தமிழக நீர்நிலைகளில் குடிமராமத்து பணிகள் நேர்மையாக, மனசாட்சிப்படி நடக்கிறதா?
இதுகுறித்தான சென்னை உயர்நீதிமன்ற வழக்கும்.
குடிமராமத்து பணிகளை நீர்நிலைகளில் செய்ய தமிழக அரசு 500
கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் பல நீர்நிலைகள்
காணாமல் போய்விட்டன. தற்போதைய நிலையில் 35,000க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள், நீர்நிலைகளை
பாதுகாக்க இந்த 500 கோடி ரூபாய் போதுமானதல்ல. பண்டைய மன்னராட்சி காலத்திலிருந்து ஏரிகளும்,
குளங்களும் வெட்டி பாரம்பரியமாக ஆங்காங்குள்ள கிராம மக்களே குடிமராமத்து செய்தனர்.
இந்த ஆயக்காட்டுதாரர்கள் ஒரு கடமையாக எடுத்து ஊரே கூடி இந்த பணிகளை 1970வரை கவனித்து
வந்தனர். தற்போது விவசாயிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 50 சதவீதம் மேல் உள்ளவர்கள்
கொண்ட ஆயக்காட்டு பாசனதாரர்களின் சங்கம் அமைக்கப்பட வேண்டும். அந்த சங்கத்தை பதிவு
செய்தபின் அரசு பணியை வழங்கும். இதில் ஆயக்காட்டுதாரர்கள் ஒதுக்கீட்டுத் தொகையில் பத்து
சதவீத பணத்தை பங்களிப்பு நிதியாக முதலிலேயே கட்டிவிட வேண்டும். அதன்பிறகு தான் அரசு
நிதி வழங்கும். அதுமட்டுமல்லாமல், குடிமராமத்து பணிகளுக்கு 12.5% ஜி.எஸ்.டி வரி செலுத்தப்பட
வேண்டும். இப்படியெல்லாம் தமிழக அரசின் கட்டுப்பாடுகளும் விதியும் உள்ளது.
ஆளுங்கட்சிக்காரர்கள் இந்த குழுவில் இடம்பெற மாட்டார்கள்
என்று உத்தரவாதம் தரப்பட்டது. ஆனால், எல்லா சங்கத்திலும் ஆளுங்கட்சிதான் பிரதானமாக
இருக்கிறது. இந்த பணியை கண்காணிக்க மாநில அளவில் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, மாவட்ட அளவிலும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த திட்டத்தின்படி
நீர்நிலைகளின் கரைகளில் தடுப்புச் சுவரை அமைப்பது, மதகுகளை சரிசெய்வது, பாசன வாய்க்கால்களை
சீர்செய்வது போன்ற பணிகள் அடிப்படை நோக்கங்களாகும்.
இந்த பணிகளுக்காக 2016-17 ஆண்டு முதல் சென்னை, திருச்சி,
மதுரை, கோவை வட்டாரங்களில் உள்ள 1519 குளங்கள், ஏரிகள் போன்ற நீர்நிலைகள் தூர்வாரி
பராமரிக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கடந்த 2017-18இல் 29 மாவட்டங்களில்
337.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேலைத்திட்டங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது
2018-19இல் தமிழகத்தின் 35 மாவட்டங்களை 4 மண்டலங்களாக பிரித்து 1829 நீர்நிலைகளை குடிமராமத்து
திட்டத்தின்கீழ் சீர்செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்பின் மூலம் சென்னை வட்டாரத்தில் 277 ஏரி, குளங்களை
குடிமராமத்து பணிகளுக்கு ரூபாய். 93 கோடியும், திருச்சி பகுதியில் 543 நீர்நிலைகளை
சரிசெய்ய ரூபாய். 109.83 கோடி ஒதுக்கப்பட்டது. மதுரை வட்டாரத்தில் 681 ஏரி, குளங்களை
ரூபாய். 230 கோடி ஒதுக்கீட்டில் தூர்வாரவும், கோவைப் பகுதியில் 328 நீர்நிலைகளை ரூபாய்.
66.80 கோடி மதிப்பீட்டில் தூர்வாரவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், கடந்த
காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதி சரியாக இந்த பணிக்கு பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும்
எழுந்துள்ளன.
எனவே தமிழக முதலமைச்சர் உண்மையான விவசாயி சங்கப் நிர்வாகிகளை
அழைத்து பேசவேண்டும். முழுமையாக அந்தந்த வட்டார கிராம மக்களுடைய பங்களிப்பில் தான்
இந்த பணிகள் நடத்தப்பட வேண்டும். பல பகுதிகளில் ஏரிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன.
ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தலின்போது மலர்க்குளம் என்ற பகுதி தொடர்ந்து பராமரிக்கப்படாமல்
இருப்பதை மிக வேதனையோடு தங்களின் கோரிக்கையாக எடுத்து வைத்தனர். வெறும் சம்பிரதாயமாக
நிதிஒதுக்கீட்டை அறிவிப்பது மட்டுமல்லாமல்,
நீர்நிலைகள் பாதுகாப்பு, குடிமராமத்து பணிகளுக்கு ஆண்டுதோறும்
கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும். சம்மந்தப்பட்ட நீர்நிலைகள் ஆய்க்காட்டு பாசனதாரர்களை
கொண்டே நடத்தப்பட வேண்டும். இப்பணிகளுக்கு ஜி.எஸ்.டி வசூலிப்பது திரும்பப் பெற வேண்டும்.
பாசனதாரர்களின் மனித உழைப்பை கொண்டே இயந்திரங்களை பயன்படுத்தாமல் நடத்தப்பட வேண்டும்.
பாசனதாரர்கள், அரசு அதிகாரிகள் அடிக்கடி இந்த பிரச்சனை குறித்து
பேசி, திட்டமிட்டு நடத்திட வேண்டும். இந்த பணிகள் யாவும் மழைக்காலத்திற்கு முன்பே அதாவது
கோடை காலத்தில் நடைபெற்றால் பயனுள்ளதாக இருக்கும். நீர்நிலைகளை தமிழகத்தில் மட்டுமல்ல
இந்திய அளவில் பாதுகாக்கப்பட வேண்டுமென்று நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் தனிநபர்
மசோதாவாக கொண்டு வாருங்கள் அந்த அவைக்கு செல்லும் வாய்ப்பு பெற்ற உறுப்பினர்கள் நண்பர்களிடம்
பலரிடம் சொல்லி உள்ளேன். அந்த மசோதாவையும் தயாரித்து அனுப்புகிறேன் என்று சொல்லியும்
விட்டேன். நடக்கும்போது நடக்கட்டும்.
இதுகுறித்து ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் என்னுடைய
வழக்கு ரிட் மனு எண். WP No. 30397/2018 நிலுவையில் உள்ளது. தமிழகத்தில் பிரிட்டிஷார் காலத்தில்
60,000க்கும் மேலான நீர்நிலைகள் இருந்தன. இன்றைக்கு அது பாதியாக குறைந்துவிட்டது. இருப்பதையாவது
பாதுகாக்கப்பட வேண்டுமென்று வழக்கு போடப்பட்டுள்ளது. நான் தாக்கல் செய்துள்ள மனுவின்
விபரங்கள்.
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
01-08-2019
No comments:
Post a Comment