Thursday, February 4, 2021

#திருப்பாவை ------- #பாசுரம்_26


------------------------------
மாலே ! மணிவண்ணா ! மார்கழி நீராடுவான்,
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்,
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன,
பாலன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே,
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையவனே,
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே,
கோல விளக்கே கொடியே விதானமே,
ஆலி னிலையாய் ! அருளேலோ ரெம்பாவாய்.
--------------------------
பதவுரை
மாலே – ஆஸ்ரித விஷயத்தில் வ்யாமோஹத்தை, மணிவண்ணா – நீலரத்நம் போன்ற வடிவுடையவனே. இதற்கு அவன் உங்கள் அபேஷிதமேதென்ன, மார்கழி நீராடுவான் – மார்கழி நீராட்டத்துக்கு உபகரனங்கள் வேண்டி வந்தோமென்ன அதற்கு அவன் ‘மார்கழி நீராட வேணுமென்று ஒரு ஸாஸ்த்ரமுண்டோ வென்று’ கேட்க இது ப்ரஸித்த மன்றோ, மேலையார் செய்வனகள் – பெரியோர்கள் அநுஷ்டிக்கப்பட்டவைகளென்ன ஆகிலுங்களுக்கு வேண்டுவனவெவையென்ன, வேண்டுவன – வேண்டியவைகளை, கேட்டியேல் – கேட்பாயாகில், ஞாலத்தையெல்லாம் – பூமியெல்லாம், நடுங்க – நடுங்கும்படி, முரல்வன – ஸ்ப்தத்தையுடையனவாய், பாலன்னவண்ணத்து – பால் போன்ற நிறத்தையுடையனவாய், உன் பாஞ்சசன்னியமே – தேவரீருடைய ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தை யொத்தனவான, சங்கங்கள் – ஸங்கங்களும், போய்ப்பாடுடையன – பேரிடமுடையனவாய், சாலப்பெரும்பறையே – மிகவும் பெரியதாயிருந்துள்ள வாத்யங்களும், பல்லாண்டிசைப்பாரே – பல்லாண்டு பாடுவார்களும், கோலவிளக்கே – மங்கள தீபங்களும், கொடியே த்வஜங்களும், விதானமே – மேற்கட்டிகளும் வேணுமென்ன, அதற்கு அவன் சிறுபிள்ளையான என்னை இப்பெரியகார்யங்களையெல்லாம் பண்ணச் சொல்லலாமோ என்ன, ஆலினிலையாய் – முன் காலத்தில் ஆலினிலையில் பள்ளி கொண்டவனே, அருள் – க்ருபை செய்தருள வேணுமென்கிறார்கள்.
“திருமாலே…நீல வண்ணக் கண்ணனே..! மார்கழி நோன்பு நோற்கும் முறையைப் பற்றி எமது முன்னோர்கள் கூறியதையே நாங்களும் மேற்கொள்ள விழைகிறோம்…
ஆலின் இலையில் துயில்பவனான நீ, நாங்கள் நோன்பு நோற்க உலகங்கள் அனைத்தும் நடுங்கும் வகையில் ஒலியை ஏற்படுத்தும் பாலின் நிறத்தைக் கொண்ட உனது பாஞ்ச சன்னியத்தைப் போலத் தோற்றமளிக்கும் வலம்புரிச் சங்குகளையும், பெரிய முரசுகளையும், திருப்பல்லாண்டுப் பாடுபவர்களையும், மங்கல தீபங்களையும், கொடிகளையும், விதானத்தையும் எங்களுக்கு அளித்து அருள் புரிய வேண்டும்..” என்று பாடுகிறாள் கோதை..!
‘பறை தருக என வேண்டி வந்தீர்களே ! உங்களுக்கு வேண்டுவனவற்றைக் கூறுங்கள்’ எனக் கண்ணன் கேட்கப் பாவை நோன்புக்கு உரிய கருவிகளானவற்றைக் கூறி அவற்றைத் தர வேண்டுமென ஆயமகளிர் தெரிவிக்கின்றார்கள்.
‘முன்பு உன்னையே அர்த்தித்து வந்தோம் என்று கூறியவர்கள் இப்போது இவற்றைக் கேட்பதற்குக் காரணம்யாது என்றால்’ கண்ணனோடு உறவாட நோன்பு கருவியாக இருப்பதாலும், அவன் திருநாமங்களைக் கூற ஏதுவாய் இருப்பதாலும், ஆயர்கள் பக்கம் செய்ந்நன்றி அறிகைக்கு உதவுவதாலும் நோன்புக்கு உரிய கருவிகளை நாடுகின்றோம்’ என்றார்கள்.
அடியார்களிடம் பொங்கிப் பெருகும் பேரன்பு படைத்திருக்கும் பெருமானைக் கண்டு, ‘மாலே’ என்றார்கள். இவர்கள் பேச்சைக் கேட்டபின் மேலும், பெருகும் பித்துடையவனானாவன். அதனால், ‘எம் பேரன்பை எவ்வாறு அறிந்தீர்களோ?’ என்று அவன் கேட்கின்றான். ‘உன் அன்பின் பெருக்கை உன் வடிவழகு காட்டுகின்றதன்றோ? என்று உணர்த்துவாராய், ‘மணிவண்ணா’ என்கின்றார்கள்.
‘இத்தனை மிகை கூறுவதேன்?’ என்று கண்ணன் கேட்க, வந்த காரியத்தைக் கூற முற்படுகிறார்கள். அப்போது தாம் கூறுவது மிகையாகாதென்ற குறிப்பும் தோன்ற, அவன் எளிமையும் அருமையும் விளங்க ‘ஆலின் இலையாய்’ என அழைத்தார்கள். திரிவிக்கிரமாவதாரமாய் நெடுமாலாய் ஓங்கிய அவனோ ஓர் ஆலிலையிலும் பள்ளி கொள்ளும் குழந்தை வடிவாகவும் எளிமையாக வல்லவன். ஆனால் அந்த ஆலிலைப் பள்ளியிலும் தன் பேழை வயிற்றில் அனைத்துலகும் அடக்கும் திறமுடையவன். இச்சிறப்பைச் சொல்லி மார்கழி நீராட்டத்துக்கு உரிய கருவிப் பொருள்களைக் கூறலாயினர்.
பெரியோர்களால் கொண்டாடப்பட்ட பெருமைக்குரியது மார்கழி நீராட்டம். வேத விதிகளில் மேலானதன்றோ பெரியோர் ஆசாரம். அத்தகு சிறப்புமிகு வழிப்பாட்டுக்கு உலகெல்லாம் நடுங்கும்படியான பேரொலி முழங்குகின்ற பால் போன்ற வெண்மை நிறத்தனவாகிய சங்குகள் வேண்டும். அவை கண்ணன் கைப் பாஞ்சசன்னியம் போலத் திகழவேண்டும்.

