Monday, August 15, 2016

விடுதலை நாள்

விடுதலை நாள் 
==============

சாதாரண மக்களின் உரிமைகளும், நலன்களும் 70 ஆண்டுகளாக முழுமையாக மீட்கப்படாமல் 70வது சுதந்திரதினவிழாவகொண்டாடுகின்றம். ஒரு பக்கத்தில் வறட்சி, ஒரு பக்கத்தில் வெள்ளம் என்பதை நீக்கி நதிகளை இணைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் நான் போராடி தீர்ப்பை வாங்கிய பிறகுதான் நதிகளை இணைக்க வேண்டும் என்ற சூழலுக்கு மத்திய அரசுவந்துள்ளது. திட்டங்கள் யாவும், பாசாங்காக இருக்காமல் செயல்படவேண்டும்.  மாநிலங்கள் உரிய அதிகாரங்களோடு சமஷ்டி அமைப்பு 
மதிக்கப்படவேண்டும். இயற்கை செல்வங்களை கொள்ளையடிக்கும் கயவர்களுக்கு பாதுகாப்பு கேடயமாக அரசுகள் இருக்கக் கூடாது. 

பொதுவாழ்வில் நேர்மையும், லட்சியத்தில் உறுதிகொண்ட ஆளுமைகள் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் செல்லவேண்டும். 
பொழுதுபோக்குக்காகவும், கேளிக்கைக்காகவும் சினிமா அரங்குகளுக்கு செல்கின்றோம். காஷ்மீர் பிரச்சினையை வேதனையோடு 
அர்த்தத்தோடு நாடாளுமன்றத்தில் பேசாமல் சினிமா பாட்டைப் பாடி நாடாளுமன்றத்தை கேளிக்கை அரங்கமாக மாற்றிவிட்ட அபத்தங்கள் எல்லாம்நடக்கின்றன.சட்டமன்றத்திலும் சினிமா பாட்டுக்கு ரசிக்கின்ற முதல்வர், தாளம் போடுகின்ற அமைச்சர்கள் என 
கூத்துக்கள் மக்கள் பிரதிநிதிகள் மன்றங்களில் நடக்கின்றன. இன்றைக்கு தகுதியே தடை. ஆற்றலாளர்களும், சிந்தனையாளர்களும்,நாடாளுமன்றத்திற்கோ, சட்டமன்றத்திற்கோ செல்ல முடியவில்லை. சுயமரியாதையற்றவர்கள் ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக 
ஜாதி பலம்,பணபலம்,புஜபலம்என்போரே நாடாளுமன்ற உறுப்பினர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள். பொதுவாழ்வு களத்தில் உழைப்பவன் உழைத்துக்கொண்டிருக்கின்றான். நாடு அவனை அங்கீகரிக்க தவறுகின்றது. எப்படிப்பட்ட அவை ஒரு காலத்தில், நாடாளுமன்றத்தில் பண்டித நேரு, கிருபளானி, லோகியோ, அசோக் மேத்தா, மதிலிமாயி, என்.ஜி. கோரே, எஸ்.ஏ. டாங்கே, பேரறிஞர் அண்ணா, கிரண் முகர்ஜி, பிரேம்பாசின், பூபேஷ் குப்தா, எச்.ஏ. காமத், ஏ. ராமசாமி முதலியார், என்.ஜி. ரங்கா, எம்.ஆர். மசானி, எச்.எம். படேல், பிலு மோடி, 
ஏ.கே. கோபாலன்,  இரா. செழியன், ஜோதி மயூர் பாசு போன்ற பலர் உண்மையான நாடாளுமன்றவாதிகளாக இருந்தனர். நேரு காலத்தில் 
எதிர்கட்சி வரிசையில் இருந்து ஆட்சியின் குறைகளை விமர்சித்த காலங்கள் இந்திய நாடாளுமன்றத்தின் பொற்காலம் ஆகும். நேருவும் 
எதிர்கட்சியினுடைய வாதங்களை கேட்டறிந்தார். பண்டித நேரு தகுதியானவர்களையும் தன் கட்சி சாராதவர்களையும் தன்னுடைய 
அமைச்சரவைக்கு அழைத்து அமைச்சராக்கினார். டாக்டர் அம்பேத்கர், ஆர்.கே. சண்முகம் செட்டியார், சி.டி. தேஷ்முக், ஜான் மத்தாய்,பல்தேவ்சிங்போன்றவர்களையெல்லாம் அமைச்சர்களாக்கி நாட்டுக்கு பயன்படுத்தினார்.  ஆனால் இப்போது தகுதியான,நேர்மையானகளப்பணியாளர்கள் தேவையில்லை என்ற நிலை அரசியல் களத்தில் ஏற்பட்டுவிட்டது.
இன்றைக்கு யார் யாரோ காலில் விழுந்தால் போதும். அவர்கள் எல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர் என டெல்லிக்கு அனுப்பி மதுவும், 
கேவலமான காரியங்களுக்கு உள்ளாவதை பார்ப்பது ரணமாக உள்ளது. இது மக்களின் உரிமைகளை சீண்டிப் பார்ப்பதாகும். தகுதியே 
தடை என்று பொதுவாழ்வில் வந்தபின் நாம் பெற்ற சுதந்திரம் எந்த வழியில் நாட்டை முன்னேற்றும். இப்படிப்பட்ட தறுதலைகள் நாட்டின் 
உயர்பதவிக்கு அமர வைத்தால் நாட்டுக்குத்தான் தலைகுனிவு.

போலித்தனமான நடவடிக்கைகள், லஞ்சம், ஊழல், அநீதிகள், மக்கள் விரோத நடவடிக்கைகளை வைத்துக்கொண்டு விடுதலை தினத்தில் 
எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்? ஆனால் எவ்வளவோ பின்னடைவுகள், சிக்கல்கள் என்றாலும் பன்மையில் ஒருமை என்ற 
நிலையில் இந்தியா தன்னுடைய அடையாளத்தை விட்டுவிடாமல் உலக அரங்கில் இருப்பது ஒரு ஆறுதல். காஷ்மீர் கொந்தளிக்கின்றது. 
வடகிழக்கு மாநிலங்கள் போர் குணத்தோடு டெல்லியை பார்க்கிறது.  பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள், சுற்றுச்சூழல்கள், அபிலாசைகள் யாவும் கவனித்து அதற்கான நடவடிக்கைகளில் இறங்கவேண்டும்.

விடுதலை என்பது அனைத்து துறைகளிலும் ஏற்படவேண்டும். நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை பாதுகாத்து பன்னாட்டு நிறுவனங்கள் கையில் சிக்கிவிடாமல், மனித உரிமைகளை சிதைக்காமல், மக்கள் நல அரசாக வென்றெடுத்து சென்றால்தான் நாம் 
பெற்ற விடுதலை முழுமையடையும். 

#விடுதலைநாள் #சுதந்திரதினம் #independenceday #ksrposting #ksradhakrishnanposting

No comments:

Post a Comment