Monday, July 18, 2016

மகபாரத காட்சிகள் துரோகத் துக்கம்.

மகபாரத காட்சிகள் 
துரோகத் துக்கம்.....
.
                 குருஷேத்திரத்தின் இறுதி நாள் . எல்லா இடத்திலும் மரண அழுகை மட்டுமே மிஞ்சி இருகிறது. குருஷேத்திரம் என்று சொல்லக்கூடிய ஸமந்தபஞ்சகத்தின் ஓரமாய் இருந்த குளக்கரையில் துரியோதனன் வீழ்ந்துகிடக்கிறான். மண்ணாசைக் கனவுகள் கலைந்து மரணக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அவன் முகத்தில் தோன்றத் துவங்கி இருந்தது. துரியோதனின் வாய் வறண்டு கிடந்தது. கண்கள் சொருகி இருந்தன. துரியோதனனின் தலையைத் தாங்கி இருந்த அஸ்வத்தாமன் சிறிது நீரள்ளி துரியோதனின் முகத்தில் தெளித்தான்.

அஸ்வத்தாமனின் மனம் துரோகத்தால் துவண்டு கொண்டிருந்தது. தனிமையும், துக்கமும், கோபமும் அவனை அலைக்கழிக்கத் தன்னை ஆழியில் அகப்பட்டத் துரும்பாய் உணர்ந்தான். அவன் விழிகள் கண்ணீரும் கோபமும் கலந்து ஜொலித்துக் கொண்டிருந்தன.

துரோகத்தால் என் வாழ்வு சிதைக்கப்பட்டுவிட்டது. இன்று நான் யாருக்கும் உபயோகமின்றி சிறு துரும்பென நிற்கிறேன். குருஷேத்திரப் போர்க்களத்தில் ஒவ்வொரு ஷத்திரியனும் தன் கடமையை நிறைவேற்றி அழியாப்புகழ் பெற்று வீரசொர்க்கம் அடைந்தனர். துரோணத்தந்தையே! என்னை ஏன் விட்டுச் சென்றீர்? துரியோதனா! என்னால் ஏதும் செய்ய முடியாது, நான் ஒரு கோழை என்றெண்ணித் தூங்குகிறாயா? சற்றே விழி நண்பா! என் விழிகளில் இருந்து உறக்கத்தைப் பறித்து எல்லாரும் உறங்குகிறீர்களே! பாவிகளே! என்ன செய்வேன்? என்ன செய்வேன் இனி?'

"துரியோதனா! என் நண்பனே! கொஞ்சம் கண்திற! எனக்குக் கட்டளை இடு" கோபம் கலந்த பதட்டத்தோடு கெஞ்சினான் அஸ்வத்தாமன்.

துரியோதனன் மெல்ல கண் திறந்தான்."அஸ்வத்தாமா! போர் முடிவுக்கு வந்து விட்டதா? எல்லாரும் இறந்துவிட்டர்களா? என் சொந்தங்களில் எவரேனும் மிஞ்சி இருக்கிறார்களா? என் தாய் நாட்டைக் காக்க "நான்" முன்னெடுத்த போர் முடிந்ததா? பாண்டவர்கள் எப்படி நண்பா குருவம்சத்தின் ராஜ்யபரி பாலனத்தை சொந்தம் கொண்டாட முடியும்? கடைசியில் அதர்மம் வென்றதா? எல்லாரும் மாண்டபின் நான் மட்டும் ஏன் இன்னும் உயிர்த்திருக்கிறேன்?"

"இல்லை துரியோதனா! இன்னும் போர் முடியவில்லை!எனது பங்கு இன்னும் இருக்கின்றது. உன் கட்டளைக்காகத்தான் காத்திருக்கிறேன். கட்டளையிடு... பாண்டவரின் வம்சத்தை பூண்டோடு அழித்து வருகிறேன். இந்த யுத்தத்தின் இறுதிப்பலியாக பாண்டவர்களின் தலைகள் இருக்கட்டும். கட்டளையிடு நண்பா!

"பிளக்கப்பட்ட தொடையின் வலி முகத்தில் வேதனையாக வெளிப்பட, துரியோதனனின் முகத்தில் உயிரின் அரும்பு மீண்டும் துளிர்த்தது.. சற்றே உடலை அசைத்து எழுந்தான். தன் ரத்தம் கலந்த குளத்து நீரள்ளி அஸ்வத்தாமனின் கைகளில் தெளித்தான். "இக்கணம் முதல் எனது படையின் இறுதி சேனாதிபதியாக நீயிருப்பாய் அஸ்வத்தாமா.உனக்கு செய்த துரோகத்துக்கு பழி தீர்த்துக்கொள்ள நேரம் கிடைத்துவிட்டது. வஞ்சம் முடித்து வா! உன் வரவுக்காய் என் இறுதி மூச்சு காத்துக் கொண்டிருக்கும்"

அஸ்வத்தாமா துடிப்புடன் எழுந்தான். தன் ஆயுதங்கள் அனைத்தையும் சேகரித்தான். அபாண்டவம் என்னும் தனது சிறந்த அஸ்திரத்தைக் கையிலெடுத்தான். நடக்கவிருக்கும் நிகழ்வுகளைச் காணச்சகியாத சூரியன் தன் மறைவிடம் புகுந்தான். 

