Saturday, July 30, 2016

இலங்கை இனப் படுகொலையும் இந்திய அரசியலும்

இலங்கை இனப் படுகொலையும் இந்திய அரசியலும்

உலக அரங்கில் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் முற்றுப் பெற்றுவிட்டனவா என்னும் பொதுப்படையான ஒரு கேள்வியிலிருந்து தொடங்கலாம். அரசியல், பொருளாதார வல்லரசுகள் அவ்வப்போது புதிய உலக அரசியல் ஒழுங்கைத் தோற்றுவிக்க முயன்று வருகின்றன. உலகின் பொதுவான இயங்குதிசை வல்லரசுகளால் தலைமை தாங்கப்படும், அவற்றின் நலன்களை முன்னிறுத்தும் சக்திகளால் இயக்கப்படுவதாகவே இருந்து வருகிறது. அதை மக்கள் நலனை முன்னிறுத்தும், மக்களால் தலைமை தாங்கப்படும் சக்திகளால் இயக்கப்படுவதாக மாற்ற வேண்டிய கடப்பாடு நமக்குள்ளது.

2011இல் தெற்கு சூடானின் விடு தலையை உள்ளடக்கிய அண்மைக் காலம்வரையிலான நிகழ்வுகள் உலக அரங்கில் தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் இன்னும் முற்றுப் பெறாதவை என்பதை நிரூபிக்கின்றன. 1990களில் ஸ்லேவேனியா, கொசாவோ, மாசிடோனியா, உக்ரைன், ஜார்ஜியா, டிராண்டஸடிரியா, போஸ்னியா, எரித்ரியா, மால்டோவா, கிழக்கு திமோர் போன்ற நாடுகளிலும் இரண்டா யிரங்களில் மாண்டி நிக்ரோ, தெற்கு ரேசடியா, தெற்கு சூடான் முதலான நாடுகளிலும் நடைபெற்ற தேசிய இன விடுதலைப் போராட்டங்களே அதற்கான சான்றுகளாக உள்ளன. இன்றுவரையில் தொடர்ந்துகொண்டிருக்கும் காஷ்மீர், நாகலாந்து, மணிப்பூர், மேற்கு இரியான், திபேத்து, ஈழ மக்களின் விடுதலைக்கான போராட்டங்களும் இப்பட்டியலிலிருந்து வருபவை. இவற்றுள் மிகக் கூர்மையானதும் அதிக முக்கியத்துவமும் கொண்டது ஈழப் போராட்டம்.

தமிழீழக் கோரிக்கை சரியானதா பிழையானதா என்பன போன்ற கேள்விகளைக் கடந்து வந்துவிட்டது வரலாறு. லட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்களை ஈவிரக்கமின்றிப் படுகொலைசெய்த சிங்களப் பேரினவாத அரசுடன் ஈழத் தமிழ்ச் சமூகம் இணக்கமாக இருப்பதற்கான சாத்தியங்கள் இனி இல்லை. கொடூரமாகப் பழிவாங்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் தமக்கான இன விடுதலைப் போராட்டத்தை அதன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த வேண்டும்.

இது தொடர்பில், “வரலாற்றுரீதியாகப் பார்க்கும்போது இலங்கைத் தமிழர்களைப் போல இனப்படு கொலைகளுக்குள்ளான எந்தவொரு மக்கள் குழுவும் தமக்கெனச் சுதந்திரமானதொரு நாட்டை உருவாக்கிக் கொண்ட பிறகுதான் அவற்றிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொண்டனர். கடந்த சில மாதங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வன்னியில் படுகொலை செய்யப்பட்ட போது எந்த நாடும் அந்த வெறித்தனமான படுகொலைகளைத் தடுக்க முயலவில்லை. 1948 இன அழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்தின்படி அனைத்து நாடுகளும் தமது கடமைகளைச் செய்யத் தவறிவிட்டன. எனவே இலங்கை அரசிடமிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்குத் தனிநாடு ஒன்றை உருவாக்கிக்கொள்வதே இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்புடைய தீர்வு. “பன்னாட்டுச் சட்ட திட்டங்களின்படி இன அழிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தனி நாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே பயனுள்ள தீர்வும் உரிய இழப்பீடும் ஆகும்’’ எனப் பிராசிஸ் பாய்ல்ஸ் கூறியதை மனங்கொள்ள வேண்டும். (பேராசிரியர் பிரான்சிஸ் பாய்ல்ஸ், உலக மனித உரிமைகள் அமைப்பின் (Amnesty International) முன்னாள் உயர்மட்டக்குழு இயக்குநர்; இல்லினாய் பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர்.)

நாம் ஏற்கிறோமோ இல்லையோ ஓர் உண்மையைப் பதிவுசெய்தாக வேண்டும். எந்தப் போராட்டமும் அறவழியில் பயணிக்கும்போது அது உலகின் கவனத்தைப் பெறுவதில்லை. அறவழிப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக வடிவெடுக்கும்போது மட்டுமே சர்வதேசக் கவனமும் தலையீடும் கிடைக்கப்பெறுகின்றன.

