Tuesday, July 26, 2016

விடுதலைப் பிரகடனம்

வரலாற்று சிறப்பு மிக்க தமிழ் மக்கள் விடுதலைப் பிரகடனம் 
http://telo.org/?p=168283&lang=ta

இலங்கையில் தமிழ் சிங்கள மக்கள் மொழி இன கலாச்சாரங்களில் இணைந்தவர்கள். அவர்கள் தமது இனஉறவுகளின் அடிப்படையை நன்கு புரிந்தே வரலாற்று காலம் தொட்டு வாழ்கிறார்கள். இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் சிங்கள பௌத்த இனவாத கட்சிகள், தமது பதவிக்காலங்களில் பௌத்த இனவாத இராணுவ அரச இயந்திரங்களை பாவித்து #இலங்கையில் இரு மொழிபேசும் மக்களையும் பிரித்து மோதவிட்டு தமது சுயலாபங்களை ஈட்டி சென்று விடுகின்றனர். இதன் அடிப்படையில் இன்றுள்ள இலங்கை அரசும் அதன் உச்சக்கட்டமான நடவடிக்கையில் தானே மாட்டிக் கொண்டிருப்பது நல்ல உதாரணங்களாகும்.

1956,1958,1961,1977,1981,1983,2009(முள்ளிவாய்கால்), இலங்கையில் தமிழ் மக்களின் மீதான தொடரச்சியான இனப்படுகொலைகள், சிறைச்சாலைகளில் கொலைகள், தமிழ்மக்கள் காணாமல் போதல், தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் வாழ்வியல் அத்துமீறல்கள், போன்றவற்றிலிருந்து இலங்கைத் தீவில் சிங்கள பௌத்த இனவாதமே இலங்கைத்தீவின் பிரதான எதிரியாகும், எதிரிகளாக்கும் உணர்ச்சி அரசியல் இலங்கையில் நிரந்தர அமைதியை தராது என்பதையும் தெளிவாக அடையாளம் கண்டு இலங்கையில் தமிழ்-சிங்கள சமத்துவத்துவத்திற்கான போராட்டத்தை மக்கள் நடாத்த வேண்டும் என்பதை தோழர் தங்கத்துரையின் விடுதலைப் பிரகடனம் வெளிப்படுத்துகின்றது.

 தமிழ் உரிமைப் போராட்டத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான தோழர் #தங்கத்துரையின் தமிழ் மக்களுக்கான விடுதலைப் பிரகடனத்தை இலங்கையில் இனவாதத்தின் உச்ங்களில் ஒன்றான 1983ம் ஆண்டு யூலை இனக்கலவரத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்களினதும், அன்று சிறையில் கொல்லப்பட்ட 52 தமிழ் அரசியல் கைதிகளின் நினைவு அஞ்சலியாகவும் இங்கு பதிவிடுகின்றோம்.
1983 பெப்ரவரி 24ம் திகதி சிறிலங்காபாசிச நீதிமன்றத்தில் தோழர் தங்கத்துரை அவர்கள் வெளியிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் பிரகடனம்

 

கனம் நீதிபதி அவர்களே!

………………………………………………………….

சிறீலங்காவின் நீதிமன்றம் எதற்கும் எம்மை விசாரிப்பதற்கான அதிகாரம் உரிமை கிடையாதென்ற எமது ஆரம்ப ஆட்சேபனையையும் மீறி சிறீலங்கா அரசின் நிதி நிர்வாகப் பிரிவின் ஓர் அங்கமாகிய இம்மன்றம் எம்மீது இவர்களால் சோடிக்கப்பட்ட இவ்வழக்கை கடந்த நான்கு மாதங்களாய் விசாரித்து வந்துள்ளது.

நாமும் இரண்டாம் கட்டமாகிய பகிஸ்கரிப்பு என்பதனை மேற்கொள்ளாது இம்மன்றத்தின் விசாரணைக்கு சமூகமளித்தோம். எமது குற்றமற்ற தன்மை மற்றும் எமக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளை எமது சட்டத்தரணி சாட்சிகளின் மூலமாகவும் சித்திரவதைப் புகழ் சிறீலங்கா அரசு பொலிஸ் அதிகாரிகளை தமது குறுக்கு விசாரணையின்போது அடிக்கவைத்த குத்துக்கரணங்களாலும் மற்றும் சட்ட வாதங்களின் மூலமாயும் மிக வெற்றிகரமாய் நிரூபித்துவிட்டமை கண்கூடு.

