Tuesday, January 16, 2024

மாட்டுப்பொங்கல், #திருவள்ளுவர் தினம்

இன்று;

#மாட்டுப்பொங்கல், 
#திருவள்ளுவர் தினம்

மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.
உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துக் கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.

ஆண்டு முழுவதும் தங்களின் உழவுத் தொழிலுக்கு துணையாக நின்ற மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப் பொங்கல் தினத்தில் மாடுகளை மரியாதை செய்பவர்கள் ...

அதை மாட்டுப் பொங்கல் தினத்தில் மாட்டு கறி பிரியாணி என படைப்பது முரன்.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கேற்ப, உலகம் முழுவதும் எக்காலத்துக்கும் பொருந்தும்படியான திருக்குறளை வழங்கிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் தினம்


Monday, January 15, 2024

பொங்கல் திருநாள் (3)

#பொங்கல்நல்வாழ்த்துக்கள்.
———————————————————
                             (3)

மார்கழிப் பனிவிலக மண்ணெல்லாம் ஒளி படர  சீர்கொழிக்கும் தைப்பாவை சிரித்தபடி வருகின்றாள்!  
பேர் சிறக்க வாழ்ந்திடுக! பெருமை எல்லாம் பெற்றிடுக!

#பொழி_கட்டுதல் 
அதிகாலை விடியலில்,ஆவாரம்பூ- கன்னிப் பிளை பூ,வேப்பிலை எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து வீட்டின் கதவு ஜன்னல்கள் என்று வீட்டைச் சுற்றிலும் பொழி(காப்பு)கட்டுதல் கட்டும் பழக்கம் எங்கள் கரிசல்  மண்   பக்கம் உண்டு. காடுகளிலும்,  தோட்டத்திலும் கட்டுத்தரையிலும்,  மோட்டார் பம்பு ஷெட்களிலும் கோழிகூப்பிடும் போதே பொழி  கட்டுவாங்க.  இது கிருமிகளிடமிருந்து  நம்மை காக்கும்.




தமிழர்கள் அதிகம் குளிர் தாங்குவதில்லை.
முன் மற்றும் பின்  பனிக்காலங்களில்,
கார்த்திகை -மார்கழியில் குளிரில் முடங்கிக்கிடந்தவர்கள் தையில் வந்த வெயிலை" பொங்கலோ பொங்கல் " என ஆரவாரமாக  வரவேற்கிறார்கள். 
 சூரிய வெயில் என்பது ஒவ்வொரு தனிமனித வாழ்வியலோடு பின்னிப்  பிணைந்தது..  கதிரவனோடு சேர்த்து உழவுக்கு சுவாசமான விலங்குகளையும் ஒரு சேர மதிக்கும்  தை பொங்கல் பண்டிகை.

திருவளர்வாழ்க்கை,கீர்த்தி ,தீரம்,நல்லறிவு,    வீரம்,   மருவுபல் கலையின் சோதி,வல்லமை,யென்ப வெல்லாம்
வருவது ஞானத்தாலே வையக முழுது மெங்கள்பெருமைதா னிலவி நிற்கப் பிறந்தது ஞானபாநு.
 
கவலைகள்,சிறுமை,நோவு,கைதவம்,வறுமைத்துன்பம்அவலமா மனைத்தைக்
காட்டில் அவலமாம் புலைமையச்சம்,
இவையெலாம்  அறிவிலாமை என்பதோர்இருளிற் பேயாம்,
நவமுறு ஞானபாநு நண்ணுக:தொலைக பேய்கள்.
- பாரதி

தை மாச மதிய வெயிலில் மணல் தெரிய தெளிந்தோடும் காவிரி….
தை நினைவுகள்…..
- குபராவின் எழுத்து….
*****
தை பிறப்பு உண்மையிலேயே உயிரின் பிறப்பு. அதனால்தான் அது பிறக்கும்  நாள் நமக்கு அவ்வளவு அழகான நாள். தெருக்களெல்லாம் கோலம், திண்ணைகளெல்லாம் சுண்ணாம்பு, செம்மண், சுவர்களெல்லாம் வெள்ளை, வீடுகள் மேலெல்லாம் வெள்ளை வெய்யில், வயல்களிலெல்லாம் கதிர் – கிராமத்தில்தான் தை பிறந்த வனப்பு தெருத் தெருவாகத் தோன்றும்.

கதிர் அறுவடை,  கரும்பு அறுவடை, மஞ்சள் இஞ்சி பூரண கர்ப்பத்திலிருந்து பொன்மேனியுடன் வெளிப்படும் காலம். நீரும் நிலமும் கலந்து கலவி புரிந்து பெரும் பேறு - இவையெல்லாம். தை மாதம் இயற்கையின் பேறுகாலம். குடியானவனும் மாடும் மருத்துவம் செய்கிறவர்கள்.

குடியானவனும் மாடும் இல்லாவிட்டால் என்ன இருக்கிறது? அவர்கள் தை பிறப்பில் தலை நிமிர்கிறார்கள். அவர்கள் பட்டபாடு கதிர்வாங்கிப் பழுத்து தலை சாய்ந்து நிற்கிறது.

பொங்கல் அவர்களுக்குத்தான். பொன்  போலப்  புதுவெயிலில் மின்னும் கதிர்கள் அவர்களுடைய உள்ளம் பொங்கி நிற்கும் நிலையில் தென்படுகின்றன. அவர்கள் வயிற்றில் பால் - புதுப்பானையின்  பாலுடன்! ஆறு மாதங்கள் ஆடியோடி உழைத்த  உழைப்பிற்கு தையில் பலன் - தை பிறக்கும் நாள் தூயநாள்  தான்.

அந்தத் திருநாளில் மக்கள் புத்துயிர் பெறுகிறார்கள் என்பது உண்மை. செந்நெல்லும் கரும்பும் உள்ளே வந்து தித்தித்திப்பைத் தருகின்றன. உழைப்புக்குப் பிறகு இன்பம் - உழைப்பின்றி உயிர் வாழ முடியாது என்ற தேர்ச்சி உணவாகச் சமைந்து விடுகிறது.

பட்டணவாசிகள் தை பிறப்பை கொண்டாடுவதில் பொருளில்லை. குடியானவன்தான் அதைக் கொண்டாட வேண்டியவன். அவனுக்குத்தான் அந்த உரிமையுண்டு; அவன் போடும் சோறு நாம் உண்பது; அவன் கை  உழைப்பைக்  நாம் உண்டு களிக்கிறோம்; அவன் பெறுவது வாரம் ; நாம் பெறுவது மேல் வாரம். நிலம்  நம்முடையது !

நிலம் எப்படி நம்முடையதாயிற்று ? அவன் ஏன்  அந்த நிலத்தை இழந்தான்! அது வேறு கதை.

நிலத்தை இழந்தான் குடியானவன்; நிலம் அவனை இழக்க முடியாது. குடியானவனும் மாடும் மிதித்த பூமிதான் விளையும். அவன் கால் பட்ட இடம் கதிர்; கைப்பட்ட இடம் கரும்பு; ஏர் பிடித்த இடம் களஞ்சியம்; வாய்க்கால் பிடித்த இடம் வளப்பம்; குடியான மகளிர் குளித்த இடம் நாற்றங்கால்; நிமிர்ந்த இடம் நெஞ்சுக்கதிர்; நடக்குமிடம் நவ தானியம்; இந்த வளப்பத்தில் வாழ்ந்தும் வாடுகிறார்கள்.

