Thursday, July 28, 2016

பயோடைவர்சிட்டி

அழிந்து வரும் பாரம்பரியப் பசுக்கள்...
அரசு துணை உடன் விதை வங்கி,
ஜீன் வங்கி கொள்ளைகள்.

நமது இயற்கை அற்புதங்களின் முக்கிய அம்சம் “பயோடைவர்சிட்டி’ என்ற பல்லுயிர்ப் பெருக்கம்.

இப் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு நமது தாவரங்கள், பறவைகள், பூச்சிகள், விலங்குகள் ஆகியவற்றின் வேற்றுமைப் பண்புகள் அடிப்படை. உதாரணமாக நெல்லில் மட்டும் 5 ஆயிரம் வித்தியாசமான ரகங்கள் உண்டு. 

கத்தரிக்காயில் 100-க்கும் மேற்பட்ட வகைகள் தமிழ்நாட்டில் உண்டு.
இயற்கையின் அற்புதத்தால் நிகழ்ந்த பல்லுயிர்களின் வேற்றுமை குணங்களின் பல்லாயிரம் ஆண்டுக்காலப் பெருக்கமே நமது தேசியச் செல்வம். 

நவீன விவசாயத்தாலும், நவீன கால்நடை வளர்ப்பினாலும் நமது தேசியச் செல்வங்கள் “”விதைவங்கி” “”ஜீன் வங்கி” என்ற பெயரில் கொள்ளை போனது ஒரு பங்கு. 

அரசின் ஆதரவு இல்லாமல் அழிந்தவை பல பங்கு.

எதிர்கால வேளாண்மைக்கு வளம் சேர்க்கும் இலக்கில் நாம் இழந்து விட்ட நெல் ரகங்களைத் தேடிப் பாதுகாத்து அதன் சாகுபடியை உயர்த்த தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நமது பாரம்பரிய நெல்லில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் பல விவசாயிகள் கிச்சலி, சீரகச்சம்பா, பெருங்கார், சம்பா, வையக்குண்டான் என்று தேடி அலைந்து பயிர் செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.

ஆனால் இதே விழிப்புணர்வு பாரம்பரியப் பசுக்களின் மீட்பில் இல்லை. “”மூர்த்தி சிறிது, ஆனால் கீர்த்தி பெரிது” என்று பெயர் பெற்ற 
புங்கனூர்க் குட்டை எங்கே? 
காங்கேயம் எங்கே? 
உம்பளச்சேரி எங்கே? 
காங்கிரஜ் எங்கே? 
ரதி எங்கே? 
சாசிவால் எங்கே? 
தார்ப்பார்க்கர் எங்கே? 
தாங்கி எங்கே? 
சிந்தி எங்கே? என்று கேட்பாரில்லை. 

இன்றுள்ள சீமை ரகக் கலப்பினங்களை விடவும் அல்லது அதே அளவும் அதை விடக் கெட்டியான பால் வழங்கும் இயல்புள்ளவை நாம் வளர்த்த நம் நாட்டு பாரம்பரியப் பசுக்கள்.

இந்தியாவின் செல்வங்களை மதிப்பீடு செய்ய முகலாய மன்னர் ஒளரங்கசீப் காலத்திலேயே ஆங்கிலேயர்கள் இங்கு வந்து நமது மேழிச் செல்வத்தைக் கண்டு வியந்தனர். நாட்டினப் பசுக்களின் பால், காளைகளின் உழைப்புத் திறன், நோயற்ற நிலை கண்டு புகழ்ந்துரைத்தனர்.

20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் லிட்டில்வுட், ஓல்வர், மெக்கென்னி என்று கால்நடைத் துறையில் பணியாற்றிய பலரின் குறிப்புகள் கவனத்திற்கு உரியவை.

18, 19 ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்திய மாடுகள் பிரேசில், வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாயின. 
அன்றுதொட்டே இந்திய நாட்டு மாடுகளுக்கு அந்நாடுகளில் மிகுந்த மரியாதை உண்டு. 

அகராதியில் திமில் பருத்த மாட்டு இனம் என்று பொருள். இந்தியப் பசுக்களை அந்நியர்கள் இப்பெயரில் அழைப்பார்கள். சீமை இன மாடுகளுக்கு திமில் இல்லை. இந்தத் திமில் காரணமாகவே இந்திய மாடுகள் வெப்பத்தைத் தாங்கும் சக்தியுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் இருந்தது.

சீமை மாடுகளின் இயல்பு படி அந்த நாட்டின் தட்பவெப்பம் வளர்ப்பு காரணமாக அதிக பால் தந்தாலும் வலு குன்றியவை. நோய் எதிர்ப்புச் சக்தி இல்லை. 

