Saturday, July 16, 2016

உழுவார் உலகத்தார்க்கு ஆணி!

இன்றைய (16.07.2016) தினமணியில் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றியும், விவசாயத்தை பாதுகாக்க முன்னெடுத்துசெல்லவேண்டிய அவசிய செயல்பாடுகள் பற்றி "உழுவார்  உலகத்தார்க்கு ஆணி!" என்ற தலைப்பில் தலையங்கப் பக்கத்தில் வெளிவந்துள்ள எனது பத்தி:

நேற்றைக்கு தமிழ்நாடு அரசு சிறு, குறு விவசாயிகளின் கூட்டுறவு கடன்கள் ரூ. 5,780 கோடி தள்ளுபடி செய்துள்ளது. இவ்வளவு பெரிய தொகையை தள்ளுபடி செய்தாலும் விவசாயிகள் பெரிய அளவில் நிம்மதியடையவில்லை. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், தனியார் வங்கிகளிலும், மற்ற நிதி நிறுவனங்களிலும் விவசாயிகள் வாங்கிய கடன்கள்தான் அதிகம். கூட்டுறவு கடன்கள் ரூ. 5 ஆயிரத்திலிருந்து ரூ. 40 ஆயிரம் வரைதான் இருக்கும். விவசாயிகள் டிராக்டர் கடன்கள் போன்றவைகளுக்கு லட்சக்கணக்கான அளவில் பணம் கடனாகப் பெற்றது தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளிடம் மட்டும்தான். எனவே இந்த கடன் தள்ளுபடி முழுமையான பலனை விவசாயிகளுக்கு சென்றடையவில்லை. திமுக அரசும் 2007ல் ரூ. 7000 கோடிக்கு மேல் கூட்டுறவு கடன்களை விவசாயிகளுக்கு ரத்து செய்தது. தேசிய வங்கியில் வாங்கிய கடன்கள் வட்டிக்கு மேல் வட்டி போட்டு விவசாயிகளை மிரள வைத்து தற்கொலைக்கு இழுத்துச் செல்கிறது. கூட்டுறவுக் கடன்களை திரும்பவும் பெற முடியாமல் விவசாயிகள் தவிக்கும் நிலை உள்ளது. இதுதான் விவசாயிகளுடைய கடன் சம்பந்தமான உண்மையான நிலைப்பாடு. இப்படியான நிலை இருக்கும்போது விவசாயியை "வயக்காட்டை உழுது போடு செல்லக்கண்ணு!" என்று எப்படி சொல்ல முடியும்?

தமிழகம் முழுவதும் 23 மத்திய கூட்டுறவு வங்கிகள், 3000 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இதன் மூலம்தான் விவசாயிகளுக்கு பயிர்க் கடன்கள் வழங்கப்படுகிறது. ஒரு சில காலக் கட்டங்களில் கடன் நிவாரணங்களால் இந்தக் கூட்டுறவு வங்கிகள் நெருக்கடிக்கு உள்ளாகின்றன. இதையும் மாநில அரசு சீர்படுத்தி இதை சரி செய்ய வைத்தியநாதன் குழு பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும். தி.மு.க. ஆட்சியில் கடன் நிவாரணத்தை சமாளிக்க இந்த வங்கிகளுக்கு நபார்டு வங்கி மூலம் ரூ. 1700 கோடி வழங்கியது. இது போக ரூ,400 கோடி தமிழக அரசுக்கு வரவேண்டி உள்ளது. இதையும் தி.மு.க. ஆட்சி முடிந்தபின் தமிழக அரசு பெறவில்லை. இந்தத் தொகையோடு இப்போது கடன் நிவாரண அறிவிப்புகளுக்கும் உரிய நிதி ஆதாரங்களை மத்திய அரசிடம் பெறவேண்டும். ஏற்கனவே வழங்கவேண்டிய நிலுவைத் தொகை ரூ. 400 கோடியை தமிழக அரசு பெறத் தவறியதால், நபார்டு வங்கி அதை மத்திய அரசிடமே திருப்பிக்கொடுத்துவிட்டது. முறையான திட்டமிடல் இல்லாததால், மாநில அரசுக்கு விவசாயிகள் கடன் விவகாரத்தில் இந்த இழப்பீடு ஏற்பட்டது. 

