Wednesday, February 3, 2021

#காங்கிரஸ்பிளவு_1978........ #இந்திராகாந்தி_சில_நினைவுகள் #பிரனாப்_முகர்ஜியின்_நினைவுகள்


——————————————————-
மறைந்த இந்திய குடியரசு முன்னாள் தலைவர் பிரனாப் முகர்ஜியின் வாழ்க்கை வரலாற்றின் இறுதித் தொகுப்பான ‘The Presidential Years 2012 – 2017’ கடந்த 5.1.2021 (செவ்வாய் கிழமை) வெளியிடப்பட்டு இன்று கையில் கிடைத்தது. பிரனாப் முகர்ஜி என்றதும் சற்று பின்னோக்கி நினைவுகள் சென்றது,
நாங்கள் எல்லாம் 1970களில் காங்கிரஸில் இருந்த காலகட்டம். அவசர நிலை காலத்திற்கு பிறகு காங்கிரஸ் தோல்வியுற்று பிரதமர் இந்திராவும் தேர்தலில் தோற்றார். பின் மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதாக்கட்சி ஆட்சி மத்தியில் அமைந்தது, அதன்பின் இந்திரா தலைமையில் இருந்த காங்கிரஸ் பிளவுண்டு பிரம்மானந்த ரெட்டி தலைமையில் காங்கிரஸ் இரண்டாக பிரிந்தது.
ஜனவரி 1978-ல் இந்திரா காந்தி தலைமையை நிலைநிறுத்திக்காட்ட கடும் குளிரில் டெல்லியில் மாநாடு நடந்தது, அந்த மாநாட்டை சிறப்பாக நடத்த காங்கிரஸின் டிகே பரூவா, பி.வி. நரசிம்ம ராவ், கேரளா கருணாகரன், பிரனாப் முகர்ஜி, வசந்த சாத்தே, ஏ.ஆர்.ஆண்டுலே பிரியரஞ்சன் தாஸ் முன்ஸி, கே.பி.உன்னிகிருஷ்ணன், சந்திரஜித் யாதவ் போன்ற பலரும் டெல்லியில் அந்த மாநாட்டு பணிகளை கவனித்தார்கள். அன்றைக்கு அமைச்சர்களாக இருந்து பின்னால் குடியரசு தலைவரான ஆர்.வெங்கடராமன், சி.சுப்ரமணியம், போன்றவர்கள் இந்திராகாந்தியை ஆதரிக்காமல் நடுநிலையாக இருந்தார்கள்.
தமிழகத்திலிருந்து இந்திராவை ஆதரித்து பிரதிநிதிகள் நெடுமாறன் தலைமையில் மத்திய முன்னாள் அமைச்சர்கள் ஆர்.வி.சுவாமிநாதன், வாழப்பாடி ராமமூர்த்தி, என பலரும்டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்டோம். சென்னையில் ஜிடி ரயில் வண்டியில் சென்றபோது தமிழ்நாட்டிலிருந்து வந்த பலரோடு நட்போடு பழகிய நினைவுகள் இன்றைக்கும் நினைவில் உள்ளது. இந்திரா காந்திக்கு எதிர்காலத்தில் அரசியல் தளத்தில் இடமிருக்காது என்று எண்ணி பலரும் சிலர் தமிழகத்திலிருந்து வரவில்லை. ஒதுங்கிகொண்டனர்.
ஜி.கருப்பையா மூப்பனார், சிவாஜி கணேசன் இன்றைக்கு இங்கு இருக்கும் ப. சிதம்பரம் போன்றவர்கள் கூட இந்த மாநாட்டுக்கு வரவில்லை புறகணித்தார்கள். இப்படிபட்டவர்கள் பிற்காலத்தில் இந்திரா காங்கிரஸில் முக்கியப் பிரமுகர்களாக தென்பட்டதுதான் வேடிக்கை.
அந்த மாநாட்டில் தமிழ்நாட்டு சார்பில் இந்திராவை ஆதரவைவும், தீர்மானத்தை வழிமொழியவும் நெடுமாறன் தான் அந்த மாநாட்டு மேடைக்கு அழைக்கப்பட்டார். அப்போது மாநாட்டில் நெடுமாறன் ராமன் இருக்குமிடம் அயோத்தி, அதேபோல இந்திரா காந்தி இருக்குமிடம் காங்கிரஸ் என்று பேசியதை மேடையில் இந்திரா ரசித்ததும், காங்கிரஸ் தலைவர்கள் கைத்தட்டியது இன்றைக்கும் என் கண்முன் நினைவில் இருக்கிறது.
அப்போது கருப்பையா மூப்பானார் இந்திரா காந்திக்கு வேற வேலைஇல்லையா என்று சொன்னவர்தான்.
அந்த மாநாட்டுக்கு சென்றபொழுது ஸ்வட்டர் கூட கைவசமில்லாமல் சிலர் தவித்த போது மத்திய முன்னாள் அமைச்சர்கள் ஆர்.வி.சுவாமிநாதன், வாழப்பாடி ராமமூர்த்தியும் கரோல் பாக்கிலிருந்து ஸ்வட்டர்கள் வாங்கிவந்து அவசரமாக அளித்தெல்லாம் உண்டு. டெல்லி சென்ற தமிழக பிரதிநிதிகளுக்கு வாழப்பாடி ராமமூர்த்தி MP Quarters நார்த் அவென்யூலிருந்து தமிழக உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டதெல்லாம் நினைவில் இருக்கிறது.

