Friday, July 15, 2016

மோயாறு:

மோயாறு:
---------
பவானி ஆறு நீலகிரியின் தெற்குப் பகுதியில் பாய்கிறது என்றால், மோயாறு நீலகிரியின் வடக்குப் பகுதியில் பாய்கிறது. பவானி, பல்வேறு ஊர்களின் வழியாகப் பயணிக்கிறது. #மோயாறு, வனத்தில் மட்டுமே பயணிக்கிறது. இவை இரண்டும் சந்திக்கும் இடத்தில்தான் பவானி சாகர் அணை கட்டப்பட்டுள்ளது.

மோயாறு பள்ளத்தாக்கு குறித்து பேசிய கானுயிர் செயல்பாட்டாளர் சக்திராஜன், “மோயாற்றின் தெற்குப் பகுதியும் வடக்குப் பகுதியும் இருவேறு உயிர்ச் சூழலைக் கொண்டவை. மோயாற்றின் தெற்கே கொடநாடு இருக்கிறது. வடக்கே சத்தியமங்கலம், தலைமலை, தாளவாடி வனம் இருக்கிறது. கொடநாடு, சோலைக் காடுகளைக் கொண்ட குளிர் பிரதேசம். சத்தியமங்கலம், புதர் காடுகளைக் கொண்ட வெப்பப் பிரதேசம். கொடநாட்டில் வசிக்கும் கருமந்தி, இருவாச்சிப் பறவைகள், பழுப்பு மரநாய், ஈ பிடிப்பான் பறவை ஆகியவை, ஆற்றுக்கு அந்தப் பக்கம் சற்றே தொலைவிலுள்ள சத்தியமங்கலம் வனப் பகுதியில் கிடையாது. இதுதான் இந்த உயிர்ச் சூழலின் சிறப்பு. இரண்டு வனங்களுக்கும் ஆதாரமாக இருக்கிறது மோயாறு. மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் இணையும் வனப் பகுதிகளில் இதுவும் ஒன்று. யானைகள், புலிகள், கழுதைப் புலி, வெளிமான் ஆகிய நான்கு விலங்குகளும் வாழும் உலகின் ஒரேயொரு இடம் மோயாறு பள்ளத்தாக்கு மட்டுமே” என்றார்.

கொடநாடு வனத்தில் காணப்படும் அரிய வகை பழுப்பு மரநாய். | படம்: கல்யாண் வர்மா

இந்தப் பகுதியில் ரங்கசாமி மலை என்ற உயரமான சிகரம் இருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 5,855 அடி உயரம் கொண்டது. 1950-ல் ஏர் இந்தியா விமானம் ஒன்று அதன் மீது மோதி விபத்துக்குள்ளானது. அந்த மலையின் மீது ஏறுவது அவ்வளவு சுலபம் அல்ல. அங்கே யாரும் செல்வதும் கிடையாது. மேலே ரங்கசாமி கடவுளுக்கு தூண் ஒன்றும் இரு பாத அச்சுகளும் இருக்கின்றன. ரங்கசாமி கடவுள் தனது மனைவியுடன் சண்டையிட்டு, கோபித்துக் கொண்டு மலை உச்சிக்கு சென்றுவிட்டார் என்கிறார்கள் இங்குள்ள பழங்குடியினர்.

காலியாகும் தெங்குமரஹெடா கிராமம்

ஆற்றை நம்பி வாழும் தெங்குமரஹெடா கிராமம் இன்னும் எத்தனை காலம் அங்கிருக்கும் என்று தெரியவில்லை. கோத்தகிரியின் கீழ் பகுதியிலிருக்கும் தெங்குமரஹெடா கிராமம் ஆங்கிலேயர் ஆட்சியின் போது வனத்துக்குள் சில வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. அப்போது, இங்கே சுமார் 130 படுகர் இன மக்களுக்கு விவசாயம் செய்து கொள்ள நிலம் ஒதுக்கப்பட்டது. இன்றைக்கு அவர்களில் கணிசமானோர் விவசாயம் செய்வதில்லை. வெளியே இருந்து வந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்தான் அந்த நிலங்களில் விவசாயம் செய்கின்றனர். மேலும், அந்த விவசாய நிலங்களை யாரும் சொந்தம் கொண்டாடவும் முடியாது. அது, அங்கிருக்கும் கூட்டுறவுச் சங்கத்தின் பெயரில் இருக்கிறது. இருக்கும் வரை அனுபவித்துக் கொள்ளலாம்.

