Friday, July 29, 2016

பட்டாசுத் தொழிலின் பரிதாப நிலை

இன்றைய (29.7.2016) தினமணியில் நடுப்பக்க தலையங்கப் பக்கத்தில் "பட்டாசுத் தொழிலின் பரிதாப நிலை" என்ற தலைப்பில் வெளி வந்துள்ள எனது பத்தி.

பட்டாசுத் தொழிலின் பரிதாப நிலை

வறண்ட கரிசல் அக்னி பூமியான விருதுநகர் மாவட்டம் சிறுதொழிலுக்கும் விவசாயத்திற்கும் தமிழகத்தின் கேந்திரமாக விளங்கும் பகுதியாகும். குறிப்பாக குட்டி ஜப்பான் என்ற சிவகாசியில்,வருடம் முழுவதும் பட்டாசு உற்பத்தி தொழில் நடக்கும். புத்தாண்டு என்றால் காலண்டர், டைரிகள் என்ற அச்சுத் தொழில் ஒருபுறம். விறகு அடுப்பு காலங்களில் தேவைப்படும் தீப்பெட்டி உற்பத்தியும் இங்கு அதிகம். சிவகாசி பட்டாசுகள் அமெரிக்க விடுதலை நாளில் பயன்படுத்தபடுவது உண்டு. ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்த பட்டாசுகள் செல்வது உண்டு. இங்கு அச்சாகும் காலண்டர்கள், பன்னாடுகளுக்கும் செல்கின்ற பரிசு பொருட்களாக திகழ்கின்றன. சாத்தூரில் பேனா நிப் செய்யும் குடிசைத் தொழிலும் 1975 வரை உலகத்தின் எழுத்துத் தேவைக்கு பயன்பட்டது. மூதறிஞர் இராஜாஜி இங்கு உற்பத்தியாகும்தங்க முலாம் பூசிய நிப்புகளை பேனாவில் வைத்து எழுதுவது உண்டு. இதை சாத்தூர் எஸ்.ஆர். நாயுடு அவருக்கு கொண்டு வந்து கொடுப்பது வாடிக்கை. சத்யஜித்ரே, அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கென்னடிபோன்ற பல ஆளுமைகளுக்குநிப்புகள் சாத்தூரிலிருந்து சென்றது உண்டு.  இராஜபாளையத்தில் பஞ்சுத் தொழில், விருதுநகரில் மிளகாய், பருப்பு, எண்ணெய் கமிஷன் மண்டிகள் என்ற தொழில்கள் இந்த வட்டாரத்திற்கு வளம் சேர்த்தன.  இன்றைக்கு இந்த சிறுதொழில்கள் எல்லாம் சீரழிந்து, பட்டாசு தொழிலில் நித்தமும் விபத்துக்கள் ஏற்பட்டு இத்தொழிலில் ஈடுபட்டவர்கள் மடியவேண்டிய கொடூரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிவகாசி கன்னிவெடி நகரமா?வவுனியா காடா?என்று கேட்கக் கூடிய அளவில் பதட்டமான நிலை.

மனித உயிர்கள் பட்டாசு உற்பத்தி விபத்தில் மடிவது சாதாரணமாக போய்விட்டது என்பதுதான் கொடுமை. அது வறுமையின் பிடியில் மாட்டிக்கொண்டவர்கள் வேறு வழியில்லாமல் பட்டாசுத் தொழிலுக்கு வேலைக்கு செல்கின்றனர். அதுவும் 20 வயதை அடைந்தவர்கள் அதிகமாக இத்தொழிலுக்கு செல்கின்றனர் என்பது செய்தி. 2012ல் முதலிபட்டி கிராமத்தில் 45 பேரும், அதே கிராமத்தில் 2014ல் 40 பேரும் பட்டாசு ஆலை எரிந்து மடிந்தனர்.  நான்கு ஆண்டுகள் ஆகியும் இன்னும் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை.  இப்படி வேதனை தரும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.  சரியான புள்ளி விவரங்கள் இதுவரை எத்தனை பேர் விபத்தில் இறந்துள்ளனர் என்று சரியாக இல்லை. கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக 200க்கு மேலான விபத்துகள் நடந்துள்ளன. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 400க்கு மேல்.படுகாயமடைந்தவர்கள் 250க்கு மேல் இருக்கும் என்று புள்ளி விவரங்கள் சொன்னாலும் இவை யாவும் சரியானவையா என்பது கேள்விக் குறிதான்.

