---------------------
இந்த தலத்துக்கு பல பெயர்கள் உண்டு. சங்கரன் கோவிலை பூகைலாயம், புன்னைவனம், சீராசபுரம், சீராசை, வாராசைபுரம், கூழைநகர் என்றும் அழைப்பார்கள்.
2. சங்கரன்கோவில் ஐம்பூத தலங்களில் ஒன்றாகும் இந்த ஐம்பூத தலங்களில் முதல் தலம் இதுவே ஆகும். இந்த கோவிலை மண் தலம் என்று அழைக்கிறார்கள். சிவராத்திரியன்று பல அடியார்கள் ஒன்று கூடி ஐந்து பூத தலங்களுக்கும் நடந்தே செல்வார்கள். அவர்கள் நடந்து செல்லும் மற்ற தலங்கள் அருகிலேயே உள்ளது. இதில் தருகாபுரம் நீர்தலமாகவும், தென்மலை காற்றுத்தலமாகவும், கரிவலம் வந்த நல்லூர் நெருப்புதலமாகவும், தேவதானம் ஆகாயத்தலமாகவும் அழைக்கப்படுகிறது.
3. சங்கரன் கோவில் முகப்பில் நூற்றி இருபத்தைந்து அடி உயரமுள்ள ஒரு பெரிய கோபுரம் உள்ளது. இந்த கோபுரம் ஒன்பது நிலை கொண்ட கோபுரமாகும். கோபுரத்தின் உச்சி தென்வடக்காக 56 அடி நீளம், கீழமேல் அகலம் 15 அடி கொண்டது. உச்சியில் உள்ள குடம் 7 அடி நான்கு அங்குலம் உயரமாகும்.
4. சங்கரன் கோவிலில் சங்கரலிங்கர், கோமதியம்மை, சங்கரநாராயணர் ஆகிய மூன்று சன்னதிகள் உள்ளது. கோவில் வாயிலில் சங்கரலிங்க பெருமான் சன்னதி உள்ளது. வடபகுதியில் கோமதியம்மையும், தென் பகுதியில் சங்கர நாராயணரும் உள்ளனர்.
5. சிவ பெருமானுக்கு சங்கரமூர்த்தி, வாராசைநாதன், வைத்தியநாதன், சீராசைநாதன், புன்னைவனநாதன், கூழையாண்டி ஆகிய பெயர்கள் உண்டு.
6. இந்தக்கோவிலில் ஐந்து தீர்த்தங்கள் உள்ளது. அவை அக்கினி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், வைரவ தீர்த்தம், கவுரி தீர்த்தம் என்பது ஆகும். இந்த கோவிலின் தல மரம் புன்னை மரமாகும்.
7. சங்கரனார் தேர் மிகப் பெரியது. அம்மன் தேர் சற்றுச் சிறியது. இந்த தேர்களில் சித்திரை திருவிழாவின் 9-வது நாளில் சங்கரரும் - தாயாரும் வீதி உலா வருவார்கள். பெரும்பாலும் அதே நாளே மாலைக்குள் இந்த தேர் நிலைக்கு வந்து விடும். ஆடி விழாவில் 9 நாளில் அம்மன் தேர் இழுக்கப்படும்.
8. ஆடி தபசு திருவிழா இங்கு மிகச்சிறப்பாக நடக்கும். அப்போது காட்சி கொடுத்தல் என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். அப்போது மக்கள் தங்கள் நிலங்களில் விளைந்த விளைபொருள்களை எல்லாம் தபசு காட்சி நடக்கும் இடத்தில், காட்சி தரும் சிவன், சக்தி மீது போடுவார்கள்.
9. விளைபொருள்களை அம்மை அய்யன் மீதும் மீதும் போட்டால் அந்த ஆண்டு விளைச்சல் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
10. இந்த கோவில் காமிகாமம் என்னும் ஆகமம் விதிப்படி கட்டப்பட்டுள்ளது.
11. சங்கரன் கோவிலமைப்பு கி.பி. 1022 தொன்மையானது. இங்கு சித்திரைப் பிரமோற்சவம் 41 நாள் நடக்கும். கடைசி 11 நாள்கள் இந்த திருவிழா மிகச்சிறப்பாக நடக்கும்.