மேலும், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அறிவிக்கப்பட்டபோதே இந்தக் கிராமத்தில் மக்களின் இருப்பு குறித்து கேள்வி எழுந்தது. தவிர, கடந்த புலிகள் கணக்கெடுப்பில் இந்தப் பகுதியில் கணிசமான அளவு புலிகளின் எண்ணிக்கை அதிகரித்ததும் தெரிய வந்தது. இதனால், வனத் துறை சார்பில் இங்குள்ள மக்களுக்கு நஷ்டஈடு அளித்து வேறு பகுதியில் குடியமர்த்துவதற்கான ஆலோசனைகள் தொடங்கியிருக்கின்றன. அதேபோல், இந்த கிராமத்துக்குள் வெளி நபர்கள் வரவும், தங்கவும் வனத் துறையின் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

தெங்குமரஹெடா வனத்தில் கழுதைப் புலி. | படம்: ரத்ன வர்ஷினி

ஆண்களை வெறுத்த அல்லி ராணி

மோயாறு பள்ளத்தாக்கின் பழங்குடியினர் இடையே செவிவழிக் கதைகளுக்கு பஞ்சமே இல்லை. அவை பெரும்பாலும் ஆற்றைச் சுற்றியே சுழல்கின்றன. மோயாறு பள்ளத்தாக்கில் அல்லி மோயாறு என்ற இடம் இருக்கிறது. பழங்குடியினர் வசிக்கும் கிராமம் அது. அங்கே ஒரு கோட்டையின் எச்சங்கள் இன்றும் உண்டு. “இந்தக் கோட்டையை ஆட்சி செஞ்சது அல்லி ராணி. அவங்க தெனமும் மோயாத்துலதான் குளிப்பாங்க. ராணி குளிக்கிறப்போ யாரோ ஆம்பிளைங்க ஒளிஞ்சிருந்து பார்க்குறாங்களோன்னு அவங்களுக்கு சந்தேகம். அதனால, ஆம்பிளைங்களைக் கண்டாலே அந்த ராணிக்குப் பிடிக்காது. ராணி குளிக்கும்போது காட்டைச் சுத்தியும் ராணியோட பெண் வீரர்கள் காவல் காப்பாங்க. ஒருகட்டத்துல இந்த பகுதியில ஆம்பிளைங்க நுழையவே ராணி தடை விதிச்சாங்க. அதையும் மீறி காட்டுக்குள்ள நுழைஞ்ச ஆம்பிளைங்க விஷ வண்டு கடிச்சு செத்துப் போயிட்டாங்க” என்கிறார்கள் இந்தப் பழங்குடியினர்.

இந்தியாவில் ராஜஸ்தானுக்கு அடுத்து மழை குறைவாக பெய்யும் 2-வது மாநிலம் தமிழகம். இங்கு ஆற்று நீர் மூலம் 36,000 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் கிடைக்கிறது. இதில், தமிழகத்தின் மழை பிடிப்பு பகுதிகளிலிருந்து கிடைப்பது 24,000 மில்லியன் கன மீட்டர். 12,000 மில்லியன் கன மீட்டர் பிற மாநிலங்களின் மழை பிடிப்பு பகுதிகளின் மழை நீரால் கிடைக்கிறது.

ஸ்வீடன் நாட்டு நீரியல் நிபுணர் டாக்டர் மாலின் கருத்தின்படி ஒரு நாட்டின் மக்களுக்கான ஆரோக்கியமான குடிநீர் தேவை நபருக்கு ஆண்டுக்கு 2,000 கன மீட்டர். இது 1,700 கன மீட்டராக குறைந்தால் அது வறட்சியான நாடு. அதுவே 1,000 கன மீட்டருக்கும் குறைந்தால் அந்த நாட்டின் பொருளாதாரம், மக்களின் நல்வாழ்வு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும். அப்படி எனில் ஒரு நபருக்கு ஆண்டுக்கு 700 கன மீட்டர் மட்டுமே தண்ணீர் கிடைக்கும் தமிழகம், வறட்சி நிறைந்த மாநிலம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதன் அடிப்படையிலேயே ‘தமிழகத்துக்கான நதி நீர் பங்கீடு முடிவு செய்யப்பட வேண்டும்; இதன் அடிப்படையிலேயே விவசாயம், பாசனம், நீர் மேலாண்மை திட்டங்களுக்கான மத்திய அரசின் நீதி ஒதுக்கீடு பெற வேண்டும்’ என்பது ஆய்வாளர்களின் கருத்து.

(பாய்வாள் பவானி) - The Hindu
#Sathyamangalam #Bhavanisagar  #Thengumaragada #சத்தியமங்கலம் #தெங்குமரஹெட்#riverwaterissue

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...