ஆனால் அதுதான் இயற்கை விதியோ? தேன் சேகரித்த தேனீக்களா அதை அனுபவிக்கின்றன? பொருள் சேகரிப்பவனா பொருளை அனுபவிக்கிறான்? ஈட்டுகிறவன் அனுபவிக்க மாட்டான் என்பது சாபம் போலிருக்கிறது.

நினைவு எப்படிப் போகிறது! பொங்கலிலிருந்து 
பொருளாதாரத்திற்கு வந்துவிட்டேன்!

பொங்கலன்று புதுநினைவு வர வேண்டும்; புது நினைவு புதுவாழ்வு கொடுக்க வேண்டும். தொண்டைக் கதிர் கிளம்பி வெளியே வருவது போல் நமது நல்லெண்ணம் வெளியாகட்டும்! பழுத்தப்பயிர் தலை சாய்வது போல் நமது உள்ளம், கனிந்து படியட்டும்.

•••

மகர சங்கராந்தி என்பது இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை

  கால வர்த்தமானத்தின்படி இப்பண்டிகை சூரியன் மகர ராசிக்கு மாறுவதைக் குறிக்கிறது (அதாவது ஹிந்தியில் 'மகர்'). இந்தியா முழுக்க குறிப்பாக வட மாநிலங்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் இந்த சங்கராந்திப் பண்டிகை இந்து மரபுகளில் தன் ஆதி வேர்களைக் கொண்டுள்ளது . அந்த வகையில் பல நூற்றாண்டுகளாக இந்தியா முழுவதும் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்படியான விழாக்கள் தொடர்ந்து ஒரு பிராந்தியத்தில் நடத்தப்பட்டு வருவதன் மூலமாகத்தான் அந்த நாட்டு மக்களின் பண்பாடு கலாச்சாரம் போன்றவை எதன் அடிப்படையில் இணைந்து ஒற்றுமை கொள்கின்றன என்பதை பார்க்க முடியும்.

  அடிப்படையில் மனித குல ஒற்றுமை அதன் வரலாற்று வேர்கள், கலாச்சார முக்கியத்துவம்  விவசாயத்தின் தாத்பரியம் அது சார்ந்த குடிமை வாழ்வு யாவும் இணைந்து மார்கழிக்கும் தைக்கும் இணையான இப்பனிக்காலக் கொண்டாட்டம் இந்தியா முழுக்க மேய்ச்சல் நிலங்களில் நிகழ்வது எவ்வளவு முக்கியமானது.

மகர சங்கராந்தி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது, ஆனால் இந்த முறை அது ஜனவரி 15, 2024 அன்று கொண்டாடப்படும் முறையில் அமைந்துள்ளது.
2024ல் மகர சங்கராந்தி
த்ரிக் பஞ்சாங்கத்தின்படி, இந்த ஆண்டு ஜனவரி 15, 2024 (திங்கட்கிழமை) அன்று. த்ரிக் பஞ்சாங்கம் கூறியுள்ளபடி, நாளின் மங்களகரமான நேரம் இப்படியாக குறிப்பிடப்பட்டிருக்கிறது
"மகர சங்கராந்தி சிறப்பான மங்களகரமான நேரம் - 07:15 முதல் 17:46 வரை
கால அளவு - 10 மணி 31 நிமிடங்கள்
மகர சங்கராந்தி காலை - 07:15 முதல் 09:00 வரை
கால அளவு - 01 மணி 45 நிமிடங்கள்.

 இந்துக்களின் இத்தகைய சிறப்புமிக்க சங்கராந்திப் பண்டிகை நம் தமிழகத்தில் தைப்பொங்கல் என்கிற பெயரில் வருடம் தோறும் வீட்டிற்கு வர்ணம் அடித்து வாசல் தெளித்து மாக்கோலம் இட்டுபுத்தாடைகள் உடுத்தி புது பொலிவுடன் பச்சரிசி வெல்லம் நெய் சேர்த்து பொங்கலோ!!  பொங்கல்!! எனக் குலவையிட்டு முன்னோரும் சின்னஞ்சிறாரும்  வாழ்த்திப் பாடி நிலத்தை வணங்கும்  விழாதான் இன்றைய தைப்பொங்கல் நாள்! தமிழகத்தின் வடக்கு பகுதிகளில் அல்லது கோவை பகுதிகளில் மகர சங்கராந்தி என்ற பெயரில் இரவிலே  கலவை சாதம் செய்து விடியல் வரை வழிபாடு செய்வது இன்றளவும் வழக்கமாய் இருக்கிறது.

 இந்திய நிலமெங்கும் வாழும் எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று சிறப்புடன் வாழ  இத்தைத்திருநாளில் மகிழ்ச்சி பொங்க வாழ்த்தி மகிழ்கிறேன்!!.
#pongal2024
#magarasankaranthi
#பொங்கல்

#ksrpost
15-1-2024.


#*வரலாற்றில் பொங்கல் விழா* (4)

#*வரலாற்றில் பொங்கல் விழா* [ Epigraphy - கல்வெட்டியல் பக்கத்தில் வெளியானப் பதிவுகளின் சுருக்கம் ]
-----------------------
பொங்கல் பண்டிகையை தைப்பொங்கல், உழவர் திருநாள், தமிழர் திருநாள், அறுவடை திருநாள், தைத்திருநாள் என்று பல பெயர்களில் அழைக்கிறோம்.
பண்பாட்டின் மக்கள் விழாவாகவே பொங்கல் ஒளிர்விட்டுப் பிரகாசிக்கிறது. தமிழகத்தில் வேளாண்மையின் வளர்ச்சியோடும் பேரரசுகளின் வளர்ச்சியோடும் மிகுந்த தொடர்புடைய தாகவே பொங்கல், தமிழ் மக்களின் பண்பாடாக மலர்ந்தது. பொங்கல் விழா காலப் போக்கில் பல வளர்ச்சிகளைக் கடந்து வந்துள்ளது. தமிழகம் முழுவதுமான விவசாயிகளின் ஒற்றுமையை வளமைப் பண்பாட்டை ஒரே சமயத்தில் வெளிப்படுத்தும் வகையில் பொங்கல் திருவிழா உருக் கொண்டது.

தமிழரின் வாழ்வோடும் வளத்தோடும் செழித்த உயரிய பண்பாட்டின் வெளிப்பாடே பொங்கல். எந்த மத வரையறைக்குள்ளும் அடங்காத வேளாண்மை வாழ்வின் உற்பத்தி சார்ந்த வளமைச் சடங்குகளின் தொகுப்பே பொங்கல்.