ஈழத் தமிழர் விடுதலைப் போர் சுமார் முப்பதாண்டுகள்வரை அறவழியில் அதுவும் இந்தியாவின் காந்தி காட்டிய சத்தியாக்கிரக வழியிலேயே நடந்தது. மிகப் பெரிய சனநாயக பூமி என்று சொல்லப்பட்ட இந்தியாவும் அது காலம்வரை அதைக் கண்டுகொள்ளவில்லை. அப்போது நடைபெற்ற அறவழிப் போராட்டத்தை அங்கீகரித்து அமைதித் தீர்வு காணும் முயற்சிகளைக் காந்திய இந்தியாவால் அப்போதே மேற்கொண்டிருக்க முடியும்.

1972ஆம் ஆண்டிலும் அதற்குப் பிறகும் சிறிய அளவிலான ஆயுதப் போராட்டங்கள் உருவாகத் தொடங்கிய பின்னர்தான் இந்திய அரசு ஈழப் போராட்டத்தைக் கவனிக்கத் தொடங்கியது. 1983இல் இலங்கையில் நடைபெற்ற பெரிய அளவிலான இனப்படுகொலைக்குப் பின்னரே இந்தியா நேரடியாகத் தலையிடவும் முற்பட்டது. இந்தத் தலையீடுகூடச் சுயநலன் சார்ந்ததே.

“இலங்கைத் தீவு இரு அரசுகளாக இருப்பதைவிட ஓர் அரசாக இருப்பதே இந்தியாவின் எதிர்கால நலன்களுக்குச் சாதகமானது. அப்போது தான் இந்தியாவால் இலங்கையைச் சுலபமாகக் கையாள முடியும். எனவே இந்தியா தமிழீழக் கோரிக்கையை-தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தனது நலனுக்குகந்த அளவில் ஓரளவுக்குத் தீர்த்துவைப்பதும் தனது தலைமையை இலங்கை அரசை ஏற்கவைப்பதுமே இந்தியாவின் பிரதான நோக்கமாய் இருக்கிறது’’ என்னும் ஒரு கருத்து எண்பதுகளின் மத்தியில் ஈழத்தில் நடைபெற்ற அரசியல்சார்ந்த உரையாடல்களில் அடிக்கடி இடம்பெற்றிருந்தது.

தான் விடுதலைபெற்ற கையோடு மக்கள் விடுதலை அரசியலிலிருந்து இந்தியா விடுதலை பெற்றுக்கொண்டது. ஒடுக்கப்பட்ட மக்களுடைய, நாடுகளுடைய விடுதலைக்கான போராட்டங்களுக்குத் துணைபுரிவது என்ற சுதந்திர இந்தியாவின் கொள்கைக்கு இருந்த குரலளவிலான ஆதரவு நேருவுக்குப் பிறகு படிப்படியாகக் குறைந்து பிறகு ஏறக்குறைய இல்லாமல் போய்விட்டது. பிடல் காஸ்ட்ரோவின் தொடக்கக் காலக் கியூபா போர்ச்சுகீசியக் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்த ஆப்பிரிக்க நாடுகளான கினிபிஸ்ஸா, அங்கோலா ஆகிய நாடுகளின் விடுதலைக்குப் பொருளாதார, ஆயுத, மருத்துவ உதவிகள் மூலம் துணை நின்றது. அன்றைய கியூபாவுக்கும் மே 28, 2009இல் ஐ.நா. மனித உரிமை அவையில் இனப்படுகொலையை நிகழ்த்திய இலங்கை அரசுக்கு ஆதரவாக ஒரு தீர்மானத்தை முன் மொழிந்த இன்றைய கியூபாவுக்கும் இடையிலான வேறுபாட்டைத் தீர்மானிப்பது வெறும் ஐம்பதாண்டுகள் மட்டுமல்ல விடுதலை பற்றிய அதன் புரிதலில் ஏற்பட்டுள்ள தலைகீழான மாற்றமும்தான்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா தொடர்ந்து மோசமான நிலைப்பாடுகளையே எடுத்துவந்துள்ளது. 1983 இலங்கை இனப் படு கொலையைக் கண்டித்து, ஐ. நா. துணைக்குழுக் கூட்டத்தில் இதயமுள்ள நாடுகளின் தலைவர்கள் பலர் பேசினர். ஐ. நாவின் இந்தியப் பிரதிநிதி சையத் மசூத், “இலங்கையில் உள்ள நிலைமைகள் குறித்து ஐ. நா. அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது’’ என்று பேசினார். அப்போதைய உலக முக்கியத்துவ முள்ள பிரச்சினைகள் பற்றி ஐ. நா. அவையில் பேசிய அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி 1983இன் இனப் படுகொலை பற்றி எதுவும் பேசவில்லை. பேசும் அளவுக்கு முக்கியத்துவமுடையவை அல்ல அப்படுகொலைகள் என இந்திரா கருதினார் போலும்.

தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் காய்ச்சலும் என்பதுபோல இலங்கை அமெரிக்கச் சார்பு நிலை எடுத்த பிறகு இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக ஜெ. ஆர். ஜெயவர்த்தனா இலங்கை அதிபராக இருந்தபோது தமிழ்ப் போராளிக் குழுக்களுக்குப் பயிற்சியும் ஆயுதங்களும் அளித்தது இந்தியா. இலங்கை அரசு இனவாதத்தைச் சாக்காக்கி 1970களில் மேலைநாடுகளுடன் கைகோத்துக் கொண்டு இந்திய எதிர்ப்பில் தீவிரமாக நின்றது. இலங்கையின் எதிர்க்கட்சிகளும் இனவாதத்தை மூலதனமாகக்கொண்டே அரசியலில் ஜீவிக்க முடிந்தன. இப்பிராந்தியத்தில் வல்லரசாக உருவெடுத்துக்கொண்டிருந்த இந்தியா தன் நோக்கு நிலையிலிருந்தே தீர்வை முன்வைத்தது. முரண்பாடுகள் இராணுவரீதியிலிலேயே தீர்க்கப்படக்கூடியவனவாக முறுகல்நிலை கொண்டன. ஆயுதப் போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லை என முன்னர் போராளிகளுக்குப் பயிற்சியும் ஆயுதங்களும் அளித்த இந்தியா 1987இல் இலங்கையின் மீது இராணுவ நடவடிக்கை எடுத்தது. அமெரிக்காவோ முழு இலங்கையையும் இழந்துவிடத் தயாராக இல்லை. சிறிய விட்டுக்கொடுத்தல்களுடன் ஒரு சமரசத்தை அமெரிக்கா முன்மொழிந்தபோது ஜெ. ஆர். ஜெயவர்த்தனா அமெரிக்காவின் நோக்கத்தைப் புரிந்துகொண்டார். அமெரிக்கா அந்தச் சமரச உடன்பாட்டை எப்படி வரவேற்றது என்பதை இங்குக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

“இந்தியாவுக்கு வயது வந்துவிட்டது. இலங்கைப் பிரச்சினையில் இந்திய அரசு எடுத்த நிலைப்பாட்டால் அது தன்னைப் பிராந்திய வல்லரசாக மாற்றிக் கொண்டுவிட்டது. இந்தியாவின் இந்த இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா வரவேற்கிறது’’ என்ற மிகச் சாகசமான வார்த்தைகளின் மூலம் வரவேற்றது அமெரிக்கா. அந்த நேரத்தில் வளைகுடா நாடுகளில் தனக்கு ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவுடன் குறைந்தபட்சமாகவேனும் ஒத்துப் போக வேண்டிய தேவை ஏற்பட்டது அமெரிக்காவுக்கு. ஆனால் இந்தியாவின் இராணுவ நடவடிக்கைக்குப் பின் இலங்கை-இந்திய அரசுகளுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தம் கைவிலங்கை அகற்றிக்கொள்ள முயன்றவர்களுக்குக் கால்விலங்கும் மாட்டப்பட்ட கதையாக ஆனதாகத் தமிழர்களால் வர்ணிக்கப்பட்டது.

பொதுவாக்கெடுப்பு நடத்தி வடக்கு-கிழக்கு மாகாணங்களை நிரந்தமாக இணைக்கும் காலம்வரை தற்காலிகமாக அவை இணைக்கப்பட்டு ஓர் அலகாகச் செயற்படும் என இந்தியா இலங்கை ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டது. தற்காலிகமாக அல்ல, நிரந்தரமான இணைப்பே தேவை என விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் அப்போது வலியுறுத்தினார். அப்போது பிரபாகரன் பக்கம் நெருங்கி வந்த ராஜீவ் காந்தி அவரது காதோடு காதாக “சிங்களத் தீவிரவாதிகளையும் சிங்கள மக்களையும் திருப்திப் படுத்துவதற்காகத்தான் அப்படிச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால் நிரந்தர இணைப்புதான் நோக்கம்’’ என்றார். ராஜீவ் சொன்னதை அப்போதைக்கு ஏற்றுக்கொண்ட பிரபாகரன் தன் தளபதிகளுக்கும் போராளிகளுக்கும் அதைச் சொன்னார். புலிகள் இதை ஏற்கவில்லை. இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து இரு போராளிகள் குப்பி கடித்து இறந்தனர். நிரந்தர இணைப்பு என்று உறுதியளித்த ராஜீவ் காந்தி பின்னாட்களில் அதன் மேல் அக்கறை காட்டவில்லை. இப்போது கூட இந்திய அரசியல் தலைமைகள் அந்த ஒப்பந்தத்தைப் பற்றி எதுவும் பேசுவதில்லை.