வெள்ளையர் இந்நாட்டை சிங்களப்பிரபுகளிடம் தமிழ்மக்கள் தலைவிதியையும் சேர்த்து ஒப்படைத்து செல்கையிலே தமிழ்மக்கள் விடுதலையைக் கோரிவிடவில்லை. மாறாக சிங்களப்பிரபுக்கள் எம்மை இரண்டாம்தர பிரஜையாக்க மாட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்தது இயல்பே.

இதன் விளைவே தமிழ் தலைவர்கள் தம் இனம் நசிந்துவிடக் கூடாது என்ற தீர்க்க தரிசனத்துடன் கூடுதல் பிரதிநிதித்துவம் போன்ற விடயங்களை அப்போது வலியுறுத்தினர். அவர்கள் சந்தேகங்கள் தவறான அடிப்படையில் ஒன்றும் எழுந்துவிடவில்லை என்பதை வலியுறுத்தும் வகையிலேயே அமைந்தது மலையகத் தமிழர்களின் வாக்குரிமைப் பறிப்பு.

 அடுத்து வந்த கால்நூற்றாண்டு காலமாக தமிழ் மக்களது உரிமைகள் மட்டுமல்லாது மரபுவழிப் பிரதேசங்களும் தமிழ் தலைவர்களினது கடும் எதிர்ப்புகளையும் மீறி திட்டவட்ட முறையில் சிங்கள அதிகார அமைப்பு முறையினால் பறிக்கப்பட்டு வந்தமை ஒன்றுமே நடந்துவிடாத விடயங்கள் அல்ல. இக்காலகட்டத்தில் லட்சக்கணக்கான மக்களும் தமிழ்த் தலைவர்களும் தமது எதிர்ப்புகளை அகிம்சை முறையிலேயே மிக நாகரீகமாகவும் உறுதியுடனும் சத்தியாக்கிரக வழிகளிலும் காட்டினர். ஆனால் நடந்தது என்ன?

தீ நாக்குகள் தீண்டின நிராயுதபாணிகளான தலைவர்கள் மீது முதன்முதலில் காலிமுகத்திடலில் ஆயுதக் காடையர்கள் மூலம் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பின்னர் யாழ் செயலகத்தின் முன்பாக அப்பாவி மக்கள் தலைவர்கள் அடங்கிய சத்தியாக்கிரகிகள் மீது சிறீலங்காவின் ஏவல் இராணுவம் தனது காட்டுமிராண்டித்தனத்தைப் பிரயோகித்தமை நாகரீக உலகு தலை நிமிர்ந்து ஏற்றுக்கொள்ளக் கூடிய செய்கையல்ல.இப்படி ஒன்றா? இரண்டா? கடந்த முப்பத்தைந்து வருட காலமாக இத்தீவின் வாழ் தமிழ்மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட திட்டமிட்ட காடைத்தனங்கள் வன்முறைகள் எண்ணிக்கையில் அடங்கிவிடக் கூடியவையா? தமிழ் மக்களின் ஜீவனோபாய உடமைகள் மட்டுமா அவ்வப்போது சூறையாடப்பட்டன. எத்தனை தமிழ்ப் பெண்களின் கற்பு அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையிலேயே பறிக்கப்பட்டது.காலங்காலமாய் எங்களால் பேணிப் போற்றப்பட்டு வந்த கலைப்பொக்கிசங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இவற்றிற்கெல்லாம் சில லட்சம் ரூபாய்கள் ஈடுகட்டி விடலாம் என்பது எத்தகைய கேலிக்கிடம்.

இத்தனை இம்சைகளையும் கண்ட தமிழ் மக்கள் மனச் சோர்வுற்றார்களா. இல்லை. தமது போராட்டத்தில் இருந்து இம்மியேனும் பின்வாங்கினார்களா எனினும் கிடையாது. இவ் இம்சைகள் யாவும் இவர்களின் இலட்சியத்திற்கு உரம் போட்டவையாகவே அமைந்தன. சமயம் கிடைக்கும் போதெல்லாம் தமிழ் மக்கள் அதை சிறிலங்கா அரசால் நடத்திமுடிக்கப்பட்ட தேர்தல்களில் அதை உறுதியாய் நிரூபித்தனர்.

