Sunday, July 17, 2016

Jaffna University

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மரபாக நாதஸ்வரம்,மேளங்களுடன் நடக்கும் புதுமாணவர் வரவேற்பில் தமது பாரம்பரிய இசையுடனான கண்டிய நடனம் இடம்பெறவேண்டும் என்று சிங்கள மாணவர்கள் சிலர்,ஏற்பாட்டின் இறுதிக்கட்டத்தில் முயன்றதால் ஏற்பட்ட முரண்பாடு மோதலில் முடிந்திருக்கின்றது.

இந்த ஒரு நிகழ்வை மட்டும் வைத்து முடிவு செய்தால் பன்மைக் கலாச்சாரம் பேணப்படுவதில் என்ன தவறு சிங்களக் கலாச்சார நிகழ்வும் வரவேற்பில் நடந்துவிட்டுப்போகட்டுமே என்ற வாதம் சரியாகத் தோன்றும்.

ஆனால் இதை முழுமையான நோக்கில் பார்ப்போம்.

1.சமூகத்தின் நிலை
2.பல்கலைக்கழக நிலை

தமிழ் இனம் தனது அடிப்படை உரிமைகளுக்காக நீண்ட அரசியல் போராட்டத்தையும்,அதன் தோல்வியினால் ஒரு உச்ச அர்ப்பணிப்பிலான ஆயுதப்போராட்டத்தையும்,அதன் தோல்வியின் பின்னர் மீண்டும் ஒரு அரசியல் போராட்டத்தையும் நடத்திக்கொண்டிருக்கின்றது.

தமிழர்கள் தமது நிலங்களை குடியேற்றங்களால் இழந்தார்கள்,இராணுவ நடவடிக்கைகளால் இழந்தார்கள்,தமது நல்லெண்ணத்தாலும் அரவணைக்கும் தன்மையாலும்கூட இழந்தார்கள்.

பதினேழாம் நூற்றாண்டில் இலங்கையின் மேற்குக் கரையோரமாக இருந்த முஸ்லிம் வர்த்தகக் குடியேற்றங்களை வியாபார மற்றும் மதப் போட்டியின் காரணமாக போத்துக்கேயர் தாக்கியபோது அகதிகளான முஸ்லிம்களை கண்டி அரசன் மலை நாட்டிலும்,அன்று அவனின் கட்டுபாட்டிலிருந்த கிழக்கிலும் குடியேற்றினான்.

அவர்களை கிழக்கில் வரவேற்று குடியமர்வதற்கான உதவிகளை செய்த கிழக்கு வாழ் தமிழர்கள் நானூறு வருடங்களுக்குள் தமது அரசியல் அதிகாரத்தையே இழந்து இன்று அநாதைகளாக நிற்கின்றார்கள்.இது தமிழன் நல்லெண்ணத்தாலும் அரவணைக்கும் தன்மையாலும் இழந்ததற்கு ஓர் உதாரணம்.

யுத்தத்தின் ஒரு தரப்பு வெல்வதும் ஒரு தரப்பு தோற்பதும் இயல்புதான்.ஆனால் இருதரப்பிலும் போரில் இறந்தவர்கள் மரியாதைக்கு உரியவர்களாக நடத்தப்படுவது நாகரிக மாண்பு.

இளைஞனான துட்டகைமுனு மன்னன் நாற்பது ஆண்டுகள் அறத்தின் வழியில் ஆண்டுகொண்டிருந்த,முதியவனாகிவிட்ட எல்லாள மன்னனை தந்திரமாக தனிப்போருக்கு அழைத்துக்கொல்கிறான்.ஆனால் அவர் இறந்த இடத்தில் சமாதியமைத்து அதைக் கடந்து செல்வோர் மரியாதை செலுத்தியே செல்லவேண்டும் என்று ஆணை பிறப்பித்தான் துட்டகைமுனு.

அவன் சிங்கள இனவாத அரசனாக இருக்கலாம்.ஆனால் மிகுந்த புத்திசாலி என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.அறநெறி தவறாமல் ஆண்ட எல்லாள மன்னனுக்கு இருக்கும் மக்கள் ஆதரவை உணர்ந்து அந்த மக்களின் மனதை வெல்லவேண்டும் என்று அவன் தெளிவாகவே சிந்தித்திருக்கின்றான்.

ஆனால் துட்டமுனுவாக ஆசைப்பட்டவர்கள் யுத்தத்தின் பின்னர் தமிழர்களின் மனங்களை வெல்வதைச் சிந்திக்கவில்லை.இடிக்கப்பட்ட வீரர்களின் துயிலுமில்லங்களும் அதன் மீது அமைக்கப்படும் வீதிகளும் கட்டிடங்களும் தமிழர்களின் மனதை மேலும் ஆழமாகப் புண்படுத்துவதற்கே வழிவகுத்துள்ளன.

இவ்வாறு எண்ணற்ற பண்பாடு சார்ந்த,உரிமைசார்ந்த இழப்புகளைச் சந்தித்திருக்கும் ஒரு சமூகம் ஆழமான பாதுகாப்பின்மையை உணர்வதாகவே இருக்கும்.வெளியிலிருந்து பார்க்கும்போது 'பன்மைத்துவத்துக்கான சாதாரண பண்பாட்டு நடவடிக்கையைக்கூட" ஏற்றுக்கொள்ளாதவர்களாக கடும்போக்காளர்களாக தெரியக்கூடிய  இந்த மக்கள் "ஐந்து வீடுகளையாவது" விட்டுவிடுங்கள் என்ற கண்ணனின் கோரிக்கை மனநிலையிலேயே இதை அணுகுகிறார்கள்.