2005-ல் சிவகாசியின் மீனாம்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டு ஜூலை மாதம் சிவகாசி அனுபன்குளம் கிராமத்தில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர், 22 பேர் காயம் அடைந்தனர். 2006-ல் சிவகாசி பர்மா காலனியில் ஏற்பட்ட பட்டாசு தீ விபத்தில் 12 பேரும், 2007-ஆம் ஆண்டு நாராயணபுரத்தில் நிகழ்ந்த பட்டாசு விபத்தில் 4 பேரும் உயிரிழந்தனர்.  2009-ல் சிவகாசியின் நமஸ்கரித்தான்பட்டியில் நிகழ்ந்த விபத்தில் 18 பேரும், மற்றொரு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 3 பேரும் உயிரிழந்தனர். 2010-ல் சிவகாசியில் நிகழ்ந்த பட்டாசு விபத்தில் 7 பேர் பலியாகினர். அதே ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி சிவகாசி மாரனேரி பகுதியில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் பெண் தொழிலாளி ஒருவர் பலியானார். 2010-ல், செப்டம்பர் மாதம் சாத்தூர் தாயில்பட்டி அருகே மீனாட்சிபுரத்தில் பதுக்கி வைக்கப்பட்ட பட்டாசு கருந்திரிகளை அழிக்கச் சென்ற வருவாய்துறையினர் 6 பேர், காவல்துறையினர் 2 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். 2011-ல் விருதுநகர், சிவகாசி மற்றும் தூத்துக்குடிமாவட்டத்தில்நிகழ்ந்த பட்டாசு விபத்துகளில் 14 பேர் உயிரிழந்தனர்.  2013-ல் சிவகாசி நாரணாபுரம் கிராமத்தில் ஒரு ஆலையில், தடை செய்யப்பட்ட செந்தூரம் வேதிப் பொருட்களைக் கொண்டு மரத்தடியில் பட்டாசு தயார் செய்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டு சாத்தூர் அருகே உள்ள ஆலையிலும் மற்றும் கோணம்பட்டியில் உள்ள ஆலையிலும் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 2014-ல் ஒண்டிப்புலி நாயக்கனூரில் அனுமதியின்றி இயங்கி வந்த பட்டாசு கருந்திரி ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 சிறுவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டு சிவகாசி அருகே விஸ்வநத்தம் கிராமத்தில் உள்ள ஆலையில் பட்டாசு திரிகளை வெட்டும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இப்படி இன்று வரை இந்த துயரங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.  இந்த விபத்துகளுக்கு சிவகாசியில் அவசர சிகிச்சைக்கு மருத்துவமனை கட்டடங்கள்தான் கட்டப்பட்டதே ஒழிய உரிய மருந்துகளும் கருவிகளும் பற்றாக்குறை.  விபத்து ஏற்பட்டால் அப்பகுதியில் வாழை இலையை உடலில் போர்த்தி முதலுதவி செய்வதுதான் நடைமுறையாகிவிட்டது.  வெடி விபத்துக்கள் நடந்தால் அதற்கான சிகிச்சைகளை செய்வதற்கான தயார் நிலை இல்லாதது மிகவும் கவலைக்குரியதாகும்.

பட்டாசு ஆலை போன்றே தீப்பெட்டி ஆலை விபத்துகளும் தொடர்ந்து நடக்கின்றன.  வறண்டு போன இந்த வட்டாரத்திற்கு விவசாயம் பொய்த்துப் போவதால் அங்குள்ள மக்கள் ஜீவனத்திற்கு விபத்துகள் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று பட்டாசு, தீப்பெட்டி ஆலைகளுக்கு வேலைக்கு செல்கின்றனர்.  ஆண்டுக்கு 5000 கோடி வரை பணத்தை ஈட்டும் சிவகாசி தொழில் நகரத்தில் இப்படியான துன்பங்கள், அழுகைகள் தினமும் நடக்கின்றன.  மகிழ்ச்சியோடு வெடித்து காசு தருகின்ற பட்டாசை உருவாக்கும் கைகளில் பெரிய கண்ணீர் கதை உள்ளது.  பல விபத்துக்கள் வெளியே தெரியாமலும் போய்விடுகின்றன.  சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் வரை பரவியுள்ள இந்த வெடி ஆலைகளில் தினமும் ஒரு உயிர் பலியாகின்றது. இது விபத்துதான். இதை யாரையும் குற்றம் சொல்ல முடியாவிட்டாலும் இந்த விபத்துக்களை தடுக்கக் கூடிய மேல் நடவடிக்கைகளை எடுக்க ஆலை அதிபர்கள் தவறுவதால்தான் இந்த மோசமான நிலை.