இனவெறியைத் தூண்டியும் இனப்படுகொலையை நடாத்துவதன் மூலமாயும் அரசியல் கூதல் காய்ந்து கொண்டிருக்கும் ஒரு அரசு நேர்மையான போராளிகளான எம்மைப் பார்த்து பயங்கரவாதிகள் என்பதிலும் வேடிக்கை வேறு என்ன இருக்க முடியும்? பாராளுமன்ற ஜனநாயகத்தின் அரைநூற்றாண்டு பூர்த்தியைக் கொண்டாடிய அதேவேளையில் இன்னொரு பக்கத்தில் தமிழ்த் தலைவர்களை அதே பாராளுமன்ற உறுப்பினர்களை அர்த்த சாமத்தில் இராணுவ வேட்டையாடிப் பிடிப்பதும் அவர்களை வீட்டுடன் வைத்தே தீயிட்டுக் கொழுத்த முயன்றமையும் உங்கள் ஜனநாயகப் பாரம்பரியத்தில் எத்தனையாவது அத்தியாயத்தில் சேர்த்துக் கொள்ளப் போகின்றன.

 எமது பூமியை எம்மிடம் தாரும்!

பயங்கரவாதம், கொள்ளை என்கிறீர்கள். சிறிலங்கா அரசின் ஏவல் படைகளினால் நடாத்திமுடிக்கப்பட்ட பயங்கரவாதங்களுக்கு இணையான பயங்கரவாதங்கள் இத்தீவில் எக்காலத்திலும் நடக்கமுடியா. அதே ஏவல் படைகள் சூறையாடிய தமிழ் மக்களின் சொத்துக்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டமையும் இத்தீவு மக்கள் ஒன்றுமறியாத இரகசியங்கள் அல்ல. போதாக்குறைக்கு அவ்வப்போது உங்களது அரசியல் ஏஜன்டுகள் அரசியல் என்ற பெயரில் துப்பாக்கிகளை சுழற்றித் திரிந்தமை மிக அண்மைக்கால வரலாறு. இத்தனை கேவலங்களையும் நடாத்தி முடித்திருக்கும் நீங்கள் எம்மை பயங்கரவாதிகளாக சித்தரிக்க கச்சை கட்டியிருப்பதைவிட இந்நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவை வேறு என்ன இருக்க முடியும்.

பிரிவினை கோருகின்றோம், நாட்டை துண்டாட முயற்சிக்கின்றோம் என சொலலகின்றீர்களே, நாம் எப்போது உங்களுடன் சேர்ந்து இருந்தோம்? ஜரோப்பியர்களால் கைப்பற்றப்பட்ட எமது பூமி எக்காலத்திலும் எம்மிடம் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை. அதனை நாம் இணைப்பு என்ற பெயரில் யாரிடமும் தாரை வார்க்கவும் இல்லை.

ஆக்கிரமிப்புக்கள் வேறுபட்ட அதிகார அமைப்புக்களினால் கைமாறி பொறுப்பேற்கப்பட்டு வரும் நிலையே இன்னும் நீடிக்கின்றதே அன்றி எம்பூமியை நாமே நிர்வகிக்கும் நிலை எம்வசம் இன்னமும் வரவில்லை.

 விஷவித்தை வளர்த்தது யார்?
இந்நிலையில் நாம் கோருவது விடுதலையே அன்றி துண்டாடல் அல்ல. இதை நாம் கோருவது நிச்சயம் குறுகிய மனப்பான்மையான ஒரு செய்கையன்று. இதை நாம் பெறுவதன் மூலம் எமது இலட்சியம் மட்டுமல்ல நிறைவேறுவது சிங்கள மக்களுக்கும் பெரும் நன்மையை செய்தவர்களாவோம். காரணம் அதன்பின் இனப்பிரச்சினையை பூதாகரமாக்கி அரசியில் பிழைப்பு நடத்துல் என்பது சிங்கள மக்கள் மத்தியில் எடுபடாது. இதனால் சிங்கள மக்கள் மொழி தவிர்ந்த ஏனைய விடயங்களில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையை பூரணமாக உணரவும், தமக்கு உண்டான அரசியல் பொருளாதார சமூக தளைகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவும் முன்வருவார்கள்.

