அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பம் அவர்களின் நீக்கம் மீண்டுமொரு "கட்சி தாவல் சட்ட" சிக்கலை தோற்றுவித்துள்ளது. ஜி.விஸ்வநாதன் வழக்கில் உச்சநீதிமன்றம், " ஒருவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும், கட்சி தாவல் தடுப்பு சட்டப்படி அவர் தேர்தலில் நிறுத்திய அரசியல் கட்சியைச் சேர்ந்தவராகவே கருதப்படுவார்" என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் விளைவாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டு இருந்தாலும் சட்டமன்ற உறுப்பினரோ, பாராளுமன்ற உறுப்பினரோ கட்சிக் கொறடாவின் கட்டளைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும். கட்சிக் கொறடா கட்டளையை மீறினால் பதவி பறிபோகும். இப்படி கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் வேறு கட்சியில் சேர்ந்தாலும் பதவி பறிபோகும். இதை எதிர்த்துத்தான் அமர்சிங், ஜெயப்பிரதா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார்கள்.
அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தில் அமர்சிங் தரப்பில் வைக்கப்பட்ட வாதம் என்னவென்றால், " முறைப்படி கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களும் சட்டமன்ற அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பார்கள்" என்று ஒரு ஷரத்து "கட்சி தாவல் தடுப்புச் சட்டம் கொண்டு வரும்" போது இருந்தது. அந்த மசோதா பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போது "இந்த பிரிவு பாராளுமன்றம் அல்லது சட்டமன்றம் ஆகியவற்றிற்கு வெளியில் நடக்கும் விஷயத்திற்காக கட்சி தலைமை ஒருவரை கட்சியை விட்டு நீக்கினால் அவரையும் கொறடா உத்தரவு கட்டுப்படுத்தும் என்ற ரீதியில் இருக்கிறது என்று பாராளுமன்ற விவாதத்தில் சுட்டிக்காட்டப்பட்டதால், அந்தப் பிரிவு விலக்கிக் கொள்ளப்பட்டது. இப்போது ஜி விஸ்வநாதன் வழக்கில் "கட்சியிலிருந்து விலக்கப்பட்டாலும் கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின் பார்வையில் சம்பந்தப்பட்ட கட்சியில் உறுப்பினராக இருப்பதாகவே கருதப்படுவார் என்று தீர்ப்பளித்துள்ளது பாராளுமன்றத்தில் விலக்கிக் கொள்ளப்பட்ட ஷரத்தை சேர்ப்பதாகவும், கட்சி தாவல் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கத்திற்கு மாறாகவும் இருக்கிறது" என்று மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே, கே.கே. வேணுகோபால் போன்றோர் வாதிட்டார்கள். அப்போது அட்டார்னி ஜெனரலாக இருந்த வாகனாவதியும் வழக்கறிஞர்களின் வாதத்தில் உள்ள கருத்தை ஒப்புக்கொண்டார். உச்சநீதிமன்றமும் "ஜி விஸ்வநாதன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும்" என்று கருதியது. அதனால்தான் அமர்சிங், ஜெயப்பிரதா மீது "கட்சி கொறடா கட்டளையை மீறினார்" என்று காரணம் காட்டி கட்சி தாவல் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தடையுத்தரவு பிறப்பித்து, இந்த கேள்விகளை முடிவு செய்ய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. ஆனால் இப்போது அமர்சிங்கும், ஜெயப்பிரதாவும் ராஜ்ய சபா உறுப்பினர்களாக இல்லை என்ற காரணத்தைக் கூறி ஜி.விஸ்வநாதன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றியோ, உச்சநீதிமன்றம் அமர் சிங் வழக்கில் Frame பண்ணிய 7 கேள்விகள் குறித்தோ முடிவு பண்ண மறுத்துள்ளது உச்சநீதிமன்றம். ஆனால் ஜி. விஸ்வநாதன் வழக்கில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு மறு பரிசீலனைக்கு உட்பட்டது என்ற முந்தைய உச்சநீதிமன்ற தீர்ப்பு அப்படியே இருக்கிறது.Kasinathan Muthiah
No comments:
Post a Comment