வடக்கு-கிழக்கு மாகாணங்களைத் தற்காலிகமாக இணைத்து ஒரு முதல்வரை நியமிக்க வேண்டியுள்ளது எனவும் மூன்று பெயர்களைப் பரிந்துரைக்குமாறும் அப்போதைய இலங்கைக்கான இந்தியத் தூதர் தீட்சித் பிரபாகரனிடம் கேட்டுக்கொண்டார். “மூன்று பெயர்கள் அல்ல, ஒரு பெயரைத் தான் கொடுக்க முடியும்” என்று பிரபாகரன் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்தார். “மூன்று பெயர்கள் கொடுங்கள். அதில் முதலாவது பெயரையே தெரிவுசெய்வோம்’’ என தீட்சித் அளித்த உறுதிமொழியின் பேரில் புலிகள் அப்போது மூன்று பெயர்களை அவரிடம் அளித்தனர். புலிகள் அளித்த பட்டியலில் கிழக்கு மாகாணம், மட்டக்களப்பைச் சேர்ந்த உயர்நிலை அரசு அதிகாரியான பத்மநாதன் பெயர் முதலாவதாகவும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவஞானம் பெயர் மூன்றாவதாகவும் இடம்பெற்றிருந்தது. தந்திரமான முறையில் பட்டியலில் மூன்றாவது நபராக இருந்த சிவஞானத்தையே முதல்வராகத் தேர்வுசெய்தார் ஜே. ஆர். ஜெயவர்த்தனா. கிழக்கு மாகாணம் தொடர்ந்து புலிகளால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்னும் பிரச்சாரத்துக்கு வலுவூட்டும் நோக்கத்துடன் ஜெயவர்த்தனா மேற்கொண்ட இந்த நடவடிக்கையை இந்திய அரசும் ஏற்றுக்கொண்டது.

இப்படியான நிகழ்வுகள்தாம் பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் இந்தியாமீது அவநம்பிக்கையை ஏற்படுத்தின. புலிப் போராளிகள் மட்டுமல்ல, பிற போராளிக் குழுக்களும் இந்தியா ஏமாற்றிவிடும் என்பதை உணர்ந்தே இருந்தனர். ஆனால் இந்தியாவின் பிராந்திய முக்கியத்துவத்தை அனைத்துப் போராளிக் குழுக்களும் விளங்கிக் கொண்டிருந்தனர். யாரும் அந்த உண்மையை மறுக்கவில்லை. இந்தியாவின் ராஜதந்திரிகளும் கொள்கை வகுப்பாளர்களும் ஜே. ஆரின் தந்திரங்களால் கட்டுப்படுத்தப்பட்டனர். பிரச்சினை இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது பற்றியது. ஒப்பந்த ஷரத்துகளில் கூறப்பட்டதற்கு மாறாக ஜெயவர்த்தனா மேற்கொண்டு வந்த எல்லா நடவடிக்கைகளையும் இந்தியா ஏற்றுக்கொண்டது. சண்டே லீடர் வார இதழுக்கு அளித்த பேட்டியில் “நான் உண்மையைச் சொன்னால் நீங்கள் (சிங்களவர்கள்) எல்லோரும் என்னை எதிர்ப்பீர்கள். ஒப்பந்தத்தை முதலில் மீறியது இலங்கைதான். தமிழர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை” என்றார் இந்தியத் தூதர் தீட்சித் (Sunday Leader:Sep 4 1994, Tamil hopes not met.Dixit blames the Singalese for breaking of India -Lanka accord).

இந்தியா தனது பிராந்திய நலன்களுக்காக ஜே. ஆர். ஜெயவர்த்தனேவும் ராஜபக்க்ஷக்களும் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்துக்கொண்டிருந்தார்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

இது போன்ற தொடர்ச்சியான நம்பிக்கைத் துரோகங்களின் முடிவில் தான் “இந்தியாவை நம்பிச் செயற்பட்டால் முதலையின் முதுகில் பயணித்த குரங்கின் கதியாகி விடும்’’ என்று பிரபாகரன் கூறியதாகத் தெரிகிறது. இது இந்தியா பற்றிய அவருடைய, போராளிகளினுடைய கசப்பானஅனுபவங்களின் வெளிப்பாடாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். ராஜீவ் காந்தியைக் கொல்ல வந்த சிங்களவரின் நம்பிக்கையைப் பெறுவதில் காட்டிய அக்கறையில் நான்கில் ஒரு பகுதியைக்கூட நண்பர்களாய்க் கருதப்பட்ட தமிழர்கள்மீது இந்தியா காட்டத் தயாராயில்லை. முள்ளி வாய்க்காலில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் தமிழர்களை முழுமையாக அழிப்பதற்குத் துணைபுரிவதன் மூலம் சிங்களவர்களின் நேசத்துக்குரியோராக மாறிவிடலாம் என்று இந்திய ஆட்சியாளர்கள் நினைத்து விட்டிருப்பார்கள் போலிருக்கிறது. இப்போதும்கூட தன்னுடைய புவியிட முக்கியத்துவத்துக்கும் பாதுகாப்புக்கும் ஈழத் தமிழரின் ஆதரவு முக்கியமென்பதையும் ஈழத் தமிழர் வாழும் புவிப் பரப்பும் கடற்பரப்பும் இந்தியாவுக்குப் பாதுகாப்பு என்பதையும் இந்தியத் தலைமைகள் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை.