12. இந்த கோவிலில் ஸ்ரீசங்கரநாராயணர் மிக விசேஷமானவர். எங்குமில்லாத அமைப்புடன் மிகச்சிறப்பாக இந்த ஊரில் உள்ளார்.
13. சூரியன் உதிக்கும் காலத்தில் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மேலே பொலிவுடன் படுவதை நாம் தற்போதும் பார்க்கலாம். இந்த கோவிலை பொறுத்தவரை அதை காண ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள்.
14. நாகசுனைக்கு மேலும் பல அற்புதங்கள் உண்டு. இந்த சுனையில் எப்பேற்பட்ட பாவங்கள் செய்தவர்களும் மூழ்கி எழுந்தால் நற்கதியடையலாம்.
15. கோவிலுக்கு பின் பக்கம் பாம்பாட்டி சித்தர் தவசாலை உள்ளது. அவர் இங்கு தான் அடங்கினார் என்றும் சொல்கிறார்கள்.
16. இந்த கோவில் செல்ல திருநெல்வேலி புது பஸ் நிலையத்தில் இருந்து 10 நிமிடத்துக்கு ஒரு பஸ் உண்டு. நெல்லையில் இருந்து 52 கிலோ மீட்டரில் இந்த கோவில் உள்ளது.
17. கோவில் பட்டியில் இருந்து கழுகுமலை வழியாகவும் சங்கரன்கோயிலை அடையலாம். ராஜபாளையம் மற்றும் தென்காசியில் இருந்தும் சங்கரன்கோவிலுக்கு பாதை உள்ளது.
18. நடை திறக்கும் நேரம் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மாலை 4 மணி முதல் 8 மணி வரை.
19. கோமதி மகிமை என்ற தலைப்பிலான மகாகவி பாரதியாரின் பாடல்கள் சங்கரன்கோவிலின் மகிமையைக் கூறுகின்றன.
20. இத்தலத்தில் துர்க்கை தென்திசை நோக்கி வீற்றிருப்பதால் யம பயம் போக்குபவளாகத் திகழ்கிறாள்.
21. மார்ச் 21, 22, 23 மற்றும் செப்டம்பர் 21, 22, 23 தேதிகளில் சூரிய பகவானின் கதிர்கள் சங்கரலிங்கத்தின் மீது விழும் அற்புதம் இங்கு நிகழ்கிறது.
22. ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமையிலும் கோமதியம்மனுக்கு தங்கப்பாவாடை சாத்தப்படுகிறது.
23. மரகதக்கல் பதிக்கப்பட்ட பள்ளியறையில் தங்க ஊஞ்சலில் தினமும் பள்ளியறை உற்சவம் நடக்கிறது.
24. அம்மன் சந்நதி பிராகார வாயு மூலையில் உள்ள புற்று மண்ணை நெற்றியில் இட்டுக் கொள்பவருக்கு கெடுபலன் குறையும் என்பது நம்பிக்கை.
25. சங்கரநாராயணர் சந்நதியில் உள்ள வசனக்குழி எனும் தெய்வீக சக்தி மிக்க பள்ளத்தில் பேய், பிசாசு, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அமர்ந்து பூஜை செய்து நலம் பெறுகின்றனர்.
26. கோமதியம்மனுக்கு செவ்வரளிப் பூக்களைப் பரப்பி, அதன் மீது மாவிளக்கேற்றி வழிபடும் முறை சிறப்பாகக் கருதப்படுகிறது.
27. அர்த்தஜாம பூஜை முடிந்த பின் தரப்படும் பிரசாதப்பாலை, தொடர்ந்து 30 நாட்கள் பருகினால் மகப்பேறு இல்லாதவருக்கு மகப்பேறு கிட்டும் என்கிறார்கள்.
28. சங்கரன் கோவில் தாலுகாவில் வாசுதேவநல்லூர், நாரணாபுரம் என்ற ஊர்களில் ஆண்டுதோறும் 350 கோட்டை நெல்லும், ரூபாய் 15,000 வரக்கூடிய நஞ்சை நிலங்களும் அம்பாசமுத்திரம் தாலுகாவில் பிரான்சேரி, கோபால சமுத்திரம், சொக்கலிங்கபுரம் என்ற ஊர்களில் ஆண்டுதோறும் 515 கோட்டை நெல் வருமானமுள்ள நிலங்களும் இந்த கோவிலுக்கு சொந்தமாக உள்ளன.