விவசாயிகள் இன்றைக்கு தங்களுடைய உரிமைகளை பாதுகாக்க முடியாமல் புழுப் பூச்சிகளாக நெளிகின்ற ஜீவன்களாக இருக்கின்றனர். ஒரு பக்கம் கடன் தொல்லை, வீட்டு செலவுகள், பெண் குழந்தைகளுக்கு திருமணம், குழந்தைகளுக்கு படிப்புச் செலவு... இப்படியாக விவசாயத்தை நம்பியே வாழ்க்கையை ஓட்டவேண்டி உள்ளது.  விவசாயமோ மழை பெய்யாமல் வறட்சியால் அடிக்கடி பொய்த்துப் போகின்றது. அப்படியே விளைச்சல் நன்றாக இருந்தாலும் தங்களின் உற்பத்தி பொருள்களுக்கு லாபகரமான விலை கிடைப்பதில்லை. விவசாய இடுபொருள்களின் விலையோ பன்மடங்கு உயர்ந்துவிட்டது. இந்த நிலையில் சமன்பாடான லாபகரமான பொருளாதார நிலை விவசாயிக்கு ஏற்படவில்லை. தங்களுடைய நிலத்தையும் விட முடியாமல் வருவாய் உள்ளதோ, இல்லையோ உழுதுகொண்டு இருக்கவேண்டிய கடமையும் சம்பிரதாயமும் இருக்கின்றது. மானத்திற்காக விவசாயத்தை இன்றைக்கு விவசாயிகள் செய்கின்றனர். நிலத்தை தரிசாக போட முடியாது. அப்படிப் போட்டால் கிராமத்தில் "என்னப்பா, நிலத்தை தரிசா போட்டுட்டியே..." என்ற பேச்சு. இந்த பரிகாசத்தை எல்லாம் கேட்கக் கூடாது என்பதற்காக கோவணம் கட்டிக்கொண்டாவது நிலத்தில் ஏதாவது விதைக்கவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். வேறு வழியில்லாமல் கடன் வாங்க வேண்டிய நிலை.  கடனை திரும்ப செலுத்த முடியாமல் வட்டிக்கு மேல் வட்டி ஏறுகிறது. இவ்வாறான சமூகச் சூழலில் விவசாயிகள் விரக்திக்குப் போய், இதுவரை விதர்பா , மகாராஷ்டிரம், ஆந்திரம், ஜார்க்கண்ட் போன்ற பகுதிகளில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக கடன் தொல்லை, விவசாயம் பொய்த்துப் போன காரணத்தினால் 80 விவசாயிகளுக்கு மேல் தற்கொலை செய்துகொண்டனர். தஞ்சை டெல்டா வறண்டதால் விவசாயிகள் உணவுக்கே வழியில்லாமல் கஞ்சி தொட்டியை திறந்தனர். 1975 ல் கடுமையான பஞ்சத்தினால் அப்போது விவசாயிகள் மக்காச்சோள கஞ்சியை உண்ணவேண்டிய நிலை.  இன்றைக்கு தமிழகத்தில் வங்கி அதிகாரிகள் விவசாயிகளை மிரட்டுகின்ற நிலைமை. விவசாயியோ அடிமைப் போல இரண்டாம் தரக் குடிமகனாக இருக்கிறான்.   

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பாலன் என்ற விவசாயி, டிராக்டர் வாங்கிய கடனுக்கான தவணையைச் செலுத்தாதது குற்றம் என்று கூறி தனியார் வங்கியின் அடியாட்களாலும், காவல்துறையினராலும் தாக்கப்பட்டார். தனியார் வங்கிகளின் கெடுபிடிகளாலும், அவமானப்படுத்தல்களாலும் அரியலூர் மாவட்டம் ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அழகர், உசிலம்பட்டி பால்ராஜ், கும்பகோணத்தை அடுத்த கொத்தங்குடியைச் சேர்ந்த தனசேகர், மேட்டுப்பாளையம் அருகே தேவாங்குபுரத்தைச் சேர்ந்த ராமசாமி ஆகிய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெருமாள், தனது மனைவி பழனியம்மாளுடன் வயலிலேயே நஞ்சுண்டு தற்கொலை செய்து கொண்டார்.  கடந்த 2011 - 2015 வரையில் தமிழகத்தில் 2436 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய அரசின் தேசிய மாதிரி கணக்கெடுப்பு ஆணையம் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இப்படியான விவசாயிகளினுடைய பாதிப்புகளை புள்ளி விவரங்களோடு நீண்ட பட்டியலிடலாம். இதற்கு ஒரு முடிவு வரவேண்டாமா?