அத்துடன் எங்கும் எதிரொலித்து முழங்குபடியான பறைகள் வேண்டும். இந்த பேரொளிமிக்க சங்கும் அதற்கேற்ற கொட்டு முரசும் கேட்டு மாற்றார் நடுங்க வேண்டும் என்பது குறிப்பு.
இம்மார்கழி நோன்பு சிறக்கத் திருக்கொடி ஆட வேண்டும்; அழகிய மேற்கட்டிகள் (விதானம்) வேண்டும். கோல விளக்குகளும் வேண்டும். வரிசைகள் பலவும் தரவேண்டும். இவ்வாறு சீர்வரிசை கேட்பதுபோல் ஆசையோடு கேட்டார்கள் மாதவனின் புகழ்பாடும் மாதர்கள்.
முன்பு நாராயணன் என்று ஒப்பற்ற மேன்மைப் பெயரைச் சொன்னவர்கள் இப்போது ‘வாத்சல்ய’ குணமே இவன் தனிச்சிறப்பென்று கண்டதால் ‘மாலே மணிவண்ணா’ என்றார்களாம்.
இவர்களுக்கு எத்தீங்கும் வரலாகாது என்று வாழ்த்துதற்குப் பல்லாண்டு பாடுவோர் வேண்டுமாம். மங்கலம் துலங்கவும் மாண்புகள் சிறக்கவும் கோல விளக்குகள் வேண்டுமாம். தொலைவில் உள்ளோரும் காணக் கொடிகளும், மார்கழிப் பனியில் நனையாதிருக்க மேற்கட்டியும் வேண்டுமாம். இவற்றில் ஒன்றல்ல – பலவும் வேண்டும் என அன்புடன் கேட்டு நின்றார்கள்.
பாரோரெல்லாம் மகிழப் பறைகொட்டிக் குடக்கூத்தாடிய காலத்தில் இடையில் கட்டிய பாறையையும், திருப்பல்லாண்டு பாடப் பெரியாழ்வாரையும் விளக்குக்கு நப்பின்னைப் பிராட்டியையும், கொடிக்குப் பெரிய திருவடியையும் மேல்கட்டிக்கு அத்தவாளத்தையும் தந்தேன் என்று கண்ணன் மொழிந்தருளியதாக விரித்துரைத்து மகிழ்ந்தனர் உரையாசிரியர் பெருமக்கள்.
அந்தப் புகழ்பெற்ற இரவில் கண்ணனை வசுதேவர் கூடையில் வைத்துக் கொட்டும் மழையில் எடுத்துச் சென்றபோது மேற்கட்டியாக படம் விரித்துக் குடை பிடித்தானே ஆதிசேடன், அவன் ஏன் தரவில்லை என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு, தன்னைவிட்டு ஓர் அடியும் விலகுதற்கு அவன் இசையான் என்பதால் தரவில்லை என்று அதற்கும் காரணம் கண்டுபிடித்து அனுபவிக்கிறார்கள் வியாக்யான கர்த்தர்கள்.
நோன்புக்குக் கருவிகள் கேட்டு வந்தாரைப் போலப் பாவனை செய்து கொண்டு கண்ணனை ஆயிரம் கோலங்களால் பாயிரம் பாடி மகிழ்வதே ஆயர் மகளிர்க்கு வாய்த்த பணியாயிற்று.
நாச்சியார் தருவது, மார்கழி நீராட்ட முக்குளிப்பு!
நமக்கோ சொல்லவொண்ணா ஆனந்தக் களிப்பு!
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
10-01-2021

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...