இரவு தன்னிடம் வரும் எல்லா ஜீவராசிகளையும் பாதுகாக்கிறது. ஜீவராசிகளின் எல்லாத் துன்பங்களையும் மறக்கடிக்கிறது. இரவுத்தாயின் மடியில் அனைத்து உயிர்களும் துயில் கொள்கின்றன. ஆனால்...... துரோகத்தின் தகிப்பை, துக்கத்தை, உணர்ந்தவர்கள் இரவின் கதகதப்பில் உறங்குவதில்லை. அவர்களின் இமைகள் மூடுவதில்லை.துரோகத்தால் பாதிக்கப்பட்டவர்களின் கண்கள், இரவை விழுங்கிச் ஜீரணித்துவிட முயன்றுகொண்டே இருக்கின்றன. அவர்களின் துக்கம் பெரும் சப்தமாகி, தனிமையின் நிசப்தத்தை விரட்டிவிட முயன்றுகொண்டே இருக்கின்றது. "துரோகத் துக்கமே" அவர்களின் தியானப்பொருளாகி விடுகிறது.
.
அஸ்வத்தாமன் அந்த இரவில் உறங்கவில்லை. பாண்டவர்களின் பாசறையில் புகுந்தான். எதிர்பட்டவர், உறங்கியவர் என வேறுபாடற்று அனைவரையும் வெட்டி வீழ்த்தினான். உறங்குபவர்களைக் கொல்வது வீரனுக்கு அழகல்ல என்றபோதும் "துரோகத்துக்கம்" அவனை பைத்தியமாக்கி இருந்தது. பாண்டவப் பாசறை எங்கும் மரண ஓலம். பழிவாங்கும் படலத்தின் மகிழ்ச்சியை அஸ்வத்தாமன் பரிபூரணமாக ருசிக்கத் துவங்கி இருந்தான். ஒவ்வொரு மரண அழுகுரலின் போதும் அவன் மனம் புதிய உத்வேகத்துடன் கூதுகலித்தது. புலன்கலனைத்தும் மரணத்தின் விளையாட்டை உணர்ந்து கிளர்ந்தன.அன்றைய பகலில் நடந்ததைவிட, அஸ்வத்தாமன் இரவில் தனித்து நடத்திய வேட்டை குரூரமாக, கொடூரமாக இருந்தது.

'அதோ உறங்கிக் கொண்டிருக்கின்றனர் பாண்டவ சத்ருக்கள்! என் பழி முடிக்கும் காலம் இதோ".......அஸ்வத்தாமனின் கூர்வாளின் நுனியில் அறுந்து விழுந்தன ஐந்து தலைகள். அவற்றை பரவசத்துடன் பாய்ந்து அள்ளிக்கொண்ட அஸ்வத்தாமா, காற்றை விட வேகமாக விரைந்தான்.

" பழிமுடித்தேன் துரியோதனா.இதோ நம் எதிரிகளின் உடலற்றத் தலைகளைப் பார்! குருஷேத்திர யுத்தம் முடிந்தது. முடித்தவன் அஸ்வத்தாமன்! போரின் முடிவில் ஜெயித்துவிட்டோம் துரியோதனா! கண்களைத் திறந்து! விழிகள் நிறைய நிரப்பிக் கொள் இந்தப் பஞ்ச சிரசுகளை!"

"பழிதீர்க்கக் காத்திருப்பவர் எப்போதும் ஒரு தியானமாகவே அதை மேற்கொள்கின்றனர். அவர்களின் ஐம்புலன்களும் ஒரு புள்ளியில் ஒடுங்கி இருக்கின்றன. வஞ்சம் தீர்க்கும் அந்த ஒற்றைப்புள்ளியை நோக்கியே அவர்களின் கவனம் நீள்கிறது. பாதையெங்கும் நிறைந்திருக்கும் ஏமாற்றமும், துரோகமும் அவர்களை மேலும் உரமூட்டுகின்றன. இறுதிப்புள்ளியில் வஞ்சம் தீர்ப்பவரது அத்தனை புலன்களும் பிரளய கால பெருவெள்ளமாய் ஆர்ப்பரிக்கின்றன. அதன் வீர்யத்தில் அத்தனை சாஸ்திரங்களும், தர்மங்களும் தாமாகவே ஒடுங்கிப் போய்விடுகின்றன. பழிதீர்த்தலின் உச்சத்தில் இருப்பவர்களை எந்த சக்தியாலும் கட்டுப்படுத்த முடியாது.

மிகுந்த ஆவலுடன் கண் திறந்த துரியோதனின் அடி வயிற்றிலிருந்து கிளம்பிய ஆத்திரக்குரல் அஸ்வத்தாமனின் பிடரி பிடித்து உலுக்கியது.