தமிழர்கள் உட்பட இந்திய உபகண்ட மக்களின் உணவுத் தேவைகளை நெல்லே அதிகம் பூர்த்தி செய்துள்ளது.
பெரும்பாலும் மழையை எதிர்பார்த்து இப்பயிர் செய்கையை ஆரம்பிப்பதால்.
நெல்லை, மக்கள் பெரும்போகத்தின் (மானாவாரி) போதே அதிகம் பயிருடுகின்றனர்.  இலங்கை மற்றும் தென்னிந்தியா வாழ் தமிழ் மக்கள் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்றின் மூலமே அதிக மழை வீழ்ச்சியைப் பெறுவதால் புரட்டாசி தொடங்கி மார்கழி வரையான மாரி காலத்தை உள்ளடக்கி நெல்லினைப் பயிருட்டு ஏறத்தாழ தை மாதத்தில் அறுவடை செய்து கொள்கின்றனர். அறுவடை செய்த தானியங்களை வைத்து, புதுப்பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றிசெலுத்தி, உறவுகளுக்கு உணவு பரிமாறி, பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுக்களை நடத்திக் கொண்டாடுகின்றனர்.

*சங்க இலக்கியத்தில் பொங்கல்* :-
•••
சங்க அரசனுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வரப்புயர என்கின்ற வார்த்தையைச் சொல்லி வாழ்த்தினார் அவ்வையார். வரப்புயர சொல் எப்படி அரசனுடைய உயர்வுக்கு காரணமாக இருக்கும் என்று புலவர்கள் கேட்க, முழுப்பாடலையும் சொன்னார். அது விவசாயத்தை முக்கியத்துவத்தையும் அதை காக்க வேண்டிய அரசாங்கத்தின் கடமையும் எடுத்துக்காட்டுவதாக அந்த பாடல் அமைந்தது.

“வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோன் உயரும்”

தை முதல் நாளை மையமாகக் கொண்டு, வேளாண்மை ஆண்டு தொடங்கப்பட்டு அறுவடைத் திருவிழா கொண்டாடப்பட்டது.

புறநானூற்றுப் பாடலிலும், பரிபாடலிலும் பொங்கல் விழா குறிப்பிடப்படுகிறது.
“ஏற்றுக உலையே! ஆக்குக சோறே'' (புறம் 172) எனும் புறநானூற்றுப் பாடலின் அடி, பொங்கல் விழாவின் தொடக்க கால நிலையை நினைவு கூர்கிறது.

இவ்வாறு சங்ககாலத்தில் தொடங்கிய பொங்கல் விழா, காலப் போக்கில் வழிபடு தெய்வங்களுக்குச் செய்யப்படும் சடங்குகளோடு இணையலாயிற்று. பொங்கலைச் செய்து தெய்வங்களுக்குப் படைக்கும் வழக்கமும் தோன்றியது. இதனை,
“புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து'' (சிலப். 5:68-69)
எனும் இளங்கோவடிகளின் வாக்கால் அறிகிறோம்.

இலங்கையில் 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சரஜதிமாலை என்ற தமிழ் நூலில் தை முதல் அறுவடைத் திருநாளாகவும், தைப்பூச நாளை நெய்யோடு புத்தரிசி பொங்கலைப் படைத்து வழிபாடு நடத்தும் நாளாகவும் குறிப்பிடுகிறார்கள். 15 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் பழைய மரபு மாறியிருக்கிறது. பொங்கல் என்ற பெயரே மிகவும் பிற்காலத்தில்தான் வந்திருக்கிறது.

*கல்வெட்டுகளில் பொங்கல் / சங்கராந்தி*
••••
கல்வெட்டு காட்டும் சங்கராந்தி
சங்கராந்தியைப் பற்றிய முதல் குறிப்பு சோழப் பேரரசர்களின் கல்வெட்டுகளில் தான் காணப்படுகிறது. தமிழ் இலக்கியத்தில் இப்பண்டிகையைப் பற்றிய குறிப்பு, கி.பி. பதினோராம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதாகவே கிடைத்து இருக்கிறது.

பேரரசன் இராஜராஜசோழனுடைய பாட்டன் அரிஞ்சய சோழன் (கி.பி. 956-7) ஆவான். அவனுடைய மனைவி வீமன் குந்தவை எனும் அரசி கல்யாணி, அரிஞ்சயனுக்குப் பிறகு நெடுங்காலம் வாழ்ந்ததாகத் தெரிகிறது. அரசி கல்யாணி பற்றி அறிந்து கொள்ள மூன்று கல்வெட்டுகள் உதவுகின்றன. மூன்றும் அரசி கல்யாணி வழங்கிய அறக்கட்டளைகளைத் தெரிவிக்கின்றன. கி.பி. 968-இல் (இராஜராஜன் தந்தையான சுந்தரசோழனின் ஆட்சிக் காலத்தில்) அவள் உடையார்குடியில் உள்ள சிவன் கோயிலுக்கு ஓர் அறக்கட்டளை வழங்கியுள்ளார். சங்கராந்தி அன்று, உடை யார்க்குடி சிவன் கோயிலில் உள்ள “திரு நந்தீசு வரத்துப் பரம சுவாமி''க்குத் திருமுழுக்கு ஆட்டுவதற்காக ஆயிரம் குடம் நீரினைக் கொண்டு வந்து கோயிலில் சேர்ப்பவருக்கு ஊதியம் அளிப்பதற்கு ஒன்றரை ‘மா’ நிலத்தை மானியமாக அக்கோயிலுக்கு அளித்துள்ளார்.

இதிலிருந்து கி.பி. பத்தாம் நூற்றாண்டு அளவில் சங்கராந்தித் திருநாள் தமிழகத்தின் கோயில்களில் கொண்டாடப்பட்ட செய்தி புலனாகின்றது.

கண்டராதித்த சோழரின் மனைவியான செம்பியன் மாதேவியார், தம் மகன் உத்தம சோழனுடைய ஆட்சிக் காலத்தில் (கி.பி. அளவில்) செம்பியன் மகாதேவி சதுர்வேத மங்கலத்தில் (நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள ஊர்,) “கைலாசமுடைய மகாதேவருக்கு'' ஒரு கற்கோயி லைச் செம்பியன் மாதேவியாரே கட்டினர்.
உத்தம சோழனுடைய இறுதி ஆட்சியாண்டில் அவனுடைய மனைவியருள் பட்டத்தரசியாக விளங்கியவவள். `உரட்டை சரஅபயன்' எனப்படும் திரிபுவன மாதேவி. அக்கோயிலுக்கு ஒரு நிவந்தம் அளித்துள்ளான். சங்கராந்தி நன்னாளில், கைலாசமுடைய மகாதேவருக்குத் திருமுழுக்கு (அபிஷேகம்) ஆட்டுவதற்கும், நந்தாவிளக்கு எரிப்பதற்கும், நூறு பிராமணர்களுக்குப் பொங்கல் சோறு அளிப்பதற்கும் தேவையான வருவாயை அளிக்கத் தக்க வகையில், நன்செய் நிலத்தை அக்கோயிலுக்கு அவ்வரசி தானமாகக் கொடுத்து இருக்கிறார்.

இக்கல்வெட்டின் வாசகத்தில் `உத்தராயண சங்கராந்தி' எனும் தொடரும், `பொங்கல் சோறு' எனும் தொடரும் வருகின்றன. சமயப் போர்வையில் `பொங்கல் விழா' கோயில்களில் கொண்டாடப்பட்டதற்கு இக்கல்வெட்டு சான்று பகருகிறது.

