நண்பர் #விக்கிரமபாகுகொழும்பில்காலமானார்.
———————————————————-
வெகுகாலமாகத்தொடர்ந்து வரும் இலங்கையில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக இருந்த ஒரே ஒரு சிங்கள அரசியலாளர், நண்பர் விக்கிரமபாகு கனகரத்தினே Vikramabahu Karunaratne இன்று கொழும்பில் காலமானார்.ஆழ்ந்த இரங்கல்.
விக்ரமபாகு நன்கு படித்த பண்பாளர்! கொழும்பிற்குச் சென்றால் அவரைச் சந்திப்பதுண்டு.
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின் கலைஞர் என்னை அழைத்துக் கட்சியில் சேர்த்து டெசோவின் இரண்டாவது மாநாட்டைப் புதுப்பிக்கும்படிச் சொன்னார்.அப்போது அந்த மாநாட்டிற்கு விக்கிரமபாகு அவர்களை அழைத்த போது அவர் மறுப்பேதும் சொல்லாமல் தைரியமாக வந்திருந்து அதில் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் ஈழத் தமிழருக்கு தமிழக மக்கள் அளித்த ஆதரவையும் பாராட்டிப் பேசினார்.அவர், இலங்கைக்கு திரும்பும் போது டெசோ மாநாட்டில் கலந்து கொண்டதற்காகக் கட்டு நாயக விமான நிலையத்தில் வைத்து இவரைத் தாக்குவதற்கு சிங்களர்கள் காத்து இருந்தார்கள்.
அவற்றையெல்லாம் மீறி இலங்கை அரசியலில் தான் கொண்ட கொள்கைக்கும் நியாயங்களுக்கும் இறுதிவரை மன உறுதியுடன் தமிழருக்கு பாடுபட்டவர் என்பது என் வரையில் மட்டுமல்ல தமிழர் நலனிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. 55 ஆண்டு காலமாக இலங்கை அரசியல் களத்தில் தமிழருக்கான நல்லுறவுப் பாலமாகத் திகழ்ந்தவர்.
சிங்களர்களின் மனச்சான்றினைத் தட்டிப் பார்ப்பவர். நியாயபூர்வமான கருத்துக்கள் மற்றும் தனது தீவிரமான அரசியல் செயல்பாடுகளால் சிங்கள அதிபர்களுக்கு நீண்டகால அச்சுறுத்தலாக இருந்தவர். அப்படிப்பட்டவர் இன்று இறந்திருக்கிறார்.
இன்று திமுகவில் இருக்கிற யாருக்காவது இவரை தெரியுமா என்றால் அப்படியா? இவர் யார் என நம்மிடமே விசாரிக்கத் தொடங்கி விடுவார்கள் !
வரலாற்றை மட்டுமல்ல அவர்களது சுயநலமானது அனைத்தையும் மூடி மறைப்பதால் அவர்கள் மகத்தான அறம் சார்ந்த மனிதர்களையும் மறந்து போகிறார்கள்.
போகட்டும் இலங்கை மண்ணில் விக்கிரமபாகு அவர்களின் சிந்தனைகள் தொடர்ந்து அரசியல் களத்தில் உரையாடலாகப் பேசப்படும்!!
அதுவே அவர் விட்டுச் சென்றிருக்கும் அறம்.
No comments:
Post a Comment