Sunday, July 7, 2024

#மதிமுக #சார்பட்டா இராயபுரம் ஏழுமலை நள்ளிரவு கொலை #நினைவுகள்



———————————————————-
1993 அக்டோபர் 2& 3 இல் திமுகவின் தலைவர் கலைஞர் அவர்கள் அறிவாலயத்தில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார். 
அவர்களிடம் பேசும்போது கலைஞர் “மத்திய அரசு மூலம் அனுப்பப்பட்ட ஒரு சுற்றறிக்கையானது இன்றைய மாநில அரசு மூலம் என்னிடம் வந்து சேர்ந்திருக்கிறது.
அதில் என்ன எழுதி இருக்கிறது என்பதைப் பாருங்கள்” என்பதாக அந்தச்சுற்றறிக்கையை ஊடகங்களுக்குக் காட்டுகிறார்!

 “வை கோபால்சாமியின் ஆதாயத்திற்காக கலைஞரின் உயிரைப் பறிக்க விடுதலைப் புலிகள்  திட்டமிட்டு  இருக்கிறார்கள்” என்பதாகக் குறிப்பிட்டு  அந்தச் சுற்றறிக்கை என் கைக்கு வந்துள்ளது என்று கூறுகிறார். அப்போது ஜெயலலிதா தமிழ்நாட்டின்  முதலமைச்சராக இருக்கிறார்.

 பத்திரிக்கையாளிடம் மேலே கண்ட வகையில் கலைஞர் பேசிய பின் கூட்டம் முடிந்து விட்டது. அப்போதெல்லாம் கைபேசி போன்ற வசதிகள் இல்லை. 
அக்கூட்டம் முடிந்தவுடன் உடனே 
PTI-பி டி ஐ, ராமசாமி அவர்கள் உடனே என்னைத்  தொலைபேசியில் அழைத்து பத்திரிகையாளர் கூட்டத்தில் கலைஞர் இவ்வாறு மத்திய அரசு சுற்றறிக்கையைக் காட்டிப் பேசியிருக்கிறார். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? வைகோ எங்கே இருக்கிறார்? என்றும் கேட்டார். அதிர்ச்சியான அந்த செய்தியைக் கேட்டவுடன்

நான் உடனே வைகோவிற்கு போன் செய்தேன். Y block-அண்ணாநகர் 6214252
என்ற அந்த எண் இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறது. 75159 அது என் லேண்ட்லைன் ‘தம்பி’பிரபாகரன் பயன் படுத்துவர். என் இன்றும் நினைவில் இருக்கிறது. 

அந்தத் தருணத்தில் வைகோவுடன் நான் பேசும்போது “இது மாதிரி கலைஞர் மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கையை வைத்து பத்திரிகையாளர்களிடம்  உங்களைப் பற்றிப் பேசி உள்ளார் அதை PTI ராமசாமி எனக்குக் கன்வே செய்தார்” என்றும் சொன்னேன்.
அப்போது வைகோ காரைக்குடியிலோ 
 அல்லது ராமநாதபுரத்திலோ ஒரு திருமணவிழாவில் கலந்து விட்டு திரும்ப இருக்கையில் அங்கு அவர் தங்கி இருந்து விடுதியின்  வாஷ்பேஷன் தவறி உடைந்து  வைகோவின் கால் மீது விழுந்து காயம் ஆகிவிட்டது. காலில் கட்டுப்போட்டுச் சிகிச்சையில் இருந்தார் வைகோ!

அவர் தொலைபேசியில் “உடனே இங்கே புறப்பட்டு வாருங்கள்” என்று என்னை அழைத்தார். நானும்  புறப்பட்டு அங்கு சென்றேன்.
அவர் என்ன சொன்னார் என்று சரியாக விசாரித்துச் சொல்லுங்கள் என்று என்னிடம் வைகோ கேட்டுக் கொண்டார். நான் பத்திரிகையாளர் பகவான் சிங் போன்ற சிலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரிடமே பேச வைத்து  கலைஞர் சொன்னதை உறுதி செய்தேன்.

அதைக் கேட்ட வைகோ உடனே நாம் இதற்கு மாறாக ஒரு அறிக்கை தயார் செய்ய வேண்டும் என்று மனச்சங்கடத்துடன்சொல்கிறார்.
அந்த அறிக்கையை டைப் செய்ய உதவியாளர்கள் யாரும் கூட அவர் பக்கத்தில் இல்லை.  அவர் அக்காலத்தில் அண்ணாநகர் வாடகை வீட்டில் தான் குடியிருந்தார்.
உடனே நாங்கள் இருவரும் அங்கு வைத்து ஒரு  அறிக்கையைத் தயார் செய்தோம். இது குறித்து தொலைபேசியில் வைகோ வீரபாண்டி ஆறுமுகத்திடம் பேசினார். பொன் முத்துராமலிங்கத்திடமும் தொடர்ந்து பிறகு கண்ணப்பனிடமும் பேசினார்.
இப்படித்தான் அந்த பேச்சுவார்த்தை முதல் கட்டமாக நடந்து கொண்டிருந்தது. பொன் முத்துராமலிங்கம் உடனே புறப்பட்டு மறுநாள் வந்து விட்டார். வீரபாண்டி ஆறுமுகம் அன்று சேலத்தில் இருந்தார். சென்னையில் அவரது தி நகர் இல்லத்தில் மறுநாள் சென்று அவரைச் சந்தித்தோம்.