இறைச்சி ருசிக்காகவும் ,நோய் எதிர்ப்பு சக்திக்காகவும் திமில் பருத்த மாடுகள் கடல் கடந்து சென்ற கொடுமைகளும் உண்டு.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது கறவைக்காகவும் சில மாடுகளின் தூயரகம் போற்றப்பட்டு இனப்பெருக்கம் செய்யப்பட்டவற்றில் காங்கிரஜ், தார்ப்பார்க்கர், சிவப்பு சிந்தி, சாஹிவால், நெல்லூர், புங்கனூர், காங்கேயம் குறிப்பிடத்தக்கவை.
அம்ரித்மகால், ஹள்ளிகர், ஓங்கோல் காளைகளின் சக்தி குதிரை சக்தியை விட அதிகம். 

இவற்றில் ஹள்ளிகர், அமரித்மகால் செல்லும் வேகத்தினால் திப்புசுல்தானுக்குப் போர் வெற்றி கிடைத்துள்ளது. ராணுவத் தளவாடங்களைச் சுமந்து செல்லும் வண்டிக்குப் பூட்டப்பட்ட இக் காளைகள் சிட்டாய்ப் பறந்து வெள்ளைக்காரர் குதிரைகளை வென்றனவாம். 

அம்ரித்மகால் இன காளைகளை உருவாக்கியவர்கள் உடையார் மன்னர்கள். வளர்த்தவர்கள் ஹைதர் அலியும் திப்பு சுல்தானும்.

தமிழ்நாட்டில் காங்கேய இனம் அழிந்து வருகிறது. கூடவே கொரங்காடு மேய்ச்சல் நிலமும் அழிகிறது. சில தலைமுறைகளுக்கு முன்பு பாளையங்கோட்டை ஜமீன் மன்றாடியார் வம்சத்தினர் காங்கேய மாடுகளின் இனப்பெருக்கத்தையும் கொரங்காடு மேய்ச்சல் நிலத்தையும் தொடங்கினர். காங்கேயம் பகுதி கறவைப் பசுக்களுடன் ஹள்ளிகர் – அம்ரித் மகால் கலப்பினமாக காங்கேயம் உருவானது. ஓங்கோல் கலப்பும் இருக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறே தஞ்சை மாவட்டத்தில் உம்பளச்சேரி இனப்பெருக்கத்துக்கு வேலாயுதம்புரையர் என்ற ஜமீன்தார் 435 ஏக்கர் நிலம் வழங்கி 1950-ல் கொற்கைப் பண்ணையை உருவாக்கினார். சரியான தூய உம்பளச்சேரி இனத்திலிருந்து 4 லிட்டர் பால் பெறலாம்.

இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட நல்ல கறவை இனங்களான காங்கிரஜ், நெல்லூர், தார்ப்பார்க்கர், காங்கேயம், புங்கனூர், சிந்தி ஆகியவற்றின் தூய்மை இனம் காப்பாற்றப்படாமல் ஜெர்சி – எச்.எஃப் ப்ரீசியன் சீமை இனங்கள் கொண்டு வந்து நமது நாட்டு மாடுகளுக்குக் கரு ஊட்டம் செய்தனர்.

சீமை மாடுகளை இந்தியாவில் வளர்க்க குளிர் சாதன அறைகள் வேண்டும். செலவு மிக்கது. நோய்மிக்கது. இப்படி உருவாக்கப்பட்ட கலப்பினத்தில் சீமை இனப் பண்புகள் மாறியதால் சராசரி பால் அளவு 5 லிட்டர்தான் தேறுகிறது. கொடி கோமாரி நோய் தொற்றுகிறது. இம் மாடுகளின் இறப்பு வீதமும் அதிகம். 

இருப்பதை விட்டு விட்டுப் பறப்பதைப் பிடிப்பதால் வந்த வினை.

இந்திய மாடுகளில் மிகவும் குள்ள ரகத்தை அடையாளம் செய்து வளர்த்தவர் புங்கனூர் ராஜா. சித்தூர் மாவட்டத்தில் இது மதனப்பள்ளி – பாலமனூர் பகுதி என்பதால் சென்னை – வேலூர் – காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்க வாய்ப்புண்டு. மிகவும் குறைந்த எடையுள்ள இந்த மாட்டில் சராசரி 4 லிட்டர் பால் பெறலாம். 
வளர்க்கும் செலவும் குறைவு.

நமது கால்நடைத் துறையினர் அந்த இனத்தைக் கண்டு பிடித்து, பெருக்கி விவசாயிகளுக்கு அளித்தால் பேருதவியாக இருக்கும் அல்லவா?.

"என் மக்கள்" 
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்...

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...