
படத்தில் உள்ளது திருமண மண்டப காட்சியல்ல. இரவு நேரத்தில் ஒரு மாநில முதல்வரை சந்தித்து தங்களுடைய குறைகளை தீர்க்கவந்த கூட்டம்தான். ஒரு அரங்கத்தில் அமர வைத்து மக்களின் குறைகளை கேட்டு தீர்க்கக்கூடிய எளிமையான உத்தரகண்ட் முதல்வர் நண்பர் ஹரிஷ் ராவத். இந்த சந்திப்பு இரவில் 2 மணி வரை கூட தொடரும். அப்படி சலிக்காமல் இன்முகத்தோடு மக்களிடம் தொடர்புள்ளவர்தான் ஹரிஷ் ராவத். திருவள்ளுவர் சிலை பிரச்சினையிலும் சுமூகமாக முடிவெடுத்துள்ளார். சிலை வைக்கின்ற அந்த இடத்தையே திருவள்ளுவர் பூங்கா என்று அறிவித்துவிட்டார். தமிழர்கள் அனைவரும் அவரை பாராட்ட வேண்டும். மன்மோகன் சிங் அமைச்சரவையில் அவர் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தபோது, தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்ற எனது உச்சநீதிமன்ற வழக்கின் தீர்ப்பை குறித்து அவரிடம் டெல்லியில் சந்திக்கும்போதெல்லாம் பரிவோடு கேட்டு 30 ஆண்டு காலம் உச்சநீதிமன்றத்தில் இதற்காக போராடியதற்காக பாராட்டுவார். இந்தப் படத்தில் பார்ப்பதைப் போன்று வேஷ்டி கட்டிக் கொண்டு எளிமையாக இருக்க நினைப்பார். இதற்காக நானும், சகோதரர் தங்கவேலும் "ராம்ராஜ்" வேஷ்டிகளை சென்னையில் வாங்கிக் கொண்டு அவரிடம் கொடுத்தபோது, அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார். டெல்லியில் கன்னாட் பிளேஸ், சென்ட்ரல் நியூஸ் மார்ட், இன்றைய சரவணபவன் மேல் மாடியில் மெட்ராஸ் ஹோட்டல் என்ற விடுதியில் இட்லியும் சூடான சாம்பாரையும் விரும்பி சாப்பிடுவார். சரவணபவன் டெல்லிக்கு வந்தபின் கடந்த 20 ஆண்டுகளாக உணவுகளை வரவழைத்து சாப்பிடுவதும் உண்டு. எங்கோ வடபுலத்தின் எல்லையில் பர்வதங்களின் பூமியில் எளிமையான ஒரு முதல்வர். வள்ளுவருக்கு மரியாதை செலுத்தி கடமையாற்றியுள்ளதை நாம் நன்றியோடு அவரை பாராட்ட வேண்டாமா? தொலைபேசியில் என்னுடைய நன்றிகளை அவரிடம் தெரிவித்தபோது அகமகிழ்வோடு ஏற்றுக்கொண்டு பேசிய அவர் குரலே எனக்கு உணர்த்தியது.
No comments:
Post a Comment