அதற்குப் பிறகுதான் கண்ணப்பன், எல். கணேசன், செஞ்சிராமச்சந்திரன் மதுராந்தகம் ஆறுமுகம் போன்றோர்கள் எல்லோரும் கூடிச் சந்தித்து இந்த சுற்றறிக்கை பற்றி  பேச்சுவார்த்தை நடத்திக் போது மிக அவசரமாக திமுகவை விட்டு வைகோ நீக்கப்பட்டார்.

அதன் தொடர் விளைவாக வைகோவிற்கு அநீதி நடந்து விட்டது கலைஞர் தன் குடும்ப அரசியலுக்காக வைகோவை வெளியேற்றி அவமானப்படுத்தி விட்டார் என்று பெரும் பரபரப்பாகி அதை எதிர்த்து நீதி கேட்டு 
அன்று தமிழ்நாட்டில் தீக்குளித்தார்கள். வைகோவை கட்சியில் இருந்து நீக்க எதிர்ப்பு தெரிவித்து நொச்சிபட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை பாலன், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை மேலப்பாளையம் ஜஹாங்கீர் ஆகியோர் தீக்குளித்து மாண்டனர். திமுகவின் 9 மாவட்டச் செயலாளர்களும், 400-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும் வைகோவுக்கு ஆதரவாகக் கிளம்ப வைகோவுடன் சேர்த்து, அவர்களையும் திமுக தலைமை நீக்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதன் அடியில் தமிழ்நாட்டு அரசியலே அன்று பெரும் குழப்பமாகி  விட்டது.

இதை  எதற்குச் சொல்கிறேன் எனில் கட்சிப் பொருளாளராக இருந்த
எம்ஜிஆரை அவர் கணக்குக் கேட்டதால்  திமுகவை விட்டு அதன் செயற்குழு நீக்கிய போது அவருக்கு நாடெங்கும் ஏராளமான ரசிகர் மன்றங்கள் இருந்தபடியால் அவை பெருமளவில் எம் ஜி ஆர்   தொடங்கிய அதிமுகவிற்கு பின்னால் ஆதரவாகச் சென்று விட்டன.

அதுபோல அல்லாமல் கலைஞருக்கும் வைகோவுக்கும் இடையில் நடந்த இந்த முரண்பாட்டை கம்யூனிஸ்ட் கட்சியினர் வை கோவிற்கு ஆதரவானதொரு நிலை எடுத்து    டெல்லி பொலிட் பீரோ மூலம் 
இது “திமுகவில் நிகழ்ந்த ஒரு செங்குத்து பிளவு “என்று   வர்ணித்தார்கள்.ஹரிகிஷன் சுர்ஜித் சிங்
அன்றைக்கு சி.பி.எம் கட்சியின் தலைவராக இருந்தார். இதைக் கேட்பவர்களுக்கு வரலாற்றுக் கவனம் வேண்டும் என்பதற்காகத் தான் சொல்கிறேன்

மேற்கண்ட ஆறு பேர் தீக்குளிப்பிற்குப் பிறகு பரபரப்பில் தமிழகமே  இருந்த பொழுது அதற்கு முன்பாகக் குமரி மாவட்ட திமுகச் செயலாளர் ரத்தினராஜ், நெல்லை மாவட்ட செயலாளர்   டி எ கே லக்குமணன், தேனியை உள்ளடக்கிய மதுரை மாவட்டச் செயலாளர் பொன் முத்துராமலிங்கம் ,திருச்சி மாவட்டச் செயலாளர் செல்வராஜ், இவரும் முன்னாள் அமைச்சர் தான்! பிறகும் கீழ் தஞ்சை மாவட்டச் செயலாளர் வேதாரண்யம் மீனாட்சி சுந்தரம், 
ஒன்றுபட்ட தென்னர்காடு மாவட்டச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன், 
திருப்பூர் உள்ளடங்கிய அன்றைய கோவை மாவட்டச் செயலாளர் கண்ணப்பன், ஈரோடு மாவட்டச் செயலாளர் கணேசமூர்த்தி ,உட்பட அனைவரும் வைகோவுக்கு ஆதரவாகத் திமுகவிலிருந்து விலகி வந்தார்கள்.

சேலம் வீரபாண்டி ஆறுமுகம் அவர்கள் முதல் மூன்று நாள் வைகோவுக்கு ஆதரவாக இருந்துவிட்டு மீண்டும் திமுகவிற்குத்  திரும்பிக்  கலைஞரைச் சந்திக்கப் போய்விட்டார்.