29. தங்கம், வெள்ளி, பித்தளை, வெண்கலச் சாமான்கள், துணி, ஆடு, மாடு, கோழி, உப்பு, மிளகாய், மிளகு, காய்கறிகள், பலவகைத் தானியங்கள் காணிக்கையாக வருகின்றன. இவை ஏலம் போடப்படும். உண்டியலில் ரொக்கப்பணமும் சாமான்களும் வரும்.
30. இவ்வூர்த் தலபுராணம் சீவலமாறபாண்டிய மன்னவரால் எழுதப்பட்டது. முதலாறு சருகங்கள் ஊற்றுமலைச் சமஸ்தான வித்துவான் புளியங்குடி முத்துவீரப்பக் கவிராயரால் கி.பி.1913-ல் இயற்றப்பெற்றவை. இப்புராணத்துக்கு அரும்பதவுரையும் சுருக்கமும் எழுதியவர் சேற்றூர் மு.ரா.அருணாசலக் கவிராயராவர்.
31. சரஸ்வதி மஹால் என்ற நூல் நிலையம் 27.7.1941-ல் அறநிலையப் பாதுகாப்புக் கழக ஆணையாளர் இராவ் பகதூர் கோ.ம.இராமச்சந்திரன் செட்டியாரால் திறந்து வைக்கப்பெற்று ஒழுங்காக நடைபெற்று வருகிறது. நிலையத்திலிருக்கும் புத்தகங்களின் எண் 1245.
32. சங்கரன் என்ற திருப்பெயர் இவ்வூர்ப் பெருமானுக்கே உரியதாக இருக்கிறது. இப்பெயர் கொண்டு இக்கோவிலும், ஊரும் தாலுகாவும் வழங்கப் பெறுகின்றன.
33. உக்கிரபாண்டிய மன்னர் 943 ஆண்டுகளுக்கு முன் இக்கோவிலை நிர்மாணித்ததாகத் தலவரலாறு கூறுகிறது. விரைவில் இந்த ஆலயம் 1000-வது ஆண்டை எட்டப்போகிறது.
34. வாழ்வில் ஒருமுறையேனும் தரிசித்துப் பிறவிப் பயனை அடையவேண்டிய அற்புத திருத்தலம் இந்த சங்கரன் கோவில்.
35. சங்கரநயினார் கோவிலில் இருந்து நேரே கிழக்கே பன்னிரண்டாவது மையில் கழுகுமலையும், இருபத்து நான்காவது மைலில் கோவிற்பட்டியும் இருக்கின்றன. நேரே வடக்கே ஏழாவது மைலில் கரிவலம் வந்தநல்லூரும், இருபதாவது மைலில் இராசபாளையமும் இருபத்தேழாவது மைலில் திருவில்லிப்புத்தூரும் இருக்கிறது.
36.பெரிய பூஜைகள், ஹோமங்கள், வழிபாடுகள் நடத்த முடியாதவர்கள் கோமதி அம்மனின் பெயரை மனதார உச்சரித்து கொண்டிந்தாலே போதும், முழுமையான பலன்கள் கிடைக்கும்.
37.கோமதி அம்மனின் மகிமையை முழுமையாக உணர்ந்தவர்கள் இது வரை யாருமே இல்லை.
38.சக்தி பீடங்கள் 108-ல் சங்கரன் கோவில் கோமதி அம்மனின் தலம் 8-வது பீடமாக கருதப்படுகிறது.
39.சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் கோமதி அம்மனை "பேசும் தெய்வம்'' என்று சொல்கிறார்கள்.
40.திருச்செந்தூர் முருகனை உப்புசாமி என்று கூறிய ஆங்கிலேயர்கள் சங் கரன்கோவில் சங்கர நாராயணரை பாம்புசாமி என்று கூறினார்கள்.
41.சங்கரன்கோவில் தல வரலாற்றில் கோமதி அம்மனை "கூழை நாயகி''என்று குறிப்பிட்டுள்ளனர். கூழை என்றால் "வால் அறுந்த நாகம்'' என்று பொருள்.
42.சங்கரன்கோவிலில் காலை பூஜையின் போது துளசி தீர்த்தம் கொடுக்கிறார்கள். மற்ற நேரங்களில் விபூதி வழங்கப்படுகிறது.