ஒப்பந்தத்தை மீறியதாகக் காரணம் காட்டிப் புலிகளை அழித்தாயிற்று. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள இலங்கை அரசு அதை நடைமுறைப்படுத்தாததற்காக அதன்மீது இந்தியா என்ன நடவடிக்கை எடுத்தது? இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா 2012, சனவரியில் மேற்கொண்ட இலங்கைப் பயணத்தின்போது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் காணப்பட்டுள்ள 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த ராஜபக்ஷ ஒத்துக்கொண்டுள்ளார் என்று செய்தியாளர்களிடம் கூறிவிட்டு அந்தப் பக்கம் நகரவில்லை. “அப்படியெல்லாம் நான் செய்துவிட முடியாது. நாடாளுமன்ற ஒப்புதலோடுதான் எதையும் நடைமுறைப்படுத்த முடியும்’’ என்று அவருக்குப் பதிலடி கொடுத்தார் ராஜபக்ஷ.

இலங்கைக்குச் சென்ற எஸ். எம். கிருஷ்ணா காவிரி நதிநீர் ஆணையத்தின் ஒப்புதலை ஏற்காமல் தமிழகத்துக்குத் தண்ணீர் தரமாட் டேன் என்று மறுத்த அப்போதைய கர்நாடக முதல்வர். அதனால்தான் ராஜபக்ஷ அமைத்த இலங்கை அரசுக்குச் சாதகமான ‘கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் மீள் இணக்க விசாரணைக் குழுவின்’ அறிக்கையை அவரால் வரவேற்க முடிகிறது. புலிகள் அழிக்கப்பட்ட பின் இலங்கை அளித்த 13ஆம் சட்டத் திருத்தத்துக்கும் அதற்கு அப்பாலும் செல்வது என்ற பிரதான வாக்குறுதியைச் செயல்படுத்தாதது ஏன் என எஸ். எம். கிருஷ்ணா கேள்வி எழுப்பவில்லை. அப்பால் செல்வது என்பதைவிடப் பல காத தொலைவு பின்னோக்கிச் செல்வதே தனது நோக்கம் என ராஜபக்ஷ தன் மறுப்பு அறிக்கையின் மூலம் உறுதிப் படுத்தியிருக்கிறார்.

o

யதீந்திரா குறிப்பிடுவதுபோல் இந்திய சரணாகதி அரசியல் அல்ல தீர்வு. இந்திய எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்காமல் தீர்வு இல்லை. ஆனால் இந்தியாவை எதிர்கொள்ள ஈழப் பிரதேசத்துக்குள்ளேயே ஓர் ஐக்கிய முன்னணி அமைத்துக் கொள்வது இன்றியமையாதது என்பதைப் புலிகள் உணரவில்லை. இலங்கை இனவெறி அரசை எதிர்கொள்ள முதலில் இந்த ஐக்கிய முன்னணித் தந்திரத்தைப் புலிகள் கையிலெடுத்திருக்க வேண்டும். புலிகள் இதில் அக்கறை செலுத்தவில்லை. தாமே ஏகப் பிரதிநிதி என்ற கோட்பாட்டை முன்வைத்துச் செயற்பட்டதால் எதிரிக்குப் பிரித்தாளும் வாய்ப்பைக் கொடுத்தார்கள்.

“விடுதலைப்புலிகள் 1991இல் மேற்கொண்டதொரு வரலாற்றுத் தவறு (ராஜீவ் கொலை) இந்தியா விற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான நிரந்தரமான பிரி கோடாக அமைந்தது’’ என யதீந்திரா குறிப்பிடுகிறார். அது வரலாற்றுத் தவறு. அது விடுதலைப் போருக்குப் பின்புலமாக இருந்த தமிழக மக்களைத் தனிமைப்படுத்திவிட்டது. தேசப்பற்று என்று ஏற்றப்பட்டிருக்கும் மக்களின் உளவியலை இந்தியா தனக்கு நிரந்தரப் பிரிகோடாய் மாற்றிவிட்டது. ஆனால் ராஜீவ் கொலை தொடர்பான விசயத்தை வேறொரு கோணத்தில் பார்க்கிறார் மு. புஷ்பராஜன்,

“உண்மையில் ராஜீவ் காந்தி கொலைக்கு இந்தியா தனது வல்லாதிக்கக் கனவுகளின் பின்னணியிலேயே அழுத்தம் கொடுத்தது. ராஜீவ் காந்தி கொலை, விடுதலைப் புலிகளை அழிப்பதற்குத் தானாக மடியில் விழுந்த கனி. அக்கொலை நடைபெற்றிருக்காவிடினும் இந்தியா அவர்களை அழித்தே இருக்கும்; வேறு காரணங்களைத் தேடியிருக்கும்”. (மு.புஷ்பராசன்: வாழ்புலம் இழந்த துயர்)

இந்தப் பின்புலத்தை ஏற்றுக்கொள்வதில் யதீந்திரா இடறுகிறார். மாறாக வேறொரு எதிர் இடத்துக்கு நகர்ந்து சென்று, “தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் போக்கில் இடம் பெற்றுவந்த அனைத்துத் தவறுகளும் இந்தியாவின் தவிர்க்க முடியாத இடத்தை விளங்கிக்கொள்ளாமையின் விளைவுகள்தாம்’’ என்று நியாயப்படுத்தும் புள்ளியில் போய் நிற்கிறார். இந்தியாவின் தவிர்க்க முடியாத இடத்தை விடுதலைப் புலிகள் புரிந்துவைத்திருந்தார்கள். போராளிகளுக்குப் பயிற்சியும் ஆயுதங்களும் கொடுத்தது. பின்னர் திம்புப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துப் போனது, மிரட்டி விடுதலைப் புலிகளையும் ஒப்புக்கொள்ளவைத்து, 1987இல் ஈழத்தின் மீது இந்தியப் படையெடுப்புவரை இந்தியா எந்த இடத்தைத் தகவமைப்பதற்கான முயற்சியிலிருக்கிறது போன்ற தெளிவுகளை மற்ற அரசியல் ஆய்வாளர்களும் எடுத்துத் தந்திருந்தார்கள்.

