Tuesday, July 26, 2016

தாமிரபரணி

பூங்குளத்தில் பிறக்கிறாள் தாமிரபரணி மாதா...

தாமிரபரணி உற்பத்தியாகும் பூங்குளம். 

பொதிகை மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பல்வேறு சிற்றாறுகளாகவும் அருவிகளாகவும் வனத்துக்குள்ளும் நிலத்துக்குள்ளும் தவழ்ந்து வரும் தாமிரபரணி, தமிழகத்தின் பூங்குளம் இடத்தில் இயற்கையாக அமைந்த சிறு குளத்தில் வெளியே தெரிகிறது. குறிப்பிட்ட மாதங்களில் குளத்தைச் சுற்றிலும் கருடா மலர்கள் பூக்கின்றன. அதனால் இதனை பூங்குளம் என்று அழைக்கிறார்கள். 

இதுதான் தாமிரபரணியின் நதிமூலம் என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கிறது தமிழக வனத்துறை.

நமது பொதிகை மலைப் பயணத்தின் நோக்கமே நதி மூலமான பூங்குளத்தைப் பார்க்க வேண்டும் என்பதுதான். தமிழகம் வழியாக தற்போது பூங்குளத்தை அடைய முடியாது. அதேசமயம் கேரளம் வழியாக பொதிகை மலைப் பயணத்திலும் பூங்குளத்தை அடைய முடியாது. பொதிகை மலைப் பயணத்தில் மலை உச்சியில் இருந்து கீழே தூரத்தில் இருக்கும் பூங்குளத்தைப் பார்க்க மட்டுமே முடியும். அதுதான் நதிக்கும் நல்லது. நமக்கும் நல்லது.

பூங்குளத்தை மறைத்த மேகங்கள்

இரவு முழுவதும் பொதிகை உச்சியில் அகத்தியர் மொட்டையில் அமர்ந்திருக்கிறோம். விடிந்தது. ஆனால், இரவில் தெளிவாக இருந்த வானம் காலையில் மேகங்களால் போர்த்திக் கொண்டது. மலை உச்சியை மேகக் கூட்டங்கள் அப்பிக்கொண்டன. காலை 10 மணியாகியும் மேகங்கள் கலையவில்லை. ஒருவழியாக நண் பகல் 12 மணிவாக்கில் மேகக்கூட்டங்கள் கலைந்து பளிச்சென்று சூரியன் வெளிச்சம் வந்தது.

கிழக்கில் கீழே அதள பாதாளத்தில் பாபநாசம் அணை தெரிந்தது. அதற்கு மேலே பூங்குளம் தெரிந்தது. சுற்றிலும் சோலைக்காடுகள் சூழ செவ்வக வடிவத்தில் இயற்கையான சிறு குளம் போல இருக்கிறது பூங்குளம். இவ்வளவு சிறிய குளத்தில் பிறக்கும் தாமிரபரணிதான் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 86,107 ஏக்கர் நிலங்களை வளமையாக்குகிறது.

தமிழகத்தில் இருந்து பாபநாசம் வழியாக காரையாறு அணை வரை மட்டுமே செல்ல முடியும். சில ஆண்டுகளுக்கு முன்பு காரையாறு அணையில் இருந்து படகு மூலமாக பாணதீர்த்தம் அருவி வரை பயணிகள் அனுமதிக்கப்பட்டார்கள். பின்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி தடைவிதிக் கப்பட்டுவிட்டது. இந்தத் தடைவிதிப்புக்கு முன்பாக எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான முத்தாலங் குறிச்சி காமராசு பலமுறை பூங்குளத்துக்குச் சென்றிருக்கிறார். அவரும் தற்போது பொதிகைக்கு நம்முடன் வந்தார். தமிழகம் வழியாக பூங்குளத்துக்கான பயணம் குறித்து அவரிடம் கேட்டோம்.