விவசாயிகள் 1960களில் இருந்து தங்கள் உரிமைகளுக்காக போராடி, காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டுக்கு 40 பேருக்கு மேல் பலியானார்கள். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் விவசாயிகள் தற்கொலைகள் குறித்து "விவசாயிகள் தற்கொலை ஒரு பேஷனாகிவிட்டது" என்று வாய் கொழுக்க பேசியதுண்டு. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, "விவசாயத் தொழிலை விட்டுவிட்டு வெளியேறுங்கள்" என்று சொன்னார். அதே தொனியில் இன்றைய மோடி அரசின் விவசாயத் துறையின் துணை அமைச்சர் ஒருவர், "விவசாயத்தை விட்டு ஒழியுங்களேன்" என்று பேசியது விவசாயிகள் மத்தியில் வேதனையைத் தந்தது. இப்படியாக விவசாயிகள் பரிகாசத்துக்கு உரிய சமுதாயமாக ஆகிவிட்டார்களே என்ற வேதனையும் வாட்டுகிறது. விவசாயிகள் மட்டும் சாகவில்லை. இன்றைக்கு கிராமங்களும் சிறுக சிறுக செத்துப்போய்க் கொண்டுதான் இருக்கின்றன. தொடர்ந்து மழை பொய்த்ததால் 12 மாநிலங்களிலும் வறட்சியான நிலைமை. இந்த நிலைமையில் நாள் ஒன்றுக்கு இந்தியாவில் 42 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது,  தற்பொழுது 52 ஆக அதிகரித்துள்ளது. விவசாய பட்ஜெட்டு மதிப்பீடும் ரூ.15,809 கோடியாக குறைக்கப்பட்டுவிட்டது. 12வது திட்டக்காலத்திற்கு வேளாண்மைத் துறைக்கு வெறும் ஒரு லட்சம் கோடிதான் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. இது யானைப் பசிக்கு சோளப்பொறி போல உள்ளது. புதுடெல்லி விமான நிலையத்திற்கு முதலீடுத் தொகை ரூ.1.63 லட்சம் கோடி. இந்த அளவு கூட விவசாயத்திற்கு ஒதுக்கீடு இல்லை. ஆனால் நிதி அமைச்சரோ அருண் ஜெட்லி விவசாயிகளுடைய வருவாய் இரண்டு மடங்காகும் என்று சொல்கிறார். எப்படி என்று புரியவில்லை. 

விவசாயிகள் பிரச்சினைகளுக்காக எத்தனையோ குழுக்கள் அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் அனைத்தும் டெல்லி கிரிஷி பவனில் கடந்த 50 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கின்றது. சாஸ்திரி காலத்தில் "ஜெய் ஜவான், ஜெய் கிஷான்" என்ற கோஷத்தோடு விவசாயிகளின் பிரச்சினைகள் கவனத்தில் கொள்ளப்பட்டது. சாஸ்திரிக்கு முன்பு பண்டித நேரு, விவசாயத்தை விட தொழில்துறைக்கு முன்னுரிமைக் கொடுத்தார்.  இந்திரா காந்தி அவர்களும் தொழில், அணு ஆய்வு என்று வேறுத் துறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கினார். எதிரணியில் இருந்த சரண்சிங் போன்றவர்கள் எல்லாம் விவசாயத்துக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தது உண்டு.  இப்படியே நிலை சென்றால் விவசாயத்தைப் பற்றி எதிர்காலத்தில் சிந்துவெளி நாகரிகத்தை பற்றி அறிய மொகஞ்சதாரோ, ஹரப்பாவை ஆய்வு செய்தது போல எதிர்காலத்தில் கிராமங்களைத்தான் ஆய்வு செய்ய முடியும். விவசாயம் அறவே அழிந்துவிடுமோ என்ற பெரும் பதற்றம்தான் ஏற்படுகிறது. 

இவ்வாறான நிலையில் விவசாயத்தை பாதுகாக்கவேண்டுமென்றால் சில அவசிய செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும். 

