Sunday, July 24, 2016

Eelam

கொழும்பு மாநகர சபை ஒரு காலத்தில் தமிழரின் எரிந்த உடலங்களையும் வாகனங்களோடு சேர்த்து எரியூட்டப்பட்ட உடலங்களையும் கண்டதுண்டமாக வெட்டிச் சரிக்கப்பட்ட உடலங்களையும் குப்பையைப் போல கூட்டிச் சுத்தம் செய்து அப்புறப்படுத்திய வரலாறும் இருக்கிறது. அதுதான் 1983 ஜூலை இனச் சுத்
திகரிப்பு....

இதைப்பற்றி சிங்களக் கவிஞர் ஒருவர் எழுதிய கவிதை படித்த ஞாபகம் இருக்கிறது. அதில் அவர் குறிப்பிட்டிருந்தனவற்றை எனது மொழிநடையில் தருகிறேன். இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே.....

யாழ்ப்பாணத்தில் 13 இராணுவத்தை  புலிகள் கொன்றுவிட்டார்கள் என்ற செய்தி கசிந்த மறுகணமே எரிவாயுச் சிலிண்டர் வெடித்து தீ கோளமாக கொழுந்துவிட்டு எரிவதைப்போல கோழைத்தனமான இனவாதத்தீயும் சடுதியில் பற்றிக்கொண்டது. வெட்டியும் கொத்தியும் குத்தியும் குதறியும் அடித்தும் எரித்தும் ஆயிரமாயிரம் உயிர்கள் ஓரிரு நாட்களில் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. ஐக்கியதேசியக் கட்சியின் ஆட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஜே.ஆர்.ஜெயவர்த்தன என்ற இனவாதி, இதைத் தூண்டிவிட்டு மௌனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நேரம் அது.

அந்த சம்பவங்களில் ஒன்றைத்தான் கவிஞர் பசில் பெர்னாண்டோ என்பவர் எழுதியிருந்தார்.

அதாவது வழமையைப்போல் கார் ஒன்று மறிக்கப்படுகிறது. அந்த இடங்களில் ஏனைய கார்கள் எரிந்துகொண்டிருக்கின்றன. மறிக்கப்பட்ட கார் தமிழருடையது. உள்ளே ஒரு குடும்பம், கணவன் மனைவி நான்கு ஐந்து வயதான ஆண் பெண் என இரு பிள்ளைகள். லீட்டர் கணக்கில் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த பெட்ரோல் கார் முழுவதும் ஊற்றப்படுகிறது. அந்நேரம் அந்தக் காடையர் கும்பலிலிருந்த ஒருவன் சட்டென கதவைத்திறந்து இரண்டு பிள்ளைகளையும் பிடித்து வெளியே இழுக்கிறான். தாயையும் தந்தையையும் இறுக பற்றியிருந்த பிள்ளைகள் பிடித்தபிடி விடாமல் மரண ஓலம் எழுப்புகின்றனர். அதற்குள் ஒருவன் தீப்பெட்டியை உரசிக் கொள்ளவே கார் தீப்பிடித்து எரிகிறது. காடையனின் முரட்டுப் பிடியால் பிள்ளைகள் இருவரும் வெளியே இழுத்து விடப்பட்டனர். கொழுந்துவிட்டு எரியும் காரின் உள்ளே உயர் வெப்பத்தில் தாயும் தந்தையும் கதறுகின்றனர். காடையர்களுக்கு இது ஒரு சாதாரண சந்தோசம்மிக்க சம்பவம். தமிழனை அழித்துவிட்ட மகிழ்ச்சிப் பெருக்கில் அவ்விடம் விட்டு நகர்கின்றனர் வேறு கார்களைக் குறி பார்த்து. சட்டென எரிந்துகொண்டிருந்த காரின் கதவு திறக்கப்படுகிறது, குறையாக எரிந்துகொண்டிருந்த தந்தை வெளியே வேகமாகப் பாய்ந்து கதறிக்கொண்டிருந்த பிள்ளைகள் இருவரையும் வாரி அணைத்துக்கொண்டு காருக்குள் மீண்டும் புகுகிறார். பொல்லாத நெருப்பு பொசுக்கிவிடுகிறது அந்த ஒற்றைக் குடும்பத்தை. தன் பிள்ளைகள் வெளியே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் வெறி பிடித்த காடையர்கள் அவர்களை நார் நாராக கிழித்து சித்திரவதை செய்வார்களே என்ற காரணத்தாலேயே தம்மோடு அவர்களையும் சேர்த்து சாவை அணைத்துக்கொண்டது அந்த அழகான குடும்பம். சில நாட்களாக அந்த எரிந்த கார் அதேயிடத்தில்தான் ஏனைய எரிந்தனவற்றோடு நிற்கப்போகிறது, சிலநாளில் மாநகரசபை அதனை அப்புறப்படுத்திவிடும்.
 அதற்கு நகரின் சுத்தம்தானே முக்கியம்!

இவ்வாறுதான் தென்னிலங்கை முழுவதும் தமிழர் உடல்கள் இறவாமலே இனவாத நெருப்பால் கொள்ளியேற்றப்பட்டன. மறக்கச்சொல்லிக் கேட்டார்கள், ஆனால் எப்படி மறப்பது? மன்னிக்கச் சொன்னார்கள் ஆனால் எப்படி மன்னிப்பது? மறப்பதற்கும் மன்னிப்பதற்கும் மரம் அல்லவே நாங்கள். இருந்தும் மறப்பையும் மன்னிப்பையும் ஒரு மூலையில் வைத்துவிட்டு சமாதானத்துக்கு வந்தோம், அதற்குள் கொத்துக்கொத்தாக கொய்து விட்டார்கள் முள்ளிவாய்க்காலிலே.

நல்லிணக்கம் நல்லிணக்கம் என்று எங்களை நரசம்ஹாரம் செய்ததுதான் பெரும்பான்மையின் இருப்பு. நாங்கள் குட்டிக்கொண்டே இருப்போம் நீங்கள் குனிந்துகொண்டே இருங்கள் என்கிறது நல்லிணக்கத்தின் அடிப்படை வரைவிலக்கணம். இதில் குனிய மறுத்தவர்கள் குதறிக் கொல்லப்பட்டார்கள், குட்டு வாங்கிக்கொண்டே நீதி கேட்டவர்கள் கொடுமையாக அச்சுறுத்தப்பட்டனர். ஆனால் குட்டக் குட்டக் குனிந்து குனிந்து வாங்கியவர்களோ நாயிலும் கீழாக மதிக்கப்பட்டு நல் எலும்புத்துண்டுகளின் விருந்தினராகிவிட்டனர். இவர்கள்தான் கேட்கின்றனர், துகிலை உரிந்தபின் துண்டையும் பிடுங்கி மானபங்கப்படுத்த வருவர் அப்போதும் புன்னகைத்தவாறே காட்சியளியுங்கள் என்று.

விசித்திர ஜந்துக்கள்!

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...