Tuesday, July 19, 2016

வேகத்தில்நான்குனேரி சிறப்புப் பொருளாதார மண்டலம்:

ஆமை வேகத்தில்நான்குனேரி சிறப்புப் பொருளாதார மண்டலம்:
ஆர். முருகன் (தினமணி  -18/7/2016)
--------------------------------------
 மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதற்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும் நான்குனேரியில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி, #நான்குனேரிசிறப்புப்பொருளாதார மண்டல அடிக்கல் நாட்டு விழா கடந்த 2001-ஆம் ஆண்டு நடைபெற்றது.
இருந்தபோதிலும், இந்தத் திட்டம் ஆமை வேகத்திலேயே நடைபெறுகிறது என்று கூற வேண்டும்.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ), ஏஎம்ஆர்எல் ஹைடெக் சிட்டி நிறுவனம் ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகின்றன. இதற்காக, நான்குனேரியில் 2,518 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில், 1,700 ஏக்கர் நிலம் தொழிற்சாலைகளுக்கும், 818 ஏக்கர் நிலம் தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர் சமூக நலன் சார்ந்த பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படும்.
சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அடிப்படைக் கட்டமைப்புகளை அமைக்கும் பணி எஸ்ஆர்இஐ என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிறுவனமானது கட்டமைப்புப் பணிகளுக்கான தொகையைச் செலவிட்டு அதைப் பொருளாதார மண்டலத்திடம் வசூலித்துக் கொள்ளும். இதன்படி, நான்குனேரி மண்டலத்தில் இரு கட்டங்களாக பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த மண்டலத்துக்காக ரூ. 1.77 கோடியில் தனியாக குடிநீர்த் திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, 1,104 ஏக்கர் பரப்பளவில் சாலை, குடிநீர், மின்சாரம், புதை சாக்கடை, கழிவு நீரோடை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த ரூ.750 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2014-15ஆம் ஆண்டிலேயே இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. 2016-17ஆம் ஆண்டுக்குள் முதல் கட்டப் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, 2-ஆம் கட்டமாக 1,414 ஏக்கருக்கான பணிகள் நடைபெறும். இதில், மருத்துவமனை, ஹோட்டல், தங்கும் விடுதி, கேளிக்கை வசதி என சமூகக் கட்டமைப்புகள் இடம்பெறும். இதற்காக, ரூ.1,450 கோடி செலவிடப்படவுள்ளது.
பொருளாதார மண்டலத்தில் இதுவரை 31 நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளன. இவற்றில் 8 நிறுவனங்கள் தங்களது உற்பத்தியைத் தொடங்கிவிட்டன.
மூன்று நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளுக்கான கட்டுமானங்களைத் தொடங்கியுள்ளன. எல்இடி பல்புகள் தயாரிக்கும் நிறுவனம் மற்றும் எலக்ட்ரிகல், பொறியியல் தொழில்நுட்ப உபகரணங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. ரூ. 252 கோடியில் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.
தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம், நான்குனேரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ரூ. 436 கோடிக்கு முதலீடு கிடைத்துள்ளது.
ஏழு சிறு, குறு நிறுவனங்கள் ரூ. 161 கோடி, சீனாவிலிருந்து ஒரு நிறுவனம் ரூ. 275 கோடி முதலீடு செய்துள்ளன.
இங்கு தொழில் தொடங்க வருவோருக்கு வருமான வரிச் சலுகை, சுங்க வரிச் சலுகை, முதலீட்டு மானியம், இட வசதி, கடனுதவி எனப் பல்வேறு உதவிகள் வழங்கப்படும். தொழில் தொடங்குவதற்கான அனுமதியும் ஒற்றைச் சாளர முறையில் 30 நாள்களுக்குள் வழங்கப்படும் என தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் அறிவித்தாலும் பெரிய அளவிலான தொழிற்சாலைகளின் கவனத்தையோ, பன்னாட்டு நிறுவனங்களின் கவனத்தையோ ஈர்க்க முடியவில்லை. மாநில அரசு தீவிர முயற்சி எடுத்தால் மட்டுமே திட்டத்தின் நோக்கம் சாத்தியமாகும் என்கின்றனர் தொழில் ஆர்வலர்கள்.