யுத்த நிறுத்த உடன்பாடானது அடிப்படையில் விடுதலைப் புலிகளுக்கே நன்மையளித்தது என நார்வே அறிக்கை விவரிப்பது உண்மைக்குப் புறம்பானது. ஆனால் அறிக்கை விவரித்திருக்கும் மேற்படி விடயங்கள் அனைத்தும் பொதுவாக ஈழத்தில் புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் அனைவரும் அறிந்த உண்மைகள் என யதீந்திரா நிறுவ முயல்வதுதான் அர்த்தமில்லாதது. நார்வே அறிக்கை இயலாமை, கையாலாகத்தனம் என்பவற்றை மறைத்துச் சொல்லப்பட்டதாக இருக்கிறது என்பதுதான் உண்மை. “இன்னும் ஆழமாகப் பார்ப்போமாயின் யுத்த நிறுத்த காலத்தில் தனது இராணுவக் கட்டமைப்புகளின் வலிமையைப் பெருக்கிக்கொண்டு மீண்டும் பொருத்தமானதொரு சந்தர்ப்பத்தில் யுத்த நிறுத்தத்திலிருந்து வெளியேறுவது பிரபாகரனின் திட்டமாக இருந்தது’’ என்கிற நார்வே அறிக்கையின் பகுதி யதார்த்த நிலைமைகளிலிருந்து, நடைமுறைகளிலிருந்து பெறப்பட்டதாக இல்லை. புரிந்துணர்வு காலத்தில் செயல்கள் இதற்கு எதிர்மறையானதாகவே இருந்தன. இலங்கை தனது இராணுவக் கட்டமைப்பை வலிமைப்படுத்திக் கொண்டே இருக்க விடுதலைப் புலிகள் இயல்பான வாழ்நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் அவர்களிடம் மிகக் குறைந்த போராளிகளே இருந்தனர். அங்கங்கே நிர்வாகக் கட்டமைப்பைப் பேணிக்கொண்டிருந்த போராளிகள் தவிர களத்தில் நின்றவர்கள் குறைவானவர்களே. விடுதலைப் புலிகள் மக்களுடனான தொடர்பாடல்களில் ஈடுபட்டிருந்தாலும் அது போதுமான வையாக இல்லை. அவை எதுவும் வெகுமக்கள் திரள் நடவடிக்கைகளாக உருக் கொள்ளவில்லை. தமது கட்டுப்பாட்டில் உள்ள மக்களுக்கும் அதற்கு அப்பாலுள்ள மக்களுக்குமான சனநாயக வெளியாக அது மாற்றப்படவில்லை.

2001 செப்டம்பர் 11 உலக வரலாற்று அரங்கில் மோசமான நாள். அதுவரையிலான எல்லாவற்றையும் அது தலைகீழாகப் புரட்டிப்போட்டது. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தனது அரசியல் இருப்புக்காக நடத்திய செப்டம்பர் 11 நடவடிக்கை வெற்றிகரமான அரசியல் நாடகமாகவே இருந்தது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்னும் புனித வசனத்துடன் பெரும் ஊடக, இராணுவ வலிமைகொண்ட அமெரிக்கா காட்டிய வழியை உலக நாடுகள் பின்பற்றின. உலகின் பல்வேறு பகுதிகளில் இயக்கிக் கொண்டிருந்த யதேச்சதிகார அரசுகளுக்கு இது பெருவாய்ப்பாக மாறியது. விடுதலைப் போராட்டங்கள், ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சிகள் போன்றவற்றைப் பயங்கரவாதமாகச் சித்தரிப்பதற்கும் அமெரிக்கா வழங்கிய புனித வசனத்தின் துணையுடன் போராடும் மக்களைக் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிக்கும் கொலைக்களங்களை உருவாக்குவதற்கும் அந்தப் புனித வசனம் துணைநின்றது. பயங் கரவாத ஒழிப்பு என்ற முழக்கத்தை முன்வைத்து உலகை வேறொரு திசைக்கு வல்லரசுகள் நகர்த்திக் கொண்டிருந்தன. ஆனால் மாறிய சூழலை விடுதலைப் புலிகள் கணக்கில் கொள்ளவில்லை. கணக்கில் கொண்டிருப்பார்களோயனால் இராணுவ வல்லமையைப் பெருக்குவதற்காகக் கடைசிவரை காத்திருந்து மோசம் போயிருக்க வாய்ப்பில்லை.