எந்தவொரு தேசிய இனமும் தனது இறைமையை நிலைநிறுத்துவதையும் பறிக்கப்பட்டிருப்பின் அதை மீள பெற்றுக்கொள்ள முயற்சிப்பதையும் தேசத்துரோகமோ அன்றி பயங்கரவாதமோ என உலகில் எந்த ஒரு சாசனமும் கூறவில்லை. நமது உரிமைகளை நீங்கள் முதலிலேயே அங்கீகரித்திருப்பின் இந்நிலை இத்தீவில் தோன்ற வாய்ப்பில்லை. அங்கீகரிக்காமல் விட்டது மட்டுமல்ல மாறாக கடந்த 35 ஆண்டுகளாக உங்கள் அரசியல் சோரம் போகும் நிலையை மறைப்பதற்கு பதவி நாற்காலிகளை தக்க வைத்துக்கொள்வதற்கு அவ்வப்போது அப்பாவி சிங்கள மனதில் தமிழ் மக்களுக்கு எதிரான விஷ வித்தையே ஊன்றி வளர்த்துள்ளீர்கள். ஆனால் சிங்கள மக்கள் உங்கள் நச்சு வலையில் முற்றாக விழுந்து விடவில்லை என்பதை உங்களால் உருவாக்கப்பெற்ற இனக்கலவரங்களின் போது தமிழ் மக்களுக்கு தம்மால் முடிந்த பாதுகாப்புகளை வழங்கி காடையர்களிடமிருந்தும் உங்கள் ஏவல் படைகளினதும் கொடுமைகட்கு தமிழினத்தை முற்றாக பலியிடாது அனுப்பியதின் மூலம் நிரூபித்து வைத்துள்ளனர்.
விலங்குகளுக்கு உள்ள உரிமை கூட தமிழனுக்கு தரப்படவில்லை