இரண்டாவது பல்கலைக்கழங்கள் சார்ந்த நிலை.இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் இரண்டு மட்டுமே தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள நிலத்தில் அமைந்துள்ளன.ஒன்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்,இரண்டாவது மட்டக்களப்பை மையமாகக் கொண்ட கிழக்குப் பல்கலைக்கழகம்.

முஸ்லிம் காங்கிரஸ் அஷ்ரப், சந்திரிகா அரசில் அமைச்சராக இருந்த காலத்தில் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஒரு பீடத்தை,கிழக்கில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியொன்றுக்கு மாற்ற முற்பட்டு கிழக்குத் தமிழர்களின் கடுமையான எதிர்ப்பினால் சாத்தியமாகாதமையால் முஸ்லிம்கள் அதிகளவில் வாழும் அம்பாறை மாவட்டத்துக்கென்று தனியான பல்கலைக்கழகத்தை அரசியல்பேரத்தினூடாகப் பெற்றுக்கொண்டார்.அந்தப் பல்கலைக் கழகம் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.

இவ்வாறான நிலையில் பல்கலைக் கழகங்கள் அவை அமைந்துள்ள பிரதேசங்களின் அடிப்படையில் அவ்வப் பெரும்பான்மை மக்களின் பண்பாட்டுக்கு அமைவாகவே பொதுவான நிகழ்வுகளை நடத்துகின்றன.

எடுத்துக்காட்டாக கொழும்புப் பல்கலைக் கழகத்தில் கணிசமாக தமிழ் மாணவர்கள் கல்வி கற்றாலும் பொதுவான நிகழ்வுகள் சிங்களக் கலாச்சாரம் சார்ந்தே நடைபெறுகின்றன.அதை தமிழ் மாணவர்கள் இன்னுமொரு கலாச்சாரத்தைப் புரிவதற்கான வாய்ப்பாகவே நோக்குகிறார்களே தவிர,தமிழர்களின் பண்பாட்டையும் அதில் புகுத்தவேண்டும் என்று முயன்றதாகத் தெரியவில்லை.

பொதுவான நிகழ்வுகள் அவ்வப் பல்கலைக்கழகங்கள் அமைந்ததுள்ள இடங்களின் அடிப்படையில் பெரும்பான்மைப் பண்பாட்டுக்கமைவாக நிகழும் அதேவேளை அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும்  இந்து மன்றம்,கத்தோலிக்க மன்றம்,பௌத்த மன்றம்,இஸ்லாமிய மன்றம்,தமிழ் மன்றம் போன்ற அந்தந்த மாணவர்களால் நடத்தப்படும் மாணவர் அமைப்புகளும் அவற்றின் கலை நிகழ்வுகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

எமது ஜனநாயகம் மேலைநாடுகள் போன்று முழுமையாக தனிமனிதர்கள் உரிமை என்ற உயரத்துக்கு இன்னும் வளரவில்லை.

"எனக்கு இது உனக்கு அது" என்ற அடையாள அடிப்படையிலான உரிமைப் பங்கீடுகள் என்ற முதலாவது கட்டத்திற்கே ஓரளவுக்கு வளர்ந்துள்ளது.

அதன்படி தமிழர்களுக்கு இரண்டு பல்கலைக்கழகங்கள்,முஸ்லிம்களுக்கு ஒரு பல்கலைக்கழகம்,சிங்களவர்களுக்கு ஏனையவை என்ற பொதுமனநிலையே இருக்கின்றது.வேறு சமூகத்தவர் இந்தப் பல்கலைக்கழகங்களில் கற்கும்போது இயல்பாக இந்த மனநிலையை ஏற்றுக்கொண்டே கல்வியைத் தொடர்கிறார்கள்.

இணைந்த வடக்குக் கிழக்குடன் முழுமையான சமஷ்டி அமைப்பொன்று ஏற்படுத்தப்படும்போது நிச்சயமாக தமிழர்கள் அனைத்துவிடயங்களிலும் ஏனைய மாகாணங்களைவிட பன்மைத்துவத்தையும்,தனி மனித உரிமையும் கடைப்பிடிப்பார்கள்.ஏனென்றால் தமிழனின் இயல்பிலேயே அரவணைக்கும் தன்மையுள்ளது.

சோழர்கள் வீழ்ந்துவிட்டார்கள்.இனி மதுரையும் வீழ்ந்துவிடும் என்று முன்கூட்டியே உணர்ந்து முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்(கி.பி 1268 -கி.பி 1311) தனது முதலமைச்சனும் படைத்தளபதியுமாகிய தனி நின்று வென்ற பெருமாள் என்று புகழப்பட்ட மதிதுங்கனிடம்(ஆரியச் சக்கரவர்த்தி) தமிழையும் பண்பாட்டையும் காப்பதற்காக யாழ்ப்பாண அரசைக் கொடுத்தான் என்று நம்பும் தமிழர்கள் இன்றும் உள்ளார்கள்.தமிழர்களுக்கான  முழுமையான சுயாட்சி வழங்கப்பட்டால் மட்டுமே அவர்களும் பன்மைத்துவம் குறித்துச் சிந்திப்பார்கள்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...