இப்படித்தான்  திமுகவை விட்டுப் பிரிந்து தனித்து வைகோ தலைமையில் ஆன மதிமுக உருவானது. சென்னையை பொருத்தவரை துறைமுகம்
 அ. செல்வராசன் எம் எல் ஏ வும் வைகோ உடன் வந்து சேர்ந்தார். திமுக இரண்டு எம் எல் ஏகளில் பரிதி இளவழுதி திமுகவில் இருந்து விட்டார். அப்போது தினகரன் கே பி கே, மதுராந்தகம் ஆறுமுகம் கூட அப்போது மதிமுகவிற்குள் வரவில்லை .பிறகுதான் வந்தார்கள்.

துறைமுகம் அ. செல்வராஜுடன் எப்போதும் உடன் இருந்தவர்தான் அன்றைக்கு கொலையுண்டு போன ராயபுரம் ஏழுமலை. அவரும்    மதிமுகவிற்குள் வந்தவுடன்  சென்னை மாவட்டத்தின் செயலாளராக ஆனார்.

மூன்று நாட்கள் நாங்கள் மதிமுக கட்சியை எப்படிச் சீரமைப்பது என்று திருவேற்காடு கோவிந்தசாமி அவர்கள் வீட்டில் வைத்து இரவு பகல் பாராது அதற்கான திட்டங்களை அதற்கான கொள்கையை வகுப்பதில் ஈடுபட்டோம் .யார் யாருக்கு எந்தெந்தப்  என்னென்ன பொறுப்புகளை யார் செய்வது என்ற வகையில் கட்சியின் உள்கட்டமைப்பைச் செம்மையாக உருவாக்குவது என்று கலந்து பேசி விவாதித்தோம்.
 
அதன் தொடர்ச்சியில் அடுத்த கட்டத் தலைவராக வரவேண்டிய  வைகோவைத் திமுகவை விட்டு  நீக்கியதற்கான நீதி கேட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் இரவு பகல் பாராது விடிய விடிய பல கூட்டங்களை நடத்தினோம். ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும் அதிகாலை 5 மணி அளவில் தான் வைகோ பேசுவார். கூட்டம் என்றால் அப்படி ஒரு கூட்டம் எங்கு சென்றாலும் எங்கு மேடை போட்டுப் பேசினாலும் மக்கள் அலை அலையாய் வந்து அமர்ந்து பங்கெடுத்தார்கள். 

பிறகு என்ன நடந்தது எனில் சென்னை சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்தில் இருந்து  நீதி கேட்பு பேரணியாகத் தொடங்கி பழைய அடையாறு கேட் ஹோட்டல் வழியாக ஆழ்வார்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலை கடற்கரைச் சாலை வழியாக சீரணி அரங்கில் மக்கள் திரல் கூட்டம் நடந்தது. அங்கு இந்த பேரணி மதிமுக மாநாட்டு மேடையை அடைவது என்று நானும் ஏழுமலை இருவரும் திட்டமிட்டு 
அதற்கான அனுமதிகளை அன்றைக்குக் சென்னை மாநகர காவல்துறையிடம் அனுமதியாக வாங்கினோம். அன்றைக்கு ஜெயலலிதா முதலமைச்சர்.  ஒரு வரலாறு காணாத ஊர்வலம்!! எங்கு பார்த்தாலும் மக்கள் அணி அணியாய் வந்து சேர்ந்தார்கள்!!! அப்படி ஒரு கூட்டத்தை நான் சென்னையில் அதற்குப் முன்னும் பிறகும் பார்க்கவில்லை. தாம்பரத்தைத் தாண்டிச் செங்கல்பட்டு வரையில் பேரணிக்கான வாகனங்கள் வழிநெடுகக்  காத்து நின்றிருந்தன. ஏறக்குறைய பதினெட்டு மணி நேரம் மக்கள் ஊர்வலம் மெல்ல நடந்து நகர்ந்து சீரணிக் கடற்கரையை அடைந்தது. அந்தக்கடற்கரை அரங்கத்திற்கு  தொடர்ந்த இந்த ஊர்வலத்தின் கடைசி வண்டி வந்து சேரும்போது காலை 5 மணி. 
அவ்வளவு சிறப்பாக நடந்த ஒரு பிரம்மாண்டமான பேரணி அது.

சீரணிக் கடற்கரை  மாநாட்டு மேடையில் காலை ஐந்து மணியளவில் வைகோ தனது பேச்சைத் தொடங்கினார். வங்கக் கடலில் கதிரவன் உதித்து செம்பிழம்பாகத் தோன்றியது. அந்தக் காலையில் நடை பயிற்சி செய்பவர்கள் கூட  பாதைகளைப்பயன்படுத்த முடியாத அளவிற்கு ஏகப்பட்ட மக்கள் குழுமிய பேரணியாக அது இருந்தது……2 நாளை தொடரும்.

#சார்பட்டா_இராயபுரம்ஏழுமலை_நள்ளிரவுகொலை
#மதிமுக
#mdmk

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
7-7-2024.

No comments:

Post a Comment

அன்று துபாய் முதலீடு ஈர்ப்பு..

 அன்று துபாய் முதலீடு ஈர்ப்பு.. அப்புறம் சிங்கப்பூர் முதலீடு ஈர்ப்பு.... பின் ஜப்பான், இப்போது அமெரிக்கா முதலீடு ஈர்ப்பு  கார் ரேஸ் என….. ஆன...