`உத்தராயண சங்கராந்தி' சிறப்பித்துப் பேசப்படுவதானால் மாதந்தோறும் `சங்கராந்தி' எனும் ஒருவகை விழா நடைபெற்றதை உய்த்துணரலாம். இதனைச் செம்பியன் மாதேவியினுடைய கல்வெட்டு ஒன்றும் தெரிவிக்கிறது.

இக்கல்வெட்டுச் சான்றுகளால், பத்தாம் நூற்றாண்டின் இடைப் பகுதி முதல், தமிழகத்தின் கோயில்களால் பொங்கல் விழா, `உத்தராயண சங்கராந்தி' பண்டிகையாகக் கொண்டாடப்பட்டமை தெளிவாகிறது. இந்நிலை இந்நூற்றாண்டின் இடைப்பகுதி வரையில் தொடர்ந்து நீடித்ததைக் காணுகின்றோம்

*முதலாம் ராஜேந்திரன் காலத்து திருவொற்றியூர் கல்வெட்டு `புதியீடு விழா’ எனப் பொங்கலைக் குறிக்கிறது. (புதியீடு என்பது முதல் அறுவடை). தமிழக விவசாயத்தில் தொடர்ந்து நிலவும் இருவகை உற்பத்தி முறைகளை (மருதம்/முல்லை வேளாண் முறைகள்) ஒரே பண்பாட்டின் கீழ் பொருத்தமுற இணைப்பதில் தமிழர் அடைந்த வெற்றியின் சின்னமே பொங்கல்விழா

சோழர் காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு ‘புதியீடு’ என்று பெயர் இருந்தது. அதாவது, ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள். ‘புதியீடு விழா’ என்று ஒரு கல்வெட்டு குறிக்கிறது. அதே போல், விவசாயம் சார்ந்த 'புதுயீடு' / முதல் அறுவடை என்பது ஒரு சடங்காக வளர்ந்திருக்கலாம். தை மாதமே அறுவடை ஆரம்பிக்கும் காலம் என்பதால், அறுவடைத் திருநாள் அம்மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்பட்டிருக்கலாம். (இன்றும் இலங்கையில், தைப்பூசம் பிறந்தால் தான் அறுவடை என்பதே பொது வழக்காக இருக்கிறது. மாட்டுப்பொங்கலும் அன்று நிகழ்வதுதான்.)

ஆரம்ப கால பதிவுகளில் இந்த பொங்கல் என்ற பெயரானது வானகம், போனகம், திருப்போனகம், பொங்கல் போன்ற சொற்களாக கல்வெட்டுகளில் தோன்றுகிறது.

* திருச்சி திருக்கயிலாயமுடையார் கோவில் கருவறை வடக்குப் பட்டியில் காணப்படும் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில்,
“சங்கராந்திகளும், கிரஹணமும், மற்றும் திருக் கல்யாணங்கள் உள்ள் போது” பறை முதலிய வாத்தியங்கள் கொட்ட வேண்டிய முறைமையைத் தெரிவிக்கிறது.
*ராஜராஜ சோழன் காலத்தில் (கி.பி. 985 – கி.பி. 1012) ஒவ்வொரு மாதப்பிறப்பன்றும் விழா எடுக்கப்பட்டதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. தஞ்சையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் “திருச் சதயத் திருவிழா பன்னிரெண்டும், கார்த்திகத் திருநாள் ஒன்றும், சங்கராந்தி பன்னிரெண்டும், பெரிய திரு உற்சவம் நாள் ஒன்பதும் ஆக நாள் முப்பத்து நான்கும்” (“கல்லும் சொல்லும்”, பக் 147, இரா. நாகசாமி) என்று குறிப்பிடப்படிருக்கின்றது.

*மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழனின் கி.பி. 1013-14ம் ஆண்டுக்குரிய 29ம் ஆண்டு கல்வெட்டு ‘‘ஸ்ரீ ராஜராஜதேவர்க்கு யாண்டு இருபத்தொன்பதாவது ராஜேந்திர சிங்க வளநாட்டு மண்ணி நாட்டு பிரமதேயம் வேம்பற்றூராகிய சோழமார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்து மகாசபையோம் கையெழுத்து. நம்மை உடைய சக்கரவர்த்தி உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் இவ்வூர் திருவிசலூர் மகாதேவர் ஸ்ரீ கோயிலிலேயே துலாபாரம் புக்கருளின அன்று நம்பிராட்டியார் தந்தி சக்திவிடங்கியாரான உலோக மாதேவியார் இரண்ய கர்ப்பம் புக்கருளி இத் திருவிசலூர் மகாதேவர்க்கு அக்காரடலை அமுதுக்கு வேண்டும் நிவந்தங்களுக்கு இக்காசு நானூற்று ஐம்பத்தெட்டும் இத்திருவிசலூர் மகாதேவர் சேனாபதிகள் மூலபரதரான சண்டேஸ்வரர் பக்கல் மகாசபையோம் கொண்ட இக்காசு நானூற்று ஐம்பத்தெட்டும் கொண்டு கடவோம் கொண்ட பரிசாவது...’’ என்று கூறி பின்பு சாசன விளக்கம் விரிவுற எடுத்துரைக்கப் பெற்றுள்ளது.

சோழ சக்கரவர்த்தி ராஜராஜ சோழரின் பட்டத்தரசியான லோகமாதேவியார் தன் கணவர் திருவிசலூர் கோயிலில் துலாபாரம் ஏறியபோதுதான் ஹிரணியகர்ப்பம் புகுந்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டபோது திருவிசலூர் ஈசனுக்கு அந்நாள் முதல் தொடர்ந்து சந்திரன், சூரியன் உள்ளளவும் நாள்தோறும் அக்காரடிசில் எனப்பெறும் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வதற்காக நானூற்று ஐம்பத்தெட்டு பொற்காசுகளை கோயிலில் முதலீடு செய்தார். அத்தேவியார் முதலீடு செய்த பொன்னை வேம்பற்றூர் ஊர்ச்சபை கடனாகப் பெற்றுக் கொண்டு, அதற்குரிய வட்டியிலிருந்து அப்பணியை மேற்கொள்வதாக இந்த சாசனத்தில் கையொப்பமிட்டு உறுதி அளித்துள்ளனர். அக்கார அடிசிலுக்காக (சர்க்கரைப் பொங்கல் நிவேதனத்திற்காக) அளித்த நானூற்று ஐம்பத்தெட்டு பொற்காசுகளுக்குரிய வட்டியிலிருந்து நாள்தோறும் இருநாழி செந்நெல் அரிசி, ஒருநாழி துவரம் பருப்பு, நாலுநாழி பசும்பால், ஒரு உழக்கு நெய், பன்னிரண்டரை பலம் சர்க்கரை மற்றும் நாற்பது வெற்றிலை, பத்து பாக்கு, இருபது வாழைப்பழம் ஆகியவையும் அளிக்கப்பட வேண்டும் என்று இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இவை தவிர அன்றன்றைக்கு பொங்கல் சமைக்க புதுப்பானை அளிக்கும் குயவர்க்கு உரிய ஊதியம், விறகுக்கு உரிய செலவு, திருவமுது சமைக்கும் ஊழியனுக்கு உரிய ஊதியம் ஆகியவையும் அந்த வட்டிப் பணத்திலிருந்தே அளிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப் பெற்றுள்ளது.
.
*கங்கைகொண்ட இராஜேந்திர சோழனின் காளத்திக் கல்வெட்டில் மகர சங்க்ரமணப் பெரும் பொங்கல் என்ற குறிப்பு உள்ளது.
*திருவள்ளூர் வீரராகவ கோவிலில் காணப்படும் கல்வெட்டு ஒன்றின் படி, சோழ மன்னன் குலோத்துங்கன் பொங்கல் விழாவிற்கு சிறப்பாக நிலங்களை கோவிலுக்கு பரிசாக அளித்து வந்தார். கல்வெட்டில் விஷ்ணுக்கு பொங்கல் வரவு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

