Thursday, October 15, 2026

Oct 19, 2025 விஜயநகரப் பேரரசின் நாயக்கர் காலத்தில் தான் தமிழகத்தில் தீபாவளி புகுத்தப்பட்டது என்று இங்கு சிலர் சொல்கிறார்கள்.

 விஜயநகரப் பேரரசின் நாயக்கர் காலத்தில் தான் தமிழகத்தில் தீபாவளி புகுத்தப்பட்டது என்று இங்கு சிலர் சொல்கிறார்கள். அதனால் என்ன? அதில் குறை ஏதும் இருக்கும் பட்சத்தில் அல்லதுஉங்களுக்குப் பிடிக்காத பட்சத்தில் நீங்கள் கொண்டாட வேண்டியதில்லை ஆனால் உண்மையிலேயே அதை ஈடுபாட்டோடு மகிழ்ச்சியுடனும் குழந்தைகளோடு கொண்டாடி மகிழ்பவர்கள் மீது பரிகாசம் செய்ய உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.

பல்வேறு நம்பிக்கையை கொண்ட இந்திய மனித வாழ்க்கைகளுக்கு இடையே தீபாவளி போன்ற திருவிழாக்களை மக்கள் தங்களுடைய அன்றாட கடமையிலிருந்து ஒரு ஓய்வு நாளாகக் கருதுகிறார்கள்.அன்றைக்கு கடவுளையோ அல்லது அவர்கள் நம்பிக்கைகளையோ மீட்டெடுத்துப் புத்தாடைகள் அணிந்து நல்ல பலகாரங்கள் உணவுகளை உண்டு தாய் தந்தை சகோதர உறவுகளோடும் சுற்றத்தினரோடும் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடுகிற போது அக்கம் பக்க உறவுகள் எல்லோரிடமும் ஒரு விதமான மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் தெரிவித்துக் கொண்டு நிறைவை எய்துகிறார்கள். இது மாதிரியான திருவிழாக்கள் எல்லாம் மக்களின் திருவிழாக்கள் தான். மக்களின் மன மகிழ்ச்சிக்காகக் கொண்டாடப்படுபவை! அதை ஒட்டி அதிக வணிக வியாபாரங்கள் பலருக்கும் அதில் நன்மைகள் கிடைக்கின்றன.கூட்டாகச் செலவழிக்கும் போது பண்டப் பரிவர்த்தனைகள் நடப்பதால் தீபாவளி இந்தியா முழுக்க வெவ்வேறு தன்மையில் கொண்டாடப்படுகிறது.ஆகவே பகுத்தறிவுவாதிகள் தங்கள் தலைவர்களைக் கொண்டாடுகிற போது அல்லது தங்களது கட்சி மாநாடுகளை கொண்டாடுகிற போது என்னென்ன செய்வீர்களோ அதையே தான் இறை நம்பிக்கை உள்ள மக்கள் தங்கள் வாழ்க்கையில் செய்கிறார்கள். ஆகவே பரிகாசம் செய்வதை விட்டுவிட்டு அவர்களுக்குப் பாதுகாப்பையும் அவர்களுக்கான அந்த மன மகிழ்ச்சிக்கான எந்தத் தடைகளையும் ஏற்படுத்தா வண்ணம் அவர்களுக்கான சுதந்திரத்தை தர வேண்டியது தான் ஒரு அரசியல் பொறுப்பு என்று அறிந்து கொள்ள வேண்டும். மூடநம்பிக்கை என்று அவர்கள் மனதை துன்புறுத்துவதை விட்டு விட வேண்டும். எத்தனை அரசியல் மூடநம்பிக்கைகள் இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியாதா? எல்லாப் பண்டிகைகளும் மக்களின் பொருட்டே! #தீபாவளி #Diwali

No comments:

Post a Comment

Oct 10, 2025