இந்தத் திட்டம் முழுமையாக அமலுக்கு வந்தால் நேரடியாக 75 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 50 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இப்போது உற்பத்தி தொடங்கிய நிறுவனங்கள் மூலம் ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
2001-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டிருந்தாலும், 2013-ஆம் ஆண்டில்தான் அனைத்து உடன்படிக்கைகளும் ஏற்பட்டு, ஏஎம்ஆர்எல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்கு முழுமையாக வந்தது. 2013-ஆம் ஆண்டு தொடங்கி கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 436 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. சீனா, கொரியா, மலேசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சிறப்புக் கண்காட்சி நடத்தி தொழில் நிறுவனங்களுக்கு ஏஎம்ஆர்எல் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. இருப்பினும் குறிப்பிடத்தக்க பன்னாட்டு நிறுவனங்களின் பங்களிப்பு இதுவரை இல்லை.
தமிழக அரசு இந்தத் திட்டத்துக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து பெருமுதலாளிகளையும், பன்னாட்டு நிறுவனங்களையும் நான்குனேரியில் முதலீடு செய்ய அழைத்து வர வேண்டும் என்று கூறுகிறார் ஏஎம்ஆர்எல் நிறுவனத்தின் மேலாளர் ஏ. தேவராஜன்.
நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்தால் மட்டுமே அவர்களுக்குத் தேவையான நிலத்தை ஒதுக்கீடு செய்து, பிற அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்த முடியும்
என்கிறார் அவர்.
3 மார்க்கங்களில் போக்குவரத்து வசதி
தமிழகத்தில் வேறு எந்தப் பொருளாதார மண்டலத்துக்கும் இல்லாத பல்வேறு வசதிகள் நான்குனேரிக்கு உள்ளன. தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்தில் 34 கி.மீ. தொலைவில் திருநெல்வேலி, கன்னியாகுமரிக்கு 40 கி.மீ., தூத்துக்குடிக்கு 80 கி.மீ., மதுரைக்கு 180 கி.மீ., தொலைவு மட்டுமே. ரயில் போக்குவரத்து பொருளாதார மண்டலத்திலிருந்து நான்குனேரிக்கு 4 கி.மீ., வள்ளியூருக்கு 9 கி.மீ., திருநெல்வேலிக்கு 30 கி.மீ. தொலைவு மட்டுமே.
விமானப் போக்குவரத்தில் தூத்துக்குடிக்கு 75 கி.மீ., திருவனந்தபுரத்துக்கு 95 கி.மீ., மதுரைக்கு 170 கி.மீ, திருச்சிக்கு 330 கி.மீ., சென்னைக்கு 600 கி.மீ. தொலைவு மட்டுமே.
எனவே, கப்பல், சாலை, விமானம் என மூன்று மார்க்கங்களிலும் சரக்குகளை அனுப்பலாம்; தேவையான மூலப் பொருள்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யலாம்.
மின்சார ரயில் என்ஜின் தொழிற்சாலை அமையுமா?
2020-ஆம் ஆண்டில் இந்திய ரயில்வேக்கு சுமார் 5,334 டீசல் என்ஜின்களும், 4,281 மின்சார என்ஜின்களும், 50,880 ரயில் பெட்டிகளும் தேவைப்படுவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சுமார் ரூ.1.2 லட்சம் கோடி முதலீடு தேவைப்படும்.
இந்தச் சூழலில் நான்குனேரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் மின்சார ரயில் என்ஜின் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இதற்குப் போதுமான நிலம் உள்ளதால் ஆவன செய்யக் கோரி திருநெல்வேலி மாவட்ட தொழில் வர்த்தக கழகமும், மதுரை கோட்ட ரயில்வே ஆலோசனைக் குழுவும் ரயில்வே நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்துள்ளன.
மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தென் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...