இன்றைக்குக்கு அங்குள்ள நிலைமை என்ன? சிறு அளவிலான பட்டாசு ஆலைகளுக்கு அனுமதியை மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் தந்தாலே போதும்.  அதற்கு அடுத்து பெசோ என்று சொல்லக்கூடிய மத்திய பெட்ரோலிய மற்றும் வெடிபொருள் அமைச்சகத்தின் நிறுவனமும் உரிமை வழங்க வேண்டும். இந்த பெசோ நிறுவனத்தின் அலுவலகம் சிவகாசியில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அமைந்துள்ளது. இந்த அலுவலகமும் விபத்துகள் குறித்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளன.   சற்று பெரிய ஆலைகளுக்கு சென்னையிலும், பெரிய நிறுவனங்களுக்கு புனேவில் உள்ள மத்திய அரசின் அலுவலகத்தில் இருந்து உரிமைகள் வழங்கப்படுகின்றன.  இதில் அடிக்கடி மாநில அரசு அதிகாரிகளுக்கும், மத்திய அரசு அதிகாரிகளுக்கும் கண்காணிப்பில் போட்டா போட்டியும் நடப்பது உண்டு. மாநில அரசு அதிகாரிகள் சல்ஃபர் வேதிப்பொருளை மட்டும்தான் நாங்கள் கண்காணிக்கின்றோம். மற்றவற்றை கண்காணிப்பதில் எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கை விரிப்பார்கள்.

பட்டாசு வெடிபொருளில், "சல்பர்" மட்டுமே படைக்கலச் சட்டத்தின் கீழ் வருகிறது. ஆனால், பட்டாசு உற்பத்திக்கு தேவையான ''அலுமினியம் பவுடர், பொட்டாசியம் நைட்ரேட், பேரியம் நைட்ரேட், பொட்டாசியம் குளோரேட்" போன்ற பல மூலப்பொருட்களை வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழியில்லை. அதை வைத்திருப்போர், விற்பனை வரியை ஒழுங்காக செலுத்தி வருவதால், அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. எனவே அனைத்து வெடிபொருள்ளுக்கான மூலப்பொருட்களை வைத்திருப்பதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் விதிமுறைகளை உருவாக்கினால்தான் அவர்களை கட்டுப்படுத்த முடியும். இதுதான் விபத்துக்களுக்கு அடிப்படை. விருப்பம் போல இந்த மூலப்பொருட்களை கட்டுப்பாடு இல்லாமல் புழக்கத்தில் இருப்பதால் விபரீதங்கள் நடக்க காரணமாகிவிடுகின்றன.

கடந்த ஜூலை 2, 2016 அன்று சிவகாசி நகரின் மையப்பகுதியில் நடந்த விபத்து பெரும் பீதியை ஏற்படுத்தியது. விற்பனைக் கடையை ஒட்டிய இடத்திலேயே பட்டாசு செய்ய தேவையான வேதிப்பொருள்கள் பதுக்கப்பட்டிருந்தது. அதனால் வெடி விபத்து நிகழ்ந்து, அந்த கட்டிடமே தரைமட்டமாகி நான்கு பேர் பலியானார்கள்.  சிவகாசி நகரின் பேருந்து நிலையத்திலிருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் வெடி மருந்து பொருட்கள் சேமிப்புக் கூடங்கள் இருக்கக் கூடாது என்று இருந்தததை 13 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு என்று கூடுதலாக்கப்பட்டது.  அதன் பின்பும் பாதுகாப்பை கருதாமல் ஒரு சிலர் சிவகாசி நகரத்திலும், அதன் எல்லையிலும் இம்மாதிரி சட்டத்துக்குப் புறம்பாக வேதிப் பொருள்களை சேமித்தது தவறு. அதை சரியாக அரசு நிர்வாகமும் கண்காணிக்கவில்லை.  நடந்த விபத்தைக் கண்டு சிவகாசி மக்களே அதிர்ச்சியடைந்தனர். இந்த விபத்து நடந்த இடம் சிவகாசி பேருந்து நிலையத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் விருதுநகர் சாலை அருகில் மக்கள் நெருக்கமாக வாழ்கின்ற பகுதியாகும்.  அன்றைக்கு நடந்த விபத்தில் பெரும் புகையும், தீயையும் உருவாக்கி மக்கள் பயத்தில் எட்டுத் திக்கில் அலறி ஓடியதை பார்த்ததை பலர் வேதனையோடு குறிப்பிட்டிருந்தனர். அமைதியான வாழ்க்கை தான் பிரதானம் என்று நினைக்காமல் ஒரு சிலர் தங்கள் சுயநலத்திற்காக நடந்துகொள்கின்ற முறையால் இந்த ரணங்கள் ஏற்படுகின்றன.