தமிழகம் வழி பூங்குளம்

“களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதி அது. காரையாறு அணை 144 அடி நிரம்பியிருந்தால் பாண தீர்த்தம் அருவி வரை படகில் செல்ல முடியும். அணையில் தண்ணீர் குறைவாக இருந்தால் ஒரு கி.மீ. தொலைவு நடந்துதான் செல்ல வேண்டும். பாணதீர்த்தத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் மலை மீது ஏறிச் சென்றால் பூங் குளத்தை அடையலாம். வழியில் பாண்டியன் கோட்டை என்கிற புராதனக் கோட்டையின் எச்சங்கள் காணப்படுகின்றன. இதனை விக்கிரபாண்டியன் ஆண்டதாக கூறப்படுகிறது. ஒருகாலத்தில் பாபநாசத்தில் இருந்து கோட்டை வரை 127 முரசு மண்டபங்கள் இருந்தன. எதிரிகள் நுழைந்தால் பாபநாசத்தில் முதல் முரசை ஒலிப்பார்கள். அடுத்தடுத்து முரசுகள் ஒலித்து கோட்டைக்கு தகவல் செல்லும்.

வழியே இஞ்சிக்குழி என்றொரு பகுதி இருக்கிறது. அங்கு சொற்ப எண்ணிக்கையில் காணிகள் வசிக்கிறார்கள். தொடர்ந்து ஏறினால் கன்னிக்கட்டி என்ற பகுதி உள்ளது. இங்கு வனத்துறையின் பங்களா உள்ளது. இங்கிருந்து மேலே சென்றால் பேயாறு ஓடும். அதனை கடந்தால் பூங்குளத்தை அடையலாம். பூங்குளம் பகுதியில் கருடா மலர்கள் அதிகம் பூத்தால் அந்த ஆண்டு தாமிரபரணியில் அதிகம் தண்ணீர் வரும் என்பது காணி மக்களின் நம்பிக்கை” என்றார்.

7 ஆறுகள் சங்கமம்

பூங்குளத்துக்கு முன்பாகவே பேயாறு, சிற்றாறு, உள்ளாறு ஆகிய 3 துணை ஆறுகள் தாமிரபரணியுடன் கலக்கின்றன. அதன் பின்பு மேற்குத் தொடர்ச்சி மலையின் வெவ்வேறு பகுதிகளில் உற்பத்தியாகும் காரையாறு, மயி லாறு, பாம்பாறு ஆகிய ஆறுகள், மேலணைக்கு வந்து தாமிரபரணியுடன் இணைகின்றன. அதன் பின்பு கிழே முண்டந்துறை வன ஓய்வு விடுதி அருகே தாமிரபரணியுடன் சேர்வலாறு சேர்ந்துக்கொள்கிறது. இப்படியாக வன பகுதியில் மட்டும் 7 ஆறுகள் தாமிரபரணியுடன் கலக்கின்றன.

இவை ஒவ்வொன்றும் பயங்கரமான காட்டு ஆறுகள். கற்பனைக்கு எட்டாத வேகத்தில் திடீரென வெள்ளம் புரண்டோடும். கடந்த 92-ம் ஆண்டு அப்படி ஒரு வெள்ளம் சேர்வலாற்றில் வந்த போது அங்கிருந்த பெரும் பாலம் ஒன்று சுவடு தெரியாமல் அடித்துக் கொண்டு போய் விட்டது.

அதன் பின்புதான் அங்கு இரும்பு பாலம் அமைத்தார்கள். இங்கிருந்து அடர் வனத்துக்குள்ளாகவே கீழ் நோக்கி பாய்ந்து வரும் தாமிரபரணி, முதல் முறையாக ஓரிடத்தில் பாறைகளுக்கு இடையே வெளியே அருவியாக துள்ளிக் குதிக்கிறாள். அதுதான் பாண தீர்த்தம்!

பூமிக்குள் சுரங்கப் பாதை

சேர்வலாறுக்கும் அணைக்கும் காரையாறு அணைக்கும் இடையே பூமிக்குள் 3.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. 

காரையாறு மேலணையில் தண்ணீர் அளவு 40 அடிக்கு மேல் இருந்தால் அது தானாக சுரங்கப் பாதை வழியாக சேர்வலாறு அணைக்குச் சென்று விடும். அதேபோல் மேலணையில் 40 அடிக்கு குறைவாக தண்ணீர் இருந்தால் சேர்வலாறு அணையில் இருந்து தண்ணீர் தானாக மேலணைக்குச் சென்று விடும். மேலணையும் சேர்வலாறு அணையும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பராமரிப்பில் இருக்கின்றன. 

மேலணையில் 4 யூனிட்கள் மூலம் 32 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. 
மின்சார உற்பத்தி தடையில்லாமல் நடக்கவே இந்த ஏற்பாடு.

தி இந்து...

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...