1. விவசாய நிலங்களை சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற நிலையில் கையகப்படுத்துவதை நிறுத்தவேண்டும்.
2. 1960 கால கட்டங்களில் நடைமுறைக்கு வந்த பசுமைப் புரட்சி என்ற நிலையில் விவசாய நிலங்கள் களர் நிலங்களாகிவிட்டன. இயற்கை விவசாயத்தை அவசியம் பேணி காக்கின்ற வகையில் சில சட்டங்களை முன்னெடுக்க வேண்டும். 
3. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை முழுமையாக ஒழிக்கவேண்டும். 
4. விவசாயிகளுக்கு வட்டியில்லாத கடன்கள் வழங்க வேண்டும்.
5. விவசாயிகளுடைய குழந்தைகள் கல்லூரிகளில் படித்தால் சிறப்பு சலுகைகள் வழங்கவேண்டும்.
6. விவசாயிகளுடைய அனைத்து வங்கிக் கடன்களை அறவே தள்ளுபடி செய்ய மத்திய மாநில அரசுகள் முடிவுகள் மேற்கொள்ளவேண்டும். 
7. உலக மயமாக்கல், தாராள மயமாக்கலால் விவசாயப் பாதிப்பைத் தடுக்கவேண்டும். 
8. விவசாய விளைபொருட்களுக்கு கட்டுபடியான விலையை நிர்ணயம் செய்ய அரசும், விவசாயிகளும் கொண்ட சட்ட அதிகாரம் பெற்ற ஒரு கமிஷன் ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கவேண்டும். 
9. விவசாய இடுபொருள்களை மானியத்தில் எளிதாக தட்டுப்பாடில்லாமல் விவசாயிகளுக்கு வழங்கவேண்டும்.
10. திரைத்துறைகளில், இலக்கியத்தில் விருதுகள் வழங்குவதைப் போல நாட்டின் சிறந்த விவசாயிகளுக்கு விருதுகளும் வழங்கப்படவேண்டும்.
11. தொழிற்சங்கங்களைப் போல விவசாய சங்கங்களும் உரிய உரிமைகளோடு அரசோடு பேச்சுவார்த்தை நடத்த உரிய சட்டபாதுகாப்பு வழங்க வேண்டும். 
12. ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளை ஆழப்படுத்தி அங்குள்ள கருவேல மரங்களை அறவே அழிக்கவேண்டும். 
13. விவசாய நிலங்களில் உள்ள கருவேல மரங்களைப் போன்ற மரவகைகளை அனுமதிக்கக் கூடாது. அதை அரசே முன்னின்று அந்த அழிப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும்.
14. தமிகத்தில் காவிரி, முல்லைப்பெரியாறு, ஆழியாறு-பரம்பிக்குளம், பாண்டியாறு-புன்னம்புழா, குமரி மாவட்டம் நெய்யாறு, அச்சன்கோவில்-பம்பை-வைப்பாறு இணைப்பு, செண்பகவல்லி, உள்ளாறு, அழகர் அணை, கோதையாறு-கீரியாறு, பாலாறு, பொன்னியாறு போன்ற நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
15. தடையில்லாத மின்சாரத்தை தொழிற்சாலைகளுக்கு வழங்குவதைப் போல, விவசாய பம்பு செட்டுகளுக்கும் வழங்க வேண்டும்.
16. பயிர் காப்பீடு ஒப்புக்கு இல்லாமல் உண்மையான காப்பீடாக செயல்படுத்தப்படவேண்டும்.
17. ஒவ்வொரு வட்டத் தலைநகர்களிலும் மரபு சார்ந்த விதை பண்ணைகளும், கிட்டங்கிகளும் அமைக்கப்படவேண்டும்.
18. ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 100 நாட்கள் வேலையை கூடுதலாக்கி, விவசாயத் தொழிலுக்கு இந்த திட்டத்தைப் பயன்படுத்தவேண்டும்.
19. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் தானிய சேமிப்புக் கிடங்கு அமைக்க வேண்டும்.
20. வனவிலங்குகளால் விவசாயப் பொருள்கள் தொடர்ந்து அழிக்கப்படுகின்றன. அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
21. சொட்டுநீர் பாசன முறையை மேலும் விரிவுபடுத்தவேண்டும். 
22. விவசாய நிலங்களில் செல்பேசி கோபுரங்கள் அமைப்பதைத் தடுக்கவேண்டும்.
23. தரிசு நிலங்களை முறையான விளைச்சல் நிலங்களாக்க முறைப்படுத்தவேண்டும்.
24. மீத்தேன் வாயு, எரிவாயு குழாய் பதிப்புகள் போன்ற ரசாயன சூழல்களுக்கு விளைநிலங்களைப் பயன்படுத்தக்கூடாது.
25. நீர் நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை விவசாயத்திற்காக மாட்டு வண்டிகளில் எடுத்துச் செல்ல எந்தவிதத் தடையும் இருக்கக் கூடாது.

இவையெல்லாம் இன்றைய விவசாயிகளின் நிலையும், அதை பாதுகாக்கக்கூடிய நடவடிக்கைகளும் ஆகும். 

'மணப்பாறை மாடு கட்டி..
மாயவரம் ஏரு பூட்டி.. 
வயக்காட்டை உழுது போடு 
செல்லக்கண்ணு!'' 

தொன்றுதொட்டு இருக்கும் வேளாண்மை மறையாமல்; உயிரோட்டமான இந்த வரிகளில் உள்ள நமது விவசாயக் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டாமா?

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...