பட்டாசு, தீப்பெட்டி ஆலை விபத்து என்பதை தடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி இதைக் கட்டுப்படுத்தவேண்டும். இதில் பல இடங்களில் சிறுவர்களும் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். வேலைக்கு ஆள்களை திரட்டிக்கொண்டு வருவதற்கு மேஸ்திரிகள் என்ற இடைத்தரகர்களும் உண்டு.  இப்படியான சட்டத்திற்கு புறம்பாக இந்த பட்டாசுத் தொழில் இயங்குவதை முறைப்படுத்த வேண்டும்.  முன்பெல்லாம் ஆலையில் விபத்து என்றால் ஆலையின் உரிமையாளர் முதலில் வந்து நின்று முதலுதவிப் பணிகளை ஆற்றுவார். ஆனால் இன்றைக்கோ ஆலையில் விபத்து என்று சொன்னவுடன் பயந்து ஒளிந்து, நீதிமன்றத்தில் பிணைகள் வாங்குவதில்தான் ஆர்வம் செலுத்துகின்றனர்.  இம்மாதிரி விபத்துக்களுக்கு சரியாக காப்பீட்டுத் தொகைகளும் எளிதாகவும், விரைவாகவும் கிடைப்பதும் கிடையாது. சில சமயங்களில் இந்தக் காப்பீட்டுத் தொகைகள் கிடைப்பதும் இல்லை.  சிவகாசி பகுதியில் மட்டும் 250 சிறு ஆலைகள் உள்பட 850 பட்டாசு ஆலைகள் உள்ளன.  இது தவிர, முறைப்படுத்தாத ஆலைகள் என்று 100 ஆலைகள் வரை இயங்குகின்றன. அவர்களிடம் உரிமங்கள் இருக்கும். விதிமுறைகளையும், நடைமுறைகளையும் ஆலை அதிபர்கள் பின்பற்ற மாட்டார்கள்.

ஒரு பட்டாசு ஆலைக்கு உற்பத்திக்கு தகுந்தவாறு தனி செட் அமைக்க வேண்டும். அந்த செட்டில் இத்தனை பேர்தான் பணியில் அமர்த்தவேண்டும் என்ற முறை உள்ளது. ஒரே செட்டில் அதிகமானவர்கள் பணி செய்யும் போது விபத்துகளில் இருந்து தப்பிக்க இயலாது. ஒரே அதிபரிடம் பட்டாசு உற்பத்தி செட்டுகள் 20 இருந்தால், அதை 20 பேருக்கு குத்தகைக்கு விட்டுவிடுகின்றனர். அப்படி குத்தகைக்கு விடும்பொழுது விபத்துகள் நடந்தால் அந்த குத்தகைதாரர் இழப்பீடு தொகையை தருவதும் இல்லை.  இந்த குத்தகைதாரர்கள் வெடிபொருட்களை நேரடியாக வாங்காமல் தங்களுக்குத் தேவையான அளவை சில கடைக்காரர்களிடம் சில்லரையாகவும், சட்டவிரோதமாகவும் வாங்குகின்றனர். இதை கண்காணிக்கவும் முடியாது. இந்த விபத்துகளுக்கு இப்படி பல காரணங்கள்.