வழமையாக சிறீலங்கா அரசின் எதிர்க்கட்சிகளே தாம் பதவிக்கு வருவதற்காக தமிழ் மக்களின் பிரச்சினையை ஆளும் அமைப்பு ஏதும் தீர்வு காண முயல்கையில் அதை எதிர்த்து கிளர்வதும் சிங்கள மக்களை தூண்டி விடுவதுமான ஒரு நிலையே இருந்து வந்துள்ளது. முதல் முறையாக ஒரு ஆளும் அமைப்பு நேரடியாய் தமிழ் மக்கள் பால் இனவெறியை தூண்டியமை கடந்த 6 ஆண்டு கால ஆட்சியின் மிக மோசமான நடவடிக்கை சிறீலங்காவின் ஆளும் அமைப்புக்கும் தமிழ் மக்களுக்கும் இடையேயான உறவு நிலை எப்போதும் இல்லாதவாறு மிகவும் பழுதுபட்ட ஒரு நிலையை தோற்றவித்தமையின் இத்தார்மீகப் பொறுப்பை தற்போதைய ஆளும் அமைப்பே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் பிரச்சினையை தீர்ப்போம் தீர்ப்போம் என்றே கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக சில சிறீலங்கா அதிகார அமைப்புக்கள் சொல்லி வருகின்றன. நாங்கள் உங்கள் தீர்வை ஏற்கின்றோமோ இல்லையோ நீங்கள் இது வரையில் கபடமற்ற முறையில் எக்காலத்திலும் தமிழ் மக்கள் பிரச்சினையை தீர்க்க உருப்படியான நடவடிக்கைகள் ஏதும் எடுத்துண்டா? மாறாக பிரச்சினையை தீர்க்கின்றோம் என்ற கபடப்போர்வையுடன் தமிழ் மக்களின் உரிமைப்போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்யும் காரியங்களிலேயே காலம் காலமாக ஈடுபட்டீர்கள்.உங்களிடம் தமிழ் மக்கள் எதை எதிர்பார்த்தார்கள்? பொருளாதாரத்தையோ அன்றி வேலைவாய்ப்பபையோ அல்ல. இவைகளை உங்கள் பொருளாதார கொள்கைள் என்றுமே நிறைவேற்றப் போவதுமில்லை என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். இல்லை, இவைகளை எல்லாம் நீங்கள் வழங்க முன்வந்தாலும் கூட இத்தீவில் தமிழர் தொடர்நது தமிழராக வாழ்வதற்கு என்ன உத்தரவாதம் உங்களினால் வழங்க முடியும். அது ஒன்றும் அல்லாத மீதி எந்த சுபீட்சமும் தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில் அன்னியமானவையே.
இத்தீவில் வன விலங்குகளுக்கேனும் ஓர் வரையறுக்கப்பட்ட பிரதேசம் உண்டு. ஆனால் தமிழன் தமிழனாக வாழ்வதற்கு பாதுகாக்கப்பட்ட வரையறை உள்ள எதுவும் உங்களால் இதுவரை வழங்கப்படவில்லை. நீங்களாகவே வழங்கப் போவதுமில்லை. இந்நிலைக்கு நாங்கள் வந்து பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாகின்றன.
விசாரணையின் நடுவே பிரதி சட்டத்தரணி ஜெனரல் அவர்கள் திரு யோகச்சந்திரன் என்ற குட்டிமணியை பார்த்து கேட்டார். “இந்நீதிமன்றத்தை உமக்குக் கிடைத்த மேடையாகப் பாவிக்கும் நோக்கமா?” என்று. எமக்கு எதற்கு மேடை? அப்படி ஒன்றை உருவாக்கித் தரும்படி நாமாக யாரையும் கேட்கவும் இல்லையே. மாறாக நீங்களே வலிந்து கொண்டு வந்து எம்மை இங்கு நிறுத்தியிருப்பதும் அல்லாமல் எம்மீது அபாண்டங்களையும் சுமத்தினீர்கள். எம்மீது பொய்களை புனைந்து சொன்னதும் அல்லாது எம்மையும் பொய்யராக்க எத்தனித்த போது சில உண்மைகளை இங்கு நாம் பேசினோமே அல்லாமல் நாம் மேடை நாடகம் எதுவும் ஆடவில்லை.
உண்மைக்கு மேடையோ அன்றி வெளிச்சமோ போட்டுக்காட்ட வேண்டியதில்லை. அது மிகவும் மகத்தானது. அது வெளிவருவதை எந்த சக்தியாலும் நிரந்தரமாய் தடுத்துவிட முடியாது.                                             எது பயங்கரவாதம்?
நாம் பயங்கரவாதிகளும் அல்லர். அதன் எந்த உருவையும் ஆதரிப்போரும் அல்லர். மாறாக அதை நாம் கண்டித்துள்ளோம் ஆனாலும் பயங்கரவாதம் பயங்கரவாதம் என ஓலமிடும் பெருந்தகையாளர் கட்சிக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். உங்களினால் கிளப்பி விடப்பட்ட இனத்துவேச தீயினாலும் ஆயுதக் காடையர்களினாலும் நூற்றுக்கணக்கான தமிழர் உயிரிழந்த போதிலும், தமிழ் பெண்கள் கற்பு அவர்கள் குடும்மப்தினர் முன்னிலையிலேயே பறிக்கப்பட்ட போதும் அவர்களின் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கள் சூறையாடப்பட்ட போதும் அவை உங்கட்கு பயங்கரவாதம் எனத் தோன்றவில்லையா? இல்லை. அதற்கு மேற்பட்ட சொற்கள், அதற்கு ஏதேனும் உண்டா என இன்னமும் அகராதியில் தேடிக் கொண்டிருக்கிறீர்களா?

மாறாக, தமிழீழத்தில் ஒருசில பொலிசாரின் உயிர்கள் பறிக்கப்பட்டதும், வங்கி உடமைகள் கொள்ளை போனதுமே தானா உங்களுக்கு பயங்கரவாதமெனத் தோன்றுகிறது. அப்படியாயின் சிறீலங்காவின் பொலிசார் மட்டுமே உங்கள் பார்வையில் அப்பாவிகளாய் தோற்றம் தருகின்றார்களா? பச்சைக் கொலையாக 1977ம் ஆண்டில் மட்டும் உயிர் இழந்தவர்களே 400க்கும் மேற்பட்ட தமிழர்கள். அவர்களின் குருதி பாய்ந்து ஓடியதால் இத்தீவின் மேல் கவிழ்ந்த வானமே செக்கல் மயமானது. அவை எல்லாம் உங்களுக்கு பயங்கரவாதம் என்று தோன்றவில்லையா? தமிழ் மக்களைக் கொலை செய்தவர்கள் மட்டுமே அப்பாவிகளாகவும், குற்றம் செய்யாதவர்களாகவும் உங்களுடைய கண்களுக்குத் தோற்றம் தருகின்றார்களா? தமிழ் மக்களின் உயிர் உடமை என்று வரும்போது உங்கள் சிந்தனையின் மெல்லிய உணர்வுகள் அறவே மரத்து விடுகின்றனவா? அல்லது அப்படியான உணர்வு உங்கள் வாழ்வில் புரியாத ஒரு மொழியா?

