———————————————————-
வேட்டையாடுதல், விபத்து, இயற்கை மரணம் ஆகிய காரணங்களால் கடந்த ஓராண்டில் 100 புலிகள் இறந்துள்ளன. இதில் அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 26 புலிகளும், தமிழகத்தில் 8 புலிகளும் இறந்துள்ளன.
உலக அளவில் தென்சீனப் புலி, மலேசியன் புலி, இந்தோ-சீனப் புலி, சைபீரியன் புலி, வங்கப் புலி, சுமித்ரன் புலி, காஸ்பியன் புலி, ஜவான் புலி, பாலி புலி என 9 வகையான புலிகள் உள்ளன. 20-ஆம் நூற்றாண்டில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புலிகள் இருந்த நிலையில், வேட்டை, வனப் பகுதிகள் அழிப்பு உள்ளிட்ட காரணங்களால், கடந்த 2000-ஆம் ஆண்டில் புலிகளின் எண்ணிக்கை 3000-ஆக சரிந்தது. ஜவான், காஸ்பியன் ஆகிய புலி இனங்கள் முற்றிலும் அழிக்கப்பட்ட நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 6 வகை புலி இனங்களே உள்ளன.
இந்திய அளவில் 50 புலிகள் காப்பகங்கள் உள்ளன. தமிழகத்தில் ஆனைமலை, களக்காடு முண்டந்துறை, முதுமலை, சத்தியமங்கலம் ஆகிய 4 புலிகள் காப்பகங்கள் மற்றும் பல்வேறு வனக் கோட்டங்களில் புலிகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனப்பகுதிகளில் கடந்த 2006-இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 76-புலிகளும், 2010-இல் 163-புலிகளும், 2014-இல் 229 புலிகளும் இருப்பது தெரிந்தது. 2018-ஆம் ஆண்டு அனைத்து மாநிலங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தமிழகத்தில் 264 புலிகளும், இந்தியாவில் அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 526 புலிகளும், கர்நாடகத்தில் 524 புலிகளும், குறைந்த பட்சமாக கோவாவில் 3 புலிகளும் என ஒட்டுமொத்தமாக 2,967 புலிகள் இருப்பது தெரியவந்தது.
புலிகளின் பாதுகாப்புக்காக, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், புலிகளின் நகம், பல், தோல் ஆகியவற்றுக்காக வேட்டையாடப்படுவதும், கால்நடைகளைத் தாக்கும் புலிகள் விஷம் வைத்து கொல்லப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த 2012 முதல் 2018 வரையிலான 6 ஆண்டுகளில் 750 புலிகள் இறந்துள்ளன. 2016-இல் மட்டும் அதிகபட்சமாக 121 புலிகள் இறந்துள்ளது. அதில், 25 புலிகள் வேட்டையாடலால் இறந்துள்ளது. கடந்த ஓராண்டில் மத்தியப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 26 புலிகளும், மகாராஷ்டிரத்தில் 15 புலிகளும், கர்நாடகத்தில் 11 புலிகளும், கேரளத்தில் 10 புலிகளும், தமிழகத்தில் 8 புலிகளும் இறந்துள்ளன. தமிழகத்தில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இறந்த 2 புலிகளும் விஷம் வைத்து கொல்லப்பட்டவையாகும்.
வயதான புலிகள் மாடு போன்ற கால்நடைகளை வேட்டையாடுவதால், கோபத்தில் சிலர் இறைச்சிகளில் விஷம் வைத்து புலியை கொல்லும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்கின்றன. இதைத் தடுக்கும் வகையில் கால்நடைகளை பறிகொடுத்தவர்களுக்கு உடனடியாக இடைக்கால நிதி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
••••••
தமிழ்நாட்டில், 2015 ம் ஆண்டு முதல் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 561 காட்டுயானைகள் உயிரிழந்துள்ளன.
இவற்றில் ஈரோடு மண்டலத்தில் 167, கோவை மண்டலத்தில் 134, தர்மபுரி மண்டலத்தில் 89 யானைகள் உயிரிழந்துள்ளதாகத் தமிழக வனத்துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு கோவை வனப்பகுதியில் யானைகளின் தொடர் உயிரிழப்பை அடுத்து சூழலியல் ஆர்வலர்கள் பலரும் உரத்த குரல் எழுப்பிய பின்னர், வனத்துறை யானைகள் இறப்பு, அதைத் தடுக்கும் நடவடிக்கைகள், அவற்றின் வாழிடம் மற்றும் உணவு குறித்தெல்லாம் ஆய்வு செய்து கடந்த டிசம்பர் மாத இறுதிக்குள் அறிக்கை அளிக்க வல்லுநர் குழு ஒன்றை அமைத்த்து.
டிசம்பர் மாதமும் வந்துவிட்டுப் போய் விட்டது. ஆனால் அறிக்கை மட்டும் வந்தபாடில்லை. நடவடிக்கையும் ஏதுமில்லை.

No comments:
Post a Comment