Wednesday, July 27, 2016

மாற்றங்கள்.,.

வரலாற்று உணர்வு என்பது என்ன? மாற்றங்களை குறித்த பிரக்ஞை மற்றும் தர்க்கம். எந்த ஒரு விஷயத்திற்கும் எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் ஒரே அர்த்தம் இருக்க முடியாது. இன்றைய நிலையில் ஒரு விஷயத்திற்கான அர்த்தம் என்ன, அது எப்படி உருவாகி வந்தது, எவ்வகையில் எல்லாம் மாறி வந்துள்ளது எனபதை புரிந்துகொள்வதே வரலாற்று உணர்வு. வர்த்தகம் என்றால் பண்டமாற்றிலிருந்து காட் ஒப்பந்தம் வரை அது ஒன்றேதான் என்று நினைத்தால் ஒருவருக்கு வரலாற்று உணர்வு சுத்தமாக இல்லை என்பது பொருள். அதே போல இன்றைய மதிப்பீடுகளும் எல்லா காலத்திலும் இருந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் யோசிப்பது தவறு. சாக்ரடீஸ் எவ்வளவு பெரிய அயோக்கியப்பயல், அடிமைகளெல்லாம் ஊழியம் செய்துகொண்டிருப்பதை பற்றி கவலைப்படாமல் தத்துவம் பேசிக்கொண்டிருந்தான் என்று சொல்வதில் பொருளில்லை. இந்த இடத்தில்தான் விமர்சனம், மதிப்பீடு, கண்டனம், நிராகரிப்பு ஆகியவற்றிற்கு இடையிலான வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும். வரலாற்று நிகழ்வுகளுக்கு காரண காரிய தொடர்ச்சி இருக்கிறது என்று நம்புபவர்கள் கூட, ஒன்றுக்கு மேற்பட்ட காரண காரிய தொடர்ச்சிகளின் ஊடுபாவாகவும் அத்துடன் தற்செயல் என்ற புதிரான அம்சமும் சேர்ந்துதான் ஒரு நிகழ்வு ஏற்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும். ஆறாம் நூற்றாண்டில் இஸ்லாம் தோன்றியபோது எழுதப்பட்ட வாசகங்கள்தான் இன்றைக்கு தீவரவாதம் அந்த மதத்தில் உருவாகக் காரணம் என்று அபாண்டமாக கூறுவது, பத்தொன்பதாம் நூற்றாண்டு இங்கிலாந்தில் மார்க்ஸ் உருவாக்கிய வர்க்க போராட்டம் என்ற கருத்தாக்கம்தான் இருபதாம் நூற்றாண்டு கம்போடியாவில் போல்பாட் கொலைக்களங்களை உருவாக்கக் காரணம் என்று அடித்துவிடுவது போன்ற போக்குகளுக்கெல்லாம் அறியாமை என்பதற்கு மேல் அறிவுலகில் எந்த மதிப்பும் கிடையாது. அரங்கின்றி வட்டாடியற்றே நிரம்பிய நூலின்றி கோட்டி கொளல் என்ற வள்ளுவர் வாக்கைத்தான் நினைவுகூற முடியும்.

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...