு அணுவிலும் அற்புதமான ஒளியுடன் திகழும் விண்கலமாக மோதிச் சிதறுவேன். மனிதனுக்கு இடப்பட்ட கட்டளை வாழ்வது, கொண்டாட்டமாக வாழ்ந்து தீர்ப்பது. வெறுமனே ‘இருப்பது’ அல்ல. நீண்ட ஆயுளுடன் இருப்பதற்காக அதனை ஒருபோதும் அற்பத்தனமான செயல்களில் வீணடிக்க மாட்டேன். எனக்கு அளிக்கப்பட்ட நேரத்தை முழுமூச்சில் பயன்படுத்துவேன்.


வாழ்வின் ஒருகட்டம் வரை தான் யார் என்பதைக் கண்டறியவும் சிறப்பானவற்றைக் கற்கவும் மனிதன் தன் நேரத்தைச் செலவழிக்கலாம். ஆனால், அதன் பிறகு தன்னுடைய சொந்த உலகத்தை அவன் படைக்க வேண்டும். வாழ்வில் மகத்தான விஷயம் என்னவென்றால் புதிதாக ஒன்றை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை இவ்வுலகம் எப்போதும் தங்குதடையின்றி வழங்குகிறது என்பதே. புதிய பாதையை உண்டாக்கவும் இதில் வீறுநடை போடவும் ஒருபோதும் தாமதமாகிவிடுவதில்லை. 


நமக்கு மிகக் குறைவான நேரமே அளிக்கப்பட்டுள்ளது. கண்மூடித் திறப்பதற்குள் இவ்வாழ்க்கை சட்டென முடிந்துவிடக்கூடியது. அந்தக் குறுகிய காலத்திற்குள்தான் நாம் பயிலவும் ஆராயவும் தேடவும் அனுபவிக்கவும் படைக்கவும் வேண்டும் என்பதை நினைவில்கொள்வோம். அதனைப் பெருமளவில் பயன்படுத்திக்கொள்வோம். குறுகிய காலமேயானாலும் இரவில் ஒளிரும் எரிநட்சத்திரங்களைப் போலப் பிரகாசமாக எரிந்தணைவோம். நமக்கு அடுத்து வரும் தலைமுறைக்கு ஒளியாலான பாதையைத் தடமாக விட்டுச்செல்வோம். அவர்களுக்கான அகத்தூண்டுதலை அளிப்போம். 


- ஜாக் லண்டன்.

No comments:

Post a Comment

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo.  A single storied living quarter for the prosperous commoner. Typically  a 'garden house'; ...