நார்வேயின் சமாதான முன்னெடுப்பு பற்றி (1997-2009 வரை) அதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள் பற்றிய மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் ஆய்வுசெய்தால் சமாதான முன்னெடுப்பு என்பது முதலில் நார்வேயின் முயற்சி அல்ல. அதை முன்தள்ளுவதில் அமெரிக்கா போன்ற மேற்குலகம், இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகள் தத்தம் விருப்ப அடிப்படையில் பங்காற்றியுள்ளன. ஈழத்தில் சர்வதேசச் சுற்றிவளைப்பு என இதைக் குறிப்பிடலாம்.

நார்வே என்பது சர்வதேச அரசுகளால் பின்னிருந்து திணிக்கப்பட்ட கருவி. இதைத் தெளிவாகத் தெரிந்துவைத்திருந்த விடுதலைப் புலிகள் நார்வேயால் முன்னெடுக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை நம்பவில்லை. அதை நடைமுறைப்படுத்துவதில் நார்வே நடுநிலையாகக் கூட இல்லை. அமைதி ஒப்பந்தத்தின் ஷரத்துகளில் முக்கியமான ஒன்று தமிழர் பகுதிகளிலிருந்து ஆக்கிரமிப்பு இலங்கையின் ராணுவ அகற்றல்களும் தமிழர் மீள்குடியேற்றங்களையும் பற்றியது. இவை பற்றிப் பலமுறை ஆதாரங்களுடன் அளித்தும் நார்வேயின் நடவடிக்கை எதுவும் இல்லை. நார்வே அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருப்பதற்கு எதிரிடையானவையாகவே நிகழ்வுகள் இருந்தன.

2002 சனவரியில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. 2002 அக்டோர் மூன்றாம் வாரத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த மானுடத்தின் தமிழ்க்கூடல் மாநாட்டுக்கு நாங்கள் சென்றிருந்தோம். முடிந்து திரும்புகையில் கிளிநொச்சியில் பிரபாகரனுடனான சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. அச்சந்திப்பின் போது “அமைதிப் பேச்சு வார்த்தைக்கான நார்வேயின் முயற்சிகளை நம்புகிறீர்களா?” என அவரிடம் கேட்டோம். எங்களின் கேள்விக்கு உலக அரசியலை அவதானித்து வருகிறோம் என நிதானமாகப் பதிலளித்தார் பிரபாகரன். உலக ஆதிக்கப் போட்டிகள் அனைத்தையும் தீர்க்கமாகப் புரிந்துகொண்டுள்ள தொனியில் சொன்னார், “நாங்கள் நார்வேயை நம்பவில்லை. அமெரிக்காவின் குரூர முகம் இஸ்ரேல், அமெரிக்காவின் மென்மையான முகம் நார்வே. இதை நாங்கள் தெளிவாகப் புரிந்துவைத்துள்ளோம்.’’

அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகள் மட்டுமேயல்ல, நார்வேயின் சமாதான முன்னெடுப்பு முயற்சிகளின் பின்னணியில் இந்தியாவே பிரதான சக்தியாக இருந்தது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ள செய்தி யதீந்திராவுக்கு மட்டுமல்ல நமக்கும் புதிய செய்திதான். ஆனால் நார்வே அறிக்கையை நடுநிலையான எந்தச் சார்புமற்றது என யதீந்திரா கருதினாரென்றால் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை. ஒவ்வொரு அறிக்கையின் நோக்கமும் அதனதன் சாராம்சங்களின் அடிப்படையிலேயே அமைகிறது. ஐ. நா. விசாரணைக் குழுவின் அறிக்கை போன்றது அல்ல நார்வே அறிக்கை. ஐ.நா. அறிக்கை இரு தரப்பிலும் நிகழ்த்தப்பட்ட குற்றங்களைப் பட்டியலிட்டிருந்தாலும் இலங்கை அரசுக்குப் பொறுப்புக் கூறும் கடமை உண் டென அந்த அறிக்கை சுட்டுகிறது. நார்வே அறிக்கையால் வழி நடத்தப்படும் யதீந்திரா போன்றவர்கள் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க வேண்டுமென்ற எண்ணம் இந்தியாவுக்கு இருந்திருக்கவில்லை என்பதை நார்வே அறிக்கையை அவதானிக்கும்போது நம்மால் புரிந்துகொள்ள முடியும் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

இந்தியா புலிகளை அழித்ததா என்ற கேள்வியைவிட அது ஈழத்தின் அப்பாவி மக்களை அழித்தது என்ற உண்மை முக்கியமானது.

“போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் பகுதியில் குறுகிய நிலப்பரப்பில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருந்தபோதும் மக்களின் மத்தியில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பதுங்கியிருந்த இடங்களை ரா அமைப்பு சரியாக இனங் காட்டியிருந்தபோதும் முள்ளி வாய்க்காலுக்குள் போரற்ற பகுதியாக அறிவிக்கப்பட்ட மக்கள் குழுமியிருந்த பகுதியில் வலுவான தாக்குதல்களைத் தொடுக்குமாறு ஒரு குரூரமான திட்டத்தை இந்தியாவின் எம். கே. நாராயணனும் சிவசங்கர மேனனும் இலங்கையை அறிவுறுத்தினர். இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி பொன்சேகா தரும் தகவலின்படி பொதுமக்கள் இழப்புகளைக் குறைக்கும் வகையில் ஆகஸ்ட் மாத அளவிலேயே இறுதி வலிந்த தாக்குதலை நடத்துவதெனத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் விடுதலைப் புலிகளின் தலைமையை அழிக்க வேண்டும் என்று உறுதிப்பாட்டின் பேரில் செயற்பட்ட சோனியா காந்தியின் அதிகாரம் பெற்ற முகவர்களான எம். கே. நாராயணனும் சிவசங்கர மேனனும் மேலும் தாமதித்தால் அமெரிக்கா விடுதலைப் புலிகளின் தலைமையையும் பொதுமக்களையும் வெளியேற்றுவதற்கு வழிசெய்துவிடும் என அஞ்சினர். இதன் விளைவுதான் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய தமிழினப் படுகொலை என்கிறார் வி. எஸ். சுப்பிரமணியம் என்ற ரா உளவு அமைப்பில் பணியாற்றிய முக்கிய அதிகாரி. (Ground Report:V.S.Subramaniam 3.1.2010)

இந்த சுப்பிரமணியம் தொடர்ந்து சொல்கிறார் “சோனியாவின் அதிகாரம் பெற்ற இந்த முகவர்களின் மறைமுகமான கையாள்களாகவே கோத்தபய அப்போது செயற்பட்டிருக்கிறார். இந்தக் கொலைகளுக்கான தனிப் பொறுப்பை கோத்தபயமீது மட்டும் சுமத்த முடியாது. அவ்வாறு சுமத்த முயன்ற தில்லியின் குற்றச் சாட்டால் கோபமடைந்த கோத்தபய கொழும்பு போர்க்குற்றங்களில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டை எதிர்கொள்ள நேர்ந்தால், அதற்கு புதுதில்லியும் உடந்தையாக இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாத்த சோனியாவின் அதிகாரம் பெற்ற ஆட்களுடனான உரையாடல் பதிவைக் கையிலெடுக்கப் போவதாக அச்சுறுத்தினார். இது தில்லியின் வாயை அடைத்தது (3.1. 2010 - Ground Report: V.S.Subramaniam)

இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக இருந்தவர் சதீஷ் நம்பியார். இவர் மேஜர் ஜெனரலாக இருந்தபோது இலங்கையின் உயர் பாதுகாப்பு வலையங்கள் பற்றி ஆய்வுசெய்து அது பற்றி இந்தியாவுக்குக் கருத்துச் சொல்வதற்காக 2003இல் அனுப்பப்பட்டார். “வடக்கு-கிழக்கு மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென்றால் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும்” என்பது அவர் அளித்த அறிக்கையின் சாரம். இந்த சதீஷ் நம்பியார்தான் ஓய்வுபெற்ற பின் #இலங்கையின் ராணுவ ஆலோசகராகப் பணிபுரிந்தார் என்பதும் விடுதலைப் புலிகளையும் மக்களையும் அழிக்கும் இந்தியாவின் திட்டத்தைச் செயல்படுத்தவே அவர் அங்கு அனுப்பப்பட்டார் என்பதும் இவரது சகோதரர் விஜய் நம்பியார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனின் சிறப்புச் செயலர் என்பதும் விஐய் நம்பியார் முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது கொழும்பில் இருந்தார் என்பதும் முள்ளிவாய்க்கால் படுகொலை நடைபெற்ற பின் தடயங்கள் இல்லாமல் அழிப்பதில் இந்த இரு நம்பியார்களும் பின்னிருந்து செயல்பட்டார்கள் என்பதும் நாமறிந்த உண்மைகள். ஆனால் நார்வே அறிக்கையில் குறிப்பிடப்படாத உண்மைகள்.

o

இந்தியாவே எல்லாம் என்ற கூவல் ஆபத்தானது. இது அமெரிக்காவே எல்லாம் என்பதற்குச் சமமானது. இந்தியாவை நம்பியும் அமெரிக்காவை நம்பியுமே இறுதிக் காலப் பேரழிவுகள் நிகழ்ந்துள்ளன என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

#ஈழத்தமிழர் தமது தேசிய விடுதலைப் போரைத் தொடர்ந்து முன்னெடுப்பது தவிர வேறு வழியில்லை. இந்தியாவையும் இந்தியா போன்ற வல்லரசுகளையும் உலக அரசியல் போக்குகளையும் கூர்மையாய் அவதானித்து, எப்படிக் கையாளுவது என்ற ராஜதந்திரத்துடன் நகர வேண்டும். ஈழத் தமிழர், புலம்பெயர் தமிழர், தாயகத் தமிழர் ஆகிய மூன்று தளங்களில் ஒருங்கிணந்த செயல்பாடுகள்தாம் விடிவுக்கு வழி. ஒவ்வொரு தளத்திற்கும் தனித் தனிக் கடமைகள் உண்டு. ஆனால் இந்திய சரணாகதி அரசியல் யாருடைய கடமையாகவும் Balachandran nimalandran

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...