Thursday, February 4, 2021

#திருப்பாவை --------- #பாசுரம்_25


--------------------------
ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,
தரிக்கிலானாகித்தான் தீங்கு நினைந்த,
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்,
நெருப்பென்ன நின்ற நெடுமாலே ! உன்னை –
அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி,
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
----------------------
பதவுரை
ஒருத்தி – ஒப்பற்ற தேவகிக்கு, மகனாய் – புத்ரனாக, பிறந்து – அவதரித்து, ஓர் இரவில் – அந்த ராத்ரியிலேயே, ஒருத்தி – யஸோதைப் பிராட்டிக்கு, மகனாய் – அபிமான புத்ரனாய், ஒளித்து – மறைத்து, வளர – வளரும்போதே தன்னையறியாமே இவன் வளர்ந்திருளுகிற படியைக் கேட்டு, தான் – பின்னாலகபடப் போகிறதை அறியாத தான், தரிக்கிலனாகி – ஸஹியாதவனாகி, எப்படியாவது இவனைக் கொன்றுவிட வேண்டுமென்று, தீங்குநினைந்த – த்ரோஹ கார்யத்தை நினைத்தவனான, கஞ்சன் – கம்ஸன், கருத்தை – எண்ணத்தை, பிழைப்பித்து – வீணாக்கி, வயிற்றில் – அவன் வயிற்றில், நெருப்பென்ன – தீ போல் கடும்படி, நின்ற – நின்றவனான, நெடுமாலே – அண்டினவரிடம் பெரும் பித்தனானவனே, உன்னை – தேவரீரை, அருத்தித்து – யாசித்து, வந்தோம் – உம் திருவடிவாரத்தில் வந்துள்ளோம், பறை தருதியாகில் – எங்கள் உத்தேஸ்யத்தைத் தருவீரானால், திருத்தக்க – ஆசைப்படத் தக்க, செல்வமும் – ஸம்பத்தையும், சேவகமும் – உன் வீரசேஷ்டிதங்களையும், யாம்பாடி – நாங்கள் துதி செய்து, வருத்தமும் தீர்ந்து – வ்யஸனமும் நீங்கி, மகிழ்ந்து – ஸந்தோஷிக்கக் கடவோம்,
“தேவகியின் மகனாக நள்ளிரவில் சிறையில் பிறந்தவனே..
அன்றிரவே, யசோதையிடம் ஒளிந்து வளரச் சென்றவனே..
இதைப் பொறுக்க முடியாமல், உன்னை அழிக்க வேண்டும் என்று தீங்கு நினைத்த கம்சனது வயிற்றில் நெருப்பாக நின்ற திருமாலே..உனது அருளை யாசித்து நாங்கள் வந்துள்ளோம் !
நீ எங்களுக்கு அருளைத் தருவாயானால், உன்னுடைய செல்வச் சிறப்பையும், அடியவர்களுக்காக நீ புரிந்த வீரச் செயல்களையும் போற்றிப் பாடுவோம் !
உன்னுடைய பெருமையை நாங்கள் பாடிட, எங்களது துன்பங்கள் அனைத்தும் நீங்கி, நாங்கள் மகிழ்ந்திருக்க அருள்புரிவாயாக..”
என்று இறைவனை வேண்டுகிறாள் கோதை..!
கண்ணபெருமான் அப்பெண்களை நோக்கி, ‘உங்கள் வேண்டுதல் முரண்பட்டதாக இருக்கின்றது. பல்லாண்டும் பாடுகிறீர்கள், பறையும் வேண்டுகிறீர்கள்’ என்று கேட்க, அவர்கள், ‘ஊராரின் நோன்புக்குப் பறை கேட்கிறோம். ஆனால் உண்மையில் உன்னையே பெறத்தான் வந்தோம். தடைகளை நீக்கித் துன்பங்கள் துடைத்து அருள்புரியவேண்டும்’ எனக் கோருகின்றார்கள் இந்தற்பாசுரத்தில்.
கண்ணன் கம்சனிட்ட சிறைச்சாலையில் ஒப்பற்றவளாகிய தேவகிப்பிராட்டியாகிய ஒருத்தி மகனாய்ப் பிறந்தான். அன்றிரவே யசோதைப் பிராட்டியாகிய ஒருத்தியின் வளர்ப்பு மகனாக ஒளித்து வளர்கிற நிலைமை பெற்றான். கண்ணன் வாழ்வதையும், வளர்வதையும் பொறுத்துக்கொள்ள முடியாத கம்சன் கண்ணனுக்குத் தீங்கு கருதிப் பல கொடுமைகள் செய்தான். அத்தனையையும் தவிடுபொடியாக்கியதால் கம்சன் வயிற்றி அச்சம் என்ற நெருப்பாக நின்றான், நெடுமால்.
இச்சிறப்புக்களையெல்லாம் எடுத்துச் சொல்லி, ‘நெடுமாலே’ என்று அழைத்து, ‘உன்னையே எண்ணி உன்னையே நாடி வந்தோம்’ என்றார்கள், கோபிகைப் பெண்கள்.
‘எங்கள் ஊரார் நோன்புக்குப் பறையும், எங்கள் அன்பினை ஏற்றுத் திருத்தொண்டாகிற பறையும் நல்குவாயானால் உன் ஒப்பற்ற செல்வச் சிறப்பையும், வீரப் பொலிவையும் பரவி மகிழ்வோம். உன்னருளால் எங்கள் நோவும் துன்பமும் நீங்கி இன்புறுவோம்’ என்றனர்.
இது பாசுரத்தின் தெளிபொருள்.
ஆனால், இதற்குள் எத்தனையோ ஒளிபொருள்கள் பொதிந்து கிடக்கின்றன்.
‘ஒருத்தி’ என்ற சொல் ஒப்பற்ற ஒருத்தி என்ற பொருள் தந்து நிற்கின்றது. உலகையும் அனைத்துயிர்களையும் ஆணையிட வல்லாணை ஆணையிட வல்ல தாயான ஒருத்தி, பெற்றவளும் அப்படியே, வளர்த்தவளும் அப்படியே.
இரண்டு பெற்றோர்கள் இவனுக்கு. இராமகாதையில் ஒரு சக்கரவர்த்தி தவம் செய்து நான்கு மாணிக்கங்கள் பெற்றான். இங்கு நால்வர் தவம் செய்து ஒருத்தனைப் பெற்று வளர்த்தார்கள்.
மற்றவர் பிறப்பது கர்மவசத்தால்; இவன் பிறந்தது கிருபாவசத்தால்!
ஓர் இரவு- சிறையில் பிறந்த கண்ணன் ஆயர்பாடிக்குக் கொட்டும் மழையில் வந்த ஒப்பற்ற இரவு. அந்த இரவுக்கு நிகரான இரவு, முன்பும் இல்லை; பின்பும் இல்லை.