 சிங்கள மக்களுக்கு ஒரு கேள்வி

 நாம் வன்முறைமீது காதல் கொண்டவர்களோ அன்றி அது மாதிரியான நோய்களால் பாதிப்புற்ற மனநோயாளிகளோ அல்லர். மாறாக விடுதலையை முன்வைத்துப் போராடும் ஓர் ஸ்தாபனத்தில் அங்கம் வகிக்கும் நேர்மையான போராளிகளே நாங்கள்.

சிங்கள மக்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். எமது பூமியில் மட்டுமல்லாது உங்கள் நாட்டின் பல பாகங்களிலும் மிக அண்மைக்காலம் வரை தமிழ் மக்கள் மீது பல தடவைகள் உங்கள் நாட்டு அதிகார அமைப்பினால் கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாதத்தை சரி என நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? அன்றியும் இவை மட்டுமல்லாது, நம்மை நாம் அல்லாதவராக்கும் முயற்சியிலும் பல வழிகளிலும் ஈடுபட்டு வரும் உங்கள் அரசின் நாகரீகமற்ற நடவடிக்கைகளின் பாதிப்பில் இருந்து எம்மக்களை மீட்க நாம் முன்னின்றமையைத்தான் தவறு என்று சொல்வீர்களா?

அப்படியான உயர்ந்த லட்சியத்தை வைத்துப் போராடிய எம்மீது பயங்கரவாதத் திரையைப் போர்த்தி உங்கள் நாட்டுச் சட்டங்களிலும் பயங்கரவாதத்தைப் புகுத்தி புதுப் பெருமையைத் தேடிக்கொண்ட உங்கள் அதிகார அமைப்பு விசாரணை என்னும் பெயரில் எம்மீது நடத்தும் கண்துடைப்புகளையும் சரி என்று ஏற்றுக் கொள்கின்றீர்களா? அல்லது பாதிக்கப்படுபவன் தமிழன்தானே என்ற பொறுப்பற்ற உணர்வா? அப்படியாயின் தற்போதைக்கு உங்கள்மீது எம்மால் அனுதாபம் கொள்ள மட்டுமே முடியும்.
நாம் விடுதலை பெறுவது நிதர்சனமான உண்மை. அதன் பின்னர் உங்கள் நாட்டுச் சட்டப் புத்தகங்களில் நிரந்தர இடம் பெற்றுவிட்ட எச்சட்டங்களும் எம்மை அணுகா. அப்படியாயின் இச்சட்டங்களையும் பயங்கரவாதத்தையும் எதிர்காலத்தில் நீங்களே சுவீகாரம் எடுப்பீர்களா என்ற கையறு நிலையை இப்போதே எய்தி விட்டீர்களா?

 அநீதிக்கு அங்கீகாரம்?

அன்றி எமக்கு இழைக்கப்படும் அநீதியை நிறுத்தி எமது இறைமையை அங்கீகரிக்கும்படியும் அதன்முதல் கட்டமாய்- பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கும் ஓர் அம்சமாய்- அதன் மொத்த உரித்தாளரான சிறீலங்காவின் ஆயுதப்படைகளை எம்பூமியில் இருந்து மீளப்பெறும்படியும் உங்கள் அரசை வற்புறுத்துவதன் மூலம் உங்கள் மனோவிசாலத்தை உலகிற்கு உணர்த்தப் போகின்றீர்களா? தீர்மானிக்கும் பொறுப்பை உங்களிடமே விடுகின்றோம்.நாடு வேறானாலும் கூட ஒரே தீவின் பிரஜைகள் என்ற முறையில் உங்கள் புரிந்துணர்வை பெறவேண்டும் என்ற நல் நோக்குடனேயே இவ்வழக்கின் விசாரணைக்கு சமூகமளித்தது மட்டுமல்லாது, இன்று எமது நிலையையும் உங்கட்கு தெளிவாய்க் காட்டினோம். இதனால் ஏற்படும் புரிந்துணர்வின் மூலம் எதிர்காலத்தில் எம்பொருட்டு நீங்கள் குரல் கொடுப்பீர்களேயாயின், மிக்க மனநிறைவை எய்தியவர்களாவோம்.
இல்லாவிடினும்கூட, தற்போதைய சமூக, பொருளாதார நடவடிக்கைகளே தொடர்ந்து, அதன் சுமை தாங்காது என்று உணர்ந்து, அதன் தளைகளை உடைத்து உங்களை விடுவிக்க நீங்கள் நடத்தும் போராட்டத்திற்கு நாம் மிக உறுதுணையாக இருப்போம் என்பதை மனப்பூர்வமாய் உங்கட்கு தெரிவிக்கின்றோம்.
தமிழ் ஈழம் அமைப்பது ஒன்றுதான் எமது முற்றான பணி என நாம் சொல்லிவிட மாட்டோம். ஈழத் தமிழர், தமிழராய் தொடர்ந்து வாழ வேண்டுமாயின் தமிழ் ஈழம் அமைப்பது ஒன்றுதான் நம்முன் உள்ள ஒரே வழி என்பதனை சிறீலங்கா அரசு பல வழிகளிலும் எம்மை உந்தியதன் மூலமே அவ்வழியில் மிக முனைப்பாய் உள்ளோம்.