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற நிலையில் சிவகாசியில் இத்தொழில்கள் அழிந்து வருகின்றன. 1995 வரை இம்மாதிரி விபத்துக்கள் நடப்பது அரிதாக இருந்தது.  ஒரு பக்கம் 80 ஆண்டுகளாக நடந்து வரும் சிவகாசி பட்டாசுத் தொழிலை நசுக்கக் கூடிய வகையில் சீனப் பட்டாசுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களில் ஆயிரக்கணக்கான கண்டெய்னர்கள் கப்பலில் வந்து இறங்குகின்றன.  சீனப் பட்டாசுகள் பாதுகாப்பற்றது. அலுமினியம் நைட்ரேட்டைக் கொண்டு சிவகாசி பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் சீனப் பட்டாசுகள் பொட்டாசியம் குளோரேட்டை வைத்து தயாரிப்பதால் எளிதில் தீப்பற்றி விபத்துக்கள் ஏற்படும். சிவகாசி பட்டாசுகளின் ஒலி 145 டெசிபல்.  ஆனால் சீனப் பட்டாசின் டெசிபல் அளவு அதிகம். சீனப் பட்டாசால் அரசுக்கு வரும் வருவாயும் குறையும். உள்நாட்டு உற்பத்தியால் மத்திய அரசுக்கு 12.5 சதவீதம் கலால் வரியும், மாநில அரசுக்கு 14.5 சதவீதம் வணிக வரியும் கிடைக்கும். ஆனால் சீனப் பட்டாசால் இந்த வருவாய்கள் கிடைக்காது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த விபத்துகளின் எண்ணிக்கை கூடுதலாகிக்கொண்டே இருக்கிறது.  கையால் செய்கின்ற தீப்பெட்டித் தொழிலும் அழிந்துகொண்டிருக்கின்றது; பட்டாசுத் தொழிலம் மருவிக் கொண்டிருக்கின்றது; அச்சுத் தொழிலும் அரிதாகிவிட்டது இந்த வட்டாரத்தில். சிவகாசி வட்டாரத்தில் வாழும் மக்களுக்கு வேறு வழியில்லை. விபத்துக்களையும் எதிர்பார்த்துதான் அன்றாடம் இம்மாதிரியான ஆபத்தான பணிகளுக்கு செல்கின்றனர்.  ஆதியில் சிவகாசி ஐய்யநாடார் குடும்பத்தினர் கல்கத்தா சென்று அறிந்து கரி மருந்து மூலம் தீப்பெட்டியும், பட்டாசு வெடிகளையும் உற்பத்தி செய்ய காரணமாக இருந்தனர். கி.ரா.வும், மேலாண்மை பொன்னுசாமியும் இவ்வளவு துன்பங்கள் இருந்தாலும், வேறு வழியில்லாமல் துணிந்து ஆபத்தான தீப்பெட்டி, பட்டாசுத் தொழில் வேலைக்கு ஏழை சாலைகள் செல்கின்றனர் என்பதை தங்களுடைய படைப்புகளில் வேதனையோடு குறிப்பிட்டுள்ளனர்.

கி.ரா. குறிப்பிட்டதைப்போல “கறுப்பு மண்ணில் வாழ்ந்தாலும் வெள்ளை மனது படைத்தவர்கள். இவர்களின் உடைதான் அழுக்கு, நாக்கு சுத்தம். இந்த குணத்தை பெற்றவர்கள் இந்த சிறு தொழில்களை நம்பி வாழ்க்கையை காப்பாற்ற தவிக்கின்ற மக்களின் துயரங்களை கணக்கில் கொள்ள வேண்டும்.”

பட்டாசுத் தொழில் விபத்துக்களை செய்திகளில் பார்க்கும்பொழுது ஒரு செய்திதானே என்று நினைக்காமல் நாம் வெடிக்கும் ஒவ்வொரு பட்டாசை உருவாக்கிய கைகளின் பின்னணியில் ஒளிந்திருக்கும் துயரக்கதையை எண்ணிப் பார்க்க வேண்டும். பட்டாசுத் தொழில் பாடுபடும் பாட்டாளிகளின் பாதிப்புகளை களைந்து அத்தொழில் பதட்டமற்ற பட்டாசுத் தொழிலாக மாற மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

- வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...