ஶ்ரீவில்லிபுத்தூர் தேர் (நாட்டுப்புற இயல் பதிவு)
———————————-
இன்று (04.08.2019) சீல்த்தூர் ஆண்டாள் கோவில் தேர்த்திருவிழா......
அந்தக் காலத்து தேர்த்திருவிழாவுக்கும், இப்போதைய தேர்த்திருவிழாவுக்கும் நெறைய வித்தியாசமிருக்கு. ரொம்ப காலம் ஓடாம இருந்த தேரு 1980க்கு அப்புறம் மீண்டும் ஓட ஆரம்பிச்சிது. தேரே இப்ப உருமாறிப்போச்சு. அப்ப தேர்ல எல்லாம் ஒன்பது, ஒன்பதா இருக்கும்.
9 சக்கரம், 9 மேலடுக்கு அலங்காரம், 9 வடம் இப்படி. அதோட நல்ல வெயிட்டான கலசம், மர சக்கரங்கள். இப்ப அந்த ஒன்பதடுக்கு அலங்காரங்கள் எல்லாம் அடுக்கு ஒன்பதா இருந்தாலும் அஞ்சு (5) அடுக்கு ஒயரத்துக்கு ஒயரம் சுருங்கி போச்சு. சக்கரங்கள் இரும்பு சக்கரங்களாயிடுச்சு.
முந்தி தேர் இழுத்து நிலைக்கு திரும்ப வந்து சேர மாசக்கணக்குல ஆகும். என்னைக்கு வந்து சேரும்னு சொல்லிட முடியாது.இதுல உருவானதா இருக்கும் இந்த "தேர இழுத்து தெருவில விட்டது போல" ன்னுற பழமொழி.
இன்னைக்கு காலையில இழுத்து இன்னைக்கு மதியமே தேர நிலையில நிறுத்திட்டு போயிடுறாக. காரணம் இயந்திரங்களின் பலம். டோசர்களை வச்சி தள்ளிக்கிட்டே கொண்டாந்து நிலையம் சேர்த்துடுறாங்க.
அந்தக்காலத்துல சீல்த்தூர் ஆண்டாளம்மா ஆடித் திருவிழான்னா கொடியேத்தம் முடிஞ்ச கையோட கோவில் தக்கார் (நிர்வாக தலைவர்), ஈ.ஓ, (அறநிலையத்துறை அதிகாரி), கோவில் பெரிய பட்டர்க குழு எல்லாம் சேர்ந்து ஒரு குரூப்பா சுத்துப்பட்டி கிராமத்துக்கு அம்பாஸிடர் கார்ல வருவாக.
கிராமத்து நாட்டாமைகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து வெத்தலை, பாக்கு வெத்தலையை கட்டுக்கட்டாக கொண்டாந்து தாம்பூலத்தில் பழங்கள் வச்சி கோவில் மாலை கொண்டாந்து மரியாதை பண்ணி ஆடித்திருவிழாவுல ஊர் மக்களோட வந்து கலந்துக்கிட்டு தேர்த்திருவிழா அன்னைக்கு தேர இழுத்து நிலை சேர்க்க தொணை நிக்கனும்னு சொல்லி அழைப்பு வச்சி வரவேத்துட்டு போவாக.
அவுக வந்து போன பொறகு ஊர்க்ட்டு போடுவாக.வீட்டுக்கொரு ஆளு வடம் பிடிக்க வந்து சேரனும் தவறாமான்னு அறிவிப்பாக.
No comments:
Post a Comment