 எமது நோக்கு மிக விசாலமானது. ஆபிரிக்கக் கண்டம் என்றால் என்ன, லத்தீன் அமெரிக்க நாடு என்றால் என்ன எங்கெங்கு அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் விடுதலைக்காகப் போராடும் நோக்கத்தையும் உள்ளடக்கியது. அப்படி இருக்கையில் எமது சக தேசத்தவரான மக்களின் குறிப்பாக சிங்கள மக்களின் நலன் அதற்குள் எப்படி அடங்காது போகும்.

கூட்டுச் சதி. இரு அயல்தேசங்கள் ஒற்றுமையாக இருக்கக் கூடாது என்ற நிர்ப்பந்தம் இல்லை. மாறுபட்ட கொள்கை உடைய எத்தனையோ நாடுகள் பொருளாதாரம், பாதுகாப்பு என்ற விடயங்களுக்காக சில பொதுக் கோட்பாடுகளுக்கு அமைய ஒரு அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வரவில்லையா? அதற்காக அந்த நாடுகள் தமது இறைமையை விட்டுக்கொடுத்து விட்டன என நாம் சொல்ல முடியுமா? அப்படி இருக்கையில் எம்நோக்கு இத்தீவின் நன்மையை மட்டும் கொண்டதல்ல இவ்வுலகின் வல்லாதிக்கம் கொண்ட சில சக்திகள், தெற்காசியப் பிராந்தியத்தில், குறிப்பாய் மூன்றாம் மண்டல நாடுகளை பொருளாதார ரீதியில் தலையெடுக்க விடாது செய்துவரும் கூட்டுச்சதியை முறியடிக்கும் விதத்தில், இந்த உப கண்டத்தின் தன்னாதிக்கமுள்ள முற்போக்குக் குடியரசுகள், இவ்வுபகண்ட நன்மை கருதி அதற்கு ஒரு பொது அமைப்பையோ அல்லது எந்தக் குடியரசினதும் தன்னாதிக்கத்திற்கு பங்கம் வரா வகையில் பல குடியரசுகள் கொண்ட ஒரு ஒன்றியத்தை உருவாக்கும் பட்சத்தில் உபகண்ட நன்மை கருதி, தமிழ் ஈழம் நிச்சயமாக தன் பங்களிப்பை வழங்கும
இறுதியாக ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். சிறீலங்கா அரசின் எந்த அமைப்பிலும் இருந்து நாம் நீதியை எதிர்பார்க்கவில்லை. இம்மன்றமும் அதற்கு விதிவிலக்கல்ல. எமக்குத் தெரியும் உங்களது சங்கடமான நிலைமை. சுயேச்சையான நிர்வாகம் அருகிவரும் உங்கள் அரசியல் அமைப்பில் -நீதி நிர்வாகத்தில்- பணிபுரிபவர்கள் அரசைத் திருப்தி பண்ணியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்த நிலை ஏற்பட்டிருப்புது இயல்பேஅதையேதான் இம்மன்றமும் இவ்வழக்கின் ஆரம்பத்திலிருந்து எம்மீது நடந்துவரும் முறைகளின் மூலமும் நிரூபித்துள்ளது. அதேபோல் சிறீலங்காவின் சட்டமா அதிபர் திணைக்களத்தின் யோக்கியதாம்சம் தமிழ் மக்கள் பால் எப்பாற்பட்டது என்பதும் தமிழ் மக்கள் நன்கறிந்த விடயம்
சீருடை அணிந்த கொலைஞர்கள்

