Monday, August 12, 2024

#மாஞ்சோலை பிரச்சனை…

 #மாஞ்சோலை பிரச்சனை…

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நிலை.

_________________________




மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சுமார் 75,000 ஏக்கர் பரப்பளவு காடுகளில் 12.02.1929 அன்று, சிங்கம்பட்டி ஜமீன்தாருக்குச் சொந்தமான மாஞ்சோலையில் 8373.57 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டு குத்தகைக்கு வாங்கியது மும்பையைச் சேர்ந்த பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (பி.பி.டி.சி) நிறுவனம். ஜமீன் நிலங்கள் அரசுடைமையாக்கப்பட்ட பிறகு, அரசாங்கத்துடன் ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொண்டு தற்போது வரையிலும் தேயிலைத் தோட்டத்தை நடத்தி வருகிறது அந்த நிறுவனம். இந்தக் குத்தகை 2028ஆம் ஆண்டில் முடிவடைகிறது.

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையானது  மிக பெரும் போராட்டமாகவே இருந்து வருகிறது. 1999ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23 ஆம் தேதி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்  புதிய தமிழக தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் கூலி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் சென்ற போது காவல்துறை நடத்திய தடியடி காரணமாகவும், அதிலிருந்து தப்பிக்க தாமிரபரணி ஆற்றில் குதித்ததாலும் 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 25ஆண்டுகள் கடந்து விட்டன. இப்போது வேறு வகையான பிரச்சனை உருவாகியுள்ளது.

99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்த தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசன் பி லிமிடெட் என்னும் தனியார் நிறுவனம், தேயிலை தோட்டங்களில்  கூலி வேலை  செய்து வரும் 700க்கு மேற்பட்ட மாஞ்சோலை தொழிலாளர் குடும்பங்களை தற்போது அந்த நிறுவனம்  கட்டாயப்படுத்தி வெளியேற்றுகிறது.. இதனால் மாஞ்சோலை மக்கள் பெரும் துயரத்துக்கு உள்ளாகியுள்ளனர்

குத்தகைக் காலம் முடிவதற்கு முன்பாகவே நிறுவனம்  தங்களுடைய பணியை நிறுத்திக் கொள்வதாக தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்களுடைய நலனுக்காக விருப்ப ஓய்வு பெற்றுக் கொள்ளலாம் என இதற்கான நோட்டீஸ் வாயிலாக வெளியிட்டுள்ளது. மேலும், அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையிலும் அந்தத் தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் இருந்து ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு முன்னதாக தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மக்களின் இந்த வாழ்வாதார பிரச்சனைக்கு தமிழக அரசு மௌனம் சாதிக்காமல் உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.

திருநெல்வேவலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் அமைந்துள்ள மாஞ்சோலை,

காக்காச்சி, நாலு முக்கு, ஊத்து, மற்றும் குதிரை வெட்டி ஆகிய தேயிலைதோட்டங்களில் கடந்த 96 ஆண்டுகளாக நான்கு தலைமுறையாக வாழ்ந்து வரும் இக்குடும்பங்களின் வீடுகள், வாழ்வாதாரங்கள் மற்றும் அடையாளங்கள் யாவற்றையும் இழக்கும் மோசமான சூழ்நிலைக்கு  மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

எஸ்டேட் பகுதிகளில் ஒன்றிய அரசின் தபால் அலுவலகம், தொலைத் தொடர்பு கருவி அலுவலகம், காவல் நிலையம், தமிழக அரசின் குடிமைப் பொருள் வழங்கல் அலுவலகங்கள், அரசு உயர்நிலைப்பள்ளி, அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், எஸ்டேட் நிர்வாகத்திற்குப் பாத்தியப்பட்ட தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகள், தேயிலைத் தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள், 

இந்து, கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மத வழிபாட்டுத்தலங்கள், வனத்துறை விடுதி மற்றும் சிங்கவால் குரங்கு கண்காணிப்பு கட்டடம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் குடியிருப்புகள் உள்ளன.

எஸ்டேட் பகுதியில் இறந்துபோன பலரது கல்லறைகளும், எஸ்டேட் பகுதியிலேயே அமைந்துள்ளது. சுமார் 8000 நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் பணிபுரிந்த எஸ்டேட் பகுதியில் தற்போது 1000 க்கும் குறைவான தோட்டத் தொழிலாளர்களே பணிபுரிந்து அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் சுமார் 2000 பேர் அங்கு வசித்து வருகின்றனர். அதேபோல சுமார் 700 குடிமைப் பொருள் வழங்கல் அட்டைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. தேயிலைத்தோட்டப் பகுதிகளில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில்  குழந்தைகள் தற்போதும் படித்து வருகின்றனர்.

விருப்ப ஓய்வு பெற்று  07.08.2024க்குள் எஸ்டேட்டில் இருந்து எல்லோரும் வெளியேற வேண்டும் என கம்பெனி அறிவித்துள்ளது. இத மனித உரிமை மீறல். ஆகும் .மக்கள் அங்கிருந்து வேறு இடம் செல்வதற்கு  எதுவுமில்லாத நிலையில் இன்னமும் எஸ்டேட் பகுதியிலேயே தொடர்ந்து தங்கி இருக்கிறார்கள். அவர்கள் அங்கிருந்து வெளியற்றப்பட்டால், எங்கு போய் வாழ்வது என தெரியாமல் இருக்கிறார்கள். பிழைக்க வேறு வேலையோ, வேறு ஊரோ இல்லாத நிலையில், தமிழ்நாட்டிற்குள் அகதியாக வாழும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மாஞ்சோலை, காக்காச்சி, நாலு முக்கு, ஊத்து, மற்றும் குதிரை வெட்டி ஆகிய தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ள பகுதிகளை தமிழக அரசு தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்கழகம் (டான் டீ)ன் கீழ் கொண்டு வந்து இங்குள்ள தேயிலை  தோட்ட தொழிலாளராகளின் வாழ்வாதார உரிமையை  உடனடியாக உறுதி செய்யவேண்டும்.

No comments:

Post a Comment

2023-2024