*சிதம்பர சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயிலுள்ள கல்வெட்டொன்று இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் (கி.பி.1243- கி.பி.1279) காலத்தில் கயிலாயத்தேவன் என்பவன் தைப்பூச நாளில் பொங்கலமுது படைக்க மூலதனமாக பெரும்பற்றப்புலியூர் கீழ்ப் பிடாகை கிடாரங்கொண்ட சோழப்பேரிளமைநாட்டு எருக்காட்டுச் சேரியான சோழ நல்லூர்ப்பால் சோழபாண்டியன் என்ற பெயருள்ள நிலத்தையும், அங்குள்ள கொல்லைக் குளத்தில் செம்பாதி நிலத்தையும் அளித்திருந்தான் என்று கூறுகின்றது.

காலக்கணிப்பு மாற்றத்தின் ஊடாக,
1. மகர சங்கிராந்தி (சூரிய வழிபாடு),
2. பழைமையான அறுவடைத்திருநாள்
ஆகிய இரு கூறுகளின் ஒன்றித்த வடிவமே இன்றைய தைப்பொங்கல் என்றே நாம் கொள்ளலாம்.

கல்வெட்டுகளில் தைப்பூச நாளுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். தை மாதத்தில் தைப்பூச நாளை மிகச் சிறந்த நாளாகச் சோழர்கள், பல்லவர்கள் காலத்தில் கொண்டாடியிருக்கிறார்கள். இன்றைய பொங்கல் விழா மரபு 300ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடங்கியிருக்கலாம் எனக் கணிக்கலாம்.

பெரியபுராணத்தில், மள்ளர்கள், இந்திர தெய்வத்தை தொழுது நாற்று நட்டதாக, சேக்கிழாரின் குறிப்புகளில் இருந்து தை மாதப் பிறப்பு, சோழர் காலத்தில் பெரிய விழாவாக கொண்டாடப்படவில்லை எனத் தெரிகிறது.

விஜயநகர பேரரசின் காலத்தில், அது பெரிய விழாவாக மாறியிருக்கலாம். தஞ்சை மராட்டியர் காலத்தில், மகர சங்கராந்தி அன்று, வாழை கட்டி, பொங்கல் விட்டு கொண்டாடியதாக, ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

சங்கராந்தி என்பது தென் கிழக்காசியா முழுதும், இந்தியாவில் தென் குமரி முதல் வட இமயம் வரை, கொண்டாடப்படுகிறது. தாய்லாந்து, லாவோஸ் ஆகிய இரண்டு நாடுகளில் ‘சொங்ராங்’ 
(சங்கராந்தி) என்ற பெயரில் இதைக் கொண்டாட கதை சொல்லப்படுகிறது.

• தமிழகத்தில் அறுவடைத் திருநாளை பொங்கல் பண்டிகையாக கொண்டாடுகிறோம். மற்ற மாநிலங்களில் வேறு பெயர்களில் கொண்டாடுகின்றனர்.

மாட்டுப் பொங்கல்
****
அடுத்த நாள் அன்று தனக்கு உதவிய மாடுகள், ஏற்கலப்பை போன்ற விவசாயத்திற்குப் பயன்பட்ட எல்லா பொருள்களுக்கும் நன்றி செலுத்தும் நாள் மாட்டுப் பொங்கல் ஆகும்.
மாட்டுப் பொங்கலை கன்றுப் பொங்கல் என்றும் பட்டிப் பொங்கல் என்றும் அழைக்கும் வழக்கம் உண்டு. மாடுகளைக் குளிப்பாட்டி, அதன் கொம்புகளை சீவி, பளபளக்கும் வகையில் இயற்கை வண்ணம் பூசி, குஞ்சம் அல்லது சலங்கைகள் கட்டிவிட்டு, தோளில் வார்ப்பட்டையிலும் சலங்கைகள் மாட்டிவிட்டு, மாடு தலையை ஆட்டும் போது ஏற்படும் ஒலியைக் கேட்டு ரசிப்பார்கள். மேலும் நாட்டுச் சர்க்கரை, தேங்காய், பழம் எல்லாம் மாட்டுத் தொழுவத்தில் படையல் வைத்து, பொங்கலை பொங்கச் செய்து மாட்டுக்குப் படைத்து வணங்குவார்கள். மாடு உண்டு முடித்த எச்சில் தண்ணீரை "பொங்கலோ பொங்கல் மாட்டுப் பொங்கல் பட்டிப் பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக" எனச் சொல்லி மாட்டுத் தொழுவம் முழுதும் தெளிக்கும் வழக்கத்தை கடைப்பிடித்து வருகிறார்கள்.

மாட்டுப் பொங்கல் என்பதே கால்நடை சமூகத்தின் பொருளாதாரப் பின்னணியை மையப்படுத்திய திருவிழா.

“மென்புலத்து வயலுழவர் வன்புலத்துப் பகடுவிட்டு”
என்றொரு புறநானூறு பாடல்வரி மருத நிலத்து உழவர்கள், முல்லை நிலத்திலிருந்து மாடுகளை ஓட்டிச் செல்வதாகப் பொருள் ஆகும்.

ஜல்லிக்கட்டு
****
தமிழகத்தில் நாயக்கர் காலம் (கி.பி. 1532 -கி.பி. 1736) நிலவியபொழுது தைப்பொங்கல் காலப்பகுதியில் ஜல்லிக்கட்டு / சல்லிக்கட்டு என்றழைக்கப்படும் காளையை அடக்கும் விழா அறிமுகப்படுத்தப்பட்டது. சல்லிக்காசுகள் என்னும் காசுகளை நாணயங்களை மாட்டின் கொம்புகளில் அலங்காரமாக கட்டி வைத்து விளையாடும் வீர விளையாட்டு ஆதலால் சல்லி கட்டு என அழைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு என்று ஆகிவிட்டது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விழா வாழையடி வாழையாக நடத்தப்பட்டு வரும் விழா என்பதற்கு ஆதாரமாக, சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு காளையை அடக்கி, அதன் கொம்பில் கட்டப்பட்ட பரிசு பொருளை எடுக்கும் வீரனின் சிலை கிடைத்துள்ளது. கடந்த 1976-ம் ஆண்டு பெத்தநாயக்கனபாளையத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த சிலையில், காளை அடக்கும் வீரனின் உருவமும், அந்த வீர விளையாட்டை விவரிக்கும் சொற்றொடர்களும் பொறிக்கப்பட்டுள்ளது. பெத்தநாயக்கன் பாளையத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட குறு நில மன்னர்கள், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி, அதற்கு சான்றாக கல்வெட்டை செதுக்கி வைத்து தமிழர்களின் வீரத்தை பறைசாற்றி சென்றுள்ளனர். முன்னோர்களால் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியும், காளையை அடக்கும் வீரனும், சேலம் அருங்காட்சியகத்தில் சாட்சியாக பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

குடும்பங்கள் அனைவரும் சேர்ந்து பாரம்பரிய முறையில் மண்பானை மற்றும் விறகு அடுப்பு முறையில் அனைவரும் ஒரே நேரத்தில் அடுப்பில் தீயை மூட்டி பொங்கிய பின் அனைவரின் பொங்கலையும் பகிர்ந்து அனைவரும் உண்பது வழக்கம்! இதை "சமத்துவப் பொங்கல்" என அழைப்பார்கள்.