 1967ம் ஆண்டில் தமிழ் ஈழத்தின் வல்வை நகரில் திரு சிவஞானசுந்தரத்திலிருந்து 1982ம் ஆண்டில் தமிழ் ஈழத்தின அச்சுவேலியில் நவரெத்தினம் என்பவர் வரை சிறீலங்காவின் பொலிஸ்- ஆயுதப் படையினர் சுட்டுக் கொன்ற விடயங்கள் கொலை என உங்கள் நீதிமன்றங்களே ஊர்ஜிதம் செய்த பின்னர் கூடமேல் நடவடிக்கை எடுக்கவிடாது தடுத்ததன் மூலம் சீருடை தரித்த கொலைகாரர்களை எந்தவித பயமுமின்றி எமது பூமியில் நாமும் நடமாட அனுமதி அளிப்பது இங்கு நீதியின் பெயரில் குரல் எழுப்பும் அடிப்படையிலா நடக்கிறது?
இந்நிலையில் தமிழ் இன விடுதலை இயக்கங்களை நசித்தே ஆவேன் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் ஓர் அரசின் மன்றத்தில் இனியும் மினக்கெடுவதற்கு ஏதுமில்லை. எமது இயக்கத்தின்மீது இம்மன்றத்தில் நடத்தி முடிக்கப்படவிருக்கும் இரண்டாவது வழக்கு இது. இனி எத்தனை வழக்குகள் எம்மீது உங்களால் சோடிக்கப்பட்ட போதும் நாமும் விசாரணையில் பங்கெடுத்துக் கொண்டது எனும் நிலை இவ்வழக்குடன் பூர்த்தியாகின்றது. உங்களது நோக்கம் எம்மைத் தண்டிக்க வேண்டும் என்பதே. அதை இனி எமது எந்தவித இடையூறும் இல்லாது விருப்பம்போல் மிகச் சுலபமாய்ச் செய்யுங்கள். தற்போதைக்கு உங்களுக்கு உங்களது நோக்கம் எம்மைத் தண்டிக்க வேண்டும் என்பதே. அதை இனி எமது எந்தவித இடையூறும் இல்லாது விருப்பம்போல் மிகச் சுலபமாய்ச் செய்யுங்கள். தற்போதைக்கு உங்களுக்கு நாம் செய்யும் உதவி இதுவே.
தற்போதைக்கு இவ்வழக்கின் மூலம் உண்மைநிலையை உலகிற்கும் குறிப்பாய் இத்தீவின் மக்கள் யாவர்க்கும் உணர்த்திவிட்ட மகிழ்வே எமக்கு மேலோங்கி உள்ளது. மக்களின் மனத்தீர்ப்பே எமக்கு முக்கியமானது. அவர்கள் தீர்ப்பு நிச்சயமாய் எமக்கே சாதகமாய் அமையும் என்ற நிறைவை எய்தியுள்ளோம். இனி எம்மீது எத்தனை வழக்குகள்தான் சோடிக்கப் பட்டாலும், எத்தனை அவதூறுகள் வாரி இறைக்கப் பட்டாலும் எமக்கு அதுபற்றிக் கவலை இல்லை. உங்களது அந்த நடவடிக்கைகள் மூலம் வெற்றிபெறப் போவதும் நாமே. உங்கள் தீர்ப்பின் பாதிப்புகள் எம்வரை அந்நியமானவையே.எனவே நாம் நமது கடமையை முடிந்தவரை செய்த மனநிறைவுடன் எதிர்காலத்தை சிறையில் களிக்கவோ வேண்டுமாயின் மரணத்தை தழுவவோ நாம் தயங்கவில்லை.ஓர் இனத்தின் விடுதலை வரலாற்றில் இவை எல்லாம் மிகச் சர்வ சாதாரணமான சம்பவங்களே! இதை நாம் தெரிந்தே ஈடுபட்டோம். எமக்கு ஏமாற்றம் என்பது எதுவுமே இல்லை. எதை எய்கின்றோமோ அதுவேதான் நம்மிடம் திரும்பி வரும். எதை விதைக்கின்றோமோ அதையேதான் அறுவடை செய்ய வேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவன் நான். நாம் விதைத்தவை விஷ விதைகளுமல்ல. எய்தவை நச்சுப் பாணங்களுமல்ல. அதனால்தான் இந்த நிமிடத்திலும் நான் மிகத்தெளிவாக மனநிறைவுடன் நிற்கின்றேன்.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...