இப்படியெல்லாம் இந்திரா காந்தியை ஆதரித்த நெடுமாறன், அவரோடு இருந்த தஞ்சை ராமமூர்த்தி எங்களை போன்ற பலர் காங்கிரஸிலிருந்தே அப்புறப்படுத்தியும் உண்டு. மாநாடு முடிந்தவுடன் பிரனாப் முகர்ஜி பேசியவற்றை எல்லாம் மறக்கமுடியாது. ஆனால் இவ்வளவு பணியாற்றிய நெடுமாறனை 1980-ல் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டார். இந்திராவை சிக்கலான நேரத்தில் ஆதரிக்காத மூப்பனார் முக்கியமாக 1980ல் கருதப்பட்டார்.
பிரனாப் முகர்ஜி,வசந்த சாத்தே, ஏ.ஆர்.ஆண்டுலே, போன்றவர்கள் மூப்பனாரை தூக்கிப்பிடித்தார்கள். நெடுமாறன், ஈ.வி.கே.சம்பத்திற்கு ஆதரவாக பி.வி.நரசிம்மராவ், கே.பி. உன்னிகிருஷ்ணன், பிரியரஞ்சன்தாஸ்முன்ஸி போன்றோர் ஆதரவாக இருந்தார்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் மீறி அகப்புற பாசாங்கு நடவடிக்கைகளால் மூப்பனார் அசைக்கமுடியாத சக்தியாகவிட்டார். அதற்கு மிகவும் உதவியாக இருந்தவர் பிரனாப் முகர்ஜியே. சிரமமான நேரத்தில் இந்திராவை ஆதரித்த நெடுமாறனை நீக்கியது தவறு என்று மூத்த பத்திரிக்கையாளர் குல்தீப் நாயர் கருத்து அப்போது வெளியிட்டார்.
அதே சிக்கலான காலத்தில் இந்திராவை ஆதரிக்காத கருப்பையா மூப்பானார் அங்கீகரித்து நெடுமாறனை நீக்கியது தவறு என்றே பி.வி.நரசிம்ம ராவ், பிரியரஞ்சன் தாஸ் முன்ஸி, உன்னிகிருஷ்ணன் போன்றோர் இதெல்லாம் பிரனாப் முகர்ஜியிடம் சொல்லும்போது கருணகரனும் உடனிருந்தார். மகாராஷ்டிரா ஆளுராக இருந்த கேரளவைச் சேர்ந்த சங்கர நாராணனும் இருந்தார் அவர் நெடுமறானுக்கு ஆதரவாக இருந்தார்.
இப்படி எல்லாம் நினைவுகள் வந்து செல்கின்றன. இந்த விடயங்களை பட்டும்பட்டாமல் பிரனாப் மிகர்ஜி தனது முதல் தொகுப்பில் எளிதாக கடந்து சென்றுள்ளார். நெடுமாறன் பெயரை மட்டும் எழுதிவிட்டு செய்திகளை விரிவாக சொல்லவில்லை. கர்நாடக முதல்வராக தேவ்ராஜ் அர்ஸ் நெடுமாறன் மீது பற்றும் பாசமும் உள்ளவர். அவரை விரிவாக எழுதியுள்ளார். அர்ஸ் நான் இந்திராவை ஆதரிக்க முடியாது நான் கர்நாடக முதல்வர் என்று அப்போது நடந்து கொண்ட செயல்பாட்டை முதல் தொகுதியில் முழுவதுமாக சொல்கிறார். ஆனால் நெடுமாறன் பிரச்சனையை தவிர்த்துவிட்டார்.
இறுதி தொகுப்பான முகர்ஜி குடியரசு தலைவராக இருந்த போது நிகழ்ந்த நிகழ்ச்சிகளை தொகுத்த இந்தப்புத்தகம் வரவிடாமல் தடுக்கப்பட்டன என்பதெல்லாம் வேறு விடயம்.
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
07-01-2021

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...