43.பூஜையின் போது சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி மாலையை அணிவிக்கிறார்கள்.
44.சிவராத்திரி,ஏகாதசி நாட்களில் உற்சவருக்கு அபிஷேக பூஜைகள் நடத்தப்படும்.
45.புத்திரதோஷம் உள்ளவர்கள் மா விளக்கில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கிறது.
46.கோமதி அம்மன் முன்பு பதிக்கப்பட்டுள்ள சக்கரத்துக்கு "ஆக்ஞ சக்கரம்'' என்று பெயர்.
47.ஆடித்தபசு விழா அம்பாளுக்கு மட்டுமே உரிய விழா என்பதால், அன்று அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருவாள்.
48.ஆடி தபசின் கடைசி நாளில் அம்பிகை, தபசு மண்டபத்தில் கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள்.
49.சிவாலயங்களில் ஐப்பசி மாத பிறப்பன்று அன்னாபிஷேகம் செய்வார்கள். ஆனால் இத்தலத்தில் சித்திரை மாத பிறப்பன்றும் அன்னாபிஷேகம் செய்கிறார்கள். எனவே வருடத்துக்கு 2 தடவை சங்கரன் கோவிலில் அன்னாபிஷேகத்தை காணலாம்.
50.பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி நடப்பது போல இத்தலத்திலும் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இதற்காக கோவிலின் வடக்கு பிரகாரத்தில் சொர்க்கவாசல் உள்ளது.
51.சிவன் சன்னதி எதிரில் உள்ள பஞ்சநாக சிலைகள் மீது பால் அபிஷேகம் செய்தால் நாகதோஷம் விலகும்.
52.பொதுவாக கோவில் கருவறை சுற்றுச்சுவர் பின்புறத்தில் லிங்கோத்பவர் அல்லது விஷ்ணு காட்சி தருவார். ஆனார் இங்கு யோக நரசிம்மர் இருக்கிறார்.
53.இத்தலத்தில் சர்ப்ப விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை (4.30 முதல் 6.00) ராகு காலத்தில் பால் அபிஷேகம் செய்தால் ராகு,கேது தோஷம் நீங்கும்.
54.சங்கரன் கோவில் தலத்தில் கந்தசஷ்டியும் சிறப்பாக நடத்தப்படுகிறது. பொதுவாக முருகன் தலங்களில் ஒரு முகம் கொண்ட சுப்பிரமணியர் மட்டுமே சம்ஹாரம் செய்ய செல்வார். ஆனால் இத்தலத்தில் ஆறுமுகங்கள் கொண்ட சண்முகர் சம்ஹாரத்துக்கு செல்வார்.
55.சிவன், விஷ்ணு மட்டுமின்றி பிரம்மாவும் இத்தலத்தில் எழுந்தருளி உள்ளார். எனவே மும்மூர்த்திகளும் அருளும் அபூர்வத்தலம் என்ற சிறப்பு சங்கரன் கோவிலுக்கு உண்டு.
56.சிவன் சன்னதி எதிரில் உள்ள நந்திக்கு ருத்ராட்ச பந்தல் அமைத்து கொடுத்துள்ளனர்.
57.சங்கரன் கோவில் தலத்தில் வழிபட்டால் ஒற்றுமை குணம் உண்டாகும். நானே பெரியவன் என்ற மமதை எண்ணம் நீங்கும்.
58.இத்தலத்தில் வேண்டுகோள் நிறைவேறியவர்கள் சிவன், கோம தியம்மை மற்றும் சங்கர நாராயணருக்கு திருமுழுக்காட்டு செய்து, புத்தாண்டை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
59.வீடுகளில் பூச்சி, பல்லி, பாம்புத் தொல்லை இருந்தால், சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு, அதன் வெள்ளி உருவங்களை வாங்கி காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை.
60.சித்திரை, மார்கழி திருவிழாவின்போது சிவன், ரிஷப வாகனத்தில் அறுபத்து மூவருக்கு காட்சி தரும் வைபவம் நடக்கிறது. தை கடைசி வெள்ளியன்று தெப்பத்திருவிழா நடக்கிறது. ......நெல்லை* சீமையிலே"
No comments:
Post a Comment