சில ஊர்களில், ஊர் பொதுமக்கள் ஒன்றாக கூடி சமத்துவ பொங்கல் வைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

குழந்தைகள், இளைஞர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுப் பொருட்கள் தருவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

`சங்கராந்தியாக'க் கொண்டாடப்பட்ட பொங்கல் பண்டிகையை நாகரிகக் கோரிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஒரு வாய்ப்பாக நகரத்து மக்களால் கருதப்பட்ட பொங்கல் விழாவை, உழவர் திருநாளாக, பாட்டாளி மக்கள் பழங்கணக்கைப் பார்க்கும் பொங்கல் திருநாளாக, அறிஞர்கள் போற்றும் அறிவுத் திருநாளாக, தமிழரிடையே மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் ஊட்டும் தமிழர் திருநாளாக, தமிழர் தம் தேசியத் திருவிழாவாக மாற்றியமைத்த

“பொங்கல் திருவிழா'' தேசியத் திருவிழாவாக மாற்றி அமைக்க அவர் முயன்றார். சென்னை நகரில் 1934, 1935 -ஆம் ஆண்டுகளில் தமிழரின் தேசியத் திருநாளைச் சீரோடும், சிறப்போடும் முதல் நாள் உழவர் திருநாளாகவும். இரண்டாவது நாள் புலவர் திருநாளாகவும். மூன்றாம் நாள் கலைஞர் திருநாளாகவும் `முப்பெருநாள் விழாவாகக்' கொண்டாடினார்கள்.  தமிழகத்தின் முக்கிய நகரங்களில் எல்லாம் புலவர் பெருமக்களால், `தமிழ்த் தேசியத் திருநாளாக' கொண்டாடும் வழக்கம் பரவிவிட்டது.

1945 அளவில், ஒருவர் மற்றொருவருக்கு அன்பையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் `பொங்கல் வாழ்த்து' முறையை இம்மறுமலர்ச்சி இயக்கமே வழக்கத்திற்குக் கொண்டு வந்தது. தமிழருடைய பண்பாட்டின் சிறப்பை உலகிற்கு அறிவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கலுக்குரிய விழா நாளினைத் “திருவள்ளுவர் திருநாளாக'' கொண்டாட முன்வந்தனர்.

“சூரியனுக்கு தை முதல் நாள் பொங்கல் படையலிடுவதும், இரண்டாவது நாள் மாட்டுப் பொங்கலும், மூன்றாவது நாள் காணும் பொங்கலும் நடைமுறையில் இருக்கின்றன. 1000 அல்லது 500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நடைமுறை இல்லை.

தை மாதம் அறுவடையான புது அரிசியை புது மண்பானையில் இட்டு, பொங்கலிட்டு வணங்கி அனைவருக்கும் அளித்து மகிழ்ச்சி அடைகிறோம்.
நம் அன்றாட பயன்பாட்டில் எவ்வளவோ மாற்றங்கள் வந்துவிட்டாலும், பொங்கல் திருநாளின்பொழுது மண்பானை முக்கிய இடம் பெற்று விளங்குகிறது. புதுப்பானை, மஞ்சள்-இஞ்சிக் கொத்து, இனிமை நிறைந்த கரும்புகளுடன் நம் வழிபாடு நடைபெறுகிறது.

தகவல்கள் : Epigraphy - கல்வெட்டியல்.

#பொங்கல் திருநாள்
#ksrpost
15-1-2024.


பொங்கல்வாழ்த்துகள் #கிராமத்தின் மண்வாசனை…. #வடலபுல மகர சங்கராந்தி

#பொங்கல்வாழ்த்துகள் #கிராமத்தின்
மண்வாசனை….
#வடலபுல மகர சங்கராந்தி 
———————————————————
                              (2)
பொங்கல் நாவில் பட்டதும்
மனதில் அப்படியொரு தித்திப்பு
நினைவில் என்றும் உன் புன்னகை….. குழைஞ்ச பொங்கல், சோறு, சாம்பார், பல வித ரசம், அப்பளம், கடாரங்காய் ஊறுகாய்-கட்டி எருமை தயிர்,அவியல், சிறுகிழங்கு பொரியலோடு, மாசல் அற்ற தாளித்த வாழைக்காய்-உருளைக்கிழங்கு,






நெய்வடியும் சர்க்கரைப் பொங்கலையும் சாப்ட்டு முடிக்கும்போது…..
என்றும் உன் நினைவில்……
உன் அன்பில்…
கிராமத்தின் மண்வாசனை….

உழவர் பெருமக்கள் உழைப்பின் பயனை அனுபவிக்கத் துவங்கும் விழா பொங்கல் விழா. பொங்கல் விழா உழவர் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பெருவாரியான மக்களை உழவர்  பெருமக்களாகக் கொண்ட ஒரு நாட்டில் உழவர் பெருநாள் தேசியத் திருநாளாக உருவாகி நிற்பது பொருத்தமே.

#வடலபுல_மகர_சங்கராந்தி:

மகர சங்கராந்தி, அல்லது சங்கராந்தி சூரியன் தன் வான்வழிப் பயணத்தில் மகர ராசிக்கு மாறும் நாளாகும். இது துவக்கத்தில் குளிர்கால கதிர்த்திருப்பத்துடன் இயைந்திருக்கலாம். தற்போது இது சனவரி 14 அன்று நிகழ்கிறது. இன்றிலிருந்து பகல் நேரம் கூடுதலாவது கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் இது தானிய அறுவடையோடு ஒன்றுவதால் அறுவடை திருவிழாவாகவும் சூரியனுக்கு வரவேற்பும் நன்றியும் தெரிவிக்கும் திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

வடமொழியில் சங்கரமணம் என்றால் நகர துவங்குதல் என்று பொருள். சூரியன் தனது ராசி மண்டலத்தில் 12 ராசிகள் வழியாகப் பயணிக்கிறார்.

ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள் உள்ளன. 12 ராசிகளின் பெயரிலேயே வடமொழியில் மாதங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. சூரியன் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு நகர்வதே சங்கராந்தி ஆகும்.

பொங்கல் பண்டிகை தமிழ்நாடு தவிர இந்தியாவின் பிற பகுதிகளில் சூரிய வழிபாடு எனும் மகர சங்கராந்தி என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியக் கலாசாரத்தின் தாக்கம் கொண்ட, இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், நேபாளம், மியான்மர், இலங்கை போன்ற ஆசிய நாடுகளிலும் கூட மகர சங்கராந்தி விழா வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

புவி சூரியனைச் சுற்றி வந்தாலும் இந்திய தொன்மவியலில் பனிரெண்டு இராசிகளாகப் பிரிக்கப்பட்ட வான்வெளியில் சூரியன் நகர்வதாகக் கருதப்படுகிறது. இந்த நகர்வில் சூரியன் வடக்கு நோக்கி தனது பயணத்தை திருப்புகின்ற நாள் மகர சங்கராந்தி எனப்படுகிறது. சமசுகிருதத்தில் சங்கரமண எனில் நகரத் துவங்கு எனப் பொருள். இதுவே இவ்விழா சங்கராந்தி என அழைக்கப்பட காரணமாயிற்று.இந்தியாவின் பரந்த நிலப்பரப்பு,வானிலை மற்றும் பன்முக பண்பாடு காரணமாக பல்வேறு பெயர்களிலும் பல்வேறு வரலாறுகளுடனும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் கும்பமேளா, மகர சங்கராந்தி அன்று துவங்குகிறது.

#எத்தனை_சங்கராந்திகள்

நாம் முன்பு கூறியது போல் ராசி் மண்டலத்தில் 12 ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு சங்கராந்தி வீதம் மொத்தம் 12 சங்கராந்திகள் உள்ளன.

உத்தராயண புண்ணிய காலத்தில் 6 சங்கராந்திகள் வரும் மற்றும் தட்சிணாயன காலத்தில் 6 சங்கராந்திகள் வரும். இந்த 12 சங்கராந்திகளும் 4 சங்கராந்தி பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.

#உத்தராயணம்   #தட்சிணாயனம்_என்பது 

உத்தரம் என்றால் வடக்கு. தட்சிணம் என்றால் தெற்கு. அயனம் என்றால் வழி என்பது பொருள்.

சூரியன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கிய வழியில் பயணிப்பது உத்தராயண காலம் ஆகும்.

சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி வழியில் பயணிப்பது தட்சிணாயன காலம் ஆகும்.

சங்கராந்தி வகைகள்
வருடத்திற்கு மொத்தம் 12 சங்கராந்திகள் உள்ளன.

தை முதல் ஆனி மாதம் வரை உத்தராயண காலத்தில் வரும் 6 சங்கராந்திகள் மற்றும் அதன் மாதங்கள்:

மகரம்-தை, கும்பம்-மாசி, மீனம்-பங்குனி, மேஷம்-சித்திரை, ரிஷபம்-வைகாசி, மிதுனம்-ஆனி.

தட்சிணாயன காலத்தில் ஆடி முதல் மார்கழி வரை வரும் 6 சங்கராந்திகள் மற்றும் அதன் மாதங்கள்:

கடகம்-ஆடி, சிம்மம்-ஆவணி, கன்னி-புரட்டாசி, துலாம்-ஐப்பசி, விருட்சிகம்-கார்த்திகை, தனுசு-மார்கழி.

இந்த 12 சங்கராந்திகளும் 4 பிரிவுகளாக பிரிகின்றன:

• அயனி சங்கராந்தி
• விஸுவ சங்கராந்தி
• விஷணுபதி சங்கராந்தி
• ஷாட்சித முக சங்கராந்தி

அயனி சங்கராந்தி :

மகரம் மற்றும் கடக சங்கராந்திகளை அயனி சங்கராந்திகள் என்பர். இது உத்தராயண மற்றும் தட்சிணாயன சங்கராந்திகள் இரண்டும் சேர்ந்த ஒன்று.

இவையிரண்டும் பருவ நிலை சார்ந்தவை ஆகும். உத்தராயண மற்றும் தட்சிணாயன காலத்தின் ஆரம்பமே அயனி சங்கராந்தி ஆகும்.

#மகர_சங்கராந்தி

சூரியன் ராசி மண்டலத்தில் மகர ராசிக்கு பிரவேசிக்கும் நாளே மகர சங்கராந்தி ஆகும்.

சூரியன் 29 நாட்கள் 27 நிமிடங்கள் 16 நொடிகள் மகர ராசியில் பயணிப்பார். இது தை மாதத்தின் முதல் நாள் நிகழ்கிறது.

இது வெகு விமர்சையாக இந்தியா மட்டுமின்றி பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

தேவர்களுக்கு காலைப் பொழுதின் ஆரம்பம் மகர மாதம் ஆகும். ஆறு மாதம் பகல் மற்றும் ஆறு மாத இரவு என்பது தேவர்களின் ஒரு நாள் என்று நம்பப்படுகிறது.

காலை பொழுதின் துவக்கமே தை மாதம் ஆகும். எனவே தான் சூரியன் முதலான தேவர்களுக்கு இந்த ஆரம்ப நாளில் இந்துக்கள் பூஜைகள் செய்து வழிபடுகின்றனர்.

இந்தியா மட்டுமின்றி நேபாளம், தாய்லாந்து, மியான்மர், இலங்கை, லாவோஸ் போன்ற நாடுகளில் இந்த விழாவானது வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

சங்கராந்தி தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் பலவாறு கொண்டாடப்படுகிறது:

இந்தியாவில் பல பெயர்களில் இந்த அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

*மகர சங்கராந்தி அல்லது சங்கராந்தி - தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒரிசா, மணிப்பூர், மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், தெலங்கனா,ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் கோவா

*அறுவடை திருநாள் -குறிப்பாக தமிழ்நாட்டில் அறுவடை திருநாள் அல்லது தமிழர் திருநாள் என்று கொண்டாடப்படுகிறது. 




சங்கராந்தி என்பது குறிப்பிட்ட வகை மக்கள் இந்த பெயரில் தமிழ்நாட்டில் கொண்டாடுகின்றனர்.

உத்தராயண்- குஜராத் மற்றும் இராஜஸ்தான்

லோரி - இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப்

மகர ஜோதி - சபரிமலை,கேரளம்

#பிற_நாடுகளில்:

நேபாளம்
தாரு மக்கள்- மாகி
பிறர் - மாகே சங்கராந்தி அல்லது மாகே சகாராதி
தாய்லாந்து - สงกรานต์ சொங்க்ரான்
லாவோஸ் - பி மா லாவ்
மியான்மர் - திங்க்யான்
இலங்கை -பொங்கல் பண்டிகை.

பொங்கல் வாழ்த்துகள்.

#பொங்கல்வாழ்த்துக்கள்
#Pongal2024 
#மகரசங்கராந்தி
#magarasangaranthi

#ksrpost
15-1-2024.

#*பொங்கல் திருநாள்*. (1)

#*பொங்கல் திருநாள்*. 
————————————
                           (1)

”*தையில் நீராடி*” -கலித்தொகை.
 ”*தைத் திங்கள்*” -நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐங்குறுநூறு என பல சங்க இலக்கியங்கள் செப்புகின்றன…

உழவர் பெருமக்கள் உழைப்பின் பயனை அனுபவிக்கத் துவங்கும் விழா பொங்கல் விழா. பொங்கல் விழா உழவர் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பெருவாரியான மக்களை உழவர்  பெருமக்களாகக் கொண்ட ஒரு நாட்டில் உழவர் பெருநாள் தேசியத் திருநாளாக உருவாகி நிற்பது பொருத்தமே.

 உழவனின் வியர்வையில் பலன் விளைந்த செந்நெல்லும்,கன்னலும், மஞ்சளும் அறுவடையின் இன்பத்தைக் காட்டும் மாட்டுப் பொங்கலும் மற்ற பொங்கல்களும் உழவனின் பெருமையைக் காட்டும்.

 தமிழக உழவனுக்குப் பொங்கல் புது நாளின் பொருள் என்ன? உழைப்பின் பலனைத் தானும், தனது உற்றார் உறவினரும், தன்னைச் சூழ்ந்துள்ள பெருமக்களும் சுருக்கத்தில் சமுதாயம் முழுவதும் தங்கு தடையின்றி அனுபவித்து மகிழ்ச்சி கொண்டாடும் இன்ப நன்னாளாகும். ஆவல் துடிப்போடு எதிர்நோக்கும் சிறந்த எதிர்காலத்தை ஆர்ப்பாட்டத்துடன் வெளியிடும் பொன்னாளாகும்.

 புது பொங்கல் கொண்டாடும் உழவன் புதிதாக உழக்கு அரிசியும், ஒரு புதுப் பானையும், ஒரு துண்டு புதுக் கரும்பும், ஒரு கொத்து புதுமஞ்சளும் மாத்திரம் விரும்புகிறான். தை முதல் நாளில் மட்டும் சம்பிரதாயப் புதுமையை விரும்புகிறான் அல்ல; அவன் ஒரு புதிய வாழ்வையே விரும்புகிறான்;உழவர் பெருமக்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தங்களை அடிமைப்படுத்தி, கொடுமைப்படுத்தும் பிற்போக்குச் சுரண்டல் முறையை துடைத்தெறிய விரும்புகிறான்; கிராமப்புற வாழ்வின் பொருளாதார அடிப்படையை அடியோடு புதுப்பிக்க விரும்புகிறான்.

 தமிழகத்தில் உழவர் பெருமக்கள் மருத நில மக்கள். அவர்களின் கடவுள் இந்திரன் என்பர். இந்திரன் போகக் கடவுள். மழை வளம் தருவதும், உயிர் வளம் தருவதும் ஞாயிறு போற்றுதும் (சிலம்பு) உழவர் பெருமக்களுக்குப் பயிர்த்தொழிலுக்கும் மிகப் பயன் படுவன மாடுகள்.

உழைத்துக் களைத்த  உழவர்கள் சோ ர்வை போக்கிக் கொள்ளும் நாளாக மார்கழி இறுதி நாளை போகி என்று கொண்டாடினர். ஞாயிற்றைப்  போற்ற தை முதல் நாளை பெரும் பொங்கல் என்று கொண்டாடினர். மறுநாள் மாடுகளைப் போற்றி ஏற்ற மாட்டுப் பொங்கல் கொண்டாடினர். இந்த மூன்று நாட்களும் உழவர் பெருமக்களுக்கு ஆண்டில் சிறந்த நாட்கள்.

   தை முதல் நாள்,போகியின் மறுநாள் பயனை நுகரத் தொடங்கும் நாள், அன்று உழவர் இல்லங்களில் எல்லாம் புதுமை; எதிலும் புதுமை பொங்கும். அன்று புதிய ஆடை புனைந்து, ஆடி பட்டத்தில் விதைத்துத் தை மாதத்தில் அறுவடை செய்த புதிய நெல் குத்தியெடுத்த புத்தரிசியை  புதிய பானையிலிட்டு பொங்குவர். புதிய பானைகளுக்குப் புதிய மஞ்சளை புதிய நூலில் காப்பாக அணிவர்.கோலமிட்டு செம்மண் தீட்டிய தம் இல்லத்தின் வாசலில் பிள்ளையார் பிடித்து வைத்து விளக்கேற்றி வைத்து புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய வள்ளிக் கிழங்கையும் புதிய பூசணிக் காயையும் படைப்பர். பின்னர் கதிரவனை வழிபட்டுப் பொங்கலிடத் தொடங்குவர். பொங்கலிடும் பானை பொங்கி வரும் போது உழவர் பெருந்தகைகள் மனைவி மக்களுடன் கூடி நின்று பொங்கலோ பொங்கல் என்று ஆரவாரித்து மகிழ்வர்.

 மாட்டுப் பொங்கலன்றோ உழவர்கள் மாடுகளை நன்கு குளிப்பாட்டி அவைகளை அழகு செய்வர். அவைகளுக்குச் சோறு படைத்து நன்றி உணர்வுடன் வழிபடுவர். அன்று மாடுகளை வேலை வாங்க மாட்டார்கள். சில இடங்களில் அன்று மாலை வண்டிகளில் எருதுகளைப் பூட்டி ஓட்டப்பந்தயங்கள் விட்டு ஆரவாரம் செய்து மகிழ்வர். சில மாவட்டங்களில் மஞ்சள் விரட்டு நடத்தி மகிழ்வர். தமிழனின் சமுதாய வாழ்வில் தமிழே எங்கும் கொலுவீற்றிருந்து பாரதத்திலும் சரி, உடலிலும் சரி, எந்த முன்னேறிய மொழி மக்களோடும் தமிழன் ஈடுசோடாக நிமிர்ந்து நடக்க சபதம் எடுக்கும் திருநாளாக - இந்நன்னாளைக் கொண்டாட வேண்டுவது தமிழர் பெருமக்களின் பொன்னான கடமையாகும்.

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்  வாழிய பாரத மணித்திருநாடு 
 இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க
நன்மை வந்தெய்துக; தீதெலாம் நலிக
சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக
நந்தேயத்தினர் நாடொறும் உயர்க - என சபதம் ஏற்போம் இந் நன்னாளில்.

பொங்கல் வாழ்த்துகள்.

#பொங்கல்வாழ்த்துக்கள்
#Pongal2024 
#மகரசங்கராந்தி
#magarasangaranthi

#ksrpost
15-1-2024.


Sunday, January 14, 2024

#bhogi #போகி. #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்

#*Bhogi festival greetings to friends and well wishers*. 
*பழையன கழிதலும்*
*புதியன புகுதலும்*
*இனிய போகி நாள் வாழ்த்துகள்*….

*உழுதுண்டு உலகத்தார்க்கு* 
*உணவு அளிக்கும் உழவர் விழாவே வருக*
*பழைமை நீங்குக* 
*புதுமை பூத்துக் குலுங்குக*



*கெட்டதோர் ஒழிக*
*அமைதி ஓங்குக*…..



#bhogi
#போகி.
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
14-1-2024.


Saturday, January 13, 2024

Article 370

My speech yesterday(12-1-2024) evening in the “Discussion on Abrogation of Article 370” organised by the @BJP4TamilNadu Thinkers’ Cell.  பாஜக சிந்தனையாளர் பிரிவு நடத்திய நிகழ்வில் #பிரிவு370 குறித்த எனது உரை Thanks to திரு @annamalai_k 

youtube.com/live/wamiRGBHc…


#article370 #jk
எஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
13-1-2024.

Nov 24, 2025 Before the Rock Temple of #Tirupparankunram, near Madurai— 1928.

  Before the Rock Temple of #Tirupparankunram , near Madurai— 1928. Latest photo in the comments section. நக்கீரர் தாமருளிய திருமுருகாற்றுப்...