Sunday, July 31, 2016

எழும்பூர் ரயில் நிலையம்:

எழும்பூர் ரயில் நிலையம்:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை போன்று எழும்பூரிலும் ஓர் பெரிய ரயில் நிலையம் கட்ட வேண்டும் என ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, 1908ஆம் ஆண்டு எழும்பூர் ரயில் நிலையம் கட்டப்பட்டது. முதலில் ராயபுரம் ரயில் நிலையத்தில் இயங்கி வந்த அப்போதைய மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வேயின் தலைமை அலுவலகம் இங்கு மாற்றப்பட்டு, 1951ஆம் ஆண்டு வரை இங்குதான் செயல்பட்டது. 

இந்திய, முகலாய மற்றும் கோதிக் கட்டிடக் கலைகளை ஒன்று கலந்து இந்தோ-சாராசனிக் பாணியில் இக்கட்டிடத்தை கட்டியவர் சாமிநாதப் பிள்ளை என்ற தமிழ் கான்ட்ராக்டர். பெங்களூர் நகரில் இவர் கட்டிய கட்டிடங்கள் பலராலும் பாராட்டப்பட்டதால், இந்த பணி சாமிநாதப் பிள்ளையிடம் ஒப்படைக்கப்பட்டது. ராபர்ட் சிஸ்ஹோம் (Robert Chisholm)  எழும்பூர் ரயில் நிலையத்திற்கான வரைபடத்தை வடிவமைத்துக் கொடுத்தார்.

அக்காலத்திலேயே 17 லட்சம் ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது இந்த ரயில் நிலையம். மாலை வேளையில் இங்குள்ள சிற்றுண்டி விடுதியில் எதையாவது கொறித்துக் கொண்டு கதை பேச, ஒரு பெரிய கூட்டம் கூடுமாம். கொல்லங்கோடு மகாராஜா உள்பட பல மகாராஜாக்களும், ஜமீன்தார்களும், செல்வச் சீமான்களும் இங்குள்ள ஓய்வு அறையில், ரயில் வருகைக்காக மணிக்கணக்கில் காத்திருந்திருக்கின்றனர்.

இங்குள்ள இரண்டு நடைமேடைகளில் மட்டும் நேராக கார்களை செலுத்திக் கொண்டு போய், தேவையான கம்பார்ட்மெண்டிற்கு அருகில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிடும் வசதி ஒரு காலத்தில் இருந்தது. இந்தியாவிலேயே ஹவுரா ரயில் நிலையத்திற்கு அடுத்து எழும்பூரில்தான் இந்த வசதி இருந்தது. அகல ரயில் பாதைகள் வந்த பிறகு இந்த வசதி பறிபோய்விட்டது. 

எழும்பூரில் இருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கும் ரயில்கள் இயக்கப்பட்டிருக்கின்றன. கொழும்பு செல்லும் பயணிகளை ஏற்றிச் செல்லும் எழும்பூர் - தனுஷ்கோடி போட் மெயில், அவர்களை தனுஷ்கோடியில் இறக்கிவிட்டுவிடும். அவர்கள் அங்கிருந்து படகு மூலம் இலங்கையின் தலைமன்னாருக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். தலைமன்னாரில் இருந்து கொழும்பு செல்ல ஒரு ரயில் தயாராக காத்திருக்கும். 1964ஆம் ஆண்டு வீசிய புயலில் தனுஷ்கோடி இருப்புப் பாதை முற்றிலுமாக அழிந்துபோனதால், அத்துடன் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

ரயிலுக்கு அடுத்தப்படியாக மெட்ராஸ்வாசிகளுக்கு சீக்கிரமே மற்றொரு வாகனமும் கிடைத்தது. அது என்ன ........?

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...