"அறிவு கெட்டவனே! ஆத்திரத்தில் அறிவிழந்து விட்டாயே! ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதை உறுதி படுத்தி விட்டாயே! "

"என்ன நடந்தது துரியோதனா?"

"அட மடையா! வெட்டப்பட்ட இந்த தலைகளிலுள்ள முகங்களைப்பார்! இன்னுமா, உனக்குப் புரியவில்லை! இளம்பஞ்சபாண்டவர்களைக் கொன்று, அவர்களின் தலையைக் கொண்டு வந்திருக்கிறாயடா அஸ்வத்தாமா. பஞ்சபாண்டவர்களைக் கொன்றுவருகிறேன் என்று கூறிய உனது வார்த்தைகளை நம்பி மோசம்போனேனே! என் இறுதி ஆசையை நிராசையாக்கிவிட்டாயே !"

மூடிய துரியோதனின் இமைக்கதவு அதன்பின் திறக்கவே இல்லை.

அஸ்வத்தாமன் அதிர்ந்து போனான்.'பாண்டவர்களுக்குப்பதில், இளம் பிள்ளைகளையா கொன்றேன்? பாண்டவப் பாவிகள் இப்போதும் தப்பித்தார்களா?' எனதருமைத் துரோணத்தந்தையை துரோகத்தால் கொன்றவர்களை நான் இனி பழிவாங்க முடியாதா? கதறியழத் தொடங்கியவனின் தோள்தொட்டான் கபடக்கண்ணன்."!
.
யுத்தம் முடிந்த பின்னும். இன்னும் ஏன் வஞ்சத்தோடு திரிகிறாய் அஸ்வத்தாமா, நீ பிராமணன்...யோகி, கடமையை முடிப்பது மட்டும்தான் உன் பணி!" 

கை கூப்பினான் அஸ்வத்தாமன் ", அஸ்வத்தாமா என்கிற யானையைக் கொன்று, நான் இறந்து விட்டதாகப் பொய்யுரைத்து,துரோணராகிய என் தந்தைப் பாசத்தால் பரிதவித்து நின்றபோது, கொன்று விட்டார்களே பாண்டவப்பேடிகள். இந்தத் துரோகத்துக்குப் பழிவாங்க வேண்டாமா கணணா? என்னால் இனி உறங்கமுடியாது. பாரதயுத்தம் முழுவதிலும் பாண்டவர்கள் துரோகத்தால் மட்டுமே ஜெயித்திருக்கிறார்கள். திருநங்கையான சிகண்டியை முன்னிறுத்தி, பிதாமகனான பீஷ்மனைக் கொன்றார்கள். நிராயுதபாணியான கர்ணனைக் கொன்றார்கள். மற்போரில் இடுப்புக்குக் கீழே தாக்குதல் நடத்துதல் முறையல்ல என்று தெரிந்தும் இதோ என் ஆருயிர் நண்பனை,துரியோதனனை வஞ்சகமாய்க் கொன்றார்கள். இன்னும்... இன்னும் பாரதப் போரெங்கும் துரோகம் மட்டுமே ஆட்சிசெய்து வந்திருக்கின்றது. கண்ணா! நீயிருக்கும்வரை பாண்டவர்களைக் கொல்லமுடியாது என்று எனக்குத் தெரியும். நான் போகிறேன் கண்ணா! இன்னும் சொல்கிறேன் கேள்.....! 

சலனமற்று ஓடும் நதிபோன்ற வாழ்க்கையில் "துரோகத் துக்கம்" ஒரு சுழிப்பை ஏற்படுத்திச் செல்கிறது. அதன் சுழலில் சிக்குபவர் எப்போதும் உறங்குவதில்லை. அவர்களுடைய கண்கள் என்றும் மூடுவதில்லை. துரோகிக்கப்பட்டவரது அழுகுரல்தான் பூமியெங்கும் நிரம்பியிருக்கின்றது. துரோகத்தால் பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரலில் நான் கலந்திருப்பேன் கண்ணா! துரோகிகளின் காதுகளில் அந்த ஒலி காலாகாலத்துக்கும் கேட்டுக்கொண்டே இருக்கட்டும். துரோகிகளின் நெஞ்சம் எப்போதுமே "துரோகம் செய்து விட்டோமே" என வருத்தப் பட்டுக்கொண்டே இருக்கட்டும்."

அஸ்வத்தாமா காற்றோடு கரைந்துபோனான். இன்றும் அவன் சிரஞ்சீவியாய் அலைந்துகொண்டே இருக்கின்றான். துரோகத்தால் யாரெல்லாம் பாதிக்கப் பட்டிருக்கின்றனரோ, அவர்களில் அஸ்வத்தாமா வாழ்ந்து வருகிறான் . அஸ்வத்தாமாவை யாராலும் அழிக்கவும் முடியாது.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...