ஒளித்து வளர்த்தார்கள் – ஒருத்திக்கு அவதார இனிமையையும், மற்றொருத்திக்கு மழலை விளையாட்டு இனிமையையும் தந்து வளர்த்தான். கள்ளர் செல்வத்தை மறைக்கப் படும்பாடுபோல் கண்ணனையும் கம்சன் பகையிலிருந்து மறைத்து வளர்க்கப்பட்டபாடு அமைந்தது. ‘அந்தர்யாமி’ என்ற பெயருக்கேற்ப வளர நேர்ந்தது.
பொறாது தீங்கு செய்தவன் வயிற்றில் பயம் நெருப்பாயிற்று, தேவகி வயிற்றில் கண்ணன் – கம்சன் வயிற்றில் நெருப்பு ! மேகம் நீரையும் சொரியும். இடியாகிய நெருப்பையும் சொரியும். இந்த மேக வண்ணனும் தாய் வயிற்றில் நீரையும் மாமன் வயிற்றில் தீயையும் சொரிந்தான்.
நெடுமால் – நீண்ட மயக்கம். தேவகிக்குப் பிள்ளையை எண்ணியதாலும் யசோதைக்கு இவன் குறும்பைத் தாங்க முடியாமையாலும், ஆயர் கன்னியர்க்கு ஒப்பற்ற அழகாலும்மால் தந்தவன்.
‘எங்களுக்குப் பிறந்து காட்டவும் வேண்டாம்; வளர்ந்து காட்டவும் வேண்டாம்; கொன்று காட்டவும் வேண்டாம்; உன்னைக் காட்டினால் போதும்’ என்று கூறுவதற்காக, ‘உன்னை அருத்தித்து’ என்றார்கள்.
‘உன்பேரை ஊரெல்லாம் பாடுபடுவோம். உன் பிரிவாற்பட்ட துயரெல்லாம் பனிபோல் ஒழிய இனிமையில் திளைப்போம்’ என உறவு இறுகிய கோலத்தை உறுதி செய்கிறார்கள்.
இப்பாடலில் கண்ணனின் பிறப்பும், வளர்ப்பும் உயிர்ப்பு மிக்க ஓவியமாகி மயக்குகின்றன. நாச்சியார் சொல்லும் நறுந்தமிழ் நம்மை, ‘ இருந்தமிழே உன்னால் இருந்தேன்’ என்று சொல்ல வைக